Language Selection

புதிய ஜனநாயகம் 2011

பார்ப்பன  பாசிச ஜெயா கும்பல் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒரேயடியாகக் குழிதோண்டிப் புதைத்துவிடும் நோக்கில், அத்திட்டத்தை அமலாக்குவதைக் காலவரையற்று ஒத்திவைக்கும் மசோதாவை கடந்த ஜூன் 7 அன்று சட்டசபையில் நிறைவேற்றியது. சென்னை உயர் நீதிமன்றம் இம்மசோதாவிற்கு இடைக்காலத் தடை விதித்ததோடு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு கடந்த கல்வியாண்டில் சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் அமலாக்கப்பட்ட பொது பாடத்திட்டம் தொடர வேண்டும் என்றும், சமச்சீர் கல்விச் சட்டத்தில் கூறப்பட்டபடி, இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் முதல் பத்தாம் வகுப்புகளுக்குப் பொது பாடத்திட்டம் இந்தக் கல்வியாண்டு முதல் அமலாக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. அதேசமயம் அத்தீர்ப்பிலேயே, "சமச்சீர் கல்வியையும் அதற்கான பாடப்புத்தகங்களை ஆய்வு செய்வதற்குத் தமிழக அரசிற்கு இத்தீர்ப்பு தடையாக இருக்காது; சமச்சீர் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி, தனிநபர் புகழ் போன்ற சிலவற்றை நீக்கவோ, திருத்தவோ, மாற்றவோ அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது' என்றும் தெளிவுபடுத்தியிருந்தது.

 

 

பொதுப் பாடநூல்களில் திருத்தம் செய்வதைவிட, சமச்சீர் கல்வித் திட்டத்தையே ஒழித்துவிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர் ஜெயா. அதனால்தான் அவர், அரசின் விருப்பப்படி பொது பாடநூல்களில் திருத்தம் செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அளித்த சலுகையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல், இந்த இடைக்காலத் தடையை நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் இம்மனுவை தள்ளுபடி செய்துவிட்டபோதிலும், அந்நீதிமன்றம் இப்பிரச்சினை தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பு சமச்சீர் கல்வித்திட்டத்தை எதிர்க்கும் ஜெயாவிற்கும், மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கும் சாதகமாகவே அமைந்திருக்கிறது. இரண்டாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்டத்தையும், பாட நூல்களையும் ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவை, கிராமத்து நாட்டாமைகள் வழங்கும் கட்டப் பஞ்சாயத்து என்றுதான் சொல்லமுடியும்.

"சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள பொது பாடத்திட்டம் தரமற்றதாக இருப்பதோடு, அப்பாடத் திட்டம் தி.மு.க.வின் பிரச்சாரக் கருவியாகவும் உள்ளது' என்ற வாதத்தை முன்வைத்துதான் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கோரியது. பொது பாடத்திட்டம் தரமற்றதாக உள்ளது எனக் கூறி வரும் தமிழக அரசு, தனது இந்த வாதத்திற்கு ஆதரவாக எவ்விதமான ஆதாரங்களையும் முன் வைக்கவில்லை என்பது உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின்பொழுதே மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக வாதாடிய வழக்குரைஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், சமச்சீர் கல்வித் திட்டத்தை அமலாக்குவதை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும் என்ற முடிவை, அ.தி.மு.க. அரசு அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன்பே எடுத்துவிட்டது. இம்முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட முடிவு என்பதையும் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் உயர் நீதிமன்ற விசாரணையின் பொழுதே நிரூபித்திருக்கிறது.

