போலி கம்யூனிஸ்டுகளின் உறுதியான ஆதரவு இல்லாமல் பாசிஸ்டுகள் அதிகாரத்துக்கு வர இயலாது என்று உணர்த்தினார், பாசிச எதிர்ப்புப் போராளியும் அனைத்துலக கம்யூனிசத் தலைவர்களில் ஒருவருமான தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ். அதற்கு இலக்கணப் பொருத்தமாகத் திகழ்கிறார்கள், தமிழகப் போலி கம்யூனிஸ்டுகள்.
சட்டமன்றத்தில் சமச்சீர் கல்வியை ஒழிப்பதற்கு ஜெயலலிதா கொண்டுவந்த மசோதாவை ஆதரித்துப் பேசிய மார்க்சிஸ்டு கட்சி உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், "இந்தச் சூழ்நிலையில் சமச்சீர் கல்வித் திட்டத்துக்கான திருத்த மசோதாவை பேரவையில் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது' என்று கூறி மசோதாவை விசுவாசமாக ஆதரித்தார். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி எம்.எல்.ஏ. ஆறுமுகம், "இந்த சட்ட முன்வடிவு சமூக நீதிக்கான சட்ட முன்வடிவாகும்' என்று கூறி, மார்க்சிஸ்டுகளை விஞ்சிய விசுவாசத்தைக் காட்டினார்.
சமச்சீர் கல்விமுறையை மறுபரிசீலனை செய்ய உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என்றும், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த இயலாது என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பு மூலம் சமச்சீர் கல்வி சட்டத் திருத்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஒத்தூதிய இரட்டை நாக்குப் பேர்வழிகளான மார்க்சிஸ்டுகள், கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று தமது கட்சியைச் சேர்ந்த இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆகிய அமைப்புகளின் சார்பில், சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வலியுறுத்தி, சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். கம்யூனிஸ்டுகள் என்றால் நேர்மையானவர்கள், உண்மையானவர்கள் என உழைக்கும் மக்களிடம் நிலவும் உயரிய மதிப்பையும் மரியாதையையும் சீர்குலைத்துவிட்டு, பாசிச ஜெயாவுக்கு சட்டமன்றத்தில் விசுவாசம்; மறுபுறம், மக்களின் அதிருப்திக்கு வடிகாலாக ஆர்ப்பாட்டம்; - இது சந்தர்ப்பவாதமா அல்லது புரட்சியா?
அதன்பின் 10ஆம் தேதியன்று மசோதாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. உடனே 11ஆம் தேதியன்று மார்க்சிஸ்டு கட்சி செயலாளர் இராமகிருஷ்ணன் ஓர் அறிக்கை விடுகிறார்.
"சமச்சீர் கல்வியின் ஓர் அம்சமான பொதுப்பாடத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டே, கல்வித்தரத்தை உயர்த்துவதற்கும், பாடப்புத்தகத்தில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சியும் ஏற்கெனவே தமிழக அரசை வலியுறுத்தியிருந்தது. இதையே கல்வியாளர்களும் பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்துகின்றனர். எனவே, உயர் நீதிமன்றத் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த கல்வியாண்டிலேயே சமச்சீர் கல்வி பொதுப்பாடத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்டு கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.'
பொதுப் பாடத்திட்டத்தை நிறுத்துவதற்கும் அச்சிட்ட நூல்களை முடக்குவதற்கும் எதிராக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்தைத்தான் மார்க்சிஸ்ட் கட்சி "ஏற்கெனவே' வலியுறுத்தி வந்ததாம். மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தும் இந்தக் கருத்தையே பல்வேறு அமைப்புகளும் வலியுறுத்துகிறார்களாம். ஏற்கெனவே வலியுறுத்தி வந்ததாகக் கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் கட்சி, சட்டமன்றத்தில் சமச்சீர் கல்விஒழிப்பு மசோதாவை ஆதரிக்கக் காரணம் என்ன? அதற்கும் முந்தைய "ஏற்கெனவே' என்றால், அது தி.மு.க. ஆட்சிக்காலம். அப்போது சமச்சீர் கல்விச் சட்டத்தை மார்க்சிஸ்டு கட்சி ஆதரித்தது. இவற்றில் எந்தப் பித்தலாட்ட "ஏற்கெனவே' சரியானது?
அன்று, இந்திராகாந்தியின் அவசரநிலை பாசிசத்தையும் அவரது இருபது அம்சத் திட்டத்தையும் ஆதரித்த வலது கம்யூனிஸ்ட் கட்சி, பாசிச இந்திராவின் வளர்ப்புப் பிராணியாகி நின்றது. இன்று, சமச்சீர்கல்வித் திட்டத்தை ஒழிக்கக் கிளம்பியுள்ள பாசிச ஜெயா கும்பலுக்கு விசுவாசமாக நின்று, அப்பட்டமாக ஜெயலலிதாவின் அல்லக்கைகளாக மாறி நிற்கின்றனர், தமிழகப் போலி கம்யூனிஸ்டுகள்.
.தனபால்