06082023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகள்: ‘மார்க்சிஸ்’டுகள் மண்ணைக் கவ்வியது ஏன்?

"மே.வங்கத்தைப் பார்!', "வங்கம் வழிகாட்டுகிறது!' என்று 80களில் சிபிஎம் கட்சியினர் பெருமையுடன் பிரச்சாரம் செய்த முழக்கம், இன்று எதிர்கட்சிகள் சி.பி.எம். கட்சியினரைப் பார்த்து கேலி செய்வதற்கானதாகிவிட்டது. 34 ஆண்டுகாலமாக மே.வங்கத்தில் ஆட்சி செய்த போலி கம்யூனிஸ்டு "இடதுசாரி கூட்டணி' நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வரலாறு காணாத படுதோல்வியடைந்துள்ளதோடு, சி.பி.எம். முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்டு அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் இத்தேர்தலில் மண்ணைக் கவ்வியுள்ளனர். மே.வங்கத்தில் 2006ஆம் ஆண்டில் நடந்த கடந்த சட்டமன்றத் தேர்தலில் 235 இடங்களை வென்ற "இடதுசாரி' கூட்டணி, இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது. மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 226ஐ திருணாமுல் காங்கிரசுகைப்பற்றி "இடதுசாரி' கூட்டணியை செல்லாக்காசாக்கியுள்ளது. மே.வங்கம் மட்டுமின்றி, கேரளாவிலும் ஆட்சியை இழந்து, மிகச்சிறிய மாநிலமான திரிபுராவில் மட்டுமே சி.பி.எம். கூட்டணி ஆட்சி நீடிக்கிறது.

 

 

கேரளத்திலும் திரிபுராவிலும் "இடதுசாரி' கூட்டணி தேர்தல்களில் தோல்வியடைவதும் மீண்டும் ஆட்சிக்கு வருவதும் வாடிக்கையானதுதான். ஆனால், வங்கத்தில் அசைக்க முடியாத கோட்டையாக இருந்த "இடதுசாரி' கூட்டணி இப்போது மணற்கோட்டையாகச் சரிந்துபோகக் காரணங்கள் என்ன என்பதை முதலாளித்துவ ஊடகங்கள் பரபரப்புடன் அலசுகின்றன. முதலாளித்துவப் பத்திரிகைகள் குறிப்பிடுவதுபோல, இந்தத் தோல்வி எதிர்பாராததோ, ஆச்சரியமோ, அதிசயமோ அல்ல. புரட்சி சவடால் அடித்து வந்த சி.பி.எம். கட்சி, தனியார்மய தாராளமயத்துக்கு ஏற்பத் தன்னை மறுவார்ப்பு செய்து கொண்ட நாளிலிருந்தே  அதன் தோல்வியும் சீரழிவும் தீவிரமாகத் தொடங்கி விட்டன. ஈராண்டுகளுக்கு முன்பு நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே சி.பி.எம். கட்சியின் சரிவும் படுதோல்வியும் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கியது.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் நாடு தழுவிய அளவில் மொத்தம் 16 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெறமுடிந்தது. 1967இல் சி.பி.எம். கட்சி முதன் முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளை விட இது குறைவு. நாடாளுமன்றத்தில் 3ஆவது பெரிய ஓட்டுக் கட்சியாக இருந்த சி.பி.எம். 8ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. வாக்குகளின் எண்ணிக்கை சதவீதமும் குறைந்து, இதுவரை கண்டிராத மிக மோசமான தோல்வியை அக்கட்சி சந்தித்தது.

