நாளுக்கு ஒரு ஊழல் அம்பலமாகி நாறிக்கொண்டிருக்கின்ற "நல்லவர்' மன்மோகன் சிங்கின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஊழலை நாட்டை விட்டே விரட்டுவதற்கு லோக்பால் மசோதா தயாரித்துக் கொண்டிருக்கிறது. திருடன் கையில் சாவியை ஒப்படைப்பது என்று கூறக் கேட்டிருக்கிறோம். ஆனால், திருட்டைத் தண்டிப்பதற்கான சட்டங்களை இயற்றும் பொறுப்பை திருடர்கள் தாமே முன்வந்து ஏற்றிருக்கும் கேலிக்கூத்தை இப்போது பார்க்கிறோம்.

காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் ஊழல், அலைக்கற்றை ஊழல், இஸ்ரோ ஊழல், கிருஷ்ணாகோதாவரி எண்ணெய்க் கிணறு ஊழல் என அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழும்பிய வண்ணமிருக்கும் நேரத்தில், அன்னா ஹசாரேயும் ராம்தேவும் நடத்திய "பிரைம் டைம் உண்ணாவிரதங்கள்' ஒரு விதத்தில் காங்கிரசு அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்தன என்பது உண்மைதான். ஆனால், ஹசாரே மற்றும் ராம்தேவின் ஊழல் ஒழிப்பு சண்டமாருதங்கள், குறிப்பான ஊழல் குற்றங்களையும் குற்றவாளிகளையும் பற்றிப் பேசாமல், ஊழல் ஒழிப்பு பற்றி பொதுவாக மட்டுமே பேசியதால், அவை 2ஜி முதல் கேஜி வரையிலான இமாலய ஊழல்களிலிருந்து காங்கிரசு அரசையும் கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தையும் தப்ப வைப்பதற்கே பயன்பட்டிருக்கின்றன.

இந்த உண்ணாவிரதங்களை ஊழல் ஒழிப்புப் போரின் குருட்சேத்திரம் என்று கொண்டாடும் தினமணி, இவற்றின் குறியிலக்கு யார் என்பதைத் தனது தலையங்கத்தில் தெளிவாக எடுத்தியம்புகிறது. "தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும், அரசு ஊழியர்களும்.. .. பொதுஜனத்துக்கு துரோகமிழைக்கும் போது, இவர்களைக் கண்காணிக்கவும் விசாரிக்கவும் தண்டிக்கவும் ஒரு அமைப்பு தேவைப்படுகிறது... .. நீதித்துறை, தேர்தல் ஆணையம், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் போன்ற அமைப்புகள் விழிப்புடன் செயல்படத்தொடங்கினால்.. ஏற்படும் மாற்றங்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் கடந்த சில ஆண்டுகளாகவே அனுபவத்தில் பார்த்து வருகிறோம்'

தினமணி, ஆங்கிலத் தொலைக்காட்சிகள், அன்னா ஹசாரே மற்றும் ராம்தேவுக்கு ஆதரவாக நாடெங்கும் எரிதழலேந்தி காமெராவுக்கு போஸ் கொடுத்த பாரதமாதாவின் தவப்புதல்வர்கள் போன்றோர் அனைவரின் கருத்துப்படி ஊழலின் பிறப்பிடம் மற்றும் இருப்பிடம் இலஞ்சம் வாங்குகின்ற அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான். இந்த அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு பத்து ரூபாய் கொடுத்து நூறு ரூபாய் ஆதாயம் அடைகின்ற பன்னாட்டு நிறுவனங்கள், தரகு முதலாளிகள், வர்த்தக சூதாடிகள், சினிமா நட்சத்திரங்கள், ரியல் எஸ்டேட் முதலைகள் ஆகியோரெல்லாம் இவர்களது பார்வையில் குற்றவாளிகள் இல்லை. மாறாக அவர்களெல்லாம் ஊழல் ஒழிப்புப் போராளிகள்.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் "கமான் இந்தியா' முழக்கம் ஓய்ந்து, தேசியப் பெருமிதத்தின் சூடு தணியுமுன்னரே, "ஊழலுக்கு எதிராக இந்தியா' என்று தலைப்பிட்டு ஹசாரே மற்றும் ராம்தேவின் உண்ணாவிரதப் போட்டியை ஒளிபரப்பின தனியார் தொலைக்காட்சிகள். டில்லி ஜந்தர் மந்தரில் அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்காக வசூலிக்கப்பட்ட தொகை 82.88 இலட்சம் ரூபாயாம். இதில் ஜின்டால், சுரிந்தர்பால் சிங், ராம்கி, துகால், எய்சர், எச்.டி.எப்.சி வங்கி முதலான தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அளித்த நன்கொடை 46.50 இலட்சம் ரூபாய் (டைம்ஸ் ஆப் இந்தியா, ஏப்ரல்,14).

