வஞ்சகமும் துரோகமும் பிழைப்புவாதமும் கோலோச்சுகின்ற இந்தச் சூழலில்தான் சஞ்சீவ் பட், என்றொரு குஜராத் போலீசு அதிகாரி மோடியை எதிர்த்து நிற்கிறார். அந்தக் குற்றத்துக்காக சிறை வைக்கப்பட்டிருக்கிறார். 2002 இல் கோத்ரா ரயில் பெட்டி எரிக்கப்பட்டவுடன், நடந்த உயர் போலீசு அதிகாரிகள் கூட்டத்தில், "இந்துக்கள் தங்களது கோபத்தை வெளியிடுவதைத் தடுக்காதீர்களென்று வெளிப்படையாகவே மோடி உத்தரவிட்டார்' என சி.பி.ஐ புலனாய்வுக் குழுவிடம் கூறினார் சஞ்சய் பட். அவரது சாட்சியத்தை சி.பி.ஐ அலட்சியப்படுத்தவே, இதனை உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாகவும் தாக்கல் செய்தார். அந்த அதிகாரிகள் கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொண்டதை உறுதிப்படுத்திய அவரது வாகன ஓட்டுனர் கே.டி.பந்த் என்பவரை மிரட்டி, " பொய் சாட்சி சொல்லுமாறு சஞ்சீவ் பட் தன்னை மிரட்டியதாக' மோடி அரசு புகார் எழுதி வாங்கியிருக்கிறது. அதன் அடிப்படையில் பொய் வழக்கு போட்டு, பட்டை தற்காலிகப் பணிநீக்கமும் செய்திருக்கிறது.
காங்கிரசு எம்.பி இஷான் ஜாப்ரி கொலை செய்யப்பட்ட குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கிலும் மோடியின் நேரடித் தொடர்பை நிறுவியிருக்கிறார் சஞ்சய் பட். அப்போது உளவுத்துறை துணை ஆணையராக இருந்த சஞ்சீவ் பட், "குல்பர்க் சொசைட்டி குடியிருப்பை கொலைக்கும்பல் சுற்றி வளைத்திருப்பது பற்றி மோடிக்கு நான் நேரடியாகத் தகவல் கொடுத்தும் மோடி நடவடிக்கை எடுக்கவில்லை' என்று சாட்சியமளித்திருக்கிறார். 2002 இனப்படுகொலையில் மோடியின் பாத்திரம் குறித்து சாட்சியம் அளித்த அமைச்சர் ஹிரேன் பாண்டியா 2003 இல் மர்மமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வழக்கில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், போலீசு அதிகாரிகள் பற்றிய ஆவணப் பூர்வமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் குஜராத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார் சஞ்சீவ் பட்.
இந்த மனுவைத் தாக்கல் செய்த மூன்றாவது நாள் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் வீடு சோதனையிடப்பட்டது. அவரது வங்கி லாக்கரைத் திறந்து சாட்சியங்களைத் திருட போலீசு துடித்தது. சோதனைக்கு சம்மதித்தால், உடனே பிணையில் விடுவதாக சஞ்சீவ் பட்டிடம் பேரம் பேசினார் நீதிபதி. "இது கொள்கைக்கான போராட்டம். நீதிமன்றத் தரகர்களுடன் எனக்கு சமரசம் தேவையில்லை. அரசின் நடவடிக்கை எதுவானாலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்' என்று காறி உமிழ்ந்த சஞ்சீவ் பட், 18 நாட்கள் சிறைக்குப் பின் பிணையில் வந்திருக்கிறார். "மோடி இன்று முதல்வராக இருக்கலாம். 2002 படுகொலையைப் பொருத்தவரை மோடி ஒரு கிரிமினல். ஒரு கிரிமினலாகத்தான் மோடியை நடத்தவேண்டும்' என்று தொலைக்காட்சிக்குப் பேட்டியும் அளித்திருக்கிறார். மோடியின் குற்றத்தை மறுக்கின்ற அல்லது மறக்கின்ற பேடிகளை எப்படி நடத்துவது? இது குறித்த நம் அணுகுமுறைதான் சஞ்சீவ் பட் போன்றோருக்கு நாம் அளிக்கும் உண்மையான மரியாதையாக இருக்கும்.