ஜன்னத் மீது ஆசிட் வீசியவர் அவளது வீட்டுக்கருகில் வசிக்கும் 20 வயது இளைஞர். ஜன்னத்தின் முகத்தை ஆசிட் வீசி சிதைக்கக் காரணம், அவள் அவ்விளைஞரின் திருமண ஆசைக்குச் சம்மதிக்காததுதான். பெண்களின் மீதான ஆசிட் தாக்குதலைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டிருக்க மட்டுமே செய்திருந்த ஜன்னத்தின் குடும்பத்தினருக்கு அன்றுதான் அதன் உண்மையான வலியும், வேதனையும், சூழ்நிலையின் பதைபதைப்பும் புரிந்தது. சில நூறு கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் தலை நகர் டாக்காவிற்கு ஜன்னத்தை உடனடியாக அழைத்துச் சென்றார்கள். ஆனாலும் மருத்துவமனையில் இடம் இல்லாத காரணத்தால் ஆசிட் காயத்துடனே காத்திருந்த ஜன்னத்க்கு மறுநாள்தான் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரூபாலிக்கு திருமண வாழ்வைப்பற்றி ஒரு அழகான கனவு இருந்தது. ஆனால், அந்தக் கனவு திருமணமான ஆறு மாதங்களிலேயே ஆட்டம் கண்டது. வரதட்சணையாக ஒரு மோட்டார் பைக்கை வழங்கியிருந்தார் ரூபாலியின் தந்தை. ஆனாலும் இன்னும் பணத்தை வாங்கி வருமாறு அவளது கணவனும், மாமியாரும் வற்புறுத்தினர். ரூபாலியைக் கடுமையாக நடத்தியதோடு, நாள் முழுவதும் ஓய்வில்லாத வீட்டு வேலைகளைச் செய்யுமாறும் கட்டாயப்படுத்தினர்.
முடிவில் ரூபாலி தன் பெற்றோர் வீட்டுக்குச் செல்ல வேண்டுமென்று கூறியபோது, அவரது கணவனும் மாமியாரும் அவருடன் வாக்குவாதம் செய்து சண்டையிட்டனர். அதைத் தொடர்ந்து, அடிக்கவும் முற்பட்டனர். திடீரென்று அவள் எதிர்பாராத தருணத்தில், ரூபாலியின் மாமியார் அவரைப் பின்னாலிருந்து பிடித்துக் கொள்ள கணவன் அவரது வாயில் ஆசிட்டை ஊற்றினான்.
அக்கம்பக்கத்து வீட்டினர் ரூபாலியைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனாலும், மருத்துவர்களால் முதலுதவி அளிக்க முடியவில்லை. டாக்காவிற்கு அழைத்துச் சென்றாலும் ரூபாலிக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை. ரூபாலியின் பெற்றோரால் மருந்துகளை விலை கொடுத்து வாங்க முடியாததே அதற்குக் காரணம்.
இந்த ஆசிட் வீச்சு ஜன்னத்துக்கோ அல்லது ரூபாலிக்கோ மட்டும் நடந்ததல்ல. பங்களாதேஷில் ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 300 பெண்கள் ஜன்னத்தைப் போலவும், ரூபாலியைப் போலவும் ஆசிட் வீச்சுக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கின்றது. பாதிக்கப்பட்டவர்களில் பாதிப்பேர் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.
78 சதவீத ஆசிட் வீச்சுகளுக்குக் காரணம் காதலை ஏற்க மறுத்தது மற்றும் திருமணத்துக்கு சம்மதம் அளிக்காதது அல்லது உடலுறவுக்குச் சம்மதிக்காதது போன்றவையே. வரதட்சணை, குடும்பச்சண்டைகள், சொத்துப் பிரச்சினைகள் முதல் சமையல் செய்வதில் ஏற்படும் சிறு தாமதம் கூட இந்த ஆசிட் வீச்சுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன. தாக்குதலுக்கு உள்ளாகுவோரின் மருத்துவச் செலவுகளுக்காகப் பெற்றவர்கள் நிலத்தை விற்க வேண்டிவரும் என்பதற்காகவே நிலத் தகராறுகளுக்காகவும் ஆசிட் தாக்குதல்கள் நடக்கின்றன.
இந்த ஆசிட் வீச்சுகள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் நடக்கின்றன. அல்லது மிக அவசியமான வேலைகளுக்காகப் பெண்கள் வெளியே செல்லும் சமயங்களில் இந்த ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அருகி லிருப்பவர்களும் இந்தத் தாக்குதலில் பாதிக்கப்படுவதால், சுதாரித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்வதும் தாமதமாகின்றது.
