நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் அடைந்துவரும் "வளர்ச்சி' பற்றி பார்ப்பன பாசிஸ்டுகள் மட்டுமல்ல, "மதச்சார்பற்ற' முதலாளித்துவ பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி வருகின்றன. இந்த "வளர்ச்சி' தொழிலாளி வர்க்கத்துக்குத் தந்துள்ள பரிசு என்ன தெரியுமா? அகால மரணம்!
மத்தியப் பிரதேசத்திலுள்ள அலிராஜ்பூர், தார், ஜாபுவா ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து, குஜராத்திலுள்ள கோத்ரா மற்றும் கேதா மாவட்டங்களுக்குச் சென்று, அம்மாவட்டங்களில் இயங்கி வரும் படிகக்கல் தொழிற்சாலைகளில் வேலை பார்த்துவிட்டுத் திரும்பும் பழங்குடியின மக்களை "சிலிகோஸிஸ்' என்ற ஆட்கொல்லி நோய் பிடித்தாட்டி வருகிறது.
"படிகக்கற்களை மாவு போல அரைத்து, அம்மாவைச் சாக்கு மூட்டைகளில் கட்டும் இந்த வேலை மிகவும் அபாயகரமானது. இந்த வேலையை ஒரு மூன்று மாதம் தொடங்கி ஒரு வருடம் வரை செய்தாலே போதும், திடகாத்திரமான தொழிலாளர்களைக் கூட இந்த நோய் தாக்கிவிடக் கூடும்' எனத் தொழில்வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
"இந்த நோய் தொற்றினால், மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்; தொடர்ச்சியான இருமல் வாட்டியெடுக்கும்; உடல் எடை குறைந்து, நோஞ்சனாகி, நடக்கக்கூட முடியாத நிலை ஏற்பட்டு, மரணத்திற்குள் தள்ளிவிடும்' என மருத்துவர்கள் இந்த நோயின் கொடூரத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள்.
"இத்தொழிற்சாலைகளில் வேலை பார்த்துத் திரும்பியுள்ள எங்கள் ஆட்களில் ஒவ்வொருவருமே பையபைய, ஆனால் நிச்சயமாக இறந்து போவோம்; இதைத் தடுக்கும் ஆற்றலோ, பலமோ எங்களுக்கு இல்லை' என உடைந்துபோன குரலில் கூறுகிறார், உந்திலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான புத்தா. இவரது 18 வயது மகன் மோகன் கடந்த ஆண்டுதான் இந்த நோய்க்குப் பலியானான்; இவரது 16 வயது மகள் கம்மா இந்த நோயினால் தாக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.
அலிராஜ்பூர் மாவட்டத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டில்மட்டும், படிகக்கல் தொழிற்சாலை வேலைக்குப் போய்விட்டுத் திரும்பிய பழங்குடியின மக்களுள் 277 பேர் இந்த நோய் தாக்கி இறந்து போய்விட்டதாக ம.பி. மாநில அரசே ஒப்புக்கொண்டுள்ளது. அலிராஜ்பூர், தார், ஜாபுவா ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஏறத்தாழ 724 பேரை இந்த நோய் தாக்கியிருப்பதாகத் தன்னாவத் தொண்டு நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. அலிராஜ்பூர், தார் மாவட்டங்களிலுள்ள 10 கிராமங்களில், நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் தமது தாய், தந்தை இருவரையும் இந்த நோய்க்குப் பலி கொடுத்துவிட்டு, அநாதைகளாகத் திரிந்து கொண்டிருப்பதாகவும் இத்தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் இம்மூன்று மாவட்டங்களில் வாழ்ந்துவரும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தும் அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டுவிட்டன. இன்று, குஜராத்திற்கு வேலை தேடிச் செல்வதைத் தவிர, பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழியில்லை. பட்டினி கிடந்து சாவாதா அல்லது குஜராத்தின் படிகக்கல் தொழிற்சாலைகளில் வேலைக்குப் போய் இந்த ஆட்கொல்லி நோயைப் பெற்றுத் திரும்புவதா என்ற இரண்டு வாய்ப்புகள்தான் அவர்கள் முன் உள்ளன.
மத்தியப் பிரதேசத்தை ஆளும் பா.ஜ.க. கும்பல், இப்பழங்குடியின மக்களின் பிழைப்புக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வதைவிட, இந்த நோய் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்துவதைத்தான் முக்கியமாகக் கருதுகிறது. நானோ கார் தொழிற்சாலையை குஜராத்திற்குக் கொண்டுவருவதற்காக பல நூறுகோடி ரூபாய்களை டாடாவிற்கு மானியமாகக் கொடுக்கத் தயங்காத மோடி, இப்பழங்குடியின மக்களுக்கு ஒரு நயா பைசா கூட நட்ட ஈடாகத் தர மறுக்கிறார். இப்பழங்குடியின மக்களின் சாவுகளுக்குக் காரணமான படிகக்கல் தொழிற்சாலை முதலாளிகளைத் தண்டிக்கக் கோரினால், குஜராத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும் எனப் பீதியைக் கிளப்பிவிடுகிறார்.
நரேந்திர மோடி, இந்து மதவெறி பயங்கரவாதி மட்டுமல்ல, அவனொரு முதலாளித்துவ பயங்கரவாதியும்கூட என்பதைத்தான் இப்பழங்குடியின மக்களின் பரிதாபச் சாவுகள் எடுத்துக் காட்டுகின்றன.