2ஜி அலைக்கற்றை ஏல விற்பனையில் நடந்துள்ள கார்ப்பரேட் பகற்கொள்ளையைப் போல, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வயல்களை ஏல விற்பனை செய்திருப்பதிலும் கார்ப்பரேட் பகற்கொள்ளை நடந்திருப்பது தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. இலைமறை காயாக அதிகாரத் தாழ்வாரங்களில் கிசுகிசுக்கப் பட்டுவந்த இந்த ஊழலைப் பற்றிய இந்திய அரசின் தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையைப் பத்திரிகைகள் வெளியிட்டதன் மூலம் இந்த கார்ப்பரேட் பகற்கொள்ளை அம்பலத்திற்கு வந்துவிட்டது.

 

 

2ஜி அலைக்கற்றை பகற்கொள்ளையில் டாடா, அனில் அம்பானி, ரூயா உள்ளிட்டுப் பல தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆதாயமடைந்தனர் என்றால், கே.ஜி. என்றழைக்கப்படும் இந்த எரிவாயு ஏல விற்பனையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், கெய்ர்ன் என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமும் மிகப் பெரும் ஆதாயமடைந்துள்ளன. 2ஜி பகற்கொள்ளைக்கு தி.மு.க.வின் ராசா உடந்தையாக இருந்தாரென்றால், இந்த கே.ஜி. பகற்கொள்ளைக்கு காங்கிரசின் முரளி தியோரா உடந்தையாக இருந்துள்ளார். 2ஜி பகற்கொள்ளையைப் போலவே, இந்த கே.ஜி. பகற்கொள்ளையும் கல்லுளிமங்கன் மன்மோகன் சிங்குக்குத் தெரிந்தே, அவரது கண்ணசைவோடுதான் நடந்திருக்கிறது.

முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற ஏலவிற்பனை முறையைப் பயன்படுத்திக் கொண்டு 2ஜி ஊழல் நடந்தது என்றால், "உற்பத்திப் பகிர்வு' என்ற ஒப்பந்த முறைதான் இந்த கே.ஜி. ஊழலுக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது.

கிருஷ்ணா  கோதாவரிப் படுகையில் கச்சா எண்ணெயும்,இயற்கை எரிவாயுவும் இருப்பது கண்டறியப்பட்டவுடன், அதனைத் துரப்பணம் செய்து எடுத்து விற்பனை செய்யும் உரிமை, உற்பத்திப் பகிர்வு என்ற ஒப்பந்த முறையின் மூலம் ரிலையன்ஸ் குழுமத்திடமும், கெய்ர்ன் என்ற பன்னாட்டு நிறுவனத்திடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்த இயற்கை எரிவாயுவையும், கச்சா எண்ணெயையும் தோண்டியெடுக்க எவ்வளவு மூலதனம் போடப்படுகிறதோ, அம்மூலதனத்தை அந்நிறுவனங்கள் முழுமையாகத் திரும்ப எடுக்கும் வரை, அரசிற்கு குறைந்தபட்ச "ராயல்டி' தொகை கொடுத்தால் போதும் என்பதுதான் உற்பத்தி பகிர்வு ஏல ஒப்பந்தத்தின் அடிப்படையான அம்சம். இந்த மூலதனம் அதிகரிக்க, அதிகரிக்க, அரசிற்குக் குறைந்தபட்ச ராயல்டி கட்டணம் கொடுக்கும் காலமும் அதிகரித்துக் கொண்டே போகும். உமி கொண்டுவந்தவன் அவல் தின்னும் கதைதான் இது. இந்த ஒப்பந்த விதிதான் இந்தப் பகற்கொள்ளையின் ஆணி வேராக அமைந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இத்துரப்பணப் பணியைத் தொடங்கியபொழுது, தினந் தோறும் 4 கோடி கன மீட்டர் இயற்கை எரிவாயுவைத் தோண்டியெடுக்க 239 கோடி அமெரிக்க டாலர் மூலதனச் செலவு பிடிக்கும் எனக் கணக்குக் காட்டியது. பின்னர், இம்மூலதனச் செலவை 519 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்து, தினந்தோறும் 8 கோடி கனமீட்டர் இயற்கை எரிவாயுவைத் துரப்பணம் செய்யப் போவதாகக் கணக்குக் காட்டியது. இறுதியாக, இம்மூலதனச் செலவு 880 கோடி அமெரிக்க டாலரைத் தொட்டது.