இந்த நிரூபணங்களின் அடிப்படையில்தான் சென்னை உயர் நீதிமன்றம், "சமச்சீர் கல்வித் திட்டம் தரமற்றது என்று அரசு ஆராய்ந்து பார்த்ததாகத் தெரியவில்லை. திருத்தச் சட்டம் கொண்டுவருவதற்கு முன்பு நிபுணர்கள் குழுவை அரசு அமைத்து ஆய்வு செய்யவில்லை. சமச்சீர் கல்வி பாடப் புத்தகத்தில் சுயவிளம் பரத்திற்காக சில பாடங்கள் உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அனைத்துப் பாடப்புத்தகங்களும் சரியானது அல்ல என்று அரசு தரப்பில் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை' எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆதாரங்களை, இந்தத் தீர்ப்பை எவ்விதப் பரிசீலனையுமின்றித் தடாலடியாக ஒதுக்கித்தள்ளி விட்ட உச்ச நீதிமன்றம், பொதுப் பாடத்திட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக ஜெயா கும்பல் கூறியதை வேத வாக்காக எடுத்துக் கொண்டு, அதன் தரத்தை ஆராய ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அதிகார வர்க்க கமிட்டியை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சிக் கழகம் 2005இல் கொடுத்த வழிகாட்டுதல்களின்படி, கல்வியாளர்களைக் கொண்டுதான் இப்பொது பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்த பிறகும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுப் பாடத்திட்டத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தர விட்டுள்ளதைக் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்புகளோடு மட்டுமே ஒப்பிட முடியும். மற்ற வகுப்புகளுக்குத் தயாரிக்கப்பட்டுள்ள பொதுப் பாடத் திட்ட நூல்களை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு அமல்படுத்தப்பட்ட பொதுப் பாடத்திட்ட நூல்களை ஆய்வுக்கு உட்படுத்தாமலேயே, அதனைத் தொடர உத்தரவிட்டுள்ளது. இதனைத் தீர்ப்பின் உள்முரண்பாடு என்பதா, அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பெருந்தன்மை என்பதா? அ.தி.மு.க. அரசு சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க கொண்டு வந்திருக்கும் மசோதாவில், அத்திட்டம் குறித்து ஆராய உயர் அதிகாரக் குழுவை நியமிக்கப் போவதாகப் பீற்றிக் கொண்டது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் அந்த ஆலோசனையைத் தத்தெடுத்துக் கொண்டுள்ளது என்று கூறலாம். அந்த உயர் அதிகாரக் குழுவிற்குக் காலவரையறை எதுவும் நிர்ணயிக்க முடியாது என்றார், ஜெயா. உச்ச நீதிமன்றமோ தனது உத்தரவின் கீழ் அமைக்கப்படும் கமிட்டிக்கு இரண்டு வாரக் கெடு விதித்திருக்கிறது. இதனைத் தவிர, அவாளுக்கும் இவாளுக்கும் இடையே வேறெந்த வேறுபாடும் இல்லை.

அதேசமயம், சமச்சீர் கல்விக்குத் தான் எதிராக இல்லை எனக் காட்டிக் கொள்வதற்காக, "இந்தக் குழு பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்தெல்லாம் ஆராயத் தேவையில்லை; சென்னை உயர் நீதிமன்றம் சமச்சீர் கல்விச் சட்டத்தை அங்கீகரித்து ஏப்ரல் 2010  இல் அளித்த தீர்ப்பில் கூறிய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆராய்ந்து சொல்ல வேண்டும்' என உச்ச நீதிமன்றம் உபதேசித்துள்ளது. ஆனால், இவை வெற்று வார்த்தைகள் என்பதை உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு ஏற்ப தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களின் தரமும், தன்மையுமே அம்பலப்படுத்திவிட்டது.

சென்னையைச் சேர்ந்த பெரும் கல்வி வியாபார நிறுவனமான லேடி ஆண்டாள் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி சீனிவாசன், சென்னையில் மேல்சாதி  மேட்டுக்குடி கும்பலைச் சேர்ந்த வாரிசுகள் பயிலும் கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளிகள் குழுமத்தின் முதலாளி சி.ஜெயதேவ் மற்றும் சென்னையைச் சேர்ந்த மற்றொரு மேட்டுக்குடி பள்ளியான பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளிகள் குழுமத்தின் முதல்வரும் இயக்குநருமான திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி ஆகிய மூன்று கல்வி வியாபாரிகளையும் கல்வியாளர்கள் என்ற போர்வையில் இந்தக் குழுவில் இடம் பெறச் செய்ததன் மூலம், சமச்சீர் கல்வித் திட்டத்தைச் சிதைத்து ஒழித்துக் கட்டுவதுதான் தனது நோக்கம் என்பதை ஜெயா கும்பல் மீண்டும் உறுதிப்படுத்திவிட்டது.

ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்புகளுக்கான பொதுப் பாடத்திட்டத்தையும் பொதுப் பாடநூல்களையும் இருவார காலத்திற்குள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவே, முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஜெயா அரசின் முடிவுப்படிதான் இக்குழு அறிக்கை தயாரித்து அளிக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகத்தான் உள்ளது. மேலும், இந்தக் குழுவின் அறிமுகக்கூட்டத்திலேயே, பொதுப் பாடநூல்களை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கு முன்பாகவே, அந்நூல்கள் தரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது என விவாதம் நடந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இவையனைத்தும் இக்குழு ஜெயாவின் தலையாட்டி பொம்மையாகச் செயல்படும் வாய்ப்பிருப்பதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன.

இதுவொருபுறமிருக்க, பார்ப்பன பாசிச ஜெயா கும்பல் சமச்சீர் கல்வித் திட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் விதமாகப் பல சதி வேலைகளையும் செய்து வருகிறது. உச்ச நீதிமன்றம் தற்பொழுது அளித்துள்ள தீர்ப்பின்படி பழைய பாடத் திட்ட அடிப்படையில் அமைந்த நூல்களைத் தமிழக அரசு அச்சடிக்கக் கூடாது. ஆனால் அ.தி.மு.க. அரசு, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்குப் பொதுப் பாடத்திட்டத்தைத் தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அவ்வகுப்புகளுக்கான பழையபாட நூல்களோடு, மற்ற வகுப்புகளுக்கான பழைய பாடநூல்களையும் அச்சடித்து வருகிறது.

தி.மு.க. தலைவர் மு.க. மற்றும் அவரது மகள் கனிமொழியின் புகழ்பாடும் பகுதிகளை நீக்குவது என்ற பெயரில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பொதுப் பாடநூல்களைச் சிதைத்து வருகிறது, அ.தி.மு.க. அரசு. குறிப்பாக, முதல் வகுப்பு தமிழ்ப்பாட நூலில் உள்ள பாரதிதாசனின் புதிய ஆத்திச்சூடி உள்ளிட்டு, இப்பொதுப் பாடத் திட்ட நூல்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பெரியார், அம்பேத்கார் பற்றிய குறிப்புகளையும், அவர்களின் சீர்திருத்தக் கருத்துகளையும் நீக்கிவிட்டது; சூரிய கிரகணத்தைப் பற்றியும், இரவு  பகல் பற்றியும் விளக்குவதற்காகப் போடப்பட்டுள்ள சூரியனின் படங்களைக்கூட, தி.மு.க.வின் சின்னமாக முத்திரை குத்தி, அப்பக்கங்களைக் கிழிக்கச் சொல்லி உத்தரவிட்டுள்ளது; அறிவியல் பாடத்தில் சட்ட காந்தம் பற்றி விளக்குவதற்காகப் போடப்பட்டுள்ள சட்ட காந்த படம் கறுப்பு சிவப்பு வண்ணத்தில் இருப்பதால், அது தி.மு.க.வின் கொடியைக் குறிப்பதாகக் கருதி நீக்கியுள்ளனர்;. ஆனால், சட்ட காந்தம் கறுப்பு  சிவப்பு வண்ணத்தில் தான் இருக்கும் எனப் பள்ளி ஆசிரியர்களும் கல்வியாளர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். மேலும், சமச்சீர் கல்வித் திட்டம் பற்றியோ, பொதுப் பாடத் திட்டங்கள்பற்றியோ ஆசிரியர்கள் யாரும் வாய்திறந்து ஒரு வார்த்தைகூடப் பேசக் கூடாது என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பாடத் திட்டமும், பாடநூல்களும் இன்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பள்ளிகள் ஆக்கபூர்வமாகச் செயல்படுகின்றன எனக் காட்டுவதற்காகவே, செயல்முறை விளக்க வகுப்புகள் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறது, அ.தி.மு.க. அரசு. வங்கிகளுக்கும், ரயில் நிலையங்களுக்கும் மாணவர்களை அழைத்துச் சென்றுக் காட்டுவதைப் படம் பிடித்துப்போட்டு, பள்ளிகள் சுமுகமாகச் செயல்படுவதைப் போல அரசும் பத்திரிகைகளும் காட்டி வருகின்றன.

