ஊடகங்களின் மகிழ்ச்சியும், கட்சித் தொண்டர்களின் கொண்டாட்டமும் ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்களுக்கு உரிய, அவர்களுக்கு வேண்டிய பணம், அவர்களுக்குக் கிடைத்து விடும். கட்சித் தலைமையும், அரசாங்கத்தின் விளம்பரங்களும் அவர்கள் தேவையை நிறைவேற்றி விடும்.
ஆனால், மாதந்தோறும் ரூபாய் நூறு மீதமானதை நினைத்து பரவசப்படுகிறார்களே மக்கள்... அவர்கள் ஒரு போதும் அறிவதில்லை, தங்களையும் அறியாமல் மாதந்தோறும் பல கோடி ரூபாய்களை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு 'நன்கொடை'யாக வழங்குகிறோம் என்று.
ஆம், அது பசியினால் நிலைகுத்திய பார்வையாக இருக்கலாம்; அல்லது வேலை பறிபோன துக்கத்தில் வெறித்த பார்வையாக இருக்கலாம்; அல்லது திருமணமாகாத முதிர்கன்னியின் வறண்ட பார்வையாக இருக்கலாம்; அல்லது கல்வி கற்க முடியாத துக்கப்பார்வையாக இருக்கலாம்; அல்லது கந்துவட்டிக்காரனின் மிரட்டலுக்குப் பயந்து ஒடுங்கிய பார்வையாக இருக்கலாம்; அல்லது மருத்துவம் பார்க்க வழியில்லாத நோயாளியின் மரணப் பார்வையாக இருக்கலாம்; அல்லது அடுத்த வேளை உணவைக் குறித்த கவலையில்லாத மேல்தட்டு மக்களின் இன்பமான பார்வையாகவும் இருக்கலாம்.
யாருடைய பார்வை என்பதும் முக்கியமில்லை. பொருளாதார படிக்கட்டில் எந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் அவசியமில்லை. பார்வை அல்லது பார்வைகள்தான் முக்கியம். பார்வை படும் இடத்தில் தொலைக்காட்சிப் பெட்டி இருப்பதுதான் அவசியம். அந்தப் பெட்டி இருந்துவிட்டால் போதும். அதன் வழியே நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்தால் போதும். அனைத்து வர்க்கங்களைச் சேர்ந்த பார்வைகளின் மதிப்பும் ஒன்றுதான். என்ன, பார்க்கும் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியைப் பொறுத்து அந்த மதிப்பு பத்து விநாடிகளுக்கு ரூபாய் ஐயாயிரம் முதல் ரூபாய் இருபதாயிரம் வரை வேறுபடும் என்பது மட்டுமே வித்தியாசம்.
•••
எத்தனை குடும்பங்களில் இன்று தொலைக்காட்சிப் பெட்டி இருக்கிறது என்ற கேள்வி அவசியமேயில்லை. காரணம், அமெரிக்க மக்கள் தொகைக்குச் சமமாக இன்று இந்திய நடுத்தர மக்களின் தொகை இருக்கிறது என்ற புள்ளிவிபரமே பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. கிராமங்களால் நிரம்பிய இந்தியாவில் ஒப்பீட்டளவில் இந்த நடுத்தர வர்க்கம் சிறுபான்மையினர்தான். ஆனால் நகரமயமாகி வரும் இந்தியாவில், வாழ்க்கைத் தரத்தில் ஏழை எளியவர்களாகவும், சிந்தனையில் மேட்டுக்குடியினராகவும் இருக்கும் இந்த நடுத்தர வர்க்கமே பெரும்பான்மையினர். எனவே இந்த வர்க்கத்தைத் தங்கள் சந்தைக்கான சரக்காக மாற்றுவதன் மூலம் கிராமங்கள் நிறைந்த இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்கள் சுரண்டத் துடிக்கிறார்கள். அதாவது, சின்ன மீனைக் காண்பித்து பெரிய மீனைப் பிடிப்பது போல. இதற்காகவே இன்று இந்தக் காட்சி ஊடகத்தை இரண்டாக தரகு முதலாளிகள் பிரித்திருக்கிறார்கள். ஒன்று இருபத்து நான்கு மணிநேர செய்தி ஊடகம். இன்னொன்று இருபத்து நான்கு மணி நேர பொழுதுபோக்கு ஊடகம். ஊடகத்தின் இந்த இரு பிரிவுகளும் எந்தத் தரகு முதலாளியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்பது முக்கியமில்லை. அனைத்து ஊடக நிறுவனங்களிலும் சட்டப்பூர்வமாக பன்னாட்டு நிறுவனங்கள் பங்குதாரர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டியவிஷயம்.
