கொளுத்திப் போடுகிறார்கள். யாராவது கேட்டால், தீக்கதிர் கட்சிப் பத்திரிகை இல்லை தோழர், வெகுமக்கள் பத்திரிக்கை என்று விளக்கம் வேறு. மக்கள் பத்திரிக்கை என்றால் மட்டமான வேலை செய்யலாம் என்று எந்த மார்க்சியத்தில் உள்ளதோ, அந்த மார்க்சிஸ்டுகளுக்கே வெளிச்சம்!
தீபாவளி பண்டு போட்டு முதலாளித்துவத்திற்கு எதிராக ராக்கெட், சங்கு சக்கரம், ஆட்டோபாம் என ஆயுதம் தாங்கிய தனது முன்னணிப் படையை ஏவி விடுகிறது தீக்கதிர். ""தீயின் பயன்பாட்டைக் கண்டறிந்தது மனித நாகரிகத்தின் மைல் கல்லாகும். தீயை தீபமாக்கி வணங்குவதும், வழிபடுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து வருகிறது'' என்று பார்ப்பன மதப் பண்டிகைக்கு புதுவிளக்கம் கூறுகிறது. இடையிடையே உலகமயம், குழந்தை உழைப்பு என்று இந்த விளக்குமாத்துக்கு ரெண்டு பட்டுக் குஞ்சம் வேறு.
தீயை என்ன, இயற்கையின் விளைவுகளைப் புரிந்து கொள்ள இயலாத ஆதிகால மனிதன் பீயைக் கூடத்தான் வணங்கியிருக்கலாம். அதற்காக அதை வளர்த்தெடுக்க முடியுமா? அதுவா பொறுப்புள்ள முற்போக்காளரின் வேலை?
அறிவின் துணைகொண்டு இயற்கையைப் புரிந்து கொள்ள மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதும் மடமைகளுக்கு எதிராகப் போராட உதவி செய்து மக்களுக்கு முன்னே செல்பவன்தான் கம்யூனிஸ்டு. மக்களுக்குப் பின்னே செல்வதல்ல மார்க்சியம். மாட்டுச் சாணியில் பிள்ளையார் பிடித்துக் கூடத்தான் மக்கள் வழிபடுகிறார்கள்! இதைத் திருத்துவது மார்க்சியமா, இல்லை, "மக்களை முன்னிட்டு நாமும் 30 பிடிக்கலாம்' என்பதா? மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்பதால் ""இந்த மகிழ்ச்சியில் தீக்கதிரும் தன்னை இணைத்துக் கொள்வதாய்'' விளக்கம் வேறு. மகாமகத்தில் கூடத்தான் இலட்சக்கணக்கான மக்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார்கள். மார்க்சிஸ்டுகளும் போய் மாமாங்கக் குளத்தில் இறங்கி விடுவார்களோ! அதிலும் கூட ஒரு விழாக் குழு போட்டு விளம்பரம் வாங்க தீக்கதிர் தயங்காது.
