09222023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

“வணிகமயமாகும் கல்விக் கொள்ளைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம்!! -பு.மா.இ.மு, ம.க.இ.க கருத்தரங்கம்

சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்தை முடக்கும் பாசிச ஜெயா அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்போதே, சமச்சீர் கல்வி ஒழிப்பு நடவடிக்கையின் அரசியல் பின்புலத்தை மாணவர் களுக்கும் பெற்றோ ர் களுக்கும் விளக்கிப் புரிய வைக்கும் பிரச்சாரத்தையும் புரட்சிகர மாணவர் இளைஞர் அணி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் மேற்கொண்டு வருகின்றன.

 

 

"வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டுவோம்! இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலை நாட்டுவோம்!!' என்ற முழக்கத்தினை முன்வைத்து ஜூலை 19 அன்று சென்னைஅரும்பாக்கம், ஜி.ஜி.மகால் அரங்கில் பு.மா.இ.மு; ம.க.இ.க. சென்னைக் கிளைகளின் சார்பில் அரங்குக் கூட்டம் நடத்தப்பட்டது. வீரவணக்கப் பாடலுடன் தொடங்கிய கூட்டத்திற்கு பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார்.

சென்னை நகரின் குரோம்பேட்டை, மதுரவாயல் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளிலிருந்தும், நந்தனம் கலைக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, மாநிலக்கல்லூரி, ராணிமேரிக் கல்லூரி முதலான கல்லூரிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான மாணவர்கள், மாணவிகள் அரங்கில் திரண்டிருப்பதையும், மெட்ரிக் பள்ளிகளின் கல்விக் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தினூடாக செயின்ட் ஜான்ஸ் பள்ளி, பத்மா சாரங்கி, லயோலா முதலான பள்ளிகளைச் சார்ந்த மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும் அக்கூட்டத்தில் திரண்டிருப்பதையும் அவரது தலைமையுரையில் சுட்டிக் காட்டி, அவர்களை வரவேற்று தோழர் கணேசன் பேசினார்.

கருத்தரங்கின் நோக்கத்தை சுருக்கமாக விளக்கிதோடு மட்டுமின்றி, சமச்சீர் கல்வி எதிர்ப்பில் முன்னணியில் இருக்கின்ற பத்மா சாரங்கி, லயோலா, டி.ஏ.வி ., முதலான பள்ளிகள் வழங்கும் விண்ணப்ப படிவத்தின் பின்புறத்தில், எவ்வளவு நன்கொடை தரமுடியும் என்பதை எழுதித் தருமாறு பெற்றோரிடம் அப்பள்ளி நிர்வாகங்கள் கோருவதாகவும், டெண்டர்களைத் தீர்மானிப்பதைப் போலவே, அதிகபட்ச நன்கொடை தருபவர்களுக்குப் பள்ளியில் இடமளிக்கப்படுவதாகவும் கூறி, மெட்ரிக் பள்ளிகளின் யோக்கியதையை அம்பலப்படுத்தினார். சமச்சீர் கல்வி என்று பெயரிட்டு கருணா நிதி அரசு கொண்டுவந்திருக்கும் பொதுப் பாடத்திட்டம், மிகவும் வரம்புக்கு உட்பட்ட ஒரு சீர்திருத்தம் தான் என்ற போதிலும், அதை முடக்குகின்ற ஜெயா அரசுக்கு எதிராகப் போராட வேண்டியிருக்கிறது என்றும், அந்த போராட்டத்தை நடத்துவதற்குக்கூட தி.மு.க. உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகள் தயாராக இல்லாத நிலையையும் சாடினார், அவர்.

"ஏன் வேண்டும் சமச்சீர் கல்வி?' என்ற தலைப்பில் உரையாற்றிய மூத்த கல்வியாளரும், சமச்சீர் கல்விக்குழு உறுப்பினருமான ச.சீ.இராசகோபாலன், கடந்த ஒன்றரை மாத காலத்தில் பத்தாம் வகுப்பு பாடங்களில் கால் பகுதி நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் என்றும், தற்போது பாடப்புத்தகங்களே இல்லாமல் பள்ளிகளை நடத்தச் சொல்லி மாணவர்களின் கல்வியை அரசு நாசமாக்குகிறது என்றும் சாடினார். சமச்சீர் கல்வி என்பது என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன், கல்வி என்றால் என்ன என்பதையே முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், சமூகக் கண்ணோட்டத்தைக் கற்பதுதான் கல்வி என்பதைப் பல உதாரணங்களினூடாக விளக்கினார்.

"பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கட்டணக் கல்விதான் அமலில் இருந்தது. கீழ் வகுப்புகளுக்கு மாதக் கட்டணம் ரூ.2.75. மேல் வகுப்புகளுக்கு மாதத்துக்கு ரூ. 5.25. அந்தக்காலத்தில் இந்தக் கட்டணத்தைக் கட்டமுடியாமல் பல பேரால் படிக்க முடியவில்லை. 1964ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன்முதலில் கட்டணமில்லாக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. முற்றிலும் இலவசமாக இல்லாமல் "ஸ்பெசல் பீஸ்' என்றொரு தொகை வசூலிக்கப்பட்டது. 1978இல் எம்.ஜி.ஆர்.தான் மீண்டும் கட்டணக் கல்வியைக் கொண்டு வந்தார். வெள்ளைக்காரன் ஆட்சியில் கீற்றுக் கொட்டகைப் பள்ளியாக இருந்தாலும், டான்பாஸ்கோவாக இருந்தாலும் ஒரே மாதிரியான கட்டணம்தான் வசூலிக்கப்பட்டது.  ஆனால் இன்றோ, கோவையில் எல்.கே.ஜி. பள்ளியில் 28,750 ரூபாய் ஆண்டுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவசக் கல்வி என்பதை நோக்கித்தான் நமது போராட்டம் இருக்க வேண்டும் என்ற போதிலும், தற்போதைய இந்தச் சூழலில், தனியார் பள்ளிகள் அனைத்திலும் ஒரேமாதிரியான கட்டண விகிதம் என்பதை முன்வைத்தும் போராட வேண்டியிருக்கிறது' என்று கட்டணக் கல்வியின் வரலாற்றை விளக்கிய அவர், இன்று சமச்சீர் கல்வி பொதுப் பாடத்திட்டத்துக்காகப் போராடுபவர்களில் ஆசிரியர் சங்கத்தினர் யாரும் இல்லையென்பதை விமரிசனமாகக் குறிப்பிட்டார். சமச்சீர் என்ற வார்த்தையையே ஆசிரியர்கள் உச்சரிக்கக் கூடாது என்று மாவட்ட கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டிருப்பதாகவும், இத்தகைய அடிமைத்தனம்அச்சம் ஆகியவற்றுக்கு எதிராகக் கேள்வி கேட்கவும் விவாதிக்கவுமான பண்பை வளர்ப்பதுதான் கல்வி என்றும், அத்தகைய கல்விக்காகத்தான் நாம் போராடவேண்டும் என்றும் கூறி, தன் உரையை நிறைவு செய்தார். முதுமை காரணமாகப் பேச இயலாமல் சிரமப்பட்டபோதிலும், தனது உரையின் இடையே ஆங்காங்கு கேள்விகளை எழுப்பி, மாணவர்களைப் பதிலளிக்கச் செய்ததன் மூலம் அவரது உரை, ஒரு உரையாடலாகவும் அமைந்திருந்தது.

"கல்வி கார்ப்பரேட்மயம் என்பது உலகமயம் உருவாக்கும் புதிய பார்ப்பனியம்' என்ற தலைப்பில் அடுத்து உரை யாற்றிய ம.க.இ.க.  பொதுச்  செயலர்  தோழர் மருதையன், தமிழக அரசின் சட்டத்திருத்தத்துக்கு எதிராக உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் சாரத்தைச் சுருக்கமாக விளக்கிவிட்டு, தி.மு.க. ஆட்சியில் சமச்சீர் கல்விச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த எந்தக் கட்சியும் இன்று அதற்காகப் போராடவில்லை என்பதையும், வலது, இடது போலி கம்யூனிஸ்டு கட்சிகளின் துரோகத்தையும் இரட்டை வேடத்தையும் அம்பலப்படுத்தினார்.

"சமச்சீர் கல்வியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அரசு முன்வைக்கும் வாதங்கள் கல்வி தனியார்மயத்தை ஆதரிப்போரின் வாதங்களே. பிள்ளைகள் என்ன படிக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு என்கிறது அரசு. அத்தகைய உரிமை பெற்றோருக்கு எப்போதும் இருந்ததில்லை. இந்த வாதத்தின் உட்பொருள், காசு கொடுப்பவனுக்கும் இலவசமாகப் படிப்பவனுக்கும் ஒரே பாடத்திட்டம் இருக்கக் கூடாது என்பதுதான். சாதிய, வர்க்க, பாலின, பிராந்திய ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பல ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட ஒருநாட்டில், அந்த ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் விதத்திலான பாடத்திட்டத்தை வழங்குவதற்குப் பதிலாக, அந்த ஏற்றத்தாழ்வை மேலும் அதிகமாக்குவது என்பதே தற்போதைய கல்விக் கொள்கையின் நோக்கமாக இருக்கிறது. அன்று சூத்திரனுக்கும் பஞ்சமனுக்கும் கல்வி இல்லை என்றது மனுநீதி. இன்று, ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மேல்தட்டு வர்க்கத்துக்கும் ஒரே கல்வியா, பணம் கட்டிப் படிப்பவனுக்கும் இலவசமாகப் படிப்பவனுக்கும் ஒரே பொதுப்பாடத்திட்டமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. உழைக்கும் மக்களுக்கு எழுத்தறிவு போதும், முறைசாராக் கல்வி போதும், முறையான கல்வி தேவையில்லை என்ற கொள்கையும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.'