தனிப்பட்ட வாடிக்கையாளர் ஒப்பந்தங்கள் இதன் பொருட்டுத்தான் போடப்படுகின்றன. ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரங்கள் என்ற அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் பொருட்களின் விளம்பரங்களை எத்தனை காட்சி ஊடகங்கள் இருக்கிறதோ அத்தனையிலும் ஒளிபரப்புகின்றன. அந்தந்த காட்சி ஊடகத்துக்கு இருக்கும் 'பார்வை'யாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஒரு தொகையைத் தருகின்றன. இதன் மூலம் மாதம் ஒன்றுக்கு பல கோடி ரூபாய்கள் ஒவ்வொரு காட்சி ஊடக நிறுவனங்களுக்கும் வருவாயாகக் கிடைக்கின்றன.
இந்தக் கொள்ளை தொடர வேண்டுமானால், மக்களுக்கு தொடர்ந்து கிளுகிளுப்பும் கிச்சு கிச்சுவும் மூட்ட வேண்டும். விழிப்புணர்வுக்கு என்று நடத்தப்படும் அரட்டை அரங்கம், மக்கள் அரங்கம், நீயா நானா... போன்ற டாக் ஷோக்களில் கூட கவனமாக பிரச்சினைகளின் வேரைத் தவிர்த்துவிட்டு மேம்போக்கான பொது நியாயங்கள் விவாதிக்கப்படும். பெற்றோருக்குக் கீழ்படிந்து நடக்கவேண்டும், ஆசிரியர்களின் பேச்சுக்குக் கட்டுப்பட வேண்டும், கலப்பு மணத் திருமணத்தை பெற்றோர் ஒப்புதலுடன்செய்து கொள்ள வேண்டும். அவர்கள் மறுத்தால் காத்திருக்க வேண்டும், முதலாளிக்கு துரோகம் நினைக்கக் கூடாது போன்ற விழுமியங்கள், புதிய கீதைகளாக தொலைக்காட்சியில் ஒலிக்கின்றன.
இப்படி எல்லோருக்கும் பொருந்துகிற, குறிப்பிட்ட எந்தவொரு மக்கள் பிரிவினரையும் இலக்காகக் கொள்ளாமல், ஒரேவிதமான நிகழ்ச்சிகளையே ஒட்டுமொத்தப் 'பார்வை'யாளர்களுக்கும் வழங்குவதே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அடிநாதம். இதன் மூலம் மறுகாலனியாதிக்கத்துக்கு உகந்த முதலாளித்துவ ஆன்மாவை முதலாளித்துவ மனித மாதிரியை உருவாக்குகின்றன.
அதனால்தான் ஹாலிவுட் பண்பாடு, தமிழர்களின் அடையாளமாகிறது. பீட்சாவும், சாண்ட் விச்சும், பர்க்கரும் உணவுப் பொருட்களாகின்றன. கோக்கும், பெப்சியும் குடிநீராகக் கருதப்படுகின்றன. இது உலகச் சந்தை; உலகக் கலாச்சாரம். அமெரிக்கா இதில் மேல்நிலை வகிப்பதால், அமெரிக்க சுவர்க்கத்தின் சுவடுகளை தமிழகப் புறநகரங்களிலும் காணலாம். இருபத்தோரு இன்ச் பெட்டிக்குள் உலகம் சுருங்கி விட்டதால், இவ்வுலகில் ஏழைகளுக்கு வாழ இடமில்லை. ஒவ்வொரு நாடும் தனது மரபு, தனது பண்பாடு மற்றும் விழுமியங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய அனைத்தையும் செயற்கைக்கோள் ஒளிபரப்பு தகர்த்துவிட்டது.
இதனால்தான் இரு வேறு கலாச்சார, பண்பாடுகள் கொண்ட இரு சீரியல்களை ஒரே நேரத்தில் மாற்றி மாறி பார்வையாளர்களால் ரசிக்க முடிகிறது. இரவு ஏழரை மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'நாதஸ்வரம்' சீரியலையும், ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் வெளிவரும் 'சின்ன மருமகள்' தொடரையும் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் பார்க்கிறார்கள். இந்தியில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியலின் இந்தத் தமிழாக்கத்தை பார்க்கும்போது எவ்வித பண்பாட்டு வேறுபாடுகளையும் அவர்கள் உணர்வதில்லை. இரண்டையும் ஒன்றுபோலவே ரசிக்கிறார்கள். 'நாதஸ்வரம்' கோபிக்காகவும் உருகுகிறார்கள், 'சின்ன மருமகள்' ராதிகாவுக்காகவும் உள்ளம் கசிகிறார்கள்.
அதேபோல் சட்டப்படி தடை செய்யப்பட்ட சூதாட்டங்கள், 'தங்க மழை', 'டீலா நோ டீலா' போன்ற நிகழ்ச்சிகளின் வழியே வீட்டுக்குள் நுழைகின்றன. 'பார்வை'யாளர்களையும் கலந்து கொள்ளத் தூண்டுகின்றன. ஒரேநாளில், ஒரே விளையாட்டின் மூலம் கோடீஸ்வரனாகலாம் என்ற குறுக்கு வழியைக் கற்றுத் தருகின்றன. இவையனைத்தும் அமெரிக்க, ஐரோப்பியநாடுகளில் வெற்றி பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். அதை அப்படியே 'தமிழ்க் கலாச்சாரத்துக்கு'த் தகுந்தபடி இறக்குமதி செய்கிறார்கள். சூதாட்டம் தவறு என்று இன்று யாரும் சொல்வதில்லை. சூதாட்டமே வாழ்க்கைக்கான உழைப்பாக அங்கீகாரம் பெற்று விட்டது. பங்குச்சந்தையும் ஒரு தொழிலாக உயர்வு பெற்றிருக்கிறது.