வங்கத்தின் போலி கம்யூனிச "சிங்கம்' ஜோதிபாசு காலத்திலேயே தனியார்மய தாராளமயத்தை ஆதரித்து, அந்நிய தனியார் முதலீடுகளை வரவேற்கும் இத்துரோகக் கொள்கை தொடங்கியது. 2001இல் புத்ததேவ் முதல்வரானதும் இக்கொள்கை தீவிரமாக்கப்பட்டது. "எங்கள் கொள்கைகளை நாங்கள் தலை கீழாக மாற்றிக் கொண்டுள்ளோம்' என்று வெட்கமின்றி அறிவித்துக் கொண்டு, தனியார்மயதாராளமயத்துக்குக் காவடி தூக்கினார் போலி கம்யூனிச முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இதற்கு முன் புரட்சிகர வாய்வீச்சுடன் செய்துவந்த மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கைகளை, எவ்வித ஒப்பனையும் இல்லாமல் அப்பட்டமாகவும் மூர்க்கமாகவும் திணித்தார், புத்ததேவ். கடையடைப்புப் போராட்டங்களுக்குத் தடைவிதிப்பதாக முதலாளிகள் முன்னிலையில் உறுதியளித்தார். நந்திகிராமத்தில் இரசாயன ஆலை தொடங்க இந்தோனேஷியாவில் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய இராணுவ சர்வாதிகாரி சுகார்டோவின் கூட்டாளியான சலீம் குழுமத்துடன் புத்ததேவ் ஒப்பந்தம் போட்டார். அது குறித்து விமர்சனங்கள் வந்தபோது, "மூலதனத்துக்கு நிறமில்லை, அதற்கு சித்தாந்தமுமில்லை' என்றுவாதிட்டார்.

21ஆம் நூற்றாண்டின் போலி கம்யூனிசத்துக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்தான் புத்ததேவ்.

காலிப் பெருங்காய டப்பாவாக இருந்த போலி கம்யூனிசத்தையும் துடைத்தொழித்து சமூக பாசிசக் கட்சியாகப் பரிணமிக்க வைத்தவர்தான் திருவாளர் புத்ததேவ். எனவேதான், சோசலிச சீனாவை முதலாளித்துவப் பாதையில் இழுத்துச் சென்ற சீனாவின் டெங்ஷியாவோ பிங் போல, "வங்கத்தின் டெங்' என்று புத்ததேவ் பாராட்டப்பட்டார். தவறான கட்சியிலுள்ள சரியான மனிதராக முதலாளித்துவவாதிகளால் துதிபாடப்பட்டார். விப்ரோ நிறுவனத்தின் அதிபர் அசிம் பிரேம்ஜி, நாட்டின் மிகச் சிறந்த முதலமைச்சர் என்று புத்ததேவைப் பாராட்டினார்.

இதர ஓட்டுக் கட்சி அரசுகளைப் போலவே, மாநிலத்தின் தொழில்வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களைப் பறித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவ, உள்நாட்டு  வெளிநாட்டு முதலாளிகளுக்கு கோடிகோடியாய் வரிப்பணத்தை வாரியிறைத்து பகற்கொள்ளைக்குப் பட்டுக் கம்பளம் விரித்தது, புத்ததேவ் தலைமையிலான "இடதுசாரி' அரசு. சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் லால்காரிலும் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களைப் பறித்த "இடதுசாரி' அரசு, அதை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது பயங்கரவாத வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டது. கட்சி அணிகளோ பாசிச குண்டர் படையாக வளர்த்தெடுக்கப்பட்டுப் போராடும் மக்கள் மீது வன்முறை கொலை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். இவையனைத்தும் மே.வங்க விவசாயிகள் சி.பி.எம். கட்சி மீது வைத்திருந்த அரைகுறையான நம்பிக்கையையும் முற்றாகப் பறித்து விட்டது. மே.வங்கத்தில் "இடதுசாரி முன்னணி'யின் முதலாவது அமைச்சரவையில் (1977-80) நிதியமைச்சராக இருந்தவரும் சி.பி.எம். கட்சியின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்துள்ளவருமான அசோக் மித்ரா, சிங்கூர் மற்றும் நந்திகிராமத்தில் போலீசும் சி.பி.எம். கட்சியின் குண்டர் படையும் நடத்திய பயங்கரவாதத்தை வெளிப்படையாகவே சாடுமளவுக்கு அக்கட்சி அறிவுத்துறையினரிடமும் அம்பலப்பட்டு தனிமைப்பட்டுப்போனது.

மறுபுறம், சி.பி.எம். இன் உள்ளூர் தலைவர்களான அனுஜ் பாண்டே போன்ற சிவப்பு ஜமீன்தார்களே கட்சி மற்றும் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு, ஊழலில் ஊறித் திளைத்து மக்களிடம் அதிகாரத் திமிருடன் நடந்து கொண்டனர். மாநிலமெங்கும் ரேஷன் கடை ஊழலுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களும், சி.பி.எம். தலைவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டதும் சி.பி.எம். மீது மக்கள் கொண்டிருந்த வெறுப்பையும் குமுறலையும்