ஆசிட் எனும் கொடூரமான ஆயுதம் ஏன் எனில் கார் பாட்டரியின் ஆசிட் கிடைப்பது எளிது, அதே சமயத்தில் விலை மலிவான ஆயுதமும் கூட. ஒரு சில நாணயங்களில் ஒரு முழுக் கிண்ணம் அளவுக்கு ஆசிட் எங்கு வேண்டுமானாலும் கிடைக்கும். இந்த ஆசிட் வீச்சுகள் எல்லாம், முக்கியமாக முகத்தை நோக்கிக் குறிவைத்து வீசப்படுகின்றன. பாதிக்கப்பட்டவரின் முகம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகிறது. ஒருவரது சொந்த அடையாளத்தையே சிதைப்பது குரூரத்தின் உச்சநிலையாக இருக்கிறது! அவர்களது வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுகின்றது. பல்லாண்டு காலம் பெண்கள் முகத்தை மூடியிருந்த ஹிஜாப், பிரான்ஸ் நாட்டில் தடை செய்யப்பட்டு அவர்கள் தங்கள் சுய முகத்துடன், அடையாளத்துடன் வெளிவருகிற நேரத்தில் பங்களாதேஷ் தனது பெண்களை ஆசிட் வீசி பர்தாவுக்குள் ஒரேயடியாகத் தள்ளுகிறது.
பெண்கள் உடல் ரீதியாக, மன ரீதியாக, பொருளாதார ரீதியாக பல தாக்குதல்களுக்கு உள்ளாகின்றனர். அதில் பெரும்பான்மை குடும்ப வன்முறையாகத்தான் இருக்கிறது. உலகம் முழுவதிலும் பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்றாலும், மூன்றாம் உலக நாடுகளில் மதத்தின் பெயரால் பெண்கள் பெருமளவு பாதிக்கப்படுகின்றனர், சுரண்டப்படுகின்றனர், உதாசீனப்படுத்தப்படுகின்றனர். இந்த வகையான ஆசிட் வீச்சுகள் பாதிக்கப்பட்டவரை முற்றிலுமாக நிலைகுலையச் செய்து விடுகின்றன. இந்தத் தாக்குதலால் அவர் உயிரிழப்பதில்லையே தவிர உறுப்புகள் மிகுந்த பாதிப்படைகின்றன. சில சமயங்களில் மேல் தோல் மட்டுமன்றி எலும்புகளும் சிதைந்து விடுவதுண்டு. இந்த ஆசிட் வீச்சால் ஏதாவது ஒரு உறுப்பை அல்லது சில உறுப்புகளை இழக்க வேண்டியதாகிறது. பெரும்பாலானோர் கண்களை இழக்கின்றனர் அல்லது கேட்கும் திறனை இழந்து விடுகின்றனர்.
இந்தத் தாக்குதல்கள் அப்பெண்களுக்கு நிரந்தப் பாதிப்பு என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களது தன்னம்பிக்கையையும் குலைத்துப் போடுகின்றது. ஒவ்வொரு நாளும் சமூகத்தோடு செத்து மடிய வேண்டியிருக்கிறது. அன்றாட வாழ்வுக்கே போராட வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைப் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது அந்தக் குடும்பங்களுமே அனுபவிக்கின்றன. ஒவ்வொரு நாளும் செத்து செத்து உயிர் வாழ்வதற்குப் பதிலாக ஒரேயடியாக இறந்து போனால் முற்றிலும் விடுதலையடைந்ததாக இருக்கும் என்று கூடப் பலர் கருதுகிறார்கள். எப்படியோ மீண்டு வந்துவிட்டாலும், மனப்போராட்டங்கள் அவர்களைத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள், தங்களைப் பார்ப்பவர்கள் உடனடியாக வெளிப்படுத்தும் அதிர்ச்சியைத் தாங்கிக்கொண்டுதான் வாழ வேண்டியிருக்கிறது.
அவர்களால் தொடர்ந்து சமூகத்தில் முன்போல உலவ முடிவதில்லை. கல்லூரிக்குச் செல்லவோ அல்லது வேலைக்குச் செல்லவோ முடிவதில்லை. தனிமையையே நாடுகிறார்கள். இது அவர்களது சமூக மற்றும் பொருளாதார ரீதியான வாழ்வை நிலைகுலையச் செய்து விடுகிறது. சமயங்களில் அவர்களது சொந்தக் குடும்பங்களாலேயே கைவிடப்படுகின்றனர். மறுமணம் நடப்பதும் மிகவும் அபூர்வம். பாதிக்கப்பட்ட இந்த அப்பாவிப் பெண்கள் மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்தும் கொள்கிறார்கள்.
அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்ட கால மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இது பங்களாதேஷ் போன்ற நாடுகளில் மிகவும் கடினம். அதோடு மருத்துவச் செலவும் மிக வும் அதிகம். ஒரு மணி நேர அறுவைச் சிகிச்சைக்கே பல நூறு அமெரிக்க டாலர்கள் வரை தேவையாக இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட வேண்டியிருக்கும். பாதிக்கப்பட்ட பெண்களின் ஏழ்மை நிலைமை இதற்கு இடம் கொடுப்பதில்லை.
டோலி அக்தர் என்ற 16 வயதுப் பெண், காதலை மறுத்த காரணத்துக்காக ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானாள். அவளது தந்தையிடமிருந்த முழுச்சொத்தும் அவளது மருத்துவத்துக்கே செலவானதால், படிப்பை நிறுத்தி விட்டு தற்போது துணிகளைத் தைத்துக் கொண்டிருக்கிறாள். சிறு வயதில் அவளது வாழ்க்கை அவளது மற்ற நண்பர்களைக் காட்டிலும் முற்றிலும் மோசமானதாக மாறியிருக்கிறது.
பீனா என்ற மற்றொரு சிறுமி, அவளது உறவினரான மற்றொரு சிறுமியை முகமூடி அணிந்த நபரிடமிருந்து காப்பாற்றும்போது ஆசிட் தாக்குதலுக்கு உள்ளானாள். இந்தத் தாக்குதல் அவளுக்கு இரவில் நடந்தது. இருவருமே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பீனா, ஒரு தடகள வீராங்கனை. உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக உற்சாகமாகக் காத்திருந்தாள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவளது கனவுகள் சுக்குநூறாகிப் போய்விட்டன.
பங்களாதேஷில் முன்பை விடப்பெண்கள் பொதுவில் அதிகமாக வெளிவரத் துவங்கியிருக்கிறார்கள். ஏழைப்பெண்கள் கல்விக்காகவும், வேலைக்காகவும் தமது கிராமங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு வருகிறார்கள். இதனாலெல்லாம் பெண்களை புர்க்காவுக்குள் அடக்கி வைக்கும் ஆண் சமூகத்தின் கண்ணோட்டம் மாறி விடவில்லை. வீட்டுக்கு உள்ளேயும், வீட்டுக்கு வெளியேயும் பாதுகாப்பு இல்லாத இந்தப் பெண்கள் மிகவும் எளிதாக இந்த வக்கிரமான பாலியல் வன்முறைக்கு ஆளாகி விடுகிறார்கள்.
பெண்கள் மீதான ஆசிட் வீச்சுகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் பெருமளவு நடக்கிறது என்றாலும், பங்களாதேஷ் தான் அதில் முன்னணியில் இருக்கிறது. இருபது முப்பது ஆண்டுகளாகவே பெண்கள் மீதான ஆசிட் வீச்சுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதற்கு முக்கியக் காரணங்கள் பழைமை வாதமும், ஆணாதிக்க சமூகமும், அதில் ஊறிப்போன நீதித்துறையுமே. பெண்களை இரண்டாந்தரமாக நடத்துவது மூன்றாம் உலக நாடுகளில் மிகவும் சகஜமாக இருக்கிறது. பெண்கள் தங்களது உடைமை என்ற பிற்போக்குக் கண்ணோட்டமும் ஒரு காரணம்.
ஆசிட் வீச்சுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், சட்டங்களையும் இயற்றி இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால், குற்றவாளிகளில் ஒன்றிரண்டு பேரைத் தவிர பெரும்பாலோனோர் தண்டிக்கப்படுவதேயில்லை. அவர்கள் சட்டங்களின் துணை கொண்டே வெளியில் வந்து வழக்கம்போல் நடமாடுகின்றனர். சகஜமான வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களுக்கு எவ்விதக் குற்றவுணர்வும் ஏற்படுவதில்லை.
•••
ஏனெனில் பெண்களை அடிமைப்படுத்துவது என்பது மத ரீதியாக வளர்த்தெடுக்கப்படுகிறது. பிற்போக்குத்தனத்தில் ஊறிப்போன மதங்களுக்கு இசுலாமும் விதிவிலக்கல்ல. பிற்போக்குத்தனத்தில் கட்டுண்ட மதங்கள் அனைத்தும் ஒன்றுபடுவது ஒரு விசயத்தில்தான் பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும். இதனைச் சுட்டிக்காட்டினால், இசுலாம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்கள் இசுலாம் மதத்தலைவர்கள். உண்மையில், பெண்களுக்குச் சில உரிமைகளை இசுலாம் வழங்குவதாகவும், ஒரு சில இனத்தவரின் பழக்க வழக்கங்களும், பெண்ணடிமைத்தனமும்தான் இந்நிலைமைக்குக் காரணம் என்றும் கூறுகின்றனர். முகமது வழங்கியிருப்பதாகவும் சொல்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, பிறந்த பெண் குழந்தைகளை வேண்டாத குழந்தையென்று மண்ணில் புதைக்கும் வழக்கத்தை அவர்தான் தடை செய்ததாகவும் கூறுகிறார்கள். அதோடு, குரான் அடிப்படையில் பெண்களுக்கு சொத்துரிமையும், பாலியல் ரீதியான சுதந்திரமும் இருப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்காத, சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை பாரம்பரியம் என்று சொல்லிக்கொள்ளும் இந்து மதத்தோடு ஒப்பிடுகையில் இசுலாம் பெண்களுக்கு இவ்வுரிமைகளை வழங்கியிருப்பது உண்மைதான்.
