தி.மு.க.வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் "கூட்டுச் சதியாளர்' எனத் துணை குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள அவர் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்புள்ளதாகக் கூறி, கனிமொழியின் பிணை மனு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டு, அவர் விசாரணைக் கைதியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

 

அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கியதும், கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, "இது கனிமொழியின் மீதான பிரச்சினை இல்லை. கட்சியின் மதிப்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் பிரச்சினை' என்று கருணாநிதி பொங்கினார். "கனிமொழி என் மகள் மட்டுமல்ல, இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிறபாட்டை என்னால் சொல்ல முடியவில்லை' என்று கட்சி நிர்வாகிகளிடம் தழுதழுத்தார். படித்த வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்தார், சென்னை சங்கமம் கலைநிகழ்ச்சி நடத்தினார் என்பதைத் தவிர, கட்சிக்காக கனிமொழி ஆற்றியுள்ள "தொண்டு' பற்றி அவரால் பெரிதாக ஒன்றும் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.

கருணாநிதி உட்பட தி.மு.க.வில் பலர் சிறை சென்றிருக்கிறார்கள். அவற்றுக்கெல்லாம் ஒரு போராட்டப் பின்னணி இருந்தது. ஆனால், ஊழல் குற்றச்சாட்டுக்காக சிறையிடப்படுவது அப்படிப்பட்டதல்ல என்ற சாதாரண உண்மைகூட கருணாநிதிக்குத் தெரியாமல் குடும்பப் பாசம் அவரது கண்களை மறைக்கிறது. "தகத்தகாய சூரியன்' ராசா கைது செய்யப்பட்ட போது, "தலித் என்பதால் அவர் பழிவாங்கப்பட்டுள்ளார், இது ஆரிய சூழ்ச்சி' என்று சாடிய கருணாநிதி, கனிமொழிக்காக பிரபல "ஆரிய' வழக்குரைஞரான ராம்ஜெத்மலானியை வாதாட வைத்தார். இத்தனை நாட்களாகச் சிறையிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராசாவைப் பார்க்கப் போகாத கருணாநிதி, இப்போது கனிமொழி கைதானவுடன் டெல்லிக்கு ஓடுகிறார்.

"கனிமொழிக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் டிவியில் பங்குதாரராகச் சேர்த்தது நான்தான், அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை' என்று உடன் பிறப்புக்குக் கடிதம் எழுதி, தன்னையும் தன் குடும்பத்தாரையும் எந்தத் தவறும் செய்யாத யோக்கிய சிகாமணிகளாகக் காட்டி ஏய்ப்பதற்கு அவர் கடுகளவும் கூச்சப்படவில்லை. குடும்பமும் வாரிசுகளுமே கருணாநிதிக்குக் கட்சியாகிவிட்டதால், அவரது பேச்சும் எழுத்தும் செயலும் அவரது கட்சிக்காரர்களாலேயே நியாயப்படுத்த முடியாதபடி போய்விட்டது.

மறுபுறம், 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் மிகத் தாமதமாக துணை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அதில் கனிமொழியை கூட்டுச் சதியாளர் என்று சி.பி.ஐ. சேர்த்துள்ளது. இந்த ஊழலில் ஆதாயமடைந்துள்ள டாடா மற்றும் ரிலையன்ஸ் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யக் கோரும் பிரசாந்த் பூஷணின் மனுவை இழுத்தடிக்கும் சி.பி.ஐ., கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில்தான் முனைப்பு காட்டியது. பிணை வழங்குவதற்கான வழக்கைத் தேவையே இல்லாமல் தேர்தல் முடிவு வரும்வரை நீட்டித்து, தேர்தல் முடிவுக்குப் பின்னர் பிணையை மறுத்து விசாரணைக் கைதியாக சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளது, சிறப்பு நீதிமன்றம். பின்னர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணை கோரியபோதிலும், அதுவும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் காங்கிரசு அமைச்சர்களுக்கும் பங்கிருக்கிறது என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேசமயம், தி.மு.க.வின் தயாநிதி மாறன் முன்பு தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது மலேசியாவின் மாக்சிஸ் நிறுவனத்துக்குச் சலுகை காட்டிய வகையில் ரூ.700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக இன்னுமொரு துணை குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. தாக்கல் செய்யப் போவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன. 2ஜி அலைக்கற்றை ஊழல் கொள்ளையைக் கண்டு குமுறும் மக்களின் கோபத்தைத் தணிக்க காங்கிரசின் கூட்டணிக்கட்சியான தி.மு.க. பலிகிடாவாக்கப்பட்டிருக்கிறது. இவையனைத்தும் ஆளும் காங்கிரசுக்குத் தொடர்பில்லாமல் சி.பி.ஐ. மற்றும் நீதித்துறையால் தன்னிச்சையாக நடத்தப்பட்டவை என்று நம்ப முடியாது. தி.மு.க.வை மிரட்டிப் பணிய வைக்க காய் நகர்த்தும் ஆளும் காங்கிரசு கும்பலின்அரசியல் உள்நோக்கம், சி.பி.ஐ. மற்றும் நீதித்துறையின் விசாரணை ஆகிய அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருக்கிறது.