இந்திய அரசிற்குக் குறைந்தபட்ச ராயல்டி என்ற எலும்புத் துண்டை வீசிவிட்டு, கொழுத்த கறியை ரிலையன்ஸின் அம்பானி மட்டுமே நீண்ட காலத்திற்குத் தின்பதற்கான ஏற்பாடுதான் இது. எரிவாயு உற்பத்தியை இரண்டு மடங்காக்குவதற்கு, நான்கு மடங்கு மூலதனச் செலவு மிகவும் அதிகம் எனப் பொருளாதார வல்லுநர்களே சுட்டிக் காட்டும்பொழுது, பெட்ரோலியத் துறை அமைச்சகமும் ஹைட்ரோ கார்பன் தலைமை இயக்குநரும் ரிலையன்ஸ் கொடுத்த மூலதனச் செலவு கணக்கை எவ்விதக் கேள்வியும் கேட்காமல் ஒப்புக் கொண்டு, இச்சதிக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.

இரண்டாவதாக, மூலதனச் செலவு அதிகரித்து விட்டதாக முகேஷ் அம்பானி காட்டிய கணக்கும் மோசடியானது. இயற்கை எரிவாயுவைத் துரப்பணவு செய்யும் இயந்திரத்தின் தினசரி வாடகை 1,20,000 அமெரிக்க டாலரிலிருந்து 5,50,000 டாலராக அதிகரித்துவிட்டது; வயல்களில் செய்யப்படும் சேவைகளுக்கான கட்டணம் நாளொன்றுக்கு 1,25,000 அமெரிக்க டாலரிலிருந்து 1,50,000 அமெரிக்க டாலராக அதிகரித்துவிட்டது என்றவாறு பல பொய்க் கணக்குகளை எழுதித்தான் இம்மூலதனச் செலவை அதிகரித்துக் காட்டியது, ரிலையன்ஸ் நிறுவனம். இத்திருட்டுத்தனம் அனைத்திற்கும் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த முரளி தியோராவும், ஹைட்ரோகார்பன் தலைமை இயக்குநராக இருந்த சிபலும் உடந்தையாக இருந்துள்ளனர்.

கிருஷ்ணாகோதாவரிப் படுகை பத்தாண்டுகளுக்கு முன் ரிலையன்ஸ{க்குக் குத்தகைக்கு விடப்பட்டது. எனினும், அந்நிறுவனம் 2009ஆம் ஆண்டு முடிய அப்படுகையின் 14 "பிளாக்கு'களில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டவில்லை. குத்தகை ஒப்பந்த விதிகளின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கிணறுகள் தோண்டாத இடங்களை, ஏறத்தாழ அப்படுகையின் 50 சதவீத நிலப்பரப்பை ரிலையன்ஸ் நிறுவனம் அரசிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், நடந்ததோ வேறு. அச்சமயத்தில் ஹைட்ரோகார்பன் தலைமை இயக்குநராக இருந்த சிபல், எண்ணெய் வளம்நிறைந்த, ஆனால் எண்ணெய்க் கிணறுகள் தோண்டாத பகுதிகளை, ரிலையன்ஸ{க்குச் சாதகமாக கிணறுகள் தோண்டப்பட்ட பகுதியாக அறிவித்து, அப்பகுதிகளை அரசு மீண்டும் தன்வசம் எடுத்துக் கொள்வதைத் தடுத்தார். சிபலின் இந்த மோசடித்தனமான முடிவை பெட்ரோலியத்துறை செயலர் தள்ளுபடி செய்துவிட்டாலும், அப்பொழுது பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த முரளி தியோரா, கூடுதல் செயலர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து ரிலையன்ஸ{க்கு ஆதரவாக ஒப்புதல் கிடைக்கச் செய்தார்.

சிபலும், முரளி தியோராவும் ரிலையன்ஸ{க்குச் சாதகமாக விதி மீறல்களில் ஈடுபட்டனர் என்பது ஒரு புறமிருக்க, எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்படாத அந்த 50 சதவீத நிலப்பரப்பை ரிலையன்ஸிடமிருந்து மீளப் பெறாததன் மூலம், அந்நிலப்பரப்பை மறு ஏலம் மூலமாகக் கூடுதல் விலையில் வேறு நிறுவனங்களுக்கு விற்பதையும் தடுத்துவிட்டனர். இதனால் அரசுக்குப் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கிருஷ்ணா  கோதாவரிப் படுகையில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டும் குத்தகையினை எடுத்துள்ள கெய்ர்ன் என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கும் விதிமுறைளை மீறி இது போன்ற சலுகை காட்டப்பட்டுள்ளதையும் தணிக்கை அறிக்கை அம்பலப்படுத்தியிருக்கிறது. மேலும், இராசஸ்தான் மாநிலத்தில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டும் குத்தகையை எடுத்துள்ள கெய்ர்ன் நிறுவனம், கிணறுகளைத் தோண்டத் தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, ஏறத்தாழ 1,600 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பகுதியையும் ஆக்கிரமித்துக் கொண்டு கிணறுகளைத் தோண்டி வருகிறது. இச்சட்ட விரோத ஆக்கிரமிப்புக்கும், கச்சா எண்ணெய்க் கொள்ளைக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் உடந்தையாகச் செயல்பட்டிருப்பதையும் தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.

