Language Selection

புதிய ஜனநாயகம் 2011

தென்கொரியாவைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான போஸ்கோ, ஒரிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் ஏறத்தாழ 4,000 ஏக்கர் பரப்பளவில், 55,000 கோடி ரூபாய் மூலதனத்தில், இரும்பு உருக்காலை  துறைமுகம்  மின் உற்பத்தி நிலையம் ஆகிய மூன்றையும் ஒருசேர அமைப்பதற்கு, மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் தனது இறுதிக்கட்ட அனுமதியை வழங்கிவிட்டது.  போஸ்கோவின் திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப் பகுதி முற்றிலும் அழிந்து போகும், அவ்வனத்தை நம்பி வாழ்ந்துவரும் 20,000க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின், இதர விவசாயிகளின் வாழ்க்கை நாசமாகிவிடும் என்பதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, வன உரிமைச் சட்டவிதிகளை வளைத்தும், மீறியும் தான் இந்தச் சுற்றுப்புறச்சூழல் அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

 

 

இதனையடுத்து, இத்திட்டத்திற்காகப் பழங்குடியின மக்களின், இதர விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கைகளை மீண்டும் தீவிரப்படுத்தியிருக்கிறது, ஒரிசா மாநில அரசு.  போஸ்கோவின் இரும்புச் சுரங்கமும், உருக்காலையும் அமையவுள்ள திங்கியா, கடகுஜங்க், கோவிந்தபூர், நுவாகான் ஆகிய கிராமங்களை, ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதந் தாங்கிய போலீசார் சுற்றிவளைத்து முற்றுகையிட்டுள்ளனர்.  இன்னொருபுறம், ஏற்கெனவே அபகரிக்கப்பட்டுள்ள நிலத்தில், ஆலைக்காகச் சுற்றுச்சுவரைக் கட்டும் வேலையைத் தொடங்கிவிட்டது, ஒரிசா மாநில அரசு.

கடந்த ஜூன் 2 அன்று ஆயுதந் தாங்கிய போலீசாரின் துணையோடு கடகுஜங்க் கிராமத்திற்குள் நுழைந்த மாவட்ட அதிகாரிகள், அக்கிராமத்திலுள்ள விளைநிலங்களைக் கைப்பற்றுவதற்காக வெற்றிலைத் தோட்டங்களை அழிக்கத் தொடங்கினர்.  இதனை எதிர்த்து நின்ற அக்கிராம ஊராட்சி துணைத்தலைவர் உள்ளிட்டு 17 விவசாயிகள் போலீசாரால் தாக்கப்பட்டு, பொய் வழக்கு போடப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இச்சம்பவத்தையடுத்து, போஸ்கோ பிரதிரோத் சங்க்ராம் சமிதி என்ற அமைப்பின் கீழ்திரண்டு இத்திட்டத்திற்கு எதிராகப்போராடி வரும் விவசாயிகளும் பழங்குடியின மக்களும், போலீசாரும் அதிகாரிகளும் கிராமத்திற்குள் நுழைய முடியாதபடி தடுப்பதற்காக, தமது கிராமங்களைச் சுற்றி மூன்றடுக்கு மனித அரண்களை அமைத்தனர். முதல் அடுக்கில் குழந்தைகளும், அடுத்த அடுக்கில் பெண்களும், மூன்றாவது அடுக்கில் ஆண்களும் நின்று, தமது கிராமங்களையும், விளைநிலங்களையும் மாநில அரசு அபகரித்துக் கொள்வதற்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

