Language Selection

புதிய ஜனநாயகம் 2011

மும்பையிலிருந்து வெளிவரும் மாலை நாளேடான "மிட்டே' வின் மூத்த புலனாய்வு செய்தியாளரான ஜோதிர்மாய் டே, கடந்த ஜூன் 11ஆம் தேதியன்று பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவரை, இரகசிய உலக குற்றக் கும்பல்கள் நடுவீதியில் சரமாரியாகச் சுட்டுக் கொன்ற இக்கொடுஞ் செயல், நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

கடந்த 22 ஆண்டுகளாக இக்கிரிமினல் குற்றக் கும்பல்கள் பற்றி ஜோதிர்மாய் டே தொடர்ந்து எழுதிவந்தார். இக்குற்றக் கும்பலுக்கும் போலீசு, அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளுக்கும் இடையிலான உறவு பற்றிய பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர்களில் அவரும் ஒருவர்.

எண்ணெய் டேங்கர் லாரிகளை மிரட்டிக் கடத்திச் சென்று எண்ணெயைக் கைப்பற்றுவதும், எண்ணெயில் கலப்படம் செய்து விற்பதும் மகாராஷ்டிராவில் கிரிமினல் குற்றக் கும்பல்களின் மிகப் பெரிய தொழிலாக வளர்ந்து விட்டது. இந்த எண்ணெய் மாஃபியாக்களைப் பிடிக்கப் போன உதவி கலெக்டர் யஷ்வந்த் சோனேவானாவை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றது இந்த மாஃபியா கும்பல். இந்த எண்ணெய் மாஃபியாக்களைப் பற்றி அடுத்தடுத்து அம்பலப்படுத்தி வந்தார், ஜோதிர்மாய் டே. இதுதவிர, மும்பை மாஃபியா கும்பல்களின் தலைவனாகிய தாவூத் இப்ராஹிமின் தங்கையுடன் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்த போலீசு அதிகாரிகளைப் பற்றி எழுதினார். இதனால் அவர் மீது வன்மத்துடன் இருந்த எண்ணெய் மாஃபியாக்களும் இதர இரகசிய உலக மாஃபியாக்களும் கூலிப்படையை ஏவி அவரைக் கொன்றொழித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல் கட்டிட உரிமையாளர்களிடமிருந்து பணம் கறக்க கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் அப்பாவி பொறியாளர்களையும் பாதுகாவலர்களையும் இரகசிய உலக மாஃபியாக்கள் பலியிட்டு மிரட்டுவ தும் மும்பையில் அதிகரித்துள்ளது. "எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்று போற்றப்பட்ட தயாநாயக், பிரதீப் சர்மா முதலான பல போலீசு உயரதிகாரிகள் இரகசிய உலகப் பேர்வழிகளுடன் கூட்டுச் சேர்ந்திருப்பது நிருபணமாகி, பதவி இறக்கம் செய்யப்பட்டனர். மும்பை நகரில் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது. மும்பை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே "பாய்' என்று அழைக்கப்படும் இரகசிய உலகப் பேர்வழி இருக்கிறார். ஆசாத்மைதானப் பகுதியில்தான் தாவூத் இப்ராஹிமின் சகோதரியும் சகோதரரும் ஆர்ப்பாட்டமாக தொழில் நடத்துகின்றனர். டேவின் மரணம் நிகழ்ந்த அடுத்த 48 மணி நேரத்தில் ஆசாத் மைதானப் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த துணைக் கமிஷனர் அனில் மகா போலே பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். "புலனாய்வுச் செய்தியாளர் டே கொல்லப்பட்ட சம்பவத்தில், மகாபோலேவுக்குத் தொடர்பு இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி நான் மறுக்கவுமில்லை; உறுதி செய்யவுமில்லை' என்கிறார், முதுநிலை போலீசு கமிஷனர் அரூப் பட்நாயக். இப்படி மகாபோலே போன்ற போலீசு அதிகாரிகள் உயர் பதவிகளில் அமர்த்தப்படும் அளவுக்கு போலீசுத்துறையையே ஆட்டிப் படைப்பவர்களாக இரகசிய உலகக் கிரிமினல்கள் வளர்ந்துள்ளனர்.

