பாபா ராம்தேவ் மற்றும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஊடகங்களால் பெரிதுபடுத்தப்பட்ட நிலையில், ஹரித்துவாரில் நிகமானந்தா சரஸ்வதி என்ற சாமியார் நடத்திய உண்ணாவிரதம் பேசப்படவில்லை. தனது நீதியான போராட்டத்துக்காக அவர் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த போதிலும், அவரது தியாகம் போற்றப்படவில்லை.
மாத்ரி சதன் எனும் ஆசிரமத்தின் 34 வயதான சாமியாரான நிகமானந்தா, ரிஷிகேசம் முதல் பிரயாகை வரையிலான பகுதியில் 146 தொழிற்சாலைகளின் ஆலைக் கழிவுகளும், வழியெங்கும் நூறுக்கும் மேற்பட்ட சிறு, பெரு நகரங்களின் சாக்கடைகளும் கங்கையில் கலப்பதைத் தடுத்து நிறுத்தி, கங்கையைக் காக்கக் கோரி 1998இல் 73 நாட்களும், 2010இல் 68 நாட்களும் உண்ணாவிரதம் இருந்தார். ஆனால், உத்தர்கண்டை ஆளும் பா.ஜ.க. அரச இவற்றைப் பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியது.
கடந்த பிப்ரவரி 19ஆம் தேதியன்று, கங்கைக் கரையோரப் பகுதிகளில் இயங்கிவரும் சட்டவிரோதக் கல்குவாரிகளை அகற்ற வேண்டும், கும்ப் எனுமிடத்தில் மத்திய சுற்றுச்ய்ழல் துறையின் அனுமதியுடன் நடைபெற்றுவரும் சுரங்கப் பணிகள் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், கங்கையைக் காக்க அவர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். ஏப்ரல் 27ஆம் தேதியன்று அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அரச மருத்துவமனையிலும் அதன் பிறகு உத்தர்கண்ட் மாநிலத்தின் ஹிமாலயன் மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டு, மே 2ஆம் தேதியன்று மூளைச்சாவுக்குச் (கோமா நிலைக்கு) சென்று, கடந்த ஜூன் 13ஆம் தேதியன்று மரணமடைந்தார்.
"அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதும் அவருக்கு ஆர்க்னோ பாஸ்பேட் என்ற மருந்து செலுத்தப்பட்டதை அவரது இரத்தப் பரிசோதனை அறிக்கை காட்டுகிறது. அதன் பிறகுதான் அவர் கோமா நிலைக்குப் போயுள்ளார். அவருக்கு ஊசி போட்ட நர்சை அதற்குப் பின்னர் மருத்துவமனையில் பார்க்க முடியவில்லை. எனவே, அவரது மரணத்துக்கு கல்குவாரி மாஃபியாக்கள்தான் காரணம்' என்று நிகமானந்தாவின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த சந்தேகங்களைக் குறிப்பிட்டு மருத்துவமனையின் தலைமை அதிகாரி மற்றும் ஹிமாலயன் ஸ்டோன் நிறுவனத்தின் அதிபரான கியானேஷ் குமார் ஆகியோர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்ட போதிலும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நிகமானந்தாவின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்தி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று மாத்ரி சதன் ஆசிரமத்தினர் கோரியுள்ளனர்.
இதே காலகட்டத்தில் பா.ஜ.க.வில் இணைந்துள்ள உமாபாரதி, கங்கையின் குறுக்கே கட்டப்படும் அணையால் புராதனக் கோயில் மூழ்கிப் போய்விடும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அவருடன் மத்திய சுற்றுச்ய்ழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தியதும், அவரது போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் நிகமானந்தா நடத்திய போராட்டம் குறித்து அரசோ, அமைச்சர்களோ எவ்வித அக்கறையும் காட்டவில்லை. ஏனெனில், நிகமானந்தாவுக்குப் பின்துணையாக எந்த ஓட்டுக்கட்சியும் இல்லை. நிகமானந்தா அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில்தான் பாபா ராம்தேவும் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரைப் பார்த்துச் சென்ற பா.ஜ.க. தலைவர்கள், பக்கத்து அறையில் மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த நிகமானந்தாவை எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
நாளைய தலைமுறையினருக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் கங்கையைக் காக்க உண்ணாவிரதமிருந்து தியாகியாகியுள்ளார், நிகமானந்தா. அவரது மரணத்தைத் தொடர்ந்து, உத்தர்கண்ட் பா.ஜ.க. முதல்வர் பதவி விலக வேண்டுமென்று போராட்டம் நடத்துகிறது காங்கிரஸ். மறுபுறம், சுற்றுச்ய்ழல் அமைச்சர் அனுமதி கொடுத்ததால்தான் சட்டவிரோத குவாரிகள் இயங்குகின்றன என்று கூறி, ஜெய்ராம் ரமேஷின் கொடும்பாவி எரிப்புப் போராட்டத்தை பா.ஜ.க. நடத்துகிறது.
இரண்டுவகை கொலைகாரர்களும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு, இக்கொலையை மூடிமறைக்க முயற்சித்துவரும் நிலையில், விளம்பர உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் இலட்சிய உணர்வுடன் நடத்தும் போராட்டத்துக்கும் இடையிலான வேறுபாட்டை நாட்டுக்கு உணர்த்திவிட்டு தியாகியாகியுள்ளார், நிகமானந்தா.
. குமார்