"தரம் என்ற பெயரில் நியாயப்படுத்தப்படுவது தனியார்மயமாகும். தனியார் பள்ளிதான் தரம் என்று கருதுகிறார்கள் மெட்ரிக் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்கள். அரசு பள்ளி தரமில்லையென்றால், அதனைச் சீர் செய்யப் போராட வேண்டுமே தவிர, தனியார் கொள்ளை அதற்குத் தீர்வல்ல. தனியார்தான் தரமென்றால், மெட்ரிக் பள்ளிகளில் படித்த பிள்ளைகளைச் சுயநிதிக் கல்லூரிகளுக்குத்தான் அனுப்ப வேண்டும். அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே அரசுப்பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி என்று ஆக்குவதற்காக நாம் போராட வேண்டும்.'

"கல்வி என்பதும் காசுக்கு விற்கும் சரக்குதான் என்பதே தனியார்மயம் தாராளமயக் கொள்கை. மருத்துவம், குடி தண்ணீர், போக்குவரத்து, மின்சாரம், தொலைபேசி ஆகிய அனைத்துச் சேவைகளையும் வணிகம் சார்ந்த சேவைத்துறைகள் என்று வரையறுக்கும் காட்ஸ் ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திட்டிருக்கிறது. அதன் விளைவுதான் தண்ணீர் வியாபாரம் முதல் ஸ்பெக்ட்ரம் ஊழல் வரையிலான அனைத்தும். அலைக்கற்றை ஊழல் ரூ.1,76,000 கோடி என்கிறார்கள். இந்தியாவைப் பொருத்த வரை கல்வித்துறையில் ஆண்டொன்றுக்கு புரளும் தொகை ரூ.2.5 இலட்சம் கோடி. அலைக்கற்றை ஊழலில் ஆதாயம் அடைந்த அதே கார்ப்பரேட் முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும்தான், கல்வி தனியார்மயத்தில் ஆதாயமடைகிறார்கள். கல்வியை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கும் பல மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றன. இம்மசோதாக்களின்படி கல்விக் கட்டணம், ஆசிரியர் ஊதியம், மாணவர் உரிமை ஆகிய அனைத்தையும் கல்வி நிறுவனங்களை நடத்தும் கார்ப்பரேட் கம்பெனிகள்தான் தீர்மானிக்கும். கட்டணங்களை வரன்முறைப்படுத்தும் பொருட்டு கோவிந்தராசன் கமிட்டி மாதிரியான கமிட்டிகளைப் போடும் அதிகாரம்கூட அரசிடமிருந்து பறிக்கப்படும். இந்தியாவில் கல்வியின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை கூறுவதற்காக 2001இல் பா.ஜ.க. அரசு நியமித்த அம்பானி பிர்லா குழுவின் அறிக்கை இவையனைத்தையும் கோருகிறது.'

"அமெரிக்காவில் கல்விக்கடன் வாங்கிப் படிக்கும் மாணவன், அதனை அடைப்பதற்கே 20 ஆண்டுகள் ஆகின்றன' என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் அமிதவ் கோஷ். அதே திசையில் கல்வியை கார்ப்பரேட்மயமாக்கும் நோக்கத்தில்தான் எஜுகேஷன் பைனான்ஸ் கார்ப்பரேசன் என்றொரு அமைப்பையே மைய அரசு உருவாக்குகிறது. ஜெயா அரசு பொதுப்பாடத்திட்டத்தை ஒழிக்கும் நோக்கமும் அதுதான்.'

"ஜெ. அரசு, மாணவர்களின் துன்பத்தையோ, மக்களின் உணர் வையோ  கடுகளவும் மதிக்கப் போவதில்லை. நீதிமன்றத்தில் தோற்றால், அது ஒரு அடிபட்ட மிருகத்தைப் போலத்தான் நடந்து கொள்ளும். எனவே, ஒரு மாணவர் எழுச்சியின் மூலம் மட்டும்தான் நாம் இக் கோரிக்கையில் வெல்ல இயலும்' என்று கூறி உரையை நிறைவு செய்தார், தோழர் மருதையன்.