காலாவதியாகிப்போன ஒரு காந்திக்குல்லாய் கிழவரையும், காவி உடை அணிந்த ஒரு காயகல்ப வியாபாரியையும் தேசத்தின் மீட்பர்களைப் போலச் சித்தரித்து ஆளும் வர்க்கங்கள் தூக்கிப் பிடிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஊழல் மலிந்து உளுத்துப் போன இந்த அமைப்பு முறை மீதும், போலீசு, நீதிமன்றம், அதிகார வர்க்கம், நாடாளுமன்றம் உள்ளிட்ட இந்த அரசமைப்பு மீதும் மக்களுடைய அவநம்பிக்கையைப் போக்குவதற்கும், இந்த அரசமைப்பு மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவிப்பதற்கும் இவர்கள் தேவைப்படுகிறார்கள்.

தனியார்மய, தாராளமயக் கொள்கைகளின் விளைவாக தமது நிலம், நீர், சுற்றுச்சூழல், தொழில் அனைத்தையும் இழந்து கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மறுக்கப்பட்டு, தமது வாழ்க்கை சீர்குலைக்கப்பட்டதற்கான காரணம் தெரியாமல் குமுறிக் கொண்டிருக்கும் மக்களுடைய கோபத்தைத் திசை திருப்புவதற்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள்.

அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வாங்குகின்ற லஞ்சம்தான் தேசத்தின் தலையாய பிரச்சினை என்று சித்தரிப்பதன் மூலம் லஞ்சம் கொடுக்கின்ற முதலாளிவர்க்கம் பெறுகின்ற ஆதாயத்தை மறைப்பதற்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள். ஊழலின் பரிமாணத்தை ஆயிரம் கோடி, இலட்சம் கோடி என்று பல நூறு மடங்காக உயர்த்தியதே தனியார்மயக் கொள்கைதான் என்ற உண்மையை மறைத்து, தனியார்மயக் கொள்கைளை அமல்படுத்துவதே நாட்டின் முன்னேற்றத்துக்கான வழி என்று காட்டுவதற்கும் இவர்கள் தேவைப்படுகிறார்கள்.

கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக பஞ்சமா பாதகங்களையும் செய்வதற்கு அஞ்சாத கார்ப்பரேட் முதலாளித்துவம்தான், தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, யோக்கியனை அயோக்கியனாகவும், நப்பாசைக்காரனை பேராசைக்காரனாகவும் மாற்றி ஊழல்படுத்துகிறது.  ஊழலின் ஊற்றுக்கண்ணே முதலாளித்துவம்தான் என்ற அடிப்படையான இந்த உண்மையை மறைத்து விட்டு, லஞ்சம் வாங்குகின்ற அதிகாரிகளும் அமைச்சர்களும்தான் டாடா, அம்பானி, ஜின்டால் போன்ற "நீதிமான்களை' லஞ்சம் கொடுத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளிவிட்டதைப் போன்றதொரு பித்தலாட்டத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஹசாரேயும் ராம்தேவும் ஆளும் வர்க்கத்துக்குத் தேவைப்படுகிறார்கள்.

மக்கள் தமது பொதுச்சொத்துக்களாகப் பேணிவந்த காடுகள், மலைகள், நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்களையும், விவசாயிகளின் விளைநிலங்களையும் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் பறித்தெடுத்து, அவற்றை தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உடைமையாக்கும் பகற்கொள்ளையும், பொதுத்துறை நிறுவனங்களை தேதி வைத்துத் தனியார்மயமாக்கும் தீவட்டிக் கொள்ளையும் சட்டபூர்வமாகவே அமல்படுத்தப் படுகின்றன. மறுகாலனியாக்கத்தின் கீழ் தொடுக்கப்பட்டு வரும் இந்த சட்டபூர்வமான கொள்ளைதான் இந்திய மக்களுடைய வாழ்வைச்  சூறையாடும் முதற்காரணம் என்பதை மூடிமறைத்து விட்டு, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அடிக்கின்ற சட்டவிரோதக் கொள்ளையான இலஞ்சம்தான் நாட்டின் முழுமுதற் பிரச்சினை என்று சித்தரித்துச் சாமியாடுவதால்தான் ஹசாரேவுக்கு எல்லா முதலாளித்துவ ஊடகங்களும் உடுக்கடிக்கின்றன.