மற்ற மதங்களைப் போல அல்ல பார்ப்பனியம். தனது ஆதிக்கத்திற்குப் பணிய மறுத்தவர்களைப் படுகொலை செய்ததையே விழாவாக மாற்றிய வெறித்தனத்தில் ஒன்றுதான் தீபாவளி. மக்கள் அந்தக் கதைப்படி கொண்டாடுவதில்லை, நாமும் கதையை மாற்றிக் கொள்வோம் என்கிறது தீக்கதிர். இதன்படி, பார்ப்பன மதப் பண்டிகைகளைத் தோலுரித்து மதஉணர்வை விரட்டுவதற்குப் பதில் வேறு விளக்கம் கொடுத்தால் போதும் என்கிறது தீக்கதிர். அதாவது, தீபாவளியை தீயின் பயன்பாடாகக் கொண்டாடலாம்; கோகுலாஷ்டமிக்கு கிருஷ்ணன் பாதம் வரைந்து "தொழிலாளி வர்க்க பாதம்' என்று கொண்டாடலாம்; மார்க்சிய கொலு வைக்கலாம்; "பாட்டாளி வர்க்க' கொழுக்கட்டை செய்து விநாயகர் சதுர்த்தியை வேறு விழாவாக்கலாம். பார்ப்பன மத உணர்வுக்கு இப்படியெல்லாம் கூட தத்துவவிசாரம் செய்ய முடியுமா என்று காஞ்சிமடத்து அம்பிகளே மூக்கின்மேல் தீக்கதிரை வைக்கிறார்கள். பச்சையாகச் சொன்னால் நரகலுக்கு வேறு பெயர் வைத்தால் நாறாது என்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
இதை ஏதோ கேலிக்குரிய விசயமாக மட்டும் ஒதுக்கிவிட முடியாது. வரலாற்று ரீதியாக மத உணர்வுகளுக்கும், மடமைகளுக்கும் எதிராக சளைக்காமல் போராடிய முற்போக்கு மனிதகுல கம்யூனிச பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் செயலாகும். கோட்பாட்டு ரீதியாகச் சொன்னால் கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் மார்க்ஸ{ம், ஏங்கெல்ஸ{ம் ""பிரபுத்துவக் கோமானுடைய மனப்புகைச்சலைப் புனிதம் பெறச்செய்வதற்காக சமயகுரு தெளித்திடும் புனிதத் தீர்த்தமே கிறித்தவ சோசலிசம்'' என்றதைப் போல் பார்ப்பன மனப்புகைச்சலுக்கு மார்க்சிஸ்டு அம்பிகள் தெளித்திடும் புனிதத் தீர்த்தமே தீக்கதிர் தீபாவளி மலர்.
தீபாவளிக்குப் புதுக்கதை விட்டாலும், தீக்கதிரும் வியாபாரிகளைப் போல பண்டிகையைத் தூண்டிவிட்டு கல்லா கட்டும் வேலையில் கச்சிதமாக உள்ளது. 88 பக்க மலரில் 45 பக்கம் விளம்பரம். அதுவும் ஆர்.எஸ்.எஸ். ஸ_க்கும் படியளக்கும் அருட்செல்வர் பொள்ளாச்சி மகாலிங்கம் புகழ்பாடும் கட்டுரை முதல் அந்நிய ஏகாதிபத்தியங்களிடம் காசு வாங்கும் அரை டஜன் தொண்டு நிறுவனங்களின் "களப்பணிகள்' வரை மலருக்கு நாற்றம் சேர்க்கின்றன. "எல்லோருக்கும்' என்ற பாப்புலர் அப்பளத்தின் சோசலிச முழக்கம், பட்டுச்சேலை, நகைக்கடை விளம்பரங்கள் என பன்முகத் தன்மையுடன் பாட்டாளி வர்க்க உணர்வுக்குப் "புடம்' போடுகிறது மலர். நச்சரிக்கும் கட்சிக் கவிஞர்களை என்ன செய்வது? தூக்கிப் போடு தீபாவளிமலரில் என்று கவிதைகளும் தன்பங்குக்கு தீபாவளி மலரில் முற்போக்கைக் கொளுத்திப் போடுகிறது. இடையிடையே நடிகை ரகசியா, விஜய்யின் முற்போக்கு முத்துக்கள். பின்னே, இலக்கிய மலராயிற்றே?