இம்மனித அரணை உடைத்துக் கொண்டு நுழைய முடியாத அதிகாரிகளும், போலீசாரும் வேறொரு குறுக்கு வழியில் கோவிந்தபூர் கிராமத்திற்குள் நுழைந்து வெற்றிலைத் தோட்டங்களை அழிக்க முயற்சித்தனர்.  கிராம மக்கள் இதனை முறியடிக்கும் விதமாக, போஸ்கோ ஆலை அமையவுள்ள நிலமெங்கிலும் படுத்தபடியே போராடத் தொடங்கினர்.  அதிகாரிகளும், போலீசாரும் தங்களை ஏறி மிதித்துக் கொண்டுதான் செல்ல முடியும் என்ற இக்கட்டான நிலையை உருவாக்கினர். சுட்டெரிக்கும் வெயிலில், அனலாகக் கொதிக்கும் மணலில் படுத்தபடி, குழந்தைகளும், பெண்களும், ஆண்களும் இணைந்து ஐந்து மணி நேரத்திற்கும் மேலாகப் போராடினர்.  கிராம மக்களின் உறுதி குலையாத இப்போராட்டத்தை முறியடிக்க முடியாமல் திணறிப் போன போலீசும், அதிகார வர்க்கமும் தோட்டங்களை அழிப்பதைக் கைவிட்டுத் திரும்பிப் போயின.

குழந்தைகள் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டித்து முதலைக் கண்ணீர் வடித்தது, ஒரிசா மாநில அரசு.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள், "பெற்றோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பொழுது தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க யாரும் இல்லை; பெற்றோரைத் தவிர, மாநில அரசினாலோ, போஸ்கோ நிறுவனத்தாலோ தங்களுக்குச் சிறப்பான எதிர்காலத்தைத் தரமுடியாது' எனப் பதிலடி கொடுத்தனர்.  அப்போராட்டக் களமே சிறுவர்களுக்கான வகுப்பறையாகவும் மாற்றப்பட்டது.

ஜூன் 27 அன்று நுவாகான் கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுற்றுச்சுவர் கட்டப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்காக போலாங்க் கிராமத்திற்குச் சென்றிருந்தபொழுது, அக்கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலிஸாஹி என்ற கிராமத்திற்குள் நுழைந்து, 1,000க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டிச் சாய்த்து, அக்கிராம நிலங்களைக் கையகப்படுத்த முனைந்தது மாவட்ட நிர்வாகம்.  மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்த கோவிந்தபூர் கிராம மக்கள் திரண்டு வருவதைத் தடுப்பதற்காக, ஆயிரக்கணக்கான போலீசாரைக் கொண்டு அக்கிராமம் சுற்றி வளைக்கப்பட்டது.

தங்கள் கிராமத்திற்குள் போலீசும் அதிகாரிகளும் புகுந்து, மரங்களை வெட்டுவதைக் கேள்விப்பட்ட நுவாகான் கிராம மக்கள் திரும்பி வந்து, விளக்குமாறையே ஆயுதமாகப் பயன்படுத்தி, போலீசையும் அதிகாரிகளையும் துரத்தியடித்தனர்.  மாவட்ட போலீசு கண்காணிப்பாளரையும், மாவட்டக் கூடுதல் நீதிபதியையும் சிறைபிடித்துக் கொண்ட அக்கிராம மக்கள்,  இனி நிலம் கையகப்படுத்துவதற்காக கிராமத்திற்குள் நுழையக்கூடாது என எச்சரித்துத் திருப்பி அனுப்பி வைத்தனர்.  கோவிந்தபூரை முற்றுகையிட்டிருந்த போலீசாருக்கு அந்த இரண்டு உயர் அதிகாரிகளும் சிறைபிடிக்கப்பட்ட செய்தி தெரிந்தவுடன், அம்முற்றுகையைத் தாமே விலக்கிக் கொண்டு, பாசறைக்குத் திரும்பினர்.

போஸ்கோ நிறுவனத்துடன் ஒரிசா மாநில அரசு 2005 ஆம் ஆண்டு போட்டுக்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டே காலாவதியாகிப் போய்விட்டது. அவ்வொப்பந்தம் காலாவதியாகிப் போனாலும், அக்கார்ப்பரேட் நிறுவனத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை மட்டும் ஒரிசா மாநில அரசு நிறுத்தவேயில்லை. அந்தளவிற்கு ஒரிசா மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதாதள அரசு, கார்ப்பரேட் கொள்ளைக் கும்பலின் விசுவாச நாயாகச் செயல்படுகிறது.  பா.ஜ.க., போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட இதரக் கட்சிகளோ, மக்களின் சம்மதமின்றி நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது எனக் கூறி, நயவஞ்சகமான முறையில் போஸ்கோவிற்குப் பல்லக்குத் தூக்குகின்றன.