வெளிச்சம் போட்டுக் காட்டின. தேசிய ஊரக வேலை உத்திரவாதத் திட்டம் போன்ற கவர்ச்சிவாதத் திட்டங்களோ, பெயரளவிலான சமூகநலத் திட்டங்களோ கூடசெயல்படுத்தப்படாமல் அம்மாநிலத்தில் முடங்கிக்கிடந்தன. சிறுபான்மை முஸ்லிம்கள் மே.வங்கத்தில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக சச்சார் கமிட்டி சுட்டிக்காட்டிய பின்னரும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், முஸ்லிம்கள் சி.பி.எம். கட்சி மீது அதிருப்தியில் இருந்தனர். கடந்த 2008ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் போதே, மக்களின் அதிருப்தி வெளிப்பட்டது.

நிலச் சீர்திருத்தம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மே.வங்கம், நாடு முழுவதுமான விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. விவசாயிகளுக்கு நிலத்தை வழங்கியிருப்பதாகக் கூறிக் கொள்ளும் சி.பி.எம். அரசு, மறுபுறம் விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்காக ஒரு சட்டத்தை இயற்றி பன்னாட்டு நிறுவனங்கள் ஒப்பந்த விவசாயத்தில் ஈடுபடவும், தனியார் விவசாயக் கிடங்குகள் அமைத்துக் கொள்ளவும் அனுமதியளித்தது. பிற மாநிலங்களில் இதர முதலாளித்துவக் கட்சிகள் மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதுபோலத்தான், புரட்சி சவடால் அடிக்கும் சி.பி.எம். கட்சியும் மே.வங்கத்தில் செயல்படுத்தியது. அரசு தானியக் கிடங்குகள் புறக்கணிக்கப்பட்டதால், விவசாயிகள் நிர்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டனர். பெப்சியின் லேய்ஸ் சிப்ஸ் தயாரிப்புக்காக அரசின் சேமிப்புக் கிடங்குகள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்து அண்மையில் ஹ_க்ளி மாவட்ட உருளை விவசாயிகள் நடத்திய போராட்டமே இதை நிரூபிக்கப் போதுமானது.

தெற்கு கொல்கத்தாவிலுள்ள அரசு காசநோய் மருத்துவமனையைத் தனியாருக்குத் தாரை வார்த்தது உள்ளிட்டு மருத்துவம், கல்வி முதலான அனைத்திலும் அரசுத் துறைகள் புறக்கணிப்பட்டு தனியார்மய நடவடிக்கைகள் தீவிரமானதால், ஆட்சிக்கு எதிரான மனநிலையில்தான் மக்கள் இருந்தனர்.சிங்கூர் மற்றும் நந்திகிராமப் போராட்டங்களுக்குப் பெயரளவில் ஆதரவு தெரிவித்து சி.பி.எம். அட்டூழியங்களை அம்பலப்படுத்தியதால், திருணாமுல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜியை மாற்றாக கருதி மக்கள் வாக்களித்துள்ளனர்.

சி.பி.எம். கட்சியின் மிக முக்கிய அடிப்படை பலமாக இருந்தது, அதன் தொழிற்சங்கங்கள். சி.பி.எம். அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக நின்றதால், தொழிற்சங்கப் போராட்டங்களுக்கு எதிராக இருப்பதால், அதன் தொழிற்சங்கங்கள் இன்று செயலிழந்து விட்டன. வெறும் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களோடு வரம்பிட்டுக் கொண்டதால், அத்தகைய சங்கங்கள் இன்று திரிணாமுல் காங்கிரசுக்குத் தாவி விட்டன. தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் அரசியல்படுத்தாமல் வெறும் பொருளாதாரவாதக் கோரிக்கைகளுக்காகத் திரட்டி, அதனூடாக வாக்கு வங்கியை கட்டமைத்த சி.பி.எம். இன் உத்தி இப்போது அதற்கே எதிரானதாகத் திரும்பிவிட்டது. இன்று அக்கட்சியில் இருக்கும் உறுப்பினர்களில் 90 சதவீதம் பேர் "இடது முன்னணி' ஆட்சிக்கு வந்தபின் கட்சிக்கு வந்தவர்கள். இவர்களைப் பொறுத்தவரை புரட்சிக்கான அர்ப்பணிப்பும் சோசலிசமும் வெறும் கதையாடல்கள் மட்டுமே. பெறுவதற்காகத்தான் இவர்கள் கட்சிக்கு வருகிறார்களே தவிர, இழப்பதற்காக அல்ல. இத்தகைய பிழைப்புவாதமும் துதிபாடிகளின் கூட்டமும் தான் இன்று கட்சியின் அணிகளாகிவிட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக, காங்கிரசு  பா.ஜ.க.வுக்கு மாற்று என்ற பெயரில், நேற்றுவரை பா.ஜ.க.வுடனும் காங்கிரசுடனும் கூடிக் குலாவிய ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு போன்ற கடைந்தெடுத்த பாசிஸ்டுகளுடன் கூட்டணி கட்டிக் கொண்ட சி.பி.எம். கட்சியின் பச்சையான சந்தர்ப்பவாதம் நாடெங்கும் நாறிப்போயுள்ளது.

