கடந்த 2006ஆம் ஆண்டில் சென்னைதிருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்த போது, கடலூர் மாவட்டத்திலுள்ள சிறுநெசலூர் கிராமத்தில், சாலையின் கீழ்ப்புறம் கிராமமும் மேற்புறம் தொடக்கப் பள்ளியுமாகத் துண்டாடப்பட்டது. அதிவிரைவாக வாகனங்கள் செல்லும் நெடுஞ்சாலையைக் கடந்து குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல இயலாத நிலையில், தமது குடியிருப்புப் பகுதியிலேயே பள்ளிக்கூடத்தைக் கட்டித்தருமாறு தாழ்த்தப்பட்டோரான இக்கிராம மக்கள் பலமுறை கோரியபோதிலும், அதிகார வர்க்கம் தொடர்ந்து அலட்சியப்படுத்தியது. கடந்த ஆண்டில் அய்யனார் கோயில் தரிசு நிலத்தில் பள்ளிக்கூடம் கட்டித்தரக் கோரி, அதற்கான ஏற்பாடுகளை இக்கிராம மக்கள் செய்து கொடுத்து மாவட்ட ஆட்சியர் மூலம் முயற்சித்த போதிலும், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக நின்று இந்நிலத்தை சந்தை மதிப்புக்குத்தான் தர இயலும் என மறுத்துவிட்டனர்.

 

 

கடந்த ஐந்தாண்டுகளாகப் பள்ளிக் கட்டிடம் இல்லாததால், இக்கிராமத்தின் 200 மாணவர்களின் படிப்பு முற்றாகப் பாழாக்கப்பட்டுள்ளது. மனு கொடுப்பது, உண்ணாவிரதம், குழந்தைகளை மதிய உணவு வாங்காமல் நிறுத்துவது, தேர்தல் புறக்கணிப்பு  என இக்கிராம மக்கள் போராடிய போதெல்லாம் அதிகாரிகள் வாக்குறுதிகள் அளித்து தொடர்ந்து ஏய்ப்பதுதான் நடந்துள்ளது.

இக்கிராமத்தின் சமூக உணர்வுள்ள சிலர் விருத்தாசலம் வட்ட விவசாயிகள் விடுதலை முன்னணியைத் தொடர்பு கொண்ட பின்னர், வி.வி.மு. வின் வழிகாட்டலில் இக்கிராமத்தில் பள்ளியை நிறுவுவதற்கான போராட்டக் குழு அமைக்கப்பட்டு, பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, "அரசு அதிகாரிகள் மூடிய பள்ளியை நாமே திறப்போம்!' என்ற முழக்கத்தோடு 10.6.2011 அன்று அடிக்கல் நாட்டுவிழா போராட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முயற்சித்த போலீ”ம் அதிகார வர்க்கமும், மக்களின் கோபத்துக்கு முன்னால் நிற்க முடியாமல் பின்வாங்கியது.

திட்டமிட்டபடி, 10ஆம் தேதியன்று காலை விண்ணதிரும் முழக்கங்களுடன் ஊர்வலமாகப் புறப்பட்ட கிராம மக்கள் , போலீசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஊரின் பின்புறமாக வந்து கோயில் புறம்போக்கு திடலில் திரண்டு, பள்ளிக்கான இடத்தை முற்றுகையிட்டு அமர்ந்து கொண்டு, கொளுத்தும் வெய்யிலில் பெண்கள் குழந்தைகளுடன் போராட்டத்தைத் தொடர்ந்தனர். முன்னணியாளர்களைக் கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்த போதிலும், பிரச்சினையைத் தீர்க்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியரிடம் உள்ளதால் அவரிடம் மட்டுமே பேசமுடியும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்துவிட்டு, பள்ளிக்கான கொட்டகையை ஊர்மக்களின் உற்சாகமான பங்களிப்புடன் நிறுவினர். பின்னர் மாவட்ட ஆட்சியரின் அழைப்பின் பேரில், முன்னணியாளர்கள் அவரை நேரில் சந்தித்த போது, ஜூலை 15ஆம் தேதிக்குள் பள்ளிக் கட்டிடம் கட்ட இந்து அறநிலையத் துறையிடம் இடம் வாங்கித் தருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

பு.ஜ.செய்தியாளர், விருத்தாசலம்