""கோழி வளர்த்தால் குபேரனாகலாம்; முயல் வளர்த்தால் முதலாளி ஆகலாம்'' என்று பாட்டாளி வர்க்கத்துக்கான அரவிந்த் ஃபார்ம்மின் விளம்பரமும் உண்டு. பேசாமல் இப்படி முதலீடே இல்லாமல் முதலாளிகளைப் பிடித்தால் நீங்களும் மார்க்சிஸ்டு ஆகலாம். ஊருக்கு ஊர் உள்ளூரில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மக்களுக்காக ஜெயலலிதாவைக் கண்டித்துத் தட்டி வைக்கிறது ஜனநாயக வாலிபர் சங்கம். தீக்கதிர் தீபாவளி மலரோ பக்கத்திற்குப் பக்கம் ஊராட்சி அமைப்புகளின் சாதனைப்பட்டியலை விளம்பரமாகப் போட்டு ஜெயலலிதா படத்துடன் தட்டி வைத்திருக்கிறது. இந்த அநியாயத்தைக் கேட்க ஜனநாயக வாலிபர் சங்கத்தில் ஒரு தோழர் கூட இல்லையா? ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏ.பி.வி.பி.க்கு எதிராகப் போராடும் இந்திய மாணவர் சங்க தோழர்களே, தீக்கதிரில் ஆர்.எஸ்.எஸ். அருட்செல்வர் புகழ்பாடும் கேவலத்திற்கு என்ன செய்யப் போகிறீர்கள்? ""சமயம் ஒழுக்கநெறி ஆகிய அனைத்தையும் புதிய அடிப்படையில் அமைப்பதற்குப் பதில் அவற்றை ஒழித்துக் கட்டி விடுகிறது. ஆகவே கம்யூனிசம் கடந்தகால வரலாற்று அனுபவம் அனைத்துக்கும் முரணாய்ச் செயல்படுகிறது'' என்றார்கள் மார்க்சும் ஏங்கெல்சும். மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்தும் "மார்க்சிஸ்டுகளின்' தீக்கதிர் பார்ப்பன வேள்விக்குப் பலி கொடுக்கும் முன்பு உணர்வுள்ள தோழர்களே சிந்திப்பீர்!
பார்ப்பனவர்த்தகச் சூதாடிகளுக்கு மட்டுமல்ல இயங்கியல்; "பொருள்முதல்' வாதக் கண்ணோட்டத்தில் எங்களிடம் இசுலாமியருக்கும் சரக்கு உள்ளது என்று ரம்ஜான் சிறப்பு மலரையும் போட்டுள்ளது தீக்கதிர். அடுத்து "மாட்டுக் கொட்டாயில் பிறந்த அடித்தள மைந்தன்' ஏசுவுக்காக கிறிஸ்துமஸ் மலரும் வரலாம். இது என்ன மதச்சார்பற்ற தன்மை என்று தொணதொணக்கும் தொழிலாளி வர்க்க தோழர்களே "மே தின மலர்' உங்களுக்கும் உண்டு.
பார்ப்பனப் பண்டிகையைப் போல நிறைய கட்டுக் கதையை அவிழ்த்துவிட முடியாததால், ரம்ஜானுக்கு வேறு மாதிரி விளக்கம் தருகிறது தீக்கதிர். ""விழா மனிதனுக்கு கணக்குப் போட கற்றுக் கொடுக்கிறது... பிறருக்கு உதவ பாடம் கற்பிக்கிறது'' என்று பக்கத்திற்குப் பக்கம் தனது வியாபாரக் கணக்கைப் போடுகிறது. ரப்பானி வைத்தியசாலை முதல் சப்பாணி பள்ளி வாசல்கள் வரை விளம்பரம் வாங்கி ஈகைப் பெருநாளை ஈத்துவக்கிறது தீக்கதிர். பார்ப்பனியத்திற்கு தீபம், அகர்வால் என பலகாரக் கடை விரித்தவர்கள் பாய்களுக்கு ஏத்த மாதிரி கடையை விரிக்கிறார்கள். ""ஈராக் போர்.. அமெரிக்க அநியாயம்'' என்று ஆளுக்கு ஏற்ற மாதிரி கட்டுரை. பக்கத்திற்குப் பக்கம் பிறையும், நட்சத்திரமும் பிரமாதமான லே அவுட்; தொழிலாளி வர்க்க அரசியல் மட்டும் அவுட்டு. ""ஒருவர் மூன்றாண்டுகளாக நிலத்தைப் பயிரிடாமல் வைத்திருந்தால் அந்நிலத்தின் மீது அவருக்கு எந்த உரிமையும் இல்லை'' என்ற நபி தோழர்களின் "முற்போக்கு' கருத்துக்கள் வேறு. பின்னே பக்கத்திற்கு பக்கம் அரிவாளும் சுத்தியலும் போட்டு பள்ளிவாசல் நிலங்களை உழைப்பவனுக்கே தரச் சொல்லி முத்துக்களை உதிர்த்தால் மலருக்கு ரம்ஜான் இனாம் யார் தருவார்? குறைந்தபட்சம் மதச்சீர்திருத்தத்தைப் பற்றிக் கூட எழுத உரிமையில்லையா? எழுதினால் ரப்பானி தீக்கதிர் மலரின் அச்சாணியை பிடுங்கி விடுவார்.
