“சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்து! பாடநூல்களை உடனே வழங்கு!” – கல்வி தனியார்மயத்துக்கு எதிராகத் தமிழகமெங்கும் பரவும் போராட்டம்

சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும், தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் கடந்த மே மாத இறுதியிலிருந்து தாங்கள் செயல்படும் பகுதிகளில் ம.க.இ.க, வி.வி.மு, பு.ம.இ.மு;, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்துடன் இணைந்து தொடர் பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன. கடந்த ஜூன் மாதத்தில் தமிழகமெங்கும் பல பகுதிகளில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்திவந்த இவ்வமைப்புகள், அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை மாதத்தில் துண்டுப்பிரசுரங்களுடன் வீடுகளிலும் பள்ளிகளிலும் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், பெற்றோர்கள்  மாணவர்களைத் திரட்டி உண்ணாநிலை போராட்டங்கள், சாலைமறியல்கள்,பாசிச ஜெயாவின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் பெற்றோரைத் திரட்டிப் போராட்டம் என போர்க்குணத்தோடு தொடர்ந்து போராடி வருகின்றன. கடந்த ஜூலை 4ஆம் தேதியன்று காரைக்குடியிலும், 11ஆம் தேதியன்று போடியிலும், 12ஆம் தேதியன்று கரூரிலும், 13 ஆம் தேதியன்று மானாமதுரையிலும், 21ஆம் தேதியன்று சிவகங்கையிலும் ஆர்ப்பாட்டங்களை இவ்வமைப்புகள் நடத்தின.

 

அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை மீறி சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மற்றும் கடலூரிலுள்ள கிருஷ்ணசாமி, சி.கே. முதலான மெட்ரிக் பள்ளிகள் கொள்ளையடிப்பதை எதிர்த்து பெற்றோரைத் திரட்டி இவ்வமைப்புகள் போராட்டத்தை நடத்தின. கட்டணக் கொள்ளைக்காக மாணவர்களையும் பெற்றோரையும் வதைக்கும் மெட்ரிக் பள்ளி  முதலாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து அப்பள்ளிகளை அரசே ஏற்று நடத்தக் கோரி, பெற்றோரைத் திரட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் தொடர்கின்றன.  கல்வி வியாபாரிகளைக் கல்வியாளர்களாகச் சித்தரித்து, பாசிச ஜெயா அரசால் நியமிக்கப்பட்ட சமச்சீர் பாடத்திட்டம் குறித்து ஆராய்ந்த குழுவின் அறிக்கையை எதிர்த்து, அதனைத் தீவைக்கும் போராட்டத்தை விருத்தாசலத்திலும் சிதம்பரத்திலும் ம.உ.பா.மையமும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் இணைந்து நடத்தின.

இந்நிலையில், கடந்த ஜூலை 18ஆம் தேதியன்று சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தஞ்சை பு.மா.இ.மு. தோழர்கள் மக்களின் போராட்டத்துக்குக் கிடைத்த இம்முதற்கட்ட வெற்றியை உழைக்கும் மக்களுக்கு  இனிப்புகள் வழங்கி அறிவித்ததோடு, சமச்சீர் கல்வித் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்க எத்தணிக்கும் பாசிச ஜெயா கும்பலுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டனர். சேலத்தில் பெ.வி.மு; ம.உ.பா.மையத்தைச் சேர்ந்த தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலையணிவித்து, பட்டாசு வெடித்து பறையடித்து முழக்கமிட்டு மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். வழக்குரைஞர்களின் வாதத் திறமையால் மட்டுமின்றி, உழைக்கும் மக்களின் மாணவர்களின் போராட்ட அலையின் காரணமாகவே, மக்களின் பொதுக்கருத்து சமச்சீர் கல்விக்கு ஆதரவாக இருந்ததாலேயே சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டுமென்று தீர்ப்பை வழங்கியுள்ளது. இப்பொதுக்கருத்தை உருவாக்கியது மக்களின் போராட்டங்கள். இப்போராட்டங்களைக் கட்டியமைத்து துவளாமல் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றவைதான்,  ம.உ.பா.மையமும் பு.மா.இ.மு.வும்.

சமச்சீர் பாடநூல்களை ஜூலை 22ஆம் தேதிக்குள் விநியோகித்து முடித்து, ஆசிரியர்கள் பாடம் நடத்தத் தொடங்கிவிட வேண்டும் என்று கடந்த ஜூலை 18ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், ஜெயா அரசு பாடநூல்களை விநியோகிக்காமல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி சமச்சீர் பாடநூல்களை உடனே விநியோகித்து, ஆகஸ்ட் 2ஆம் தேதிக்குள் புத்தக விநியோகித்தை முடித்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஜூலை 21ஆம் தேதி உத்தரவிட்டது. ஆனாலும் ஜெயா அரசு மாணவர்களுக்குப் பாடநூல்களைக் கொடுக்கவில்லை.

