09222023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

கொலைவாளினை எடு! கொடியோர் செயல் அறு!! – தனியார் பள்ளிகளின் கொள்ளைக்கு எதிரான போர்!

தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ள மனித உரிமைப் பாதுகாப்பு மையம் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்துடன் இணைந்து கடந்த 24.5.2011 அன்று விருத்தாசலத்தில் "இலவசக் கல்வி உரிமை மாநாடு' நடத்தியது.

 

 

"தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைப் போராடி நிறுத்துவோம்! அனைவருக்கும் இலவசக் கல்வியை நிலைநாட்டுவோம்!' என்ற மைய முழக்கத்துடன், மாணவர்களும் பெற்றோரும் கல்வியாளர்களும் பங்கேற்ற இம்மாநாட்டில், மூத்த கல்வியாளரும்  சமச்சீர் கல்விக்கமிட்டி உறுப்பினருமான தோழர் ச.சீ. இராசகோபாலன், "இலவச லேப்டாப் வழங்கும் அரசுக்கு இலவசக் கல்வி தர இயலாதா?' என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினார். "தனியார்மயக் கொள்கைதான் அரசின் கொள்கை' என்ற தலைப்பில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்குரைஞர் ராஜு, "கட்டணக் கொள்ளையைப் போராடி நிறுத்துவோம்!' என்ற தலைப்பில் பு.மா.இ.மு.  அமைப்பாளர் தோழர் கணேசன், "அனைவருக்கும் இலவசக் கல்வியை நிலைநாட்டுவோம்!' என்ற தலைப்பில் உயர்நீதிமன்ற  வழக்குரைஞர் மீனாட்சி ஆகியோர் உரையாற்றினர்.

இம்மாநாட்டில், "நீதிபதி கோவிந்  தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்துக்கும் கூடுதலாக வசூலித்த கட்டணத்தை இவ்வாண்டு  கல்விக் கட்டணத்தில் கழித்துக் கொள்ளவும்,  கூடுதல் கட்டணம் கேட்டு துன்புறுத்தும் பள்ளிகள் மீது உடனே நடவடிக்கை எடுக்கவும் வேண்டும். கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன்படி, அனைத்துத் தனியார் பள்ளிகளிலும்

ஏழை மாணவர்களுக்கு எல்.கே.ஜி., யு.கே.ஜி.மற்றும் முதல் வகுப்பில் இலவச 25 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தாத தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான சரத்து 21எ இன்படி 6 முதல் 14 வயது வரை அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பதை நடைமுறைப்படுத்த இந்த ஆண்டே சட்டம் இயற்ற வேண்டும். தனியார் பள்ளி முதலாளிகளுக்கு கொள்ளை இலாபத்தை உத்திரவாதம் செய்வதற்காகவே நியமிக்கப்பட்ட நீதிபதி ரவிராஜ் பாண்டியன் கமிட்டியைக் கலைக்க அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழக அரசு இவ்வாண்டு கல்விக் கட்டணம் அறிவிக்காத நிலையில், கோவை பெர்க்ஸ் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு துன்புறுத்தியதால், தீக்குளித்து உயிரிழந்த சங்கீதா மரணத்துக்குக் காரணமான பள்ளி முதலாளியைக் கைது செய்து, அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். சங்கீதா குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் யுகேஜி படிக்கும் அவரது மகனது கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்க வேண்டும். தமிழக அரசின் சமச்சீர் கல்விச் சட்டத்தை உச்ச நீதிமன்றம் சரியானது என்று தீர்ப்பு வழங்கியுள்ள  நிலையில், கொள்ளை இலாப தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகளுக்கு ஆதரவாக சமச்சீர் பாடத் திட்டத்தை நிறுத்தி வைத்து பழைய பாடத்திட்டமே செல்லும் என்ற தமிழக அமைச்சரவையின் முடிவை ரத்து செய்து இவ் வாண்டே சமச்சீர் கல்வியை அமுல்படுத்திட வேண்டும். தாய்மொழிக் கல்வியையும் அரசுப் பள்ளிகளையும் ஆதரித்து, கல்வி வியாபாரிகளின் தனியார் பள்ளிகளையும் ஆங்கிலவழிக் கல்வியையும் பெற்றோர்கள் புறக்கணிக்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் ஒரே தரமான கல்வியை அரசு பொறுப்பில் இலவசமாக வழங்குவதற்குத் தடையாக உள்ள தனி யார்மயக் கொள்கையை எதிர்த்துப் போராட பெற்றோர்களும் மாணவர்களும் முன்வரவேண்டும்'  என பலத்த கரவொலிக்கிடையே தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கிப் பிரச்சாரம் செய்துவரும் மனித உரிமை பாதுகாப்பு மையம், கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி, இவ்வட்டாரத்திலுள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச 25 சதவீத இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரி மனு கொடுத்து வலியுறுத்தியது. தனியார் கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளைக்காக ரத்து செய்யப்பட்டுள்ள சமச்சீர் கல்வியை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கோரி கடந்த 31.5.2011 அன்று மாவட்டக் கல்வி அலுவலகம் அருகே முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தியது. தனியார் பள்ளி முதலாளிகளின் பகற்கொள்ளையால் பதறிப் போய் நிற்கும் சாமானிய மக்களிடம், இம்மாநாடும் போராட்டமும் புதிய நம்பிக்கையை விதைத்து, தனியார்மயக் கொள்ளைக்கு எதிராகப் போராட அறைகூவுவதாக அமைந்தன.

தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,

தற்கொலையல்ல கொலை – சங்கீதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு நடந்த ஆர்ப்பாட்டம்

கோவை மசக்காளிபாளையத்தைச் சேர்ந்த பட்டதாரியான சங்கீதா, பெர்க்ஸ் மேல்நிலைப் பள்ளியில் யு.கே.ஜி. படிக்கும் தனது மகனுக்கு ரூ.12,000 கட்டணம் செலுத்த வழியில்லாமல் விரக்தியடைந்து, தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீயிட்டு மாண்டு போயுள்ள கொடூரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இப்பள்ளிக்கு நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணம் ரூ. 3558 தான். ஆனால், பெர்க்ஸ் பள்ளி நிர்வாகம், இக்கமிட்டி நிர்ணயித்த தொகையை விட 3 மடங்கு அதிகமான தொகையைக் கேட்டு பெற்றோரிடம் அடாவடி செய்துள்ளது. சங்கீதாவின் மரணத்துக்குக் காரணமான, இச்சட்டவிரோதக் கொள்ளையர்கள் மீது வழக்கோ, விசாரணையோ நடத்தப்படவில்லை. கூடுதல் கட்டணம் வசூலித்த அட்டூழியத்துக்காக இப்பள்ளி மீது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்திய அரசியல் சட்டத்தின்படி, கல்வி பெறும் அடிப்படை உரிமை இன்றைய தனியார்மயச் சூழலில் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருவதற்கு இரத்த சாட்சியம்தான், சங்கீதாவின் மரணம்!

சங்கீதாவைத் தற்கொலைக்குத் தூண்டிய பெர்க்ஸ் பள்ளி முதலாளியைக் கைது செய்து, அப்பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்து அரசுப் பள்ளியாக்கக் கோரியும், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் கோவை முழுவதும் துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்ட மனித உரிமைப் பாதுகாப்பு மையம், அதன் தொடர்ச்சியாக 20.5.2011 அன்று கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பல்வேறு ஜனநாயக இயக்கத்தினரும், தோழமை அமைப்பினரும் உழைக்கும் மக்களும் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டம், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக மக்களை விழிப்புறச் செய்து, போராட அறைகூவுவதாக அமைந்தது. தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கோவை