06062023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

தீண்டாமை தலைவிரித்தாடும் தமிழகம்: தேவை புதிய பாதை!

"சமூகநீதி காத்த வீராங்கனை'யும், "சமத்துவப் பெரியாரும்' மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் "அமைதிப் பூங்கா'வாகிய தமிழகத்தில், சாதிய அடக்குமுறை பேயாட்டம் போடுவதை அண்மையில் நடந்த சம்பவங்கள் நிரூபித்துள்ளன. படித்து முன்னேறிச் சொந்தக் காலில் நிற்க முயன்றால், தாழ்த்தப்பட்டோரை விட்டுவைக்க மாட்டோம் எனக் கருவிக் கொண்டிருக்கின்றனர், ஆதிக்க சாதிவெறியர்கள்.

 

 

அண்மையில் மதுரைதிருமங்கலம் வட்டத்திலுள்ள டி.கல்லுப்பட்டியை ஒட்டியுள்ள வில்லூர் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் என்ற இளைஞர் பொதுத் தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்ற "மாபெரும்' குற்றத்திற்காக, அகமுடையார் எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஐந்து பேர் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அகமுடையார்கள் வசிக்கும் மேலத்தெருவான காளியம்மன் கோவில் தெருவில் தாழ்த்தப்பட்டோர் சைக்கிளிலோ, செருப்பு அணிந்தோ செல்லக் கூடாது என சாதிக் கட்டுப்பாடு விதித்துத் தீண்டாமையை நடை முறைப்படுத்தி வருகின்றனர்.

இன்றுகூட அந்த வட்டாரத்தில் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் அகமுடையார் சாதியைச் சேர்ந்த மாணவர்களைத் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் "ஐயா' என்றுதான் அழைக்க வேண்டும்.

அந்த ஊரில் வசிக்கும் குரு எனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரின் மகனாகிய தங்கப்பாண்டியன் ஆசிரியர் பயிற்சிக்குப் படித்து விட்டு, தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவருடைய குடும்பத்தினர் சொந்தமாக 7 ஏக்கர் நிலம் வாங்கியது முதலாக அகமுடையார்கள் இக்குடும்பத்தினர் மீது வன்மத்தோடு இருந்து வந்துள்ளனர். தங்கப்பாண்டியனின் தந்தை வாங்கித் தந்த மோட்டர் சைக்கிளில் காளியம்மன் கோவில் தெரு வழியாக வந்ததும், அகமுடையார் சாதியினர் அவரைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர். தங்கப்பாண்டியன் இத்தாக்குதல் குறித்து போலீசு நிலையத்தில் புகார் கொடுத்ததால், சாதிவெறியர்கள் ஆத்திரமடைந்து தங்கப்பாண்டியனின் அண்ணனையும் தாக்கியுள்ளனர்.

தொண்ணூறுகள் வரை ஆதிக்கச் சாதியினரின் நிலத்தோடு கூலிகளாகப் பிணைக்கப்பட்டிருந்தபோது, அவர்கள் விதித்து வந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக மறுபேச்சுப் பேசமுடியாமல் தாழ்த்தப்பட்டோர் சகித்துக் கொண்டிருந்தனர். இன்று விவசாயம் சீரழிக்கப்பட்டு நிலத்தோடு இரு தரப்புக்கும் ஒட்டுறவில்லை எனும் நிலை வந்த பின்னர், தாழ்த்தப்பட்டோர் படித்து முன்னேறுவதைக் கூட ஆதிக்கசாதியினர் சகித்துக் கொள்வதில்லை என்பதற்கு சாட்சியம்தான் வில்லூர் கிராமத் தாக்குதல்.

இதே போன்று, மதுரை  நத்தம் சாலையில் உள்ள பரளிபுதூர் இந்திரா நகரில் வாழும் தாழ்த்தப்பட்டோர் மீது ஆதிக்க சாதி முத்தரையர்கள் கடந்த பிப்ரவரியில் தாக்குதல் நடத்தியுள்ளனர் . வி.சி. கட்சியின் பகுதிப் பொறுப்பாளர் அதியமான் என்பவரின் திருமண விழாவில் தொல்.திருமாவளவனின் உருவப்படமுள்ள "ப்ளக்ஸ்' தட்டியை வைத்திருந்ததையும், குடிநீர்த் தொட்டியின் மேலே வி.சி. கட்சியின் கொடியைக் கட்டியிருந்ததையும் சகித்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதி முத்தரையர்கள், திட்டமிட்டு இந்திராநகர் தாழ்த்தப்பட்டோர் மீது தாக்குதலை ஏவியுள்ளனர்.