இதைவிடக் கேவலம் மலரில் ஒரு விளம்பரம் ""மஹா அஷ்டபந்தன நிலையம் வாழ்க்கை வெளிச்சம் பெற, தொழில், வீடு, வியாபாரம், சக்தி மோதிரங்கள், தீராத வியாதி, திருஷ்டி தோஷங்கள், திருமண தாவிஜ், ராஜ வசியமை, சொத்துச் சேகரிப்பு, ஸ்டார் வசதி, பதவி உயர்வு பெற, ஆடு மாடு அதிகம் பால் கறக்க... அனைத்துக்கும் தினசரி பார்க்கப்படும். க.ஆஞீ. இக்பால்'' என்று ஒரு விளம்பரம். இதையே ஒரு பக்கக் கட்டுரையாகவும் வெளியிட்டுள்ளது. அஷ்டபந்தனத்திடமிருந்து காசைக் கறப்பதற்கு இப்படியொரு கேடுகெட்ட மூடநம்பிக்கையைப் பரப்புவதுதான் தீக்கதிரின் மக்கள் சேவையா? இந்த லட்சணத்தில் மார்க்சிஸ்டுகள் "பெரியார் விழா, பெரியார் நாடகம்' நடத்துவது யாரை ஏமாற்ற? விளம்பரம் தோழர்! காசு கொடுத்தா போட்டுத்தான் ஆகணும் என்பவர்கள் நக்சல்பாரிகள் ஒரு விளம்பரம் கொடுத்தால் போடுவார்களா? உம்... அது தீவிரமாதமாயிற்றே... அத்வானியுடன் சேர்ந்து புத்ததேவ் பட்டாச்சாரியாவும் அல்லவா நக்சலைட்டுகளை ஒழிக்க பல்லைக் கடிக்கிறார். "ராஜவசிய மை' நக்சல்பாரிகளிடம் ஏது? மதவாதிகளுக்கே "மை' போட்டுக் காசு வாங்குவதில் மார்க்சிஸ்டுகள் கில்லாடிகள்.
எந்த மக்கள் வந்து தீபாவளிக்கும், ரம்ஜானுக்கும் மலர்போடச் சொல்லி தீக்கதிர் வாசலில் கண்ணைக் கசக்கினார்கள். மக்கள் மேல் பழியைப் போட்டு இப்படி மூடநம்பிக்கையைப் பரப்புவதற்குப் பெயர்தான் முற்போக்கா? பண்டிகைக் காலங்களில் கைராசியான ஸ்தாபனம் வாங்க என்று முதலாளிகள் அழைப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அந்த முதலாளிகளையே "நாங்க கைராசியான ஸ்தாபனம் வாங்க' என்று அழைக்கிறார்கள் மார்க்சிஸ்டுகள். அந்நிய முதலீடுகளையே அழைக்கும்போது பண்டிகை முதலீட்டிற்கு வெக்கமா என்ன?
இந்தப் போலி கம்யூனிஸ்டுகளிடம் போதிய எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே லெனின் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார். ""இந்தக் குட்டி முதலாளிகள் அல்லது மிதவாதப் படிப்பாளிகள் மதத்திற்கெதிரான போராட்டத்தைக் கண்டு பயந்து சாகிறார்கள். இது தனது கடமை என்பதை மறந்து விடுகிறர்கள். கடவுள் நம்பிக்கையுடன் சமரசப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் வர்க்கப் போராட்டத்தின் நலன்களால் வழிநடத்தப்படுவதில்லை; மாறாக, யார் நெஞ்சும் புண்பட்டு விடக்கூடாது. யாரையும் பயமுறுத்தி விரட்டிவிடக் கூடாது, வாழு, வாழவிடு எனும் ஞானவிதி... இத்யாதி.. இன்னபிற இழிவான மந்திரத்தைக் கூறுவது போன்ற அற்பத்தனமான எண்ணங்களால் வழிநடத்தப்படுகிறார்கள். இந்த நபர்களுக்கு மார்க்சியவாதிகள் இடமளித்து விடக் கூடாது'' (லெனின், மதத்தைப் பற்றி, நூல்.