"கட்டாய இலவசக் கல்வி தருவது அரசின் கடமை, கல்வி தனியார்மயம் என்பது ஏழைகள் மீதான வன்கொடுமை' என்ற தலைப்பில் பேசிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு , இலவசக் கல்விதான் தீர்வு என்பதைக் கல்வி வணிகர்களுக்கு எதிரான தமது போராட்ட அனுபவத்தின் ஊடாக விளக்கிப் பேசினார். பெற்றோர் சங்கம் என்று ஒன்று ஏற்படுத்திய பின்னர், அன்றாடம் மக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன என்றும் கல்விக் கொள்ளையர்களால் பாதிக்கப்படும் மக்கள் போகுமிடம் தெரியாமல் தவிக்கிறார்கள் என்றும் கூறினார்.

"வாங்குகின்ற கட்டணத்துக்கு ரசீது தர மறுக்கிறான். கோவிந்தராசன் கமிட்டி, ரவிராசபாண்டியன் கமிட்டி என்று போட்டு கட்டண நிர்ணயம் செய்தால், அதற்கும் கட்டுப்பட மறுக்கிறான். ஸ்பெசல் கிளாஸ், ஸ்மார்ட் கிளாஸ் என்று ஏதாவது ஒரு பெயரைச் சொல்லி ஆயிரக்கணக்கில் கொள்ளையடிக்கிறான். கல்வித்துறை அதிகாரிகளை ஒரு பொருட்டா கவே மதிப்பதில்லை. ஒருபொட்டல் காட்டில் பள்ளிக்கூடத்தை கட்டி வைத்துக் கொண்டு, விடுதி இருப்பதாகச் சொல்லி பெற்றோர்களிடம் பணம் வசூலித்துவிட்டு, வகுப்பறையிலேயே மாணவர்களைப் படுக்க வைக்கிறான். கல்வி அதிகாரியிடம் புகார் செய்தால், பல பள்ளிகள் தங்கள் பட்டியலிலேயே இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். அனுமதியோ, அங்கீகாரமோ இல்லாமல் பல பள்ளிகள் நடக்கின்றன. இத்தனை அட்டூழியங்களையும் அவர்கள் செய்ய முடிவதற்கு காரணம், அரசு இவர்களுக்கு பின்பலமாக இருக்கிறது என்பதுதான்.'

"எந்தச் சட்டத்தையும் அவர்கள் மதிப்பதில்லை. இலவசக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25சதவீதம் மாணவர்களை தனியார் பள்ளிகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்கான கட்டணத்தை அரசு கொடுக்கும் என்று கூறுகிறது இந்தச் சட்டம். இதன்படி மாணவர்களை சேர்த்துக் கொள்ளக் கோரினால், இப்படி ஒரு உத்தரவு தங்களுக்கு வரவே இல்லை  என்கிறார்கள். பிறகு உத்தரவையெல்லாம் காட்டி சேர்க்கச் சொன்னால், அரசாங்கம் கொடுக்கவேண்டிய பணத்துக்கு நீ உத்திரவாதம் தருகிறாயா என்று நம்மைக் கேட்கிறார்கள்.'

"எந்த கமிட்டி, எந்தச் சட்டத்தாலும் பயன் இல்லை. எதைப் போட்டாலும் அதை இவர்கள் வளைத்து விடுவார்கள். இலவசக் கல்விக்காக போராடுவது ஒன்றுதான் தீர்வு. பெற்றோர்கள் போராடுவதற்கு  அஞ்சினால் எதுவும் செய்ய இயலாது. ஒவ்வொரு பள்ளியிலும் பத்து பெற்றோர்கள் தாளாளர்களை அடித்தால்தான் தீர்வு பிறக்கும். கல்வி தனியார்மயம், சமச்சீர் பாடத்திட்ட ஒழிப்பு என்பதன் பொருள் குலக்கல்விதான். அவர்கள் ராஜாஜியின் வாரிசு என்றால், நாம் பெரியார் அம்பேத்கரின் வாரிசு என்று காட்ட வேண்டும். தனியார் கல்விக் கொள்ளையர்களை ஒழிக்கும்வரை ஓயக்கூடாது' என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியினிடையே பு.மா.இ.மு. மாணவர்கள் புரட்சிகரப் பாடல்களைப் பாடினர். போராடிச் சிறை சென்ற மாணவர்கள் மேடையில் அறிமுகப்படுத்தப்பட்டு பாராட்டப்பட்டனர். கருத்தரங்கில் பங்கேற்ற பள்ளி கல்லூரி மாணவர்களின் ஈடுபாடு, புதியதொரு மாணவர் எழுச்சி துவங்கும் என்பதற்கான நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்தது.

பு.ஜ. செய்தியாளர்கள்