ஆனாலும் இவ்வுரிமைகளினால் பெண்களுக்கு சம உரிமையோ, குரான்படி பெண்களின் பெண்ணடிமைத்தனம் முற்றிலும் களையப்படவோ இல்லையென்றுதான் கூற வேண்டும். இசுலாமைப் பொறுத்தவரைக்கும் மூன்றுவகையான மனிதர்கள் இருக்கிறார்கள். ஆண்கள், பெண்கள் மற்றும் முசுலீம் அல்லாத பிற சமய மக்கள். இதில் பெண்கள் என்பவர்கள் ஒரு முசுலீம் ஆணில் பாதிக்குச் சமம். ஒரு பெண், ஆணுக்குக் கொடுக்கப்படும் சொத்துரிமையில் பாதியைத்தான் பெறுவாள் என்பதே இதற்குச் சான்று. ஒரு பெண் கீழ்படியவில்லை அல்லது கண்ணியமற்ற முறையில் நடந்துக்கொள்வதாக தெரிந்தால், ஆண் அவளை அதட்டிக் கேட்கலாம்; உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது.
குரானின் (சுரா 4:34) படி, ஆணின் கையிலேதான் பெண்ணைக் குறித்த முழு அதிகாரமும் இருக்கிறது. பெண்ணைப் பராமரிப்பதிலேயே ஆண் தனது செல்வத்தைச் செலவழிப்பதால் பெண்ணை விட ஆணை உயர்ந்தவராக கடவுள் படைத்திருப்பதாகக் கூறுகிறது. நல்லபடியாக (!) நடந்துக் கொள்ளும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சரிநிகராக உரிமைகள் இருந்தாலும், ஆணே எப்போதும் பெண்ணை விட உயர்ந்தவராகக் கருதப்படுவார் என்றும் குரான் கூறுகிறது.
இசுலாமிய ஷரியத் சட்டப்படி, ஒரு ஆணுக்கு நான்கு மனைவிகள் இருக்கலாம். தலாக் என்று மூன்று முறை கூறுவதன் மூலம் தனது மனைவியை அல்லது மனைவிகளை மணவிலக்குச் செய்யலாம். ஆனால், ஒரு பெண் விவாகரத்து பெறுவது என்பது நடைமுறையில் மிகச்சிக்கலானது. இசுலாமியச் சட்டப்படி பெண்களும் விவாகரத்து கோரலாம் என்றும், தாய் என்ற இடத்தில் பெண்கள் வணக்குரியவர்களாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும் வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
ஆனால், விவாகரத்தின்போது குழந்தைகளை உரிய வயது வரும் வரையில் வைத்துப் பராமரிக்கும் உரிமை தந்தைக்கே கிடைக்கிறது. தங்களது குழந்தைகளை இழந்து விடுவோமோ என்ற பயத்தினாலேயே பெண்கள் தங்கள் கணவன் பலதாரமணம் புரிந்தாலும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். மேலும் பெண்களுக்கு தாய் என்ற மதிப்பிற்குரிய அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாகக் கூறும் இசுலாம்தான், குழந்தைகள் தந்தையின் உரிமை என்றும் கூறுகிறது.
அதன்படி தாய் என்பவள் ஒரு பராமரிப்பு வேலைகளைச் செய்பவர் என்றுதான் ஆகிறது. எனில், குரான்படி பெண்களுக்கு சம உரிமைகளோ, சுதந்திரமோ இருக்கிறதென்று எப்படிக் கூறமுடியும்?