ஒருபுறம் சமச்சீர் கல்வித் திட்டத்தை ஒழிக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வரும் ஜெயா கும்பல், இன்னொருபுறமோ தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணக் கொள்ளையடிப்பதை வேடிக்கை பார்த்து வருகிறது. சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தி வைத்த கையோடு, கல்விக் கட்டண நிர்ணயம் செய்வதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது என அறிவித்து, இக்கொள்ளைக்குப் பச்சைக் கொடி காட்டியவர்தான் ஜெயா.

கல்விக் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என விண்ணப்பித்த 6,400 தனியார் பள்ளிகளுக்கும் எவ்விதக் குறையுமின்றிதான் கட்டணத்தை உயர்த்தி நிர்ணயித்திருக்கிறது, ரவிராஜ பாண்டியன் குழு. கல்விக்கட்டணம் போக, சீருடைக்கான கட்டணம், நோட்டு மற்றும் பாடநூல்களுக்கான கட்டணம், பள்ளிப் பேருந்துக் கட்டணம் போன்றவற்றை பள்ளி முதலாளிகள் தமது விருப்பம் போல நிர்ணயித்துக் கொள்ளலாம் என அனுமதி வழங்கியிருக்கிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு, "ஷவிற்கு' ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும், ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிக்குத் தனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்றவாறு கொள்ளையடிக்கத் தொடங்கி யுள்ளன, தனியார் பள்ளிகள்.

இக்கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராட முன்வரும் பெற்றோர்களை, "பையனின் டி.சி.யைக் கொடுத்து அனுப்பிவிடுவோம்' என மிரட்டிப் பணியவைக்க முயலுகிறது, தனியார் பள்ளிக் கொள்ளைக் கும்பல். இதற்குப் பணியாத பெற்றோர்கள் போலீசாரால் மிரட்டப்படுகின்றனர். அதையும் மீறிப் போராடும் பெற்றோரின் குழந்தைகளை, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே கட்டும் பெற்றோர்களின் குழந்தைகளைத் தனி வகுப்புகளில் அமரவைத்தும், அம்மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம், சீருடை போன்றவற்றை வழங்காமலும், புதிய வகை தீண்டாமையை அம்மாணவர்கள் மீது ஏவிவிட்டு, அவர்களை அவமானப்படுத்தி மனரீதியாகச் சித்திரவதை செய்து வருகின்றனர், தனியார் பள்ளி முதலாளிகள்.

இக்கொள்ளை, இச்சித்திரவதைகள் பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியான பிறகும்கூட நடவடிக்கை எடுக்காமல், பெற்றோர்கள் புகார் கொடுத்தால்தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனத் தட்டிக்கழிக்க முயலுகிறது, தமிழக அரசு. பெற்றோர்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுக்கச் சென்றால், ஆதாரம் இருக்கிறதா எனக் கேட்டு அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஆதாரங்களைக் கொடுத்தால், ஏதோ சில பள்ளிகளுக்கு மட்டுமே எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படுகிறது. அப்பள்ளிகள் இந்த நோட்டீஸைக் கழிப்பறை காகிதம் அளவிற்குக்கூட மதிப்பதில்லை.