இக்குத்தகை குறித்த கோப்புகளையும், நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவுகளையும் முழுமையாகத் தணிக்கைக்குத் தராமல் இழுத்தடிப்பதால், இப்பகற்கொள்ளையின் மூலம் ரிலையன்ஸ் அடைந்துள்ள ஆதாயத்தைத் தற்பொழுது கணித்துச் சொல்ல முடியாது எனத் தணிக்கை துறை குற்றஞ்சுமத்தியுள்ளது. எனினும், இப்பகற்கொள்ளையின் மூலம் ரிலையன்ஸ் அடைந்துள்ள சட்டவிரோத ஆதாயம் 60,000 கோடி ரூபாய்க்கு மேலாக இருக்கும் எனப் பத்திரிகைகள் கணித்துள்ளன.

காங்கிரசைச் சேர்ந்த முரளி தியோரா அமெரிக்காவின் நிர்பந்தம் காரணமாக பெட்ரோலியத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகுதான், இம்மோசடி முழுமூச்சுடன் நடந்துள்ளது. இம்மோசடி தொடர்பாக 2006ஆம் ஆண்டில் சி.பி.ஐ. நடத்திய விசாரணை பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. அச்சமயத்தில் வருவாய்த் துறை செயலராக இருந்த இ.ஏ.எஸ். சர்மா இப்பகற்கொள்ளை குறித்து விளக்கி பிரதமர் அலுவலகத்துக்கு எழுதிய கடிதங்கள் குப்பைக்கூடையில் வீசி யெறியப்பட்டுள்ளன. இப்பகற்கொள்ளை தொடர்பான தணிக்கைத் துறையின் வரைவு அறிக்கையையும் வெளியே விடாமல் பெட்ரோலியத் துறை அமைச்சகம் முடக்கி வைத்திருக்கிறது.

தி.மு.க.வைப் பழி தீர்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு அலைக்கற்றை ஊழலை அம்பலப்படுத்தி வரும் சு.சுவாமி, ஜெயா மாமி, சோராமஸ்வாமி உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல்கள், இந்த கே.ஜி.ஊழலைப் பற்றியோ, அதன் மூலம் காங்கிரசு அடைந்துள்ள ஆதாயங்களைப் பற்றியோ பேச மறுக்கின்றன. பா.ஜ.க.விற்கும் ரிலையன்ஸ{க்கும் இடையே இருந்து வரும் நெருக்கம் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கச்சா எண்ணெய் துறையில் இறங்கியுள்ள ரிலையன்ஸ{க்கு 90,000 கோடி ரூபாய் அளவிற்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும் என காங்கிரசு நாடாளுமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு கோரிய பொழுது, அதற்கு ஆதரவளித்தது, பா.ஜ.க. இந்த நெருக்கம் காரணமாகத்தான் பா.ஜ.க., இப்பகற்கொள்ளை தொடர்பாக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோர மறுக்கிறது.

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக இருக்கும் பா.ஜ.க.வின் முரளி மனோகர் ஜோஷி, இப்பகற்கொள்ளையைப் பற்றிப் பேசாமல், தணிக்கைத் துறையின் அறிக்கை வெளியே கசிந்ததை உரிமை மீறல் என முத்திரை குத்துகிறார்.

தனியார்மயம் என்பதே கார்ப்பரேட் பகற்கொள்ளைதான் என்பதற்கும், இப்படிபட்ட ஊழல்களுள் ஒன்றிரண்டு மட்டுமே அரசியல் காரணங்களை முன்னிறுத்தி அம்பலப்படுத்தப்பட்டு, வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றன் மீதமுள்ளவை வெளியே தெரிந்த வேகத்திலேயே அமுக்கப்பட்டுவிடுகின்றன என்பதற்கும் இந்த கே.ஜி. ஊழல் மற்றொரு உதாரணமாக அமைந்துள்ளது.

. ரஹீம்