வறுமையும், வேலையின்மையும், விலைவாசி உயர்வும் ஏழை நாட்டு மக்களைப் பிடித்தாட்டும் இன்றைய மறுகாலனியாதிக்கச் சூழலில், அரசியல் மாற்றம் கோரும் மக்கள் போராட்டங்கள் பல நாடுகளில் வெடிக்கத் தொடங்கியுள்ளன. ஊழல் கறைபடிந்த ஆட்சியாளர்களுக்கு எதிராகவும், சர்வாதிகாரக் கொடுங்கோலர்களுக்கு எதிராகவும் சாமானிய மக்களின் எழுச்சியானது துனிசியா, எகிப்து என வட ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து, தற்போது மேற்காசிய நாடான சிரியாவிலும் பரவத் தொடங்கியுள்ளது.

 

 

1970ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியின் மூலம் பாத் கட்சியின் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டு, தன்னைச் சர்வாதிகாரியாக நிலைநிறுத்திக் கொண்ட ஹாபிஸ் அல் அசாத் காலத்திலிருந்து சிரியாவில் சர்வாதிகாரமும் கொடுங்கோலாட்சியும் தலைவிரித்தாடி வருகிறது. சிரியாவின் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் அழித்து ஒரு கட்சி ஆட்சியை நிறுவிய ஹாபிஸ் அல் அசாத், 30 ஆண்டுகள் சர்வாதிகாரியாக ஆட்சி செய்து விட்டு 2000மாவது ஆண்டில் இறந்தார். அதையடுத்து அவரது மகன் பஷார் அல் அசாத், சிரியாவின் அதிபரானார்.

பஷார் அதிபரானதும் கொண்டுவரப்பட்ட சந்தைச் சீர்திருத்தங்கள், நாட்டில் ஏற்றத்தாழ்வை மேலும் அதிகரித்தன. நாட்டில் நடுத்தரவர்க்கமே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு நடுத்தரவர்க்கத்தின் பெரும்பான்மையினர் கூலித்தொழிலாளர்களின் நிலைக்குத் தள்ளப்பட்டனர். மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். படித்த இளைஞர்களில் 20 சதவீதம் பேருக்கு வேலையில்லை. வேலைக்குச் செல்பவர்களும் போதுமான சம்பளமின்றித் தடுமாறுகின்றனர். குடும்பத்தைக் காப்பாற்ற ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் சாமானிய மக்கள் ஈடுபடுவதென்பது, அங்கு சாதாரணம்.

இவையெல்லாம் போதாதென்று, விலைவாசியோ விண்ணை முட்டுகிறது. இறைச்சியும், பழங்களும் பெரும்பான்மை சிரிய மக்களுக்கு கைக்கெட்டாததாகிவிட்டது. சிரியாவின் விவசாயத்தை சுதந்திரச் சந்தை சீரழித்துவிட்டது. உள்நாட்டில் உற்பத்தியாகும் தரமான பருத்தியும் கோதுமையும் மலிவு விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, தரம் குறைந்த பருத்தியும் கோதுமையும் அதிக விலைக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. உணவுப் பொருள் விலையேற்றமும், விவசாயத்தின் சீரழிவும் மக்கள் எழுச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால்தான் பெருநகரங்களை விட விவசாயிகள் அதிகமுள்ள சிறுநகரங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் உழைக்கும் மக்களின் எழுச்சியும் போராட்டங்களும் தீவிரமாக நடக்கின்றன.

40 ஆண்டுகளுக்கும் மேலாக அவசரநிலை அமலில் இருப்பதால் மக்களுக்கு அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்படுகின்றன. ஆட்சியாளர்களிடம் இலஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகின்றன. பிறப்புச் சான்றிதழ் வாங்கக்கூட ஆயிரக்கணக்கில் இலஞ்சம் தரவேண்டியுள்ளது. யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சித்திரவதை செய்ய வழிசெய்யும் சட்டங்களும், கைது செய்யப்பட்டவர் நிரபராதியாக இருப்பினும் ஆயிரக்கணக்கில் இலஞ்சம் கொடுத்தால்தான் வெளியே வரமுடியும் என்ற நிலையும் மக்களை வாட்டி வதைக்கின்றன.

அரசின் அடக்குமுறைக்கு அஞ்சி, துயரங்களைச் சகித்துக் கொண்டிருந்த சிரிய மக்களுக்கு, துனிசியாவிலும் எகிப்திலும் நடந்த மக்கள் எழுச்சிகள் பெரும் உத்வேகத்தைக் கொடுத்தன. கடந்த பிப்ரவரி மாதத்தில் மிகச் சிறிய அளவில் தொடங்கிய எதிர்ப்பியக்கம் மூன்று மாதகாலத்தில் மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் பரவிவிட்டது. அதிபர் பஷார் பதவி விலகவேண்டும், அவசர நிலை திரும்பப்பெறப்பட வேண்டும், சர்வாதிகார ஆட்சிக்கு ஆதரவான 1973 ஆம் வருடத்து அரசியல் சட்டம் நீக்கப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராடி வருகின்றனர். இப்போராட்டங்களை பஷார் அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கிவருகிறது. தொலைவிலிருந்து குறிபார்த்துச் சுடும் "ஸ்நைபர்' படையைக் கொண்டு முக்கிய தலைவர்களைச் சுட்டுக் கொல்கிறது. அது மட்டுமன்றி, இராணுவ டாங்கிகளையும் போராட்டக்காரர்கள் மீது ஏவி விட்டுள்ளது. இதுவரை 800க்கும் மேற்பட்டவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 8000 பேர்களைக் காணவில்லை. இருந்தபோதிலும், மக்களின் எதிர்ப்பினைச் சமாளிக்க முடியாமல் அரசு திணறுகிறது.

இவ்வாறு சிரியாவில் மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாகப் பெருகத் தொடங்கியதும், அமெரிக்கா அதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. ஒருபுறம் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டே, பஷார் அரசுடன் இரகசியமாகப் பேச்சுவார்த்தை நடத்தியது. புவியியல் ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மேற்காசியப் பகுதியில் சிரியாவின் பாத்திரம் கேந்திரமானது. இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினை, லெபனான் பிரச்சினை போன்றவற்றில் சிரியா பெரிய அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. அதுமட்டுமன்றி, ஈரானின் முக்கிய நட்பு நாடாகவும் சிரியா விளங்குகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற முக்கிய போராளி இயக்கங்களின் தலைமை சிரியாவிலிருந்துதான் இயங்கி வருகிறது. இதன் காரணமாக சிரியாவைத் தனதுபிடிக்குள் வைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்புகிறது.

அதுமட்டுமன்றி, சிரியாவில் தனியார்மயம்  தாராளமயத்தை மேலும் தீவிரமாக்கவும் அமெரிக்கா விரும்புகிறது. இவற்றை நிறைவேற்றிக்கொள்ள மக்கள் போராட்டங்களை பகடைக்காயாகப் பயன்படுத்திக்கொண்டு, அவற்றை ஆதரிப்பதுபோல நாடகமாடிய அமெரிக்கா அதிபர் பதவி விலக வேண்டுமென்று சிரியாவின் சர்வாதிகாரக் கும்பலை நிர்பந்தித்தது. ஒருகட்டத்தில் அமெரிக்காவின் புதிய நிர்பந்தங்களையும், தாராளமயத் திட்டங்களையும் விசுவாசமாகச் செயல்படுத்துவதாக பஷார் உறுதியளித்ததும், அவரை அமெரிக்கா முழுமையாக ஆதரித்தது. பஷார் அசாத்தை "சீர்திருத்தவாதி' எனப் புகழ்ந்தார், ஹிலாரி கிளிண்டன். "சிரிய அதிபர் ஜனநாயகத்தை நிலைநாட்டி விரிவுபடுத்த முன்வந்துள்ளதால், சிரியா மக்கள் தங்கள் போராட்டங்களை நிறுத்திக் கொள்ளவேண்டும்' என்றும் அமெரிக்கா கூறியது. ஆனால், தற்போது சிரியாவின் சர்வாதிகார கும்பலுக்கும் அமெரிக்கா ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இடையிலான பேரம் படியாததால், சிரிய அதிபர் பஷார் ஜனநாயக வழியில் நாட்டை நடத்த வேண்டும், அல்லது பதவிவிலக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனக்கு விசுவாசமான ஏழை நாடுகளின் சர்வாதிகார ஆட்சியாளர்கள் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்த போதிலும், அவர்களை முட்டுக் கொடுத்து ஆதரித்து வந்த அமெரிக்கா, இன்று அச்சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் தன்னெழுச்சியாகப் பெருகத் தொடங்கியதும், அதனைப் பயன் படுத்திக் கொண்டு தனது மேலாதிக்க நலனை நிலைநாட்டிக் கொள்ளத் துடிப்பதையே சிரிய விவகாரம் நிரூபித்துக் காட்டுகிறது. ஒருவேளை அமெரிக்காவிற்கு பஷார் பணிந்துபோகவில்லையென்றால் லிபியாவைப் போன்றே சிரியா மீதும் போர்த் தாக்குதல் நடத்தி "ஜனநாயகத்தை' நிலைநாட்டும் கடமையை அமெரிக்கா செய்திருக்கக்கூடும்.

• அழகு