இப்படுகொலையைக் கண்டித்தும், மகாராஷ்டிர போலீசு மீது நம்பிக்கை இல்லாததால் இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்; பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் குற்றத்தைப் பிணையில் வெளிவர முடியாத குற்றமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மும்பை பத்திரிகையாளர்கள் பேரணி, ஆர்ப்பாட்டங்களை நடத்திய போதிலும், இவற்றை மாநில முதல்வர் பிரிதிவிராஜ் சவாண் ஏற்க மறுத்துள்ளார். மறுபுறம், மும்பையில் நான்கு பேரையும் இராமேசுவரத்தில் மூன்று பேரையும் பிடித்து, இவர்கள்தான் ஜோதிர்மாய் டேவைக் கொன்றவர்கள் என்று கூறி, அதிருப்தியைத் தணிக்க முயற்சிக்கிறது மும்பை போலீசு.

தனியார்மயம்தாராளமயமாக்கத்தைத் தொடர்ந்து கருப்புப்பணகார்ப்பரேட் கொள்ளையர்களும் கிரிமினல் குற்றக் கும்பல்களும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகிவிட்டனர். அவற்றோடு அதிகார வர்க்கமும் போலீசும் கள்ளக்கூட்டுச் சேர்ந்திருப்பதால், கிரிமினல் குற்றக்கும்பல்களின் அட்டகாசங்களும் தீவிரமாகிவிட்டன. ரியல் எஸ்டேட், கட்டுமானப் பணிகள், சினிமா, சூதாட்டம், கிரிக்கெட்  என இரகசிய உலகப் பேர்வழிகளின் ஆதிக்கமும் கொட்டமும் கேள்வி முறையின்றித் தொடர்கிறது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கிடையிலான போட்டாபோட்டியில் கசியும் உண்மைகளை வைத்து செய்தியாளர்கள் இக்கிரிமினல் குற்றக் கும்பல்களையும் அவற்றுடன் கள்ளக் கூட்டு சேர்ந்துள்ள போலீசு மற்றும் அதிகாரவர்க்கத்தையும் அம்பலப்படுத்தி பரபரப்பான புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறார்கள். இதையொட்டி இப்பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கிறது.

மும்பை மட்டுமல்ல் சட்டிஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூரிலிருந்து வெளிவரும் "தைனிக் பாஸ்கர்' என்ற நாளேட்டின் செய்தியாளரான சுஷில் பதாக், கடந்த டிசம்பர் 20ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி 23 அன்று "நை துனியா' நாளேட்டின் செய்தியாளரான உமேஷ் ராஜ்புத், மோட்டார் சைக்கிளில் வந்த குண்டர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார். "உன் எழுத்தை நிறுத்தாவிட்டால், உன் மூச்சை நிறுத்துவோம்' என்ற குறிப்பும் அக்கொலைகாரர்கள் விட்டுச் சென்றுள்ளனர். 1992 முதலாக இந்தியாவில் 28 புலனாய்வு செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 14 பேர் மும்பையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் அதிக அளவில் செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ள 21 நாடுகளில் இந்தியா 6ஆவது இடத்தில் இருக்கிறது.

இரகசிய உலக கிரிமினல் குற்றக் கும்பல்களால் அச்சுறுத்தப்படுவதும் கொல்லப்படுவதும் மட்டுமல்ல, நாடெங்கும் பத்திரிகையாளர்கள் போலீசாராலும் உளவுத் துறையினராலும் மிரட்டப்படுகின்றனர், அல்லது பொய்க்குற்றம் சாட்டிக் கைது செய்யப்படுகின்றனர். கடந்த ஜனவரியில் "விரோதி' என்ற பத்திரிகையின் ஆசிரியரான சுதிர் தாவலே மாவோயிஸ்டுகளுடன் கூட்டுச் சேர்ந்து சதி செய்தார் என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். கார்ப்பரேட் கொள்ளையையும் அதற்குத் துணைநிற்கும் அதிகாரிகள்போலீசு கும்பலையும் அம்பலப்படுத்துவதால், ஒரிசாவிலும் சட்டிஸ்கரிலும் பத்திரிகையாளர்கள் உளவுத்துறை போலீசாரால் மிரட்டப்படுவது அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, மும்பை போலீசு கறைபடிந்ததாகிவிட்ட நிலையில், அதை வைத்துக்கொண்டு கிரிமினல் குற்றங்களைக் கண்டறியவோ, களையவோ ஒருக்காலும் சாத்தியமில்லை. கிரிமினல் குற்றக் கும்பல்களின் கூட்டாளியாகச் சீரழிந்து நிற்கும் மும்பை போலீசு கும்பலைக் கலைக்கக் கோரி போராடுவதும், பத்திரிகையாளர்கள் உழைக்கும் மக்களுடன் ஐக்கியப்படுவதன் மூலம்தான் அனைத்து சமூகவிரோத கும்பல்களின், கார்ப்பரேட் கொள்ளையர்களின் கொட்டங்களையும் முறியடிக்க முடியும்.

. மனோகரன்