சி.பி.எம்.இன் கோட்டையாகச் சித்தரிக்கப்பட்ட மே.வங்கப் பெருந்தோல்வியிலிருந்து படிப்பினைகளைப் பெறக் கூட அக்கட்சித் தலைமை தயாராக இல்லை. சி.பி.எம். கட்சி வழக்கமாக பெற்றுவரும் வாக்குகளில் ஒருசில சதவீதமே குறைந்துள்ளது என்றும், மற்றபடி கட்சியின் அடிப்படை வாக்கு வங்கி அப்படியே நீடிப்பதாகவும் பூசி மெழுகுகிறார், செயலாளர் காரத். தோல்விக்குப் பொறுப்பேற்று பொதுச்செயலர் பதவியிலிருந்து பிரகாஷ் காரத் விலகுவார், அதுபோல புத்ததேவ் பட்டாச்சார்யாவும் விலகுவார் என்றெல்லாம் ஊகங்களை ஊடகங்கள் வெளியிட்டன. ஆனால், அப்படிச் செய்தால் கோஷ்டிப் பூசல் இன்னும் தீவிரமாகி கட்சியே கலகலத்துப் போய்விடும் என்பதால், உன்னைச் சொல்லிக் குற்றமில்லை, என்னைச் சொல்லி குற்றமில்லை என்று எந்தத் தரப்பும் அடுத்தவர் மீது பழி போடாமல், ஒன்றையொன்று அனுசரித்துப் போவது என்று தீர்மானித்துள்ளதால் கட்சித் தலைமையில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

சிங்கூரில் டாடாவுக்காக நிலங்கள் பறிக்கப்பட்டபோது விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து சவடால் அடித்த மம்தா, இப்போது பதவியைப் பிடித்ததும் தமது கட்சி மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு எந்த வகையிலும் இடையூறாக இருக்காது என்கிறார். தமிழகத்தில் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மாறிமாறி ஆட்சிக்கு வருவதைப் போல, இனி மே.வங்கத்திலும் நடக்கலாம். நாய்களுக்குப் பதில் நரிகள் நாட்டாமை செய்யலாம். ஏனெனில், அடிப்படையில் மறுகாலனியக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துவதில் சி.பி.எம். கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் கொடியைத் தவிர இதர வேறுபாடு ஏதுமில்லை.

இப்படுதோல்வியிலிருந்து சி.பி.எம். மீண்டுவிடமுடியுமா? மக்களின் நம்பிக்கையைப் பெற்று மீண்டும் தேர்தல் வெற்றியையும் பழைய நிலையையும் அக்கட்சி தக்கவைத்துக் கொள்ள முடியுமா? ஒருக்காலும் சாத்தியமில்லை. ஏனெனில், தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் ஆளும் வர்க்கங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்கைகளுக்கு எதிரான மாற்றுக் கொள்கைகளோ திட்டங்களோ சி.பி.எம். கட்சியிடம் இல்லை. இதுவும் போதாதென்று இதர ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போல சி.பி.எம். கட்சியும் கோடீசுவரக் கட்சியாக மாறியிருப்பதோடு, பாசிச குண்டர் படையையும் கட்டியமைத்துள்ளது. இனியும் இக்கட்சி உழைக்கும் மக்களுக்காகப் போராடும் என்று நம்புவதற்கு அடிப்படையே இல்லை. புதைந்து கொண்டிருக்கும் சி.பி.எம். கட்சியை புரட்சியை நேசிக்கும் உழைக்கும் மக்கள் இனி நம்பி ஏமாறுவதற்கும் தயாரில்லை.

குமார்