இசுலாமிய ஷரியத் படி, ஒரு பெண்ணைக் கொலை செய்தால் அதற்குத் தண்டனையாக ஒரு ஆணைக் கொலை செய்ததற்கு அபராதமாகச் செலுத்தப்படுவதில் பாதியைச் செலுத்தினால் போதும். நீதிமன்றத்தில் ஒரு பெண்ணின் சாட்சியானது ஒரு ஆணின் சாட்சியில் பாதியாக மதிக்கப்படும். ஆண், பண்ணை பராமரிப்பதால் பெண் மீது ஆணுக்கு அதிகாரம் உண்டு. இதிலிருந்து, இசுலாம் பெண்களை சுமையாகத்தான் கருதுகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இத்தனைக்கும், குழந்தைகளைப் பராமரிப்பதிலிருந்து வீட்டு வேலைகளை செய்வதிலிருந்து குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உழைப்பும் பெண்களிடமிருந்தே சுரண்டப்படுகிறது. ஒன்பது வயதுச் சிறுமிகள், தங்கள் தந்தையராலேயே மணம் முடித்துக் கொடுத்து விடப்படுகின்றனர். தாய் மறுத்தாலும் அதைக் கணக்கில் கொள்வதில்லை. பெரும்பாலான சமயங்களில் அந்த ஆண்களுக்கு அது இரண்டாவது அல்லது மூன்றாவது திருமணமாக இருக்கும். தீவிர நம்பிக்கைக்குரிய மதத்தலைவர்கள், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதைக்கூட உயர்த்தத்தயாரில்லை. முகமதுவின் மனைவியருள் ஒருவரான ஆயிஷா திருமணம் நிச்சயிக்கப்படும்போது ஏழு வயதாக இருந்தார். திருமணத்தின்போது அவருக்கு ஒன்பது வயதுதான். முகம்மது நபிக்கோ கிட்டதட்ட ஐம்பது வயதிருக்கும். அதோடு அவருக்குப் பலமனைவிகள் இருந்ததாகவும் தெரியவருகிறது.
பெண்கள் உரிமைகளுக்கான சட்டங்கள் எதுவும் அரசாங்கத்தால் முன் எடுக்கப்பட்டால் அது மதவாதிகளின் தீவிர எதிர்ப்புக்குள்ளாகும். குரானை எவ்விதத்திலும் மாற்றத்துக்கு உள்ளாக்காமல் கடைபிடிக்க வேண்டுமென்று கண்மூடித்தனமாக அச்சட்டத்தை எதிர்ப்பார்கள். ஈரானியப் பெண் சக்கீனாவை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்திருக்க முடியாது. தகாத உறவுள்ளவராக குற்றஞ்சாட்டி அவரைக் கல்லாலேயே அடித்துக்கொல்ல வேண்டுமென்று தண்டனையும் விதித்தது, அரசு. அவருக்கு 99 கசையடிகளும் கொடுக்கப்பட்டது.சுரா (24:1) இல் தகாத உறவு கொண்டவராக இருந்தால் 100 கசையடிகள் கொடுக்கப்பட வேண்டுமென்று சொல்லப்பட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். முகம்மது நபி கல்லால் அடித்துக் கொல்லப்படுவதை கண்டித்திருந்தாலும், ஒரு இடத்தில் பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் கல்லால் அடித்துக் கொல்லுமாறு கூறுகிறார்.
இன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அதனை பெண்களுக்கு மட்டுமே உரிய தண்டனையாக மாற்றி விட்டார்கள். ஏனெனில் ஆண்களுக்கு நான்கு மனைவிகள் வரை வைத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. பல முசுலீம் நாடுகளில் பெண்களைக் கல்லால் அடித்துக்கொல்லும் தண்டனை இன்றும் நடைமுறையில் உள்ளது. ஒருபெண் முதலிரவில் கன்னித்தன்மை இல்லாதவளாகக் கருதப்பட்டால் அவளது உறவினர்களாலேயே கொல்லப்பட்டு விடுவாள்.
இவ்வகையான கவுரவக் கொலைகள் இசுலாமிய நாடுகளில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. இந்த கவுரவக் கொலைகளுக்குப் பிஞ்சுக் குழந்தைகளும் தப்புவதில்லை. ஜோர்தானில் எட்டு வயதுச் சிறுமி தந்தையிடம் சொல்லாமல் நண்பர்களைப் பார்க்கச் சென்றதற்காக அடித்தே கொல்லப்பட்டாள். பெண்கள் உயிர் வாழ்வதும், உயிர் பறிக்கப்படுவதும் ஆண்களின் கையில்தான் இருக்கிறது. இப்படி உயிரைப் பறிக்கும் ஆண்கள் அவர்களது நண்பர்களாலும், உறவினர்களாலும் ஒரு ஹீரோவைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள். இந்தியாவிலும் இந்தக் கவுரவக் கொலைகள், சாதி மற்றும் கோத்திரத்தின் பெயரால் நடைபெறுவதைக் கவனித்திருக்கலாம்.