தனியார்மயம்  தாராளமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை தீவிரமாக்கப்பட்டதும், எல்லாத்துறைகளிலும் ஊழலும் கார்ப்பரேட் கொள்ளையும் நீக்கமற நிறைந்து விட்டது. தொலைத் தொடர்புத்துறை என்றாலே ஊழல் கொள்ளைக்கான துறைதான் என்பது தனியார்மயம் நடைமுறைப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே நிரூபணமாகியுள்ளது. இருப்பினும், இத்தகைய ஊழல் கொள்ளைகளில் ஒரு சில மட்டுமே அரசியல் உள்நோக்கத்துக்காக ஊதிப் பெருக்கப்படுகிறது. தானும் நடவடிக்கை எடுப்பதுபோல ஆளும் காங்கிரசு கும்பலும் நாடகமாடுகிறது.

2ஜி அலைக்கற்றை ஊழல் மட்டுமல்; ஆதர்ஷ் ஊழல், எஸ் பேண்ட் ஊழல், காமன்வெல்த் ஊழல் என அடுத்தடுத்து அம்பலமாகிவரும் கார்ப்பரேட் கொள்ளையால், பொதுமக்கள் மத்தியில் இன்றைய அரசியலமைப்பு மீது வெறுப்பும் நம்பிக்கையின்மையும், அரசியல்வாதிகள் மீது ஆத்திரமும் அதிகரித்து வருகிறது. இந்தக் குமுறல்கள் எரிமலையாகி வெடிப்பதற்கு முன் அதைத் தணிப்பதற்கும், இன்றைய அரசியலமைப்பு முறை மீது மக்களுக்கு நம்பிக்கையூட்டவும், சில அவசியமான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஆளும் வர்க்கங்களுக்கு எழுந்துள்ளது.

ஊழல் தடுப்பு ஆணையத்தை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள்; ராசா, கனிமொழி போன்றோரையும் ஒரு சில கார்ப்பரேட் நிறுவன மேலாண்மை இயக்குநர்களையும் கைது செய்திருப்பது  ஆகியன ஊழல் தடுப்பு நடவடிக்கைகளாகக் காட்டப்படுகிறது. சி.பி.ஐ.யும் உச்ச நீதிமன்றமும் ஊழலைத் தடுக்க சில நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் காட்டி, அவற்றைப் பிரச்சாரப்படுத்தி, நிலவுகின்ற அரசியலமைப்பு முறை மீது நம்பிக்கையூட்ட முயற்சிக்கின்றனவே தவிர, கொள்ளையர்களைத் தண்டித்து அவர்கள் கொள்ளையடித்த சொத்துக்களைப் பறிமுதல் செய்ய முன்வரவில்லை. அதனால்தான், மன்மோகன் அரசாங்கத்தின் இரண்டாமாண்டு நிறைவு விருந்தில், ஊழலை ஒழிக்கப் போவதாக மன்மோகனும் சோனியாவும் கூசாமல் சவடால் அடித்துள்ளனர்.

கனிமொழி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்து யார் கைது செய்யப்படுவார்கள், ரெய்டு வருகிறது, குற்றப்பத்திரிகை தயாராகி விட்டது என்று மிரட்டிப் பணிய வைக்கும் வகையிலான பொய்களையும் வதந்திகளையும் கிசுகிசுக்களையும் வெளியிட்டு பரபரப்பூட்டுவதே பார்ப்பன ஊடகங்களின் உத்தியாக உள்ளது. கருணாநிதியும் அவரது கட்சியும் கார்ப்பரேட் முதலாளிகளின் நலன் காக்கும் சக்திகள்தான் என்ற போதிலும், வட இந்திய ஊடகங்களும் தமிழகத்தின் பார்ப்பன ஊடகங்களும் கனிமொழியின் கைதை தீராப் பகைமையோடு சித்தரிக்கின்றன. "நான் முந்தைய கருணாநிதி இல்லை, கார்ப்பரேட் கொள்ளைக்குத் துணைநின்று பார்ப்பன தேசியத்துக்குப் பல்லக்குத் தூக்குபவர்தான்' என்று கருணாநிதி சத்தியம் செய்தாலும், அவை இன்னமும் வன்மத்தை கைவிடவில்லை என்பது இப்போதும் நிரூபணமாகியுள்ளது.

கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு ஊறுநேராமல், அதேசமயம் நாட்டு மக்களின் அதிருப்திக்கு வடிகால் வெட்டி, இன்றைய அரசியலமைப்பு முறைக்குள் தீர்வைத் தேடும் நோக்கில் தற்போது சி.பி.ஐ.யும் நீதித்துறையும் காட்டிவரும் சூரத்தனம் குறிப்பிட்ட வரம்புக்குமேல் செல்லவும் முடியாது. ஏனெனில், இத்தகைய ஊழல்கள் அனைத்தும் தோண்டத்தோண்ட கார்ப்பரேட் முதலாளிகளை நோக்கித்தான் செல்கின்றன என்பதால், சி.பி.ஐ. நடத்திவரும் ரெய்டு, விசாரணை, கைது எனும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் எந்த அளவுக்குப் போகும் என்பதை யாவரும் புரிந்து கொள்ள முடியும்.

• தனபால்