Language Selection

புதிய கலாச்சாரம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 

ஒரு நாலு புத்தக அட்டை தயாரிக்கவே என்னவாறு வடிவமைக்கலாம் என்று நாம் திணறிப் போகிறோம். ஆனால், அங்கு குவிந்திருந்த ஒவ்வொரு புத்தக அட்டையும் மனித முகங்களைப் போல வௌ;வேறு அழகாய் விளங்கின. முக்கியமாக அவைகளில் அழகின் மிரட்சியின்றி தொழில்நுட்பத்தின் தேர்ச்சியோடு மனித அழகியலின் உணர்ச்சியும், ஈர்ப்பும் வண்ணங்களாக நெருக்கம் காட்டின.

குறிப்பாக, வெளிர்பச்சை, இலைப்பச்சை, ஒருவித மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் அன்று நான் பார்த்த 'தாய்' நாவலின் அழகும் கட்டமைப்பும் வடிவமைப்பும் அடுத்தடுத்த அதன் மறுபதிப்புகளில் பார்க்க முடியாத ஒன்று. குழந்தைகள் கையில் புத்தகம் கிடைத்தால் எப்படி சுவைத்துப் பார்த்து, தீண்டிப் பார்த்து, விரித்துப் பார்க்குமோ அப்படியொரு மனநிலையில் நூல்களைத் தழுவி அலசிப் பார்த்தேன் நான்.

நம் நாட்டு அனுபவத்தில் ஆங்கில நூல் உசத்தியா கவும்,  தமிழ்  நூல் தரம் குறைந்தும் தயாரிக்கப்படுமோ என்ற எண்ணத்தோடு ஒரு ஆங்கில நூலையும் ஒரு தமிழ் நூலையும் எடுத்து எனது முட்டாள்தனத்தை முகர்ந்து பார்த்தேன். இரண்டு தாள்களிலும் ஒரே வாசம் தான். இரண்டைக் கிள்ளினாலும் அதே உணர்ச்சிதான். 'பார்ப்பானுக்குப் பூணூல், உழைப்பவருக்கு அரைஞாண்கயிறு' என்று பழக்கப்பட்ட நாட்டில், சோவியத் தயாரித்த எல்லா நூல்களும் ஒரே நூலாக அதாவது ஒரே தரமாக இருந்ததே எனக்கு மகிழ்ச்சியும் வியப்பையும் கொடுத்தது.

நூல்களின் தலைப்பையும் பொருளடக்கத்தையும் பார்த்து வியந்துபோன கூட வந்த நண்பர், 'அப்பா, பிரம்மாண்ட உழைப்புங்க... இவ்வளவு விசயம் வெளிய தெரியாம கெடக்கு பாருங்க...' என்று நெகிழ்ந்து போனார். ஆம், உண்மைதான். உலகெங்கும் மனித அழிவுக்கு ஆயுதம் கொடுக்கும் அமெரிக்காவைப் பீற்றித் திரியும் அறிவாளிகள் உலகத்தில், மனித அழகுக்கு உலகெங்கும் அறிவைக் கொடுத்த சோவியத் ரசியாவின் உன்னத பங்களிப்பைப் பற்றிப் பேசுவது கிடையாது.

அனைவருக்கும் கல்வியறிவு மறுக்கப்பட்ட கேடுகெட்ட பார்ப்பன இந்து மதம் கோலோச்சும் நம் நாட்டில், அனைவருக்கும் சமூக அறிவையும், அரசியல் அறிவையும் வாரி வழங்கிய மாஸ்கோ நூல்கள் உலக முதலாளித்து வத்தால் இறுக்கிக் கட்டப்பட்ட நம் விழிகளின் திரைகளை அவிழ்த்துவிட்டன என்பது எவ்வளவு நன்றியோடு நினைக்கப்பட வேண்டிய விசயம்...!

அன்றைய காலகட்டத்தில் தமிழக மெங்கும் நடமாடும் புத்தகக் காட்சி வடிவில் இதனைக் கொண்டு சென்ற நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரும் நினைக்கப்பட வேண்டியவர்கள். "சோவியத் ரசியா என்றால் வெறும் கம்யூனிசத்தைப் பிரச்சாரம் செய்யும் நூல்கள்தான்' என்று சில குருட்டுப்பூனைகள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பதை அங்கு எண்ணிறந்த தலைப்புகளில் இறைந்து கிடந்த பல்துறை நூல்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது.

முக்கியமாக, "அனைவருக்குமான' என்ற தலைப்பில் உடல் இயங்கியல், வேதியியல், விலங்கியல், கணிதவியல்... என்ற வரிசையிலான நூல்கள் கம்யூனிசத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பொது அறிவையும் சமூக அறிவையும் வளர்ப்பதில் பெரும்பங்காற்றும் அரிய நூல்களாகும்.

சங்கம் வைத்து ஆண்ட மன்னர்களாயிருக்கட்டும், சட்டசபை வைத்து ஆளும் தமிழாய்ந்த தமிழர்களாயிருக்கட்டும்... இல்லை மாவட்டத்துக்கு மாவட்டம் அறிவைப் புதைக்கும் சுடுகாடாய் விளங்கும் இத்தனைப் பல்கலைக்கழகங்களாய் இருக்கட்டும், இவற்றில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு ஆறுகால் நாற்காலிகளாய் அலையும் ஆராய்ச்சியாளர்களாக இருக்கட்டும்... இவர்களால் தமிழில் தரமுடியாத பல்வேறு இயற்கை மற்றும் உலகக் கண்ணோட்டமுள்ள பல நூல்களை மாஸ்கோ பதிப்பகம் அழகுத் தமிழில் அச்சிட்டுக் கொடுத்திருந்தது.

"மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவனானான்', "நான் ஏன் தந்தையைப் போல இருக்கிறேன்', "பூமி எனும்கோள்', "பொழுதுபோக்கு பௌதிகம்' என்று பல நூல்களைப் பார்க்கையில், இப்படிப்பட்ட நூல்களை எழுதித் தயாரிக்கவில்லையென்றாலும் இங்குள்ள பாடநூல் குழுவினர் இவைகளையெல்லாம் பாடநூல்களாக வைப்பதற்கு என்ன கேடு வந்தது! வைத்தால் நம் அருமைப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு அதுவும் தாய்மொழியில் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கும் என்று இங்குள்ள எருமைகளின் மீது ஆத்திரம்தான் வருகிறது.

அறிவியல் நூல்கள் மட்டுமல்ல, உலகக் கண்ணோட்டமுள்ள இலக்கிய விமர்சனங்கள், நாவல்கள், கார்க்கி, லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செகவ், மிகைல் சோலகேவ் போன்றோரின் குறிப்பிடத்தகுந்த கதைகள் மட்டுமல்ல ஓஸ்த்ரோவ்ஸ்க்கி, பரிஸ் வசிலியெவ், ஜான் ரீட் போன்ற செயற்களத்தின் போராளிகளையும் படைப்பாளிகளாக உலகுக்குக் காட்டி உத்வேகமளித்தவை மாஸ்கோ நூல்கள்.

இன்று அக்கிரகாரத்து கழுதையாகவும், அமெரிக்க கைடாகவும் விளங்கும் ஜெயகாந்தன் கூட ருஷ்யப் புரட்சி சித்திரக்கதையின் மொழிபெயர்ப்பில் அசத்தியிருப்பார். "போயசு தோட்டமே நல்ல ஆள்' என்று போய்க் கிடக்கும் தா.பாண்டியன்தான் "நிலம் என்னும் நல்லாள்' நூலின் மொழியாக்கம் என்றால் உங்களால் நம்ப முடியுமா? இப்படி தமிழகத்தில் பலரிடமும் உள்ள படைப்பாற்றலையும், மனிதக் கூறையும் வெளிக்கொணர்ந்தவை மாஸ்கோ நூல்கள். ரா.கிருஷ்ணையா போன்ற எண்ணிறந்த மொழியாக்கப் படைப்பாளிகளை அடையாளம் காட்டியவையும் மாஸ்கோ நூல்கள்தான்.

சொல்ல பல இருந்தும் சுருக்கமாக இவைகளை நினைவு கூறும்படி சமீபத்தில் மீண்டும் நியூ செஞ்சுரி குடோனுக்கு சென்று மாஸ்கோ நூல்களை காணும்படி நேர்ந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த காட்சி இப்போது இல்லை. விசாலமான இடத்திலிருந்து மெல்ல மெல்ல கழிக்கப்பட்ட மாஸ்கோ நூல்களின் மிச்ச சொச்சம் அந்த வளாகத்தின் கடைசி தட்டுமுட்டு சாமான்கள் போடப்படும் ஒரு தரமற்ற அறைக்குள் மூச்சு திணறும்படி கொட்டிக் கிடந்ததைப் பார்த்து நெஞ்சம் புழுங்கியது.

ஏறத்தாழ கவனிப்பாரின்றி கைவிடப்பட்டு குப்பை மேடாக அந்த நூல்கள் கொட்டிக் கிடந்தும் அதன் கெட்டி அட்டைகள், தாள்களை இறுகப்பிடித்துக் கிடந்தது. சும்மா இல்லை, சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான சோசலிச உழைப்பின் அடையாளம் அது.

வெறும் தொழிலுக்காக இந்த வேலையில் ஈடுபடுபவர்களால் இப்படி ஒரு பொறுப்புணர்ச்சியுடன் கூடிய நூல் தயாரிப்பை செய்ய முடியாது. ஒரு நூல், அது 1974ல் அச்சிடப்பட்டிருக்கிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நூலின் முதுகில் இருக்கும் கம்பி துருவேறாமல், திசை விலகாமல் 'கூலியுழைப்பும் மூலதனமும்' என்ற மார்க்சின் படைப்பை மதிப்புடன் பாதுகாத்து வைத்திருக்கிறது. திசை விலகிய நிறுவனமும் இதன் மதிப்பறியாமல் குப்பையாக கொட்டியிருக்கிறது.

இத்தனை அலட்சியங்களுக்குப் பிறகும் மாஸ்கோ நூல்களின் வண்ணங்களோ, தாள்களின் தன்மையோ சீர்குலையாமல் இருப்பதைப் பார்க்கையில் எத்தனைப் பாட்டாளி வர்க்கக் கரங்களின் விருப்பார்வத்துடனும், முன்முயற்சியுடனும் இந்த நூல்கள் உலகுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற உணர்ச்சி நெஞ்சில் நிறைகிறது.

நான் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கே காவலாளியாய் குடியிருக்கும் நேபாளி ஒருவரின் நான்கு வயது குழந்தை லெனினின் "சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி' என்ற நூலை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, பறிப்பவர்களிடம் தரமாட்டேன் என்று பிடிவாதமாக நூலை இழுத்து தனது வெற்றுடலின் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். புரியாத மனங்களுக்கு குழந்தையின் குறிப்பு அது.

•  சுடர்விழி