அரியானா மாநிலத்தில் இயங்கிவரும் நூற்றுக்கணக்கான பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்க உரிமைகள் கிடையாது. அத்தொழிற்சாலைகளில் அற்ப அளவுக்கு நிரந்தரத் தொழிலாளர்களை மட்டும் வைத்துக் கொண்டு, பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதுதான் நடக்கின்றது; தொழிற்சங்கம் என்பதைப் பற்றிப் பேசுவதே குற்றமாகக் கருதப்படுகிறது. தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக நிர்வாகமே வேலை கமிட்டிகள் எனும் எடுபிடி சங்கங்களை உருவாக்கி நடத்தி வருகின்றன. இந்நிலையில் அரியானாவில் அமைந்துள்ள மாருதி சுசுகி தொழிற்சாலையில் தொழிற்சங்க உரிமைக்காக அண்மையில் நடந்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம், தொழிலாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையையும், முதலாளிகளிடம் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

அரியானாவின் குர்கான் நகரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள மானேசர் தொழிற்பேட்டையில்தான், மாருதி சுசுகி நிறுவனத்தின் இரண்டாவது பிரிவு கார் தயாரிப்புத் தொழிற்சாலை அமைந்துள்ளது. மிகக் குறைந்த அளவில் நிரந்தரத் தொழிலாளர்களையும், பெருமளவில் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் கொண்டு இயங்கும் இந்தத் தொழிற்சாலையில், ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெறும் மாதாந்திர ஊதியம் வெறும் 3000 ரூபாய் மட்டுமே. இவ்வளவு குறை வான கூலிக்கு  வேலைபார்க்கும் தொழிலாளர்களை மேலும் கொடூரமாகச் சுரண்ட நிர்வாகம் வைத்துள்ள அடாவடியான விதிமுறைகளுக்கு அளவேயில்லை.

ஊதியத்துடன் வழங்கப்படும் ஊக்கத்தொகையைப் பறித்துக் கொள்வதற்காகவே, சுசுகி நிர்வாகம் பல அநியாயமான, தொழிலாளர் விரோத விதிமுறைகளை உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு நாள் விடுப்பெடுத்தால் ஊக்கத்தொகையில் ரூ.1500ம், இரண்டு நாள் விடுப்பெடுத்தால் ஊக்கத்தொகை முழுவதும் பறிக்கப்படுகின்றது. மதிய உணவருந்த ஒதுக்கப்படும் நேரமோ 30 நிமிடங்கள்தான். இதற்குள் 400 மீட்டர் தொலைவிலுள்ள உணவகத்துக்கு சென்று, அங்கிருக்கும் நீண்ட வரிசையில் நின்று உணவைப்  பெற்று அவசரமாக  விழுங்கிப் பணிக்குத் திரும்பவேண்டும்.  ஒரு நிமிடம் தாமதமானாலும் சம்பள வெட்டு நிச்சயம். தேநீர் இடைவேளையும் 5 நிமிடங்கள்தான். வேலைநேரத்தின்போது கழிப்பறை செல்ல அனுமதி இல்லை. இரண்டாவது ஷிப்டிற்கு உரிய ஆள் வராது போனால், 16 மணி நேர ஷிப்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பணிச்சூழலில் பணியாற்றும் தொழிலாளர்களது பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க வலுவான சங்கம் மானேசரில் இல்லை. 1980களில் குர்கானில் தொடங்கப்பட்ட மாருதி உத்யோக் நிறுவனத்தில், ஏற்கெனவே "மாருதி உத்யோக் தொழிலாளர் சங்கம்' எனும் சங்கம் உள்ளது. மாருதி நிர்வாகமே உருவாக்கிய இந்த எடுபிடி சங்கம், தங்கள் குறைகள் எதையும் தீர்க்க உதவாது என்பதை உணர்ந்த மானேசர் தொழிலாளர்கள், எந்தக் கட்சியையும் சாராத ஒரு தொழிற் சங்கத்தைக் கட்ட முனைந்தனர். கடந்த ஜூன் மாதம், மாருதி சுசுகி பணியாளர் சங்கம் (மாருதி சுசுகி எம்ப்ளாயீஸ் யூனியன்) எனும் பெயரில் சங்கத்தைத் தொடங்கி, அதனைப் பதிவு செய்வதற்காக 11 தொழிலாளர்கள் சண்டிகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளைச் சென்று சந்தித்து ஆவணங்களைச் சமர்ப்பித்தனர்.