பக். 4042, Nஇஆஏ வெளியீடு) என்று எச்சரித்தார். தீக்கதிரோ எப்படியாவது தீபாவளியிலும், ரம்ஜானிலும் பங்கெடுக்கச் சொல்லி நச்சரிக்கிறது. மேலும் முன்னேறி, கேரளாவில், தான் ஆட்சியிலிருக்கும் போது ஐயப்ப மகர ஜோதிக்கு கேரள மின்வாரியத்தைப் பயன்படுத்தி ஜோதி காட்டியவர்கள்தான் இந்த மார்க்சிஸ்டுகள்.
கம்யூனிசப் பாரம்பரியம் என்பது, பண்ணையார்களுக்கு எதிரான அறுவடை இயக்கம் மட்டுமல்ல் பார்ப்பனியத்துக்கு எதிரான, சாதி,மத, தீண்டாமைக்கும் எதிரான இயக்கம்தான். ""கீழ்மக்களாக நடத்தப்பட விரும்பாத பாட்டாளி வர்க்கமோ தனது உணவைக் காட்டிலும், தனது துணிவாற்றல், தனது தன்னம்பிக்கை, தனது பெருமிதம், தனது சுதந்திர உணர்வு ஆகியவற்றையே வேண்டுகிறது'' என்றார் கார்ல் மார்க்ஸ் (மதம் பற்றி மார்க்ஸ், ஆங்கில நூல் பக். 7475). புதிய மதத்தை உருவாக்கும் தத்துவவாதிகள் என்று டூரிங்கையும், பாயர்பாக்கையும் நாத்திகத் தன்மையற்ற பொருள்முதல்வாதத்திற்காகக் கண்டித்தார் ஏங்கெல்சு. ஆண்டைகளிடமும், ஏகாதிபத்தியங்களிடமும் விலைபோகாத மார்க்சியத்தை அதனை தத்துவமாக ஏற்றுக் கொண்டதாய் பெயர் வைத்துக் கொண்டுள்ள மார்க்சிஸ்டுகளின் தீக்கதிர் கேவலப்படுத்துகிறது.
""கட்சி என்ற முறையில் அமெரிக்காவை எதிர்க்கிறோம்; அரசு என்ற முறையில் அமெரிக்கஇந்திய கூட்டுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறோம்'' என்று ஏகாதிபத்திய எதிர்ப்பில் இரட்டை வேடம் போடுவது போலவே, பார்ப்பனிய எதிர்ப்பிலும் ""கட்சி என்ற முறையில் பெரியாருக்கு புகழாரம் சூட்டுகிறோம்; தீக்கதிர் என்ற முறையில் தீபாவளிக்கு மலர் போடுகிறோம்'' என்கிறார்கள் மார்க்சிஸ்டுகள்.
""கட்சி என்ற முறையில் மூடநம்பிக்கைக்கு எதிராகத் தொடை தட்டுவேன், (பார்ப்பன) மத உணர்வுக்கு தோழன் என்ற முறையில் தீபாவளிக்கு வடை தட்டுவேன்'' என்பவனை நேர்மையுள்ள கம்யூனிஸ்டாக நீங்கள் கருத முடியுமா? மக்கள் கொண்டாடுகிறார்கள் என்ற சாக்கில் மத உணர்வுக்குத் தீனிபோடும் தீக்கதிர் வேண்டுமானால் ரம்ஜான் பிரியாணிக்கு தம் கட்டலாம். மானமுள்ள தோழர்களே, நீங்கள் தம் கட்டத் தேவையில்லை. வெடித்துக் கிளம்புங்கள் திரிபுவாதத்திற்கு எதிராக!
சுடர்விழி