இப்படி பெண்களின் நடத்தை, கண்ணியம் எல்லாமே ஆண்களின் மேற்பார்வையிலிருப்பதால் பெண்களும் தங்களைப் போல சம உரிமை பெற்ற மனித உயிர் என்று கருத அவர்கள் மறுக்கிறார்கள். சொல்லப்போனால், அப்படிச் சமமாக நடத்துவதை மதமே அல்லவா தடுத்து நிறுத்துகிறது?
மதத்தின் பெயரால், பெண்களின் கழுத்தின் மீதுதான் ஆண்களின் கால்கள் ஊன்றி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது. இசுலாமிய சமூகத்தில் மதமே வாழ்வின் எல்லாவற்றிலும் கோலோச்சுகிறது அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டதிட்டங்கள், பழக்க வழக்கங்கள் என்று சகலமும் மதத்தையே முதுகெலும்பாகக் கொண்டிருக்கின்றன இதற்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல என்றாலும்.
•••
இந்தப் பின்னணியில்தான் நாம் ஆசிட் தாக்குதல்களையும் நோக்க வேண்டியிருக்கிறது. எண்ணெயைப் பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்று மேற்குலகின் செல்வச் செழிப்போடும், நவநாகரிகத்தோடும் பின்னிப் பிணைந்து வாழும் அரபு முதலாளிகள் தங்கள் இனப் பெண்களை பர்தாவுக்குள் அடைக்கின்றனர். ஒழுக்கம், கண்ணியம், கற்பு என்று வரும்போது மட்டும் குரானுக்குள் ஒளிந்துகொண்டு பெண்களைப் பலிகடாவாக்குகின்றனர். இந்த இரட்டை வேடத்தில் இந்துமதப் பயங்கரவாதிகளுக்கு சற்றும் குறைந்தவர்களில்லை, இசுலாமிய மதவாதிகள்.
சாதி மாறிக் காதலித்தால், ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்து கொண்டால் பெண்ணை கண்டந்துண்டமாக்குவது பார்ப்பனிய இந்துமதம். சாதிக்குள்ளும், கோத்திரத்துக்குள்ளும் பெண்ணை அடைத்து வைத்திருக்கிறது இந்துமதம். பர்தாவுக்குள் அடைத்து வைத்திருக்கிறது இசுலாமிய அடிப்படைவாதம்.
ஒரு பெண்ணுக்கு மணமகன் கொடை அளித்துத்தான் திருமணம் செய்ய வேண்டுமென்பதாகக் கூறினாலும் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. பங்களாதேஷின் பெரும்பாலான ஆசிட் தாக்குதல்கள் ஏழை மக்களிடையே வரதட்சணைக்காகவே நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தனது காதலை நிராகரித்தால் அல்லது தனது ஆசைகளை நிறைவேற்ற மறுத்தால் தாங்கிக்கொள்ள முடியாத ஆணின் ஈகோ வக்கிரமாக அந்தப்பெண்ணைப் பழிவாங்கத் துடிகிறது. அதற்கு மதமும் துணை போகிறது.
இதுவே ஒரு பெண் ஆணின் மீது ஆசிட் தாக்குதலை நடத்த முடியாதா? கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல் என்பதுபோல ஆசிட் அதே விளைவுகளைத்தான் ஆண் மீதும் ஏற்படுத்தும் என்றாலும், ஒரு பெண் அவ்வாறு செய்வாளென்று யாரும் எதிர்ப்பார்ப்பதில்லை. நினைத்துக்கூட பார்ப்பதில்லை. அடங்கி நடக்க வேண்டியவளாகத்தான் எதிர்ப்பார்க்கப்படுகிறாள்.
ஆப்கானிஸ்தான் ரஷ்யாவின் கீழ் இருந்தவரை பெண்களுக்கான சம உரிமைகள் சட்டங்கள் மூலமாகத்தான் நிலைநாட்டப்பட்டன, மதத்தின் மூலமாக அல்ல. பங்களாதேஷில் பல பெண்கள் பொதுவாழ்வில் வெற்றிகரமாக ஈடுபட்டு வந்தாலும் சாமானிய மக்கள் வாழ்க்கையில் எந்தப் பெரியமாற்றமும் இல்லாததற்கு இந்த மதரீதியான அடக்குமுறையே காரணம்.