ஆனால், முதலாளிகளின் எடுபிடிகளாக மாறிவிட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளோ, தொழிற்சங்கம் தொடங்குவதற்காக அளிக்கப்பட்ட ஆவணங்களின் நகலை உடனடியாக மாருதி நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தனர். ஜூன் 3ஆம் தேதியன்று ஆலைக்கு வந்த தொழிலாளர்கள் விசாரிக்கப்பட்டு, சங்கம் கட்ட முயற்சித்த "மாபெரும் குற்றத்திற்காக' அந்த 11 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். 1926ஆம் ஆண்டு தொழிற்சங்க சட்டத்தின்படி, ஏழு அல்லது அதற்கு மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்தாலே சங்கம் கட்டும் உரிமையும் அவர்களின் குறைகளைப் பேசித் தீர்வு காணும் உரிமையும் தரப்பட்டுள்ளது. இருப்பினும், தொழிலாளர்கள் தொழிற்சங்கம் கட்டுவதை மாருதி நிர்வாகம் கிரிமினல் குற்றமாகக் கருதுகிறது.

நிர்வாகத்தின் அடாவடியான இந்நடவடிக்கைக்கு எதிராக மறுநாள் 2,000 தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது.  முறைப்படி முன்னறிவிப்பு கொடுக்காத வேலைநிறுத்தம் எனும் காரணத்தைக் காட்டி  வேலைநிறுத்தத்தைச் சட்டவிரோதம் என அரசும், மாருதி நிர்வாகமும் அறிவித்தன. "ஏற்கெனவே குர்கானில் மாருதி தொழிலாளர்களுக்கு ஒரு தொழிற்சங்கம் இருக்கும்போது இன்னொரு சங்கத்தை ஏற்கமுடியாது. மானேசர் தொழிலாளர்களும் அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள்தான்' எனக் காட்டுவதற்காகப் பல தொழிலாளர்களை மிரட்டி, வெள்ளைக் காகிதத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டது, மாருதி நிர்வாகம். தொழிற்சங்க முன்னணியாளர்கள் போராடி அக்காகிதங்களைப் பறிமுதல் செய்து, நிர்வாகத்தின் அடாவடித்தனத்தைத் தோற்கடித்தனர். மானேசர் தொழிலாளர்கள், தமது சங்கம் அங்கீகரிக்கப்படும் வரை தொடர்ந்து போராடும் உறுதியுடன் நின்றதால், நிர்வாகம் தனது எடுபிடி சங்கத்தின் வலிமையைக் காட்டுவதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்சங்கத் தேர்தலை நடத்தியது. அத்தேர்தலை மானேசர் தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துத் தங்கள் ஒற்றுமையை நிலை நாட்டினர்.

