"கார்ப்பரேட் தொழிற்கழகங்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்குகள்'' என்ற தலைப்பில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து, கோவாவில் உள்ள பஞ்ஜிம் நகரில் கடந்த பிப்ரவரி மாதம் கருத்தரங்கமொன்றை நடத்தின. கார்ப்பரேட் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போவது ஒருபுறமிருக்க, இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்களின் மனப்பாங்கும் மாறிப் போய்விட்டிருப்பது குறித்தும் இக்கருத்தரங்கில் சுட்டிக் காட்டப்பட்டது.
பெரும் தொழில் அதிபர்கள் பல்வேறுவிதமான நிதி மோசடிகளில் ஈடுபடுவது மட்டும் கார்ப்பரேட் குற்றமல்ல் இயற்கை கனிம வளங்களை எவ்வித வரைமுறையுமின்றிச் சூறையாடுவது; காற்று, நீர், நிலம் ஆகியவற்றை நச்சுப்படுத்தி சுற்றுச்சூழலை நாசப்படுத்துவது, விவசாயம் முதலிய பாரம்பரியத் தொழில்களை அழித்து மக்களின் வாழ்வாதாரங்களைப் பறிப்பது, இவற்றின் மூலம் மக்களைக் கொத்துக்கொத்தாகச் சாகடிப்பது, உயிருக்கே உலை வைக்கும் நோய்களில் தள்ளுவது; இதற்காக அரசியல் பொருளாதார கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவது; தொழிற்சங்க உரிமைகளை மறுத்துத் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக மாற்றுவது; இந்த அநீதிக்கு எதிராகப் போராட முன்வரும் தொழிலாளர்களைக் கொலைக்குழுக்களை ஏவிப் படுகொலை செய்வது என இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் கார்ப்பரேட் குற்றங்கள் எனப்படும் கார்ப்பரேட் பயங்கரவாதம்.
இந்தியாவிலேயே தமிழகம் தொழிற்துறை வளர்ச்சியில் முதல் மூன்று இடங்களில் இருப்பதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த "வளர்ச்சியை'ச் சுற்றுச் சூழலை அழித்துதான் தமிழகம் அடைந்திருக்கிறது. இந்தியாவிலுள்ள மிக முக்கியமான, மிகப்பெரிய 88 தொழிற்பேட்டைகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தியிருக்கும் கேடுகள் குறித்து ஆராய்ந்த மைய அரசின் சுற்றுப்புறச் சூழல் துறை, அப்புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தமிழகத்தின் வேலூருக்கு எட்டாவது இடத்தையும், கடலூருக்கு பதினாறாவது இடத்தையும், மணலிக்கு இருபதாவது இடத்தையும், கோயம்புத்தூருக்கு 34ஆவது இடத்தையும், திருப்பூருக்கு 51ஆவது இடத்தையும், மேட்டூருக்கு 58 ஆவது இடத்தையும், ஈரோடுக்கு 78ஆவது இடத்தையும் அளித்திருக்கிறது.
"கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் 31 இரசாயன ஆலைகளில் 20 ஆலைகள் முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக இயங்கிவருவதையும், குறிப்பாக ஜனவரி 2010 முதல் நவம்பர் 2010க்குள் மட்டும் இவ்வாலைகள் 130 முறை சுற்றுப்புறச் சூழல் விதிமுறைகளை மீறியிருப்பதையும்' சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவெங்கும் சுற்றுப்புறச் சூழலுக்கு நாள்தோறும் ஏற்படுத்திவரும் கேடுகளுக்கு கடலூர் ஒரு சிறிய உதாரணம்தான்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கும், நாட்டு மக்களுக்கும் ஏற்படுத்திவரும் கேடுகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள், வழக்கை நீர்த்துப் போகச் செய்து, குற்றவாளிகளைத் தப்பவிடுவதில் காட்டும் அக்கறைக்கு போபால் விஷவாயு படுகொலை வழக்கு, கோக்கிற்கு எதிராக கேரளாவிலுள்ள பிளாச்சிமடா கிராம மக்கள் தொடுத்த வழக்கு எனப் பல வழக்குகளை உதாரணமாகக் காட்டலாம். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சு ஆலைகளுக்கு எதிராக மாசுகட்டுப்பாடு வாரியம் தப்பித்தவறி நடவடிக்கை எடுத்தால், அதனை நீதிமன்றங்கள் ரத்து செய்வதும்; அப்படிபட்ட நச்சு ஆலைகளுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பளித்தால், அதிகார வர்க்கம் அத்தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்காமல், அந்நச்சு ஆலைகளுக்குச் சாதகமாக நடந்து வருவதற்கும் ஏராளமான வழக்குகளை உதாரணங்களாகக் காட்டலாம்.
தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளுக்கு எதிரான வழக்கு, கங்கை நதியை மாசுபடுத்தும் ஆலைகளுக்கு எதிரான வழக்கு, ஓலியம் நச்சுவாயு கசிவு வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் அதிகார வர்க்கம் நீதிமன்றத் தீர்ப்புகளை நடைமுறைப்படுத்த ஒத்துழைக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்து கொண்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஷாஸன் இரசாயனத் தாழிற்சாலையிலிருந்து புரோமின் என்ற வாயு கசிந்ததையடுத்து, அத்தொழிற்சாலைக்கு அருகே அமைந்துள்ள குடிகாடு, ஈச்சங்காடு உள்ளிட்ட மூன்றுக்கும் மற்பட்ட கிராமங்களில் வசித்துவந்த 2,000க்கும் மேற்பட்ட மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இவ்வாயுவைச் சுவாசிக்க நேர்ந்ததால் வாந்தியெடுத்து மயக்கமுற்ற 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவ்வாயு கசிவு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கிராம மக்கள் போராடியதையடுத்து, அவ்வாலை இயங்குவதைத் தற்காலிகமாகத் தடை செய்த தமிழக அரசு, விசாரணை கமிசன் ஒன்றையும் அமைத்தது. எனினும், இவ்விசாரணை முடிவதற்கு முன்பாகவே, அவ்வாலை நிர்வாகம் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, தமிழக அரசு விதித்த தற்காலிகத் தடையை ரத்து செய்து, ஆலை இயங்குவதற்குச் சாதகமாகத் தீர்ப்பைப் பெற்றது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடங்கும் திட்டங்களுக்கு எதிராகப் பொது நல வழக்குத் தாக்கல் செய்யப்படும்பொழுது, நீதிமன்றங்கள் அவ்வழக்கையொட்டி அத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தற்காலிகத் தடை விதிப்பது வழக்கம். "இப்பொது நல வழக்குகள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்படுமானால், அத்திட்டத்தை நிறுத்தி வைத்ததால் ஏற்படும் நட்டமனைத்தையும் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தவர்கள் செலுத்த வேண்டும்' என்று நீதிமன்றம் இப்பொழுது அறிவுறுத்தத் தொடங்கியிருக்கிறது. மேலும், பொது நல வழக்கு தாக்கல் செய்பவர்களின் நன்னடத்தையைக் கேள்விக்குள்ளாக்கும் விதமாக, நீதிமன்றங்களில் சுற்றுச்சூழல் தொடர்பாகப் பொது நல வழக்கு தாக்கல் செய்வதற்கு அதிக நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்றும் நீதித்துறை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் வியாபார நலன்களுக்கு எதிராக யாரும் வழக்குத் தொடுக்கக் கூடாது என்பதைத்தான் நீதிமன்றம் இப்படிச் சுற்றி வளைத்துக் கூறியிருக்கிறது.
நீதிமன்றங்கள் மட்டுமல்ல, அமைச்சரவை தொடங்கி அரசு இயந்திரத்தின் அனைத்து உறுப்புகளும் இக்கார்ப்பரேட் பயங்கரவாதத்திற்குத் துணை நிற்கின்றன என்பதோடு, அக்குற்றங்களைச் சட்டபூர்வமாக்கும்விதமாக சட்டங்களையும், கொள்கைகளையும் வகுத்து வருகின்றன. குறிப்பாக, ஜெய்ராம் ரமேஷ் தலைமையில் உள்ள சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் கார்ப்பரேட் நிறுவனங்களின் எடுபிடியாக நடந்துவருவதற்கு போஸ்கோ, நியம்கிரி வேதாந்தா, ஜெய்தாபூர் அணுஉலைத் திட்டம், மரபீணி மாற்றுப்பயிர்களுக்கு அனுமதி அளித்தது உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் ஆதாரங்களாக உள்ளன.