அரசு பாடத் திட்டத்தைவிடத் தங்களின் பாடத் திட்டத்தின் தரம் அதிகமானது என்று கூறித்தான் தனியார் பள்ளிகள் தங்களின் கட்டணக் கொள்ளையை நியாயப்படுத்துகின்றன. வேறுபட்ட பாடத் திட்டங்களும், வேறுபட்ட பாடநூல்களும் இருப்பதுதான் தரமானதென்றும், இதற்கு மாறாக, பொது பாடத்திட்டமும் பாடநூல்களும் அமலுக்கு வந்தால், கல்வியின் தரம் தாழ்ந்து போகும் என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள். தமிழக அரசின் பள்ளிக் கல்வியின் கீழுள்ள நான்குவிதமான பாடத் திட்டங்கள், வௌ;வேறுவிதமான பாடநூல்கள், தனித்தனிப் பொதுத் தேர்வுகள் என்பதற்குப் பதிலாக, பொது பாடத்திட்டம், பொதுப் பாடநூல்கள், பொதுத் தேர்வுமுறை அமலுக்கு வந்துவிட்டால், பள்ளிக் கல்வியின் தரம் எந்தவிதத்திலும் தாழ்ந்து விடப் போவதில்லை. மாறாக, தனியார் பள்ளி முதலாளிகள் கட்டணக் கொள்ளையடிப்பதற்கான வழி அடைபட்டுப் போகும் என்பதுதான் உண்மை.

முத்துக்குமரன் கமிட்டியில் பொதுப் பாடத் திட்டத்தை உருவாக்குவது குறித்த விவாதம் நடந்த பொழுது, தரமான பொதுப் பாடத்திட்டத்தைத் தயாரித்து விவாதத்திற்கு வைக்கச் சொல்லி மெட்ரிக் பள்ளி நிர்வாகிகளை கோரியபொழுது, அவர்கள் தங்களின் சார்பில் பொதுப் பாடத்திட்டத்தை முன்வைக்க மறுத்துவிட்டதோடு, வேறுபட்ட பாடத்திட்டங்களும், பாடநூல்களும் இருக்க வேண்டும் எனப் பிடிவாதமாக வாதாடியதை அக்கமிட்டியில் உறுப்பினராக இருந்த கல்வியாளர் எஸ்.எஸ். ராஜகோபாலன் அம்பலப்படுத்தியிருக்கிறார். மாணவர்களுக்குத் தரமான கல்வி வழங்க வேண்டும் என்பது மட்டுமே மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் நோக்கமாக இருந்திருந்தால், அவர்களே தரமான பொதுப் பாடத்திட்டத்தைத் தயாரித்து வழங்கியிருக்கலாமே? அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் ஒரேவிதமான பொதுப் பாடத்திட்டமும், பொதுப் பாடநூல்களும் போதிக்கப்பட்டால், தனியார் பள்ளிகளுக்கு அநியாயமான கல்வி கட்டணம் எதற்குச் செலுத்த வேண்டும் என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியிலேயே எழுந்து, அவர்கள் தனியார் பள்ளிகளைப் புறக்கணிக்கவும் தொடங்குவார்கள்; பிறகு, தமது கல்வி வியாபாரம் படுத்துவிடும் என்பது தவிர, அவர்களின் பிடிவாதத்திற்கு வேறு காரணம் இருக்க முடியாது.

இப்படிபட்ட நரித்தனம் நிறைந்த கல்வி வியாபாரிகள் கடந்த தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்ட பொதுப்பாடத் திட்டமும், பாட நூல்களும் தரமற்றது எனச் சாடுவதை ஒப்புக் கொண்டு, அதன்படி இப்பாடத் திட்டத்தையும், பாடநூல்களையும் ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எந்தவிதத்திலும் நியாயமானதாகக் கருதிவிட முடியாது. தரம், தரம் என்ற பெயரில் பொது பாடத்திட்டத்தையும், பொது பாடநூல்களையும் சிதைக்க அனுமதித்து, தனியார் கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளைக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள், நீதிபதிகள்.

மெட்ரிக் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றால், பொது பாடத் திட்டத்தையும், பொதுப் பாடநூல்களையும் அமலாக்கக் கோரிப் போராட வேண்டும் என்பது முன்னைக் காட்டிலும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்துப் போராடுவதற்கு ஏற்றவாறு பெற்றோர்  மாணவர் சங்கங்களை அமைப்பதும், வழிகாட்டுவதும்தான் புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் முன்னுள்ள கடமையாகும்.

.செல்வம்