சமச்சீர் பாடநூல்களை மாணவர்கள் தொட்டால் தீட்டு ஏற்பட்டுவிடுமா? அல்லது இந்தப் புத்தகங்கள் என்ன ஆபாசப் புத்தகங்களா? புத்தகங்களை மாணவர்களின் கண்களில் காட்டுவதற்கே ஜெயா அரசு அஞ்சுவது ஏன்? இணையதளத்திலிருந்து அந்நூல்களை அகற்றுவது ஏன்? அவ்வாறு செய்தால் மாணவர்களும் பெற்றோரும் எது சரியான பாடநூல், ஏன் இத்தகைய பாடநூல் அவசியம் என்று விவாதிக்கவும் கருத்துத் தெரிவிக்கவும் வாய்ப்பாகிவிடும்; அது பெரும் போராட்ட அலையாக பொங்கியெழத் தொடங்கிவிடும்  என்பதாலேயே, சமச்சீர் பாட நூல்களை முடக்கி வைக்கிறது ஜெயா அரசு. அதனால்தான் மாணவர்களின் தலைவிதியோடு தொடர்புடைய சமச்சீர் பாடநூல்களை மக்கள் மன்றத்தில் திறந்துகாட்ட மறுக்கிறது. ஆசிரியர்களை மிரட்டுகிறது. அறிவைப் பூட்டிவைத்து ஆயுதப் போலீசை காவலுக்கு நிற்க வைக்கிறது.

இந்த அநீதியையும் அடாவடித்தனத்தையும் எதிர்த்து மனித உரிமைப் பாதுகாப்பு மையமும், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் விருத்தாசலத்தில் அரசு மேனிலைப்பள்ளி மாணவர்களைத் திரட்டிப் போராட அறைகூவின. 22ஆம் தேதியன்று  மதிய உணவு இடைவேளையின் போது, இந்த அறைகூவலை ஏற்று மாணவர்கள் முழக்கமிட்டுக் கொண்டு சாலையில் திரண்டனர். போலீசு செய்வதறியாது திகைத்தது. பின்னர், மாணவர்களை முறைப்படுத்தி மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கு ஆர்ப்பாட்ட ஊர்வலமாக வழிநடத்திச் சென்றன, இவ்வமைப்புகள். வழியெங்கும் பொதுமக்களும் வியாபாரிகளும் ஆச்சரியத்துடன் பார்த்து இது நியாயமான போராட்டம் என்று வாழ்த்தினர். மாவட்டக் கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு, எங்களுக்குப் பாடநூல்களைக் கொடு என்று மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் காட்டிய போதிலும், எங்களுக்கு அரசிடமிருந்து உத்தரவு வரவில்லை என்றனர் கல்வித்துறை அதிகாரிகள். "பாடநூல்களைக் கொடுக்க முடியாது என்று மறுக்கும் அரசுக்கு, பள்ளிக்குச் செல் என்று ஆணையிடும் உரிமை கிடையாது; ஆடுமாடுகளல்ல மாணவர்கள்; இனி வீதிதான் எங்கள் பள்ளி, போராட்டமே எங்களின் கல்வி!' என்ற முழக்கத்தோடு மாணவர்கள் போராடி வருகின்றனர்.

ஜூலை 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடப்பதையொட்டி, அன்று தமிழகமெங்கும் இப்புரட்சிகர அமைப்புகளும் மனித உரிமைப் பாதுகாப்பு மையமும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கமும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தக் கோரியும், வணிகமயமாகும் கல்விக் கொள்கைக்கு முடிவு கட்டவும் தமிழகமெங்கும் பெற்றோர் மாணவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் போராட்டங்களை நடத்தின.  விருத்தாசலத்தில் 25.7.2011 அன்று அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியான டேனிஷ் மிஷன் பள்ளி, 26.7.2011 அன்று மங்கலம்பேட்டை அரசு மேனிலைப்பள்ளி, விருத்தாசலம் அரசு மகளிர் பள்ளிகளின் மாணவமாணவிகளைத் திரட்டி சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. கடலூரில் பு.மா.இ.மு. தோழர்கள் 25ஆம் தேதியன்று பள்ளி மாணவர்களைத் திரட்டி ஊர்வலமாக வந்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமச்சீர் பாடநூல்களை உடனடியாக வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.

சென்னையில், பள்ளி மாணவர்களின் கல்வி உரிமைக்காக 25.7.2011 அன்று பச்சையப்பன் கல்லூரியின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பு.மா.இ.மு. தலைமையில் திரண்டு நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தினர். நிறுத்தப்பட்ட வாகனங்கள்  பேருந்துகளில் ஏறி இந்தப் போராட்டத்தின் அவசியத்தை மாணவர்கள் விளக்கிப் பேசினர். 26.7.2011 அன்று விழுப்புரத்தில் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தை நடத்தினர். இதேநாளில்  தர்மபுரி, மதுரை, சென்னை, திருச்சி,கோவை, பென்னாகரம், ஓசூர்ஆகிய இடங்களில் இப்புரட்சிகர அமைப்புகள் மாணவர்கள் பெற்றோரைத்  திரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தின. ம.உ.பா.மையத்தின் வழக்குரைஞர்கள் நீதிமன்ற வளாகங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

தனியார் மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க வேண்டுமானால், இப்பள்ளிகளை அரசே ஏற்று நடத்துவதும், பொதுப் பாடத்திட்டத்தையும் பொதுப் பாடநூல்களையும் நடைமுறைப்படுத்துவதும் அவசியம் என்பது இப்போது மக்களுக்கு தெளிவாகத் தொடங்கிவிட்டது. இக்கோரிக்கைகளுக்காகவும், கல்விக் கொள்ளையர்களுக்குத் தமிழகத்தை மொத்தமாகத் திறந்துவிட எத்தணிக்கும் பாசிச ஜெயா கும்பலுக்கு எதிராகவும் இப்புரட்சிகர அமைப்புகளின் வீச்சான பிரச்சாரமும் போர்க்குணமிக்க போராட்டங்களும் உழைக்கும் மக்களின் பேராதரவோடு தொடர்ந்து முன்னேறி வருகின்றன.

பு.ஜ.செய்தியாளர்கள்.