உழைப்பு மட்டுமல்ல, பார்வையும் சரக்காகி விட்ட நிலையில், திரும்பியபக்கமெல்லாம் விளம்பரங்கள் கண்சிமிட்டும் ஜாலத்தில் கட்டியிருக்கும் கோவணத்தை விற்று, மாதம்தோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் சம்பாதிக்க தங்கள் 'பார்வை'யை அர்ப்பணிக்கும் பார்வையாளர்களே...
இப்போது சொல்லுங்கள், கேபிள் டிவியில் ஏகபோகமாக ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செலுத்துவதும், பகல் கொள்ளைக்கு சமமாக மக்களிடமிருந்து மாதந்தோறும் நூற்றி ஐம்பது ரூபாய் வரை வசூலிப்பதும் மட்டும்தான் பிரசனைனையா?
•••
பார்வையாளர்களுக்குரிய 'தெரிந்து கொள்ளும் உரிமையை' தங்கள் வசதிக்கு ஏற்ப தங்களுக்குச் சாதகமாக தரகு முதலாளிகளால் எப்படி மாற்றிக்கொள்ள முடிகிறது என்ற உண்மையை இரண்டாம் கட்ட அலைகற்றையில் நடந்த ஊழல்களை செய்தி ஊடகங்கள் எப்படி வெளியிட்டன, வெளியிடுகின்றன என்பதை வைத்தே புரிந்து கொள்ளலாம். ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன்... எனத் தனி மனிதர்களை ஊழலின் ஊற்றுக்கண்ணாக முன்னிலைப்படுத்தும் செய்தி ஊடகங்கள் ஒரு போதும் இவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய தரகு முதலாளிகளைக் குற்றம்சாட்டவும் இல்லை; அம்பலப்படுத்தவுமில்லை. கனிமொழி கைது செய்யப்பட்டபோதும், ஆ.ராசாதிகார் சிறையில் அடைக்கப்பட்ட போதும் அந்தச் செய்திகளை ஊடகங்களில் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். அப்போது அந்தச் செய்தி நேரத்தைப் பார்வையாளர்களுக்கு பெரும்பாலும் வழங்கியது, டாடாவின் டோக்கோமோவும், அம்பானியின் ரிலையன்சும்தான்.
உண்மையில் இரண்டாம் கட்ட அலைக்கற்றையால் கொழுத்த லாபமடைந்தவர்கள், இந்த இரு தரகு முதலாளிகளும்தான். ஆனால் எந்த ஊடகமும் இதை மக்களுக்கு தெரிவிக்கவில்லை. காரணம், ஒரு நாளைக்கு இத்தனை மணி நேரங்கள் என்ற அடிப்படையில் இந்தத் தரகு முதலாளிகள் அளிக்கும் விளம்பரங்கள்.
நம் நாட்டில் அரை மணி @நரத்துக்கு ஒரு விவசாயி தற்கொலை செய்துக் கொள்கிறார். இது குறித்து எந்தச் செய்தி ஊடகமும் பதிவும் செய்யவில்லை; காட்சிப்படுத்தவும் இல்லை. காரணம், பெரும்பான்மையினர் விவசாயிகளாக வாழும் நம் நாட்டில் விவசாய செய்தியாளர்கள் என்ற பிரிவே எந்த ஊடகத்திலும் கிடையாது. க்ரைம், அரசியல், வணிகம், மருத்துவம், அழகு
சாதனப் பொருட்கள்... என அனைத்துப் பிரிவுக்கும் செய்தியாளர்கள் உண்டு. ஆனால், வேளாண்மைக்கு? ஒருவரும் இல்லை. ஏனெனில் எந்தப் பன்னாட்டு நிறுவனங்களும் விவசாயிகள் குறித்து அக்கறை காட்டுவதில்லை. எனவே அவர்களைச் சார்ந்து இருக்கும் செய்தி ஊடகங்களும் விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.
அதனால்தான் விதர்பாவில் கொத்துக் கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டபோது செய்தி ஊடகங்கள் அந்நிகழ்வைக் கண்டுகொள்ளவில்லை. பதிலாக நீரா ராடியா டேப் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும் அது டாடாவின் தனி மனித இறையாண்மைக்கு ஊறு விளைப்பதாகக் கூறி செய்திகளை ஒளிபரப்பின. மத்திய அமைச்சரும், இனி எந்த நிறுவன முதலாளிகளின் தொலைபேசியும் ஒட்டுக் கேட்கப்படாது எனச் செய்தியாளர்களை அழைத்து உறுதியளித்தார். அதேபோல் பங்குச்சந்