மீனா குப்தா என்பவர் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் செயலராக இருந்தபொழுதுதான் போஸ்கோவிற்குத் தேவைப்பட்ட அனைத்து அனுமதிகளும் வாரி வழங்கப்பட்டன. அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனுமதிகள் அனைத்தும் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளதா என்பதை ஆராய ஜெய்ராம் ரமேஷ் கமிட்டியொன்றை அமைத்தபொழுது, அக்கமிட்டியின் தலைவராக மீனா குப்தாவையே நியமித்தார். ஜெய்ராம் ரமேஷின் கயமைத்தனத்தை நிரூபிப்பதற்கு இந்த ஒரு சான்றே போதுமானது.
ஜெய்தாபூர் அணு உலைத் திட்டம் குறித்து முன்னாள் டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதி ஏ.பி. ஷா தலைமையில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் உரையாற்றிய கொங்கன் பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பைச் சேர்ந்த விவேக் மாண்டீரோ, "இந்த அணு உலைத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் எரிபொருட்களை அடுத்த 2.5 இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்க வேண்டும். ஆனால், இத்திட்டம் குறித்து சுற்றுப்புறச் சூழல் அமைச்சகம் தயாரித்துள்ள சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் இப்பாதுகாப்பு குறித்து ஒரு வார்த்தைகூட இல்லை' என்ற உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படுத்த முனையும் மிகப் பெரும் திட்டங்கள் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து அரசின் நிபுணர்கள் அளிக்கும் அறிக்கை என்பது, அத்திட்டம் குறித்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது இணைய தளங்களின் வெளியிடும் அறிக்கையின் அப்பட்டமான பிரதி தவிரவேறில்லை. குறிப்பாக, போஸ்கோ திட்டத்தால் கிடைக்கும் சமூக நலன்களை ஆராய்ந்த பயன்பாட்டு பொருளாதரா ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சில் என்ற அமைப்பு அளித்த அறிக்கை, போஸ்கோ நிறுவனத்திடம் காசு வாங்கிக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை என்ற உண்மையை சுரங்கப் பகுதி மக்கள் ஒற்றுமை இயக்கம் அம்பலப்படுத்தியது.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தமது திட்டங்கள் குறித்த கவர்ச்சிகரமான சித்திரத்தை அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் உருவாக்குவதற்காகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும், பன்னாட்டு ஆலோசனைக் கழங்களையும் இறக்கிவிடுகின்றன. போஸ்கோ திட்டம் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தவுள்ள நன்மைகளை எடுத்துச் சொல்வதற்காக, "இண்டர்நேஷனல் வாட்ச்' என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டு, அதற்கு கமிஷனாக 22 கோடி ரூபாய் தரப்பட்டது. வேதாந்தா நிறுவனம் தனது பாக்சைட் திட்டத்தால் விளையும் நன்மைகள் குறித்து எடுத்துச் சொல்ல "வளர்ச்சிக்கான வியாபாரக் கூட்டாளிகள்' என்ற அரசுசாரா நிறுவனத்தை ஈடுபடுத்தியது.
சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், போஸ்கோ, வேதாந்தா, மகேஷ்வர் அணைக் கட்டுத் திட்டம், ஜெய்தாபூர் அணுஉலைத் திட்டம் உள்ளிட்ட பல கார்ப்பரேட் தொழில்களுக்கு, சுற்றுப்புறச் சூழல் ஆய்வின் அடிப்படையில் அனுமதி கொடுக்கவில்லை. ஏகாதிபத்திய நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்தியே அனுமதியை வழங்கிவிட்டு, தனது இந்த அடிவருடித்தனத்தை மூடிமறைக்க, "கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்', "வளர்ச்சிக்கான திட்டம்' போன்ற சொல் அலங்காரங்களைப் பயன் படுத்தி வருகிறார். இதனை அம்பலப்படுத்திப் போராடியதற்காகவே போஸ்கோ ப்ரதிரோத் சங்க்ராம் சமிதியின் தலைவர் அபயா ஸாஹ_ மற்றும் அவ்வமைப்பைச் சேர்ந்த பலர் மீதும் 33 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன.
கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் நிலக்கொள்ளையும் இந்த வகையில்தான் நியாயப்படுத்தப்படுகிறது. கடந்த மே மாதம் 7ஆம் தேதியன்று உ.பி. மாநிலத்திலுள்ள பட்டா, பர்சவுல் என்ற இரு கிராமப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 விவசாயிகள் கொல்லப்பட்டனர். அக்கிராம விவசாயிகள் அரசு கையகப்படுத்தும் தங்கள் நிலங்களுக்கு அதிக விலை கேட்டுப் போராடி வருவதாகப் பத்திரிகைகள் இது குறித்து செய்திகளை வெளியிட்டன. இது பாதி உண்மைதான்.
யமுனா விரைவுச் சாலையை அமைப்பது, அச்சாலையையொட்டி அதிஉயர் நகரங்களை அமைப்பது என்ற பெயரில் ஒரு பெரும் நிலக் கொள்ளையை ஜே.பி. இன்ஃப்ராடெக் என்ற தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது; அதற்கு உ.பி. மாநில அர” கைத்தடியாகச் செயல்படுகிறது என்பதுதான் முழு உண்மை. இத்திட்டங்களுக்காக உ.பி. மாநில அரசின் மூலம் விவசாயிகளிடமிருந்து 880 ரூபாய்க்கு வாங்கப்படும் நிலம், அத்தனியார் நிறுவனம் அமைக்கவுள்ள அதி உயர் நகரங்களில் குடியிருக்க விண்ணப்பித்துள்ள மேட்டுக்குடி கும்பலிடம் 25,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த அதிஉயர் நகரங்கள் அமைக்கப்படுவதற்
காக 374 கிராமங்களைச் சேர்நத ஏழு இலட்சம் விவசாயிகள் தங்கள் நிலங்களை இழந்து பிழைப்பு தேடி வெளியேற வேண்டியிருக்கும்; யமுனை விரைவுச் சாலையை அமைப்பதற்காக 43,000 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுவதால், ஏறத்தாழ 1,191 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்படுவர். இந்தக் கொள்ளைக்கு எதிராகப் போராடும் விவசாயிகளை கிரிமினல் கும்பல் எனச் சாடி வருகிறார், தலித் சகோதரி மாயாவதி.
இந்தியப் பொருளாதாரம் குறித்து மைய அரசு நடத்திய ஆய்வின்படி, கடந்த 15 ஆண்டுகளில் ஏறத்தாழ 60 இலட்சம் ஹெக்டேர் நிலம் விவசாயிகளிடமிருந்து வளர்ச்சித் திட்டங்களுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த "வளர்ச்சி'த் திட்டங்கள் அனைத்தும் நிலத்தை இழந்த விவசாயிகளை, வேலையிழந்த கூலி விவசாயிகளை உள்நாட்டிலேயே அகதிகளாக அலையவிட்டுள்ளது என்பதுதான் உண்மை. இந்த நில அபகரிப்புக்கு எதிராக விவசாயிகள் மத்தியில் எழுந்துவரும் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்வதற்காக, புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை உருவாக்கப் போவதாகக் கூறி வருகிறது, மைய அரசு. லோக்பால் சட்டம் அமலுக்கு வந்தால் கார்ப்பரேட் கொள்ளை ஒழிந்துவிடும் எனப் பிரச்சாரம் செய்யப்படுவது எவ்வளவு பெரிய மோசடியோ, அதைப் போன்ற இன்னொரு மோசடியாகவே இப்புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டமும் அமையும்!
• குப்பன்