ஷேக் ஹசீனா, காலிதா ஜியா மற்றும் சயீதா சஜீதா சவுத்ரி போன்றவர்கள் முக்கியமான அரசியல் பதவிகளை வகிக்கின்றனர். 2008 ஆம் ஆண்டின் கணக்குப்படி பொதுத்துறையில் உள்ள 4419 பேரில் பெண்கள் 673 பேர்தான். பெண்கள் முன்னுக்கு வருவதற்கு ஏகப்பட்ட மசோதாக்களும், சட்டங்களும், வளர்ச்சித்திட்டங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இருந்தாலும், பெண்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே தீட்டப்படும் திட்டங்கள் வெறும் ஏட்டளவில்தான் இருக்க முடியும். 2000 ஆம் ஆண்டும், 2002 ஆம் ஆண்டும் சில கடுமையான சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டன. சட்டத்துக்குப் புறம்பான வகையில் ஆசிட் கையாளப்பட்டது தெரியவந்தால் 10 முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை உண்டு. ஆசிட் தாக்குதல் நடத்தும் குற்றவாளிக்கு மரண தண்டனையும் உண்டு. இதனாலெல்லாம் இந்தத் தாக்குதல்களைப் பெருமளவு நிறுத்திவிட முடியவில்லை என்பதுதான் நடைமுறைஎதார்த்தம். எளிதில் குற்றவாளி வெளியும், ஊழல் மலிந்த காவல்துறையும் ஒரு காரணம். அதோடு குற்றவாளி பணக்காரராக இருந்தால் நிலைமை இன்னும் மோசம்.
நீதிமன்றத்துக்கு வரும் பாதிக்கப்பட்டவர்களை தொடுத்த வழக்கினைத் திரும்பப் பெறுமாறு மிரட்டுவார்கள். இல்லையென்றால், குடும்பத்தினரைத் தாக்கப் போவதாகவும் சொல்வார்கள். தன் சகோதரிக்காக வழக்குத் தொடுத்திருந்த ஒரு பெண் குற்றவாளியின் குடும்பத்தினரால் மிகக் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டாள். வழக்குத் தொடுப்பவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மிகுந்த வறுமை நிலையிலிருப்பதால் அதிகாரத்தை எதிர்த்து நிற்க முடிவதில்லை. பெரும்பாலும் தன்னார்வக் குழுக்களின் இல்லங்களிலேயே இப்பெண்கள் காலம் கழிக்க நேரிடுகிறது.
பல தன்னார்வக் குழுக்கள் ஆசிட் வீச்சினால் பாதிப்படைந்தவர்களுக்கு ஆதரவளிக்கின்றன. அதோடு மருத்துவ உதவிகளை இயன்ற அளவுக்குச் செய்கின்றன. இருந்தாலும் பாதிப்படைந்தவர்களுக்கு உதவுவதாக எண்ணி அவர்களைத் தனிமைப்படுத்தி விடுகின்றன. கல்வியும், வேலையும் தருவதாகக் கூறிக்கொண்டு அவர்களைச் சமூக வாழ்க்கையிலிருந்து பிரித்தெடுத்து விடுகின்றன. வக்கிரமாகப் பாதிக்கப்பட்ட இப்பெண்கள், மேலும் இரக்கமற்ற வாழ்க்கைக்கே உந்தப்படுகிறார்கள்.
உதவும் நோக்கு என்று சொல்லிக் கொண்டாலும் இந்தத் தன்னார்வ குழுக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றுமொரு தண்டனையாகவே அமைந்து விடுகின்றன. எந்த உடல்நலக் குறைபாடோ, நோயோ இது போன்ற விளைவுகளை ஏற்படுத்துவதில்லை. ஒருபோதும் தங்களது பழைய உருவத்தை, அடையாளத்தைப் பெற முடியாது என்பது அவர்களது முகத்திலறையும் உண்மையாக இருக்கிறது. இதனை ஏற்றுக்கொண்டு வாழவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர். பங்களாதேஷ் கிராமங்களில் அவர்கள் ஒருபோதும் தமது பழைய அங்கீகாரத்தைப் பெறுவதில்லை.
வாழ்வாதாரத்துக்காகச் செய்யும் வேலையும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. ஒன்றிரண்டு வேலைகளையே செய்து பிழைக்க முடியுமென்ற நிலைதான் மீந்திருக்கிறது. அதுவும் அவர்களது பொருளாதார நிலைமையை மிகவும் பாதிக்கிறது.
இதற்குத் தீர்வென்பது, ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான சட்ட உரிமைகளாலும் மற்றும் நீதியாலுமே முடியும். சமூகத்தின் ஒட்டுமொத்தக் கண்ணோட்டமே மாற வேண்டியிருக்கிறது. சீர்திருத்தங்களால் அங்கொன்றும் இங்கொன்றுமாக வேண்டுமானால் ஓரிரு நபர்களுக்கு மட்டும் தீர்வு கிட்டலாமே ஒழிய அது தற்காலிமானதுதான்.