ஹசாரே முன்வைக்கும் ஊழல் ஒழிப்பு, சிறந்த அரசாளுமை போன்ற முழக்கங்கள் புதிய தாராளவாதக் கொள்கையைத் திணித்து வரும் வல்லரசுகள் மற்றும் சர்வதேச நிதிநிறுவனங்களால் உலகம் முழுவதிலும் முன்தள்ளப்படுபவைதான். அவ்வகையில் சிறந்த அரசாளுமைக்கு எடுத்துக் காட்டாகவும், முன் உதாரணமாகவும் இந்தியத் தரகு முதலாளிகள் யாரைக் கருதுகிறார்களோ, அந்த நரேந்திர மோடியைத்தான் ஹசாரேவும் முன்மாதிரியாக காட்டுகிறார். லோக்பால் மசோதா தொடர்பான விவாதத்தில் மத்திய அரசுடன் முரண்பட்டபோதிலும், காங்கிரசு கட்சிக்கும் அதன் ஊழல்களுக்கும் அப்பாற்பட்ட புனிதத் திரு உருவாக மன்மோகன் சிங்கை சித்தரிப்பதற்கும் ஹசாரே தவறவில்லை.

ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரசு அரசும், அதிகார வர்க்கமும், பொதுவில் எல்லா ஓட்டுக் கட்சிகளும் மதிப்பிழந்து போயிருக்கும் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு ஊழலுக்கு எதிரான மக்கள் கோபத்தின் பிரதிநிதியாகத் தன்னைச் சித்தரித்துக் கொள்வதன் மூலம், இந்த அரசமைப்புக்கு அப்பாற்பட்ட ஒரு அதிகார மையமாகவும் அவர் நடந்து கொள்கிறார். பன்னாட்டு நிறுவனங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், அவர்களுக்கு வாரி வழங்கப்படும் சலுகைகளும் சட்டமன்ற, நாடாளுமன்றங்களுக்கே தெரியாமல் மறைக்கப்படும் இன்றைய சூழலில், தேர்ந்தெடுக்கப்படாத இந்த "மக்கள் பிரதிநிதி'யை, ஊழல் தடுப்பு மசோதாவைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பங்கேற்க காங்கிரசு அரசு அனுமதிக்கிறதென்றால் அதற்குக் காரணம் இல்லாமலில்லை.

"வேர்மட்ட ஜனநாயகம்' என்ற பெயரில் அரசு நிர்வாகத்தில் அரசு சாரா நிறுவனங்கள்  அங்கம் வகிப்பதும், தேர்ந்தெடுக்கப்பட்ட  அரசாங்கங்களை அவர்கள் கீழிருந்து சோதித்தறிவதும் மறுகாலனியாக்கத்தின் அங்கமாக இருப்பதால், ஹசாரே போன்றோரின் பங்கேற்பை மன்மோகன்சிங் அரசுகொள்கை பூர்வமாகவே அங்கீகரிக்கிறது. திரும்பிய பக்கமெல்லாம் தங்களது திருட்டுத்தனம் அம்பலப்பட்டு திக்குமுக்காடி நிற்கும் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு தலைதூக்க முடியாமல் பாரதிய ஜனதாவை ஓரங்கட்டுவதற்கு ஹசாரே பயன்படுகிறார் என்பதனாலும் அவரை காங்கிரசு அனுமதிக்கிறது.

அலைக்கற்றை ஊழல் உள்ளிட்ட வழக்குகளில், மத்திய புலனாய்வு நிறுவனத்தை தனது அரசியல் நோக்கங்களுக்கேற்ப காங்கிரசு அரசு பயன்படுத்தி வந்த போதிலும், இத்தகைய நிறுவனங்களைக் கொண்டே ஊழலை ஒழித்து விட முடியும் என்ற பிரமையை எதிர்தரப்பில் நின்று கொண்டு ஹசாரே உருவாக்குவதால், அவருடைய பங்கேற்பு தங்களது மோசடியை மறைக்கப் பயன்படும் என்ற காரணத்தினாலும் அவருடைய பங்கேற்பை காங்கிரசு பயன்படுத்திக் கொள்கிறது.

இந்திய விடுதலைப் போராட்டத்தை ஊழல்படுத்தி அதில் பிழைப்புவாதிகளை உருவாக்கிச் சீர்குலைப்பதற்காக பிரட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் தாங்களே முன்வந்து அறிமுகப்படுத்தியதுதான் நமது நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயகம். இந்த ஜனநாயகத்தின் ஆன்மாவான ஊழலை, நாடாளுமன்றத்தின் துணை கொண்டே ஒழித்துக் கட்டப்போவதாகக் கதையளக்கிறார் ஹசாரே. அத்தகையதொரு ஜனநாயகப் படுகொலையை நமது நாடாளுமன்றஉறுப்பினர்கள் அனுமதிப்பார்களா என்ன?

. சூரியன்