பா.ஜ.க.-வின் ஊழல் எதிர்ப்பு: ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை!

தென்னிந்தியாவில் முதன்முறையாக கர்நாடகத்தில் அமைந்த பா.ஜ.க. ஆட்சி, பல்லாயிரம் கோடி சுரங்க ஊழல்  கொள்ளையில் சிக்கி நாடெங்கும் சந்தி சிரிக்கிறது. கட்டுப்பாடுமிக்க கட்சியாகவும் யோக்கிய சிகாமணிகளாகவும் ஊழல் எதிர்ப்பு சவடால் அடித்துவரும் பா.ஜ.க.வின் காவிகோவணமும் கிழிந்து அம்மணமாகி நிற்கிறது. ஊழல் கொள்ளையில் சிக்கிய முதல்வர் எடியூரப்பாவைப் பதவியிலிருந்து விலகச் சொல்லி பா.ஜ.க. தலைமை நிர்ப்பந்திக்க, அவர் ஏற்க மறுத்து கலகம் செய்த பிறகு, ஜெயலலிதாவுக்கு வாய்த்த பன்னீர்செல்வத்தைப் போல, எடியூரப்பாவின் விசுவாசியாக உள்ள ஒருவரை முதலமைச்சராக்க ஒப்புக் கொண்ட பிறகு, எடியூரப்பாவின் பதவி விலகல் நாடகம் நடந்துள்ளது.

 

கர்நாடகத்தில் சட்டவிரோதச் சுரங்கத் தொழில் குறித்து புகார்கள் வரத் தொடங்கியதும், முன்னாள் முதல்வர்கள் எஸ்.எம். கிருஷ்ணா, தரம்சிங், குமாரசாமி ஆகியோரின் ஆட்சிக் காலங்களிலும், அதன் பிறகு எடியூரப்பாவின் ஆட்சியிலும் நடந்துள்ள சட்டவிரோதச் சுரங்கத் தொழில் குறித்து  விசாரணை நடத்திவந்த லோக் அயுக்தா (முதல்வர் உள்ளிட்ட உயர் பதவிகளில் உள்ளோர் மற்றும் உயர் அதிகாரிகள் மீதான ஊழலை விசாரிக்கும் மக்கள் நீதிமன்றம்) 25,228 பக்கங்கள் கொண்ட தனது இறுதி அறிக்கையை  நாட்டிலேயே மிகப் பெரிய விசாரணை அறிக்கையை கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று மாநில அரசிடம் சமர்ப்பித்தது. இதில் எடியூரப்பா, அவரது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்களான ரெட்டி சகோதரர்கள், முன்னாள் முதல்வர் குமாரசாமி, காங்கிரசு பிரமுகர்கள் முதலானோர் ஊழல்  அதிகாரமுறை கேடுகளில் ஈடுபட்டு ஆதாயமடைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டவிரோதச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாக 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும்  அதிகார முறைகேடுகளால் ஆதாயமடைந்ததாக 600க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் பெயர்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. 2006 முதல் 2010 வரையிலான காலத்தில் சட்டவிரோதச் சுரங்கத் தொழிலால் அரசுக்கு ரூ.16,085 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த விசாரணை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடகத்தில் இரும்புத்தாது வெட்டியெடுக்கும் சுரங்கங்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டதில் மிகப்பெரும் ஊழல் நடந்துள்ளதையும், சட்டவிரோதச் சுரங்கங்கள் இயங்குவதையும் பற்றி லோக் அயுக்தாவின் ஆணையரான நீதிபதி ஹெக்டே விசாரணை நடத்திச் சொல்ல வேண்டிய தேவையேயில்லை. சுரங்கத் தொழில் மாஃபியாக்களான ரெட்டி சகோதரர்கள் மிகப் பெரிய தொழிலதிபர்களாக வளர்ந்த கதை கர்நாடகத்தில் ஊரறிந்த ரகசியம்.

ரெட்டி சகோதரர்களின் பணபலத்தால்தான் பா.ஜ.க. கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்தது. அக்கட்சி ஆட்சியில் நீடிப்பதும் கவிழ்வதும் ரெட்டி சகோதரர்களின் கையில்தான் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் சோனியாவுக்கு எதிராக நின்ற சுஷ்மா சவராஜுக்கான  தேர்தல் செலவுகளைக் கவனித்துக் கொண்ட ரெட்டி சகோதரர்கள், ஆந்திராவில் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியை ஆந்திர முதல்வராக்க கோடிகளை வாரியிறைக்கின்றனர். கடந்த ஆண்டில் ரெட்டி சகோதரர்கள் எடியூரப்பாவைக் கண்ணில் விரலை விட்டு ஆட்டியதையும், சுஷ்மா, அத்வானி போன்ற பா.ஜ.க. தலைவர்கள் எடியூரப்பாவை அடக்கி வைத்ததையும், தனது நிலைக்காகத் தொலைக்காட்சி பேட்டியிலேயே எடியூரப்பா அழுததையும் நாடறியும்.