அரியானாவில் மாருதி ஆலை நிர்வாகத்தின் அடக்கு முறைக்கு எதிராகவும் தொழிலாளர் உரிமைக்காகவும் தொழிலாளர்கள் போராடுவது இப்போது முதன்முறையாக நடப்பதல்ல. ஏற்கெனவே 2000வது ஆண்டில் நடந்த நீண்ட போராட்டம், நிர்வாகத்தால் கடுமையாக ஒடுக்கப்பட்டுப் பல நிரந்தரத் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். 2005இல் ஹோண்டா தொழிலாளர்கள் போராடியபோது, அரசும் போலீசும் ஹோண்டா நிர்வாகத்தின் குண்டர் படையுடன் சேர்ந்து கொண்டு கடுமையான அடக்குமுறையைத் தொழிலாளர்கள் மீது கட்டவிழ்த்து விட்டன.  2009 இல் ரிகோ ஆட்டோ நிறுவனத்தில் தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை கோரி ஏறத்தாழ ஒரு மாத காலமாகத் தொடர்ந்து போராடி அடக்குமுறைக்கு ஆளாகினர். இவற்றிலிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொண்டுள்ள அரியானா மாநிலத் தொழிலாளர்கள், மாருதி தொழிலாளர் போராட்டத்தை ஒற்றுமையுடன் கட்டி வளர்த்துப்போராடினர்.

மாருதி தொழிலாளர் போராட்டத்தை ஆதரித்து, ஹோண்டா மோட்டார் சைக்கிள் தொழிலாளர் சங்கம் முதலான தொழிற்சங்கங்கள் திரண்டன. மானேசர் மட்டுமின்றி, ரேவாரி மாவட்டத்திலுள்ள தாருஹேரா தொழிற்பேட்டை முதல் குர்கான் வரையிலான அனைத்துத் தொழிலாளர் சங்கங்களையும் மாருதி தொழிலாளர்கள் தங்களது போராட்டத்துக்கு ஆதரவாகத் திரட்டினர். இதனால் இடது, வலது போலி கம்யூனிஸ்டு மற்றும் காங்கிரசு சார்பு மையத் தொழிற்சங்கங்கள் காரியவாத அடிப்படையில் மாருதி தொழிலாளர் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரித்தன.

இவ்வட்டாரத்திலுள்ள ஏறத்தாழ 50 தொழிற்சங்கங்களின் சார்பில் ஐந்து பேர் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு தொழிலாளர்களால் அமைக்கப்பட்டது. ஆலை வாயில் முன்பாக தொடர் முழக்கப் போராட்டம் நடத்துவது; நிர்வாகம் பணியாவிட்டால், அனைத்துத் தொழிற்சாலைகளிலும் இரண்டு மணி நேர பணிநிறுத்தம் உள்ளிட்ட பெரிய அளவிலான போராட்டத்தை நடத்தவும் இக்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. மாருதி தொழிலாளர்கள் ஆலையினுள் போராடிக் கொண்டிருக்க, அவர்களுக்கு ஆதரவாக ஆலை வாயிலில் இவ்வட்டாரத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர். தொழிலாளர்கள் வர்க்கமாக ஓரணியில் திரண்டு உறுதியுடன் போராடியதால், 13 நாட்களுக்குப் பிறகு தொழிலாளர் துறை செயலாளர் முன்னிலையில் நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது. இப்பேச்சுவார்த்தையில், அரியானா தொழிலாளர் வர்க்க வரலாற்றிலேயே முதன்முறையாக எந்தவொரு தொழிலாளியும் பழிவாங்கப்படாமல், வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்துத் தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்த நிர்வாகம் ஒப்புக் கொண்டது. இது  தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

ஒரு ஆலையில் மட்டுமோ அல்லது அந்த ஆலையின் கிளைத் தொழிலாளர்களைச் சேர்த்துக் கொண்டோ மட்டும் போராடினால் போதாது. அந்த வட்டாரம் முழுவதுமாக தொழிலாளர் வர்க்கத்தை ஓரணியில் திரட்டி உறுதியுடன் போராடினால் மட்டுமே இன்றைய உலகமயச் சூழலில் முதலாளித்துவ அடக்குமுறைகளை முறியடிக்க முடியும் என்பதை மாருதி தொழிலாளர்கள் தமது போராட்ட வெற்றியின் மூலம் தொழிலாளர் வர்க்கத்துக்குப் பறைசாற்றியுள்ளனர்.

. கதிர்