குளிரூட்டப்பட்ட பந்தலில் இந்து மத சாமியார் ராம்தேவ் நடத்திய உண்ணாவிரத நாடகத்தைப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளிய, 24 மணி நேரமும் ஒளிபரப்பிய முதலாளித்துவ ஊடகங்கள், கொளுத்தும் வெயிலில், சுடுமணலில் படுத்தபடி போஸ்கோவிற்கு எதிராக ஒரிசா மாநில விவசாயிகள் நடத்திய போராட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை.  அன்னா ஹசாரேவும் ராம்தேவும் ஊழலையும், கருப்புப் பணத்தையும் எதிர்த்து நடத்தும் உண்ணாவிரத ""ஷோ''க்களை, இரண்டாவது சுதந்திரப் போராட்டமாக ஊதிப்பெருக்கி வருகின்றனர். கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராகவோ, அவர்கள் நடத்திவரும் பகற்கொள்ளைக்கு எதிராகவோ ஒரு வார்த்தைகூடப் பேசமறுக்கும் இக்கும்பலுக்கு, சுதந்திரப் போராட்டம் என்ற வார்த்தையை உச்சரிப்பதற்குக்கூட எந்தத்தகுதியும் கிடையாது.

மாறாக, ஒரிசா மாநிலத்தின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்களும், விவசாயிகளும் போஸ்கோவிற்கு எதிராக, கடந்த ஐந்தாண்டுகளாகப் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு நடத்தி வரும் இப்போராட்டத்தை இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகக் கூறலாம். ஏனென்றால், இவ்விவசாயிகளும் பழங்குடியின மக்களும் தமது சொந்த நிலத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டும் இப்போராட்டத்தை நடத்தவில்லை. போஸ்கோ, ஒரிசாவின் இரும்புக் கனிம வளத்தைக் கொள்ளையடித்துச் செல்ல முயலுவதற்கு எதிரான போராட்டமாகவும் இது நடந்து வருகிறது.

தனியார்மயம்  தாராளமயம் என்ற பெயரில், வளர்ச்சி என்ற பெயரில் திணிக்கப்படும் கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு எதிரான போராட்டக் களமாக இன்று ஒரிசா உள்ளது.  ஒரிசா மாநில அரசு கடந்த எட்டு ஆண்டுகளுக்குள் 8 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான 184 தொழிற் திட்டங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது.  இத்திட்டங்களை அமலுக்குக் கொண்டுவர ஏறத்தாழ 50,000 ஏக்கருக்கும் மேல் நிலம் தேவைப்படும்.  எனினும், நியம்கிரி, கலிங்கா நகர், திங்கியா, கந்தாதர், காசிபூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின மக்களும் விவசாயிகளும் போஸ்கோ, டாடா, வேதாந்தா, ஜிந்தால் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். இதனால், திட்டமிட்டபடி எந்தவொரு பெரிய தொழிற்திட்டமும் அம்மாநிலத்தில் இன்றுவரை நடைமுறைக்கு வரவில்லை.  அந்த வகையில் நாட்டின் பின்தங்கிய மாநிலமாகக் கூறப்படும் ஒரிசா, தனியார்மயம்  தாராளமயத்தை எதிர்த்து விடாப்பிடியாகவும், போர்க்குணத்தோடும், தியாகத்துக்கு அஞ்சாமலும் போராடுவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாக விளங்குவதை மறுக்க முடியாது.  அதே சமயம், சிதறுண்ட முறையில் தன்னெழுச்சியாக நடந்துவரும் இப்போராட்டங்களை ஒருங்கிணைத்து, மறுகாலனிய ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் போராட்டமாக, ஆயுதந் தாங்கிய விடுதலைப் போராட்டமாக வளர்த்தெடுக்க வேண்டிய கடமை புரட்சியாளர்களின் முன் இருப்பதையும் மறுக்கவியலாது.

. குப்பன்