ரெட்டி சகோதரர்களின் ஊழல்அதிகார முறைகேடுகள் பற்றி அத்வானியும் சுஷ்மா சுவராஜும் அறியாததல்ல. கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் மட்டும் பெல்லாரியிலிருந்து ரூ. 60,000 கோடி மதிப்புடைய 71 லட்சம் டன்கள் இரும்புத் தாதுவும் கனிமங்களும் ரெட்டி சகோதரர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஒரு டன்னுக்கு ரூ.27 மட்டும் அரசுக்குச் செலுத்திவிட்டு, அதை ரூ. 7,000 க்கு விற்று நாள் ஒன்றுக்கு ரூ. 20 கோடி வீதம் இவர்கள் குவித்தார்கள். இதை கர்நாடக முதல்வர் எடியூரப்பாவே மாநில சட்டப் பேரவையில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக்கும் பிறகும் ரெட்டி சகோதரர்களின் பகற்கொள்ளையைத் தடுக்க பா.ஜ.க. முன்வரவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த விவகாரம் சந்தி சிரித்த போதிலும், லோக் அயுக்தா விசாரிக்க உரிமை உள்ளதா, சி.பி.ஐ. விசாரிப்பதா, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்றெல்லாம் வாதப் பிரதிவாதங்களை நடத்திக் கொண்டும், அதிகார முறைகேட்டின் மூலம் அபகரித்துக் கொண்ட நிலங்களை எடியூரப்பாவின் மகனும், மருமகனும் அரசுக்கே திருப்பியளிக்க முன்வரும் அளவுக்கு ஊழல் அம்பலப்பட்டுள்ள போதிலும் பா.ஜ.க. தலைமை எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. எடியூரப்பா மீது ஊழல் தடுப்புச்சட்டப்படி வழக்கு தொடர ஆளுநர் பரத்வாஜ் அனுமதி அளித்ததை எதிர்த்து பா.ஜ.க. கடையடைப்பு போராட்டத்தை நடத்தி ஊழலுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தது.

2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் விட்டேனா பார் என்று வேகம் காட்டும் பா.ஜ.க.வும் பார்ப்பன ஊடகங்களும், குருமூர்த்தி, சு.சாமி, சோராமஸ்வாமி வகையறாக்களும்  கர்நாடக பா.ஜ.க. ஆட்சியின் ஊழல் குறித்து அடக்கியே வாசிக்கின்றனர். 2ஜி அலைக்கற்றை ஊழல் கொள்ளை வெளியானதும், தி.மு.க.வுக்கு எதிராகவும் முன்னாள் அமைச்சர் ராசாவைக் கைது செய்யக் கோரியும் ஆவேசம் காட்டிய பா.ஜ.க.,  அதன் பின்னர் பிரதமர் மன்மோகன், உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோரை விசாரிக்க வலியுறுத்தி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தும் பா.ஜ.க., தாங்கள் ஆட்சி செய்யும் மாநிலத்தின் ஊழல் கொள்ளைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை. அத்வானியின் ஹவாலா ஊழல், அருண்ஷோரி, பிரமோத் மகாஜன்  ஆகியோரின் தொலைத் தொடர்பு ஊழல், பங்காரு லட்சுமணன் லஞ்சம் வாங்கிகையும் களவுமாக அம்பலப்பட்ட விவகாரம், கார்கில் சவப்பெட்டி ஊழல்  என்று பா.ஜ.க.வின் யோக்கியதை ஏற்கெனவே நாறிப் போயுள்ளது. இவற்றையெல்லாம் மூடிமறைத்துவிட்டு ஏதோ யோக்கிய சிகாமணிகளைப் போல ஊழல் எதிர்ப்பு நாடகமாடிக் கொண்டு திரிகிறது பா.ஜ.க.

தற்போதைய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் லோக்பால் மசோதா கொண்டுவரப்படுவதால், லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்கவேண்டும் என்ற வாதத்துக்கு ஆதரவாக பா.ஜ.க. தீவிரம் காட்டுவதை மட்டுப்படுத்த, கர்நாடக முதல்வர் எடியூரப்பா மீதான ஊழல் விவகாரத்தை காங்கிரசு கையிலெடுத்துக் கொண்டு ஆரவாரம் செய்கிறது. என் ஊழல் சாக்கடையைக் கிளறினால், உன் சாக்கடையைக் கிளறிவிடுவேன் என்று மிரட்டிப் பணிய வைக்கும் பாணியில்தான் இந்த ஊழல் எதிர்ப்பு வீராவேசம் நடக்கிறது. இதனால், ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்படவுள்ள லோக்பால் வரைவு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம், எங்களது திருத்தங்களைக் கூறி லோக்பால் மசோதாவை வலுவுள்ளதாக்குவோம் என்று அறிவித்து தற்போதைக்கு பா.ஜ.க. பின்வாங்கியுள்ளது.

கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்கள் என்ன செய்கிறார்களோ, அதையே ஒரிசா, சட்டிஸ்கர் மாநிலங்களில் டாடா, எஸ்ஸார், வேதாந்தா, போஸ்கோ முதலான உள்நாட்டுவெளிநாட்டு ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகள் செய்து வருகின்றனர்.  நாட்டின் பொதுச்சொத்துக்களான காடுகள், மலைகள், கனிமங்கள், விளைநிலங்கள், நீர்நிலைகள்  என அனைத்தையும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பறித்தெடுத்து, அவற்றை உள்நாட்டுவெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு உடமையாக்கும் பகற்கொள்ளை சட்டபூர்வமாகவே மூர்க்கமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. மறுகாலனியாக்கத்தின் கீழ் தொடுக்கப்பட்டுள்ள இத்தீவட்டிக் கொள்ளைதான் நாட்டு மக்களின் வாழ்வைப் பறிக்கும் முதற்காரணம் என்பதை மூடிமறைத்துவிட்டு, 2ஜி அலைக்கற்றை ஊழல்  கொள்ளை விவகாரம் போல சில அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் அடிக்கின்ற இலஞ்சம்தான் முழுமுதற் பிரச்சினை என்று சித்தரித்து, அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக நாடகமாடி நாட்டு மக்களை ஏய்ப்பதில் எல்லா ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் ஓரணியில் நிற்கின்றன.