இந்த ஆசிட் தாக்குதல்கள் இந்தியாவிலும் சாதாரணமானதொன்றுதான். கடந்த ஜனவரி 9ஆம் தேதி கேரளாவைச் சேர்ந்த அஞ்சலி என்ற பெண்ணின் மீது உள்ளூர் பாஜக தலைவர் பிஜூ என்பவரின் அடியாட்கள் ஆசிட் வீசியிருக்கின்றனர். அஞ்சலிக்கு அந்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. பிஜூவின் ஆட்கள் அஞ்சலியின் வீட்டுக்கு ஃபோன் செய்து கூரியர் வந்திருக்கிறதென்றும், வீடு அடையாளம் தெரியாததால் வெளியில் வந்து நிற்குமாறும் கூறியிருக்கின்றனர். வீட்டுக்கு வெளியில் வந்து நின்ற அஞ்சலி முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளனர். தற்போது இதற்கான வழக்கு நடந்து வருகிறது. இதுவும் இந்துத்துவா காட்டும் பயங்கரவாதத்தின் மற்றொரு கோர முகம்தான்.
இந்தக் கோரமுகம்தான் நாடு முழுக்க கலாச்சாரக் காவலர் வேடமேற்கிறது. மதங்கள் வௌ;வேறானாலும் அதன் தூய்மை பெண்ணை எரிப்பதில் தான் இருக்கிறதென்று நிரூபிக்கின்றன இந்தச் சம்பவங்கள். சாதியையும், பெண்ணடிமைத்தனத்தையும் தனது கைகளாகக் கொண்டு மக்களை நசுக்கும் பார்ப்பனியம்தான் தற்போது அஞ்சலியின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவில் காதலை மறுத்த இரண்டு மாணவிகள் மீது இளைஞர்கள் ஆசிட் வீசியதால் அப்பெண்கள் பலியான சம்பவத்தை செய்தியில் பார்த்திருப்போம். காதலித்த பெண்ணின் மீது ஆசிட் ஊற்றுவது என்ன வகையான நேசம் என்பது புரியவில்லை.
பெண்ணை நுகர்பொருளாக, உடமையாகக் கற்றுக்கொடுக்கும் ஊடகங்களும், சினிமாவும் அவளை அடைந்தே தீரவேண்டிய பொருளாகவே பார்க்கிறது. இந்தக் காதலை வியாபாரமாக்கிக் கொள்ளும் முதலாளித்துவமோ இன்றைய இளைஞர்களிடம் காதலைக் கூவிக் கூவி விற்றுக் காசாக்கிக் கொள்கிறது. காதலை ஏற்க மறுக்கும் உரிமை பெண்ணுக்கும் உண்டு என்பதை ஆணாதிக்கம் உணர மறுக்கிறது. ரஜினி கமல் முதல் இன்றைய தனுஷ் வரை பெண்ணைத் தன் காலடியில் விழ வைப்பதே ஆண்மைக்கழகு என்று சவால் விட்டு அதனை நிரூபிக்கவும் செய்கிறார்கள். தனக்குக் கிடைக்காத பொருள் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று ரசிகனுக்கும் கற்பிக்கிறார்கள்.
இந்த வழியில் இன்றைய இளைஞர்களும் அமிலத்தால் பெண்ணைத் துடிக்க துடிக்க அழிக்கிறார்கள். மதம் எதுவாக இருந்தாலும் அதன் ஒழுக்கம், அன்பு, அமைதி என்ற எல்லாவற்றையும் பிரித்துவிட்டுப் பார்த்தால் மையமாக இருப்பது பெண்ணடிமைத்தனமும், ஆணாதிக்கமும்தான். வாழ்நிலைமைகளையும், செல்வத்தை விநியோகிக்கும் சமுதாய நிலைமைகளையும் முதலாளித்துவம் மாற்றியிருக்கிறது. ஆனால் அதன் இலாப நோக்குகளுக்காக நிலப்பிரப்புத்துவத்தின் பிற்போக்குத்தனங்களை அப்படியே நிலவ விட்டு ஆதாயமடைகிறது. அல்லது பெண்களை அரைகுறையாக சீயர் லீடர்ஸ் என்ற பெயரில் கவர்ச்சிக்கு உபயோகப்படுத்துகிறது.
இந்த நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனங்களையும், முதலாளித்துவ பாலியல் சுரண்டல்களையும் எதிர்த்து மக்கள் அனைவரும் சேர்ந்து போராடுவதுதான் சரியான தீர்வாக இருக்க முடியும். தனிப்பட்ட ஓரிருவர் போராடுவது எந்தப் பலனையும் தராது. ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு, கலாச்சார நிறுவனங்களைத் தகர்க்கும் சக்தி ஒடுக்கப்படும் மக்கள் கையில்தான் இருக்கிறது. அப்படி சமூக நலனுக்காகப் போராட புறப்படும் மக்கள் கையில்தான் விடுதலைக்கான திறவுகோல் இருக்கிறது.
வேல்விழி