நத்தத்தில் இருந்து மதுரை வரை உள்ள முத்தரையர் சாதியினரைத் திரட்டி வந்து இந்திரா நகர் தாழ்த்தப்பட்டோர் மீது கடந்த பிப்ரவரி 26ஆம் தேதியன்று நடத்திய தாக்குதலில், நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் ஓடுகள் உடைக்கப்பட்டதோடு, 30 கூரை வீடுகளும் 20க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களும் கொளுத்தப்பட்டுள்ளன. பரளிபுதூரில் கடந்த ஒரு தலைமுறையாகத் தாழ்த்தப்பட்டோர், சாதி இந்துக்களுக்கு தமுக்கு அடிப்பது போன்ற அடிமை வேலை ஏதும் செய்வதில்லை. படித்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைகளுக்குச் சென்று, ஒருசிலர் சொந்தமாக நிலமும் வாங்கியுள்ளனர். இவ்வாறு தாழ்த்தப்பட்டோர் முன்னேறியதைப் பொறுக்க முடியாத ஆதிக்கசாதியின் ஆத்திரம்தான் இந்தத் தாக்குதல்களுக் கெல்லாம் காரணம்.

இதுதவிர, இன்னமும் நூற்றுக்கணக்கான ஊர்களில் இரட்டைக்குவளை முறையோடுதான் தேநீர்க்கடைகள் உள்ளன. பல ஊர்களில் தந்திரமாக, கண்ணாடி தம்ளர்களைப் பொதுவாக வைத்துக்கொண்டு ஆதிக்க சாதியைச் சேர்ந்த வயதானவர்களுக்கு டபாரா செட்டில் தேநீர் கொடுப்பதும், கேட்டால் "வயதானவர்களின் சௌகரியத்துக்காக இந்நடைமுறை' எனச் சொல்லியும் சட்டத்தின் பிடியிலிருந்து நைச்சியமாகத் தப்பிக்கின்றனர். அல்லது, தம்ளர்களில் நுண்ணிய கோடு கிழித்து அடையாளம் ஏற்படுத்திக் கொண்டும் இரட்டைக்குவளை முறையை நடைமுறைப்படுத்துகின்றனர்.

தீண்டாமைக்கெதிரான சட்டங்கள் பலனளிக்காத நிலையில், 1989இல் கொண்டுவரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் மூலம் சாதியக்கொடுமையை ஒழித்து விடலாம் என்று தலித் இயக்கங்களும் அவற்றின் அறிவுத்துறையினரும் சொல்லி வருகின்றனர். ஆனால், உண்மைகளோ வேறாக இருக்கின்றன. '90களில் நடந்த தென்மாவட்ட சாதிக்கலவர வழக்குகளில் இச்சட்டத்தின்படி நடந்த 386 வழக்குகளில், வெறும் 18 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது, கிடைத்த நீதி வெறும் 4.7சதவீதம் மட்டுமே. இச்சட்டத்தின்படி, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டாலே அது தண்டனைக்குப் போதுமானதென நாடாளுமன்றம் தெளிவுபடுத்தி இருப்பினும், தீர்ப்பெழுதும் "நீதி'பதிகளோ, பாதிக்கப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால், "குற்றம் நடத்தப்பட்டதற்குப் போதிய ஆதாரமில்லை' எனச் சொல்லி தண்டனையைக் குறைத்துத் தமது ஆதிக்க சாதிப் பாசத்தை நிரூபித்துள்ளனர். கயர்லாஞ்சி முதல் மேலவளவு முருகேசன் வழக்கு வரை இதுதான் நிலை எனும்போது, ஆதிக்கசாதியின் கொட்டத்தை இச்சட்டத்தின் மூலமே அடக்கி விடமுடியுமா?

அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலம் சாதிக் கொடுமைக்கு முடிவு கட்டலாம் என்றனர், தலித் இயக்கத்தினரும் அவற்றின் அறிவுத்துறையினரும். ஆனால், 2007இல் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த மாயாவதியின் ஆட்சியில்தான் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் உக்கிரமாக நடந்தது. குற்றவாளிகளைக் காப்பாற்ற மாயாவதியின் கட்சியே துணை போனது. தமிழகத்திலுள்ள தலித் கட்சிகளோ, ஆதிக்க சாதி வெறியர்களின் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதைக் காட்டிலும், திராவிடக் கட்சிகளிடம் இரண்டு, மூன்று சீட்டுக்குக் காவடி எடுப்பதோடு முடங்கிப்போயுள்ளன.

வன்கொடுமைத் தடுப்பு சட்டவழியோ, அதிகாரத்தைக் கைப்பற்றும் நாடாளுமன்றசட்டமன்ற வழியோ செல்லுபடியாகாத நிலையில், தீண்டாமைக் கொடுமைக்கெதிராகப் போராட இனி தாழ்த்தப்பட்டோர் மாற்றுப் பாதையில் அணிதிரள வேண்டியுள்ளது. வர்க்கப் போராட்டத்துடன் சாதிதீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தை ஒருங் கிணைத்துப் போராடுவதன் மூலமே, கம்யூனிசப் புரட்சியாளர்கள் செயல்படுத்திவரும் புதிய பாதையில் போராடுவதன் மூலமே தீண்டாமைக்கொடுமைகளை ஒழித்துக் கட்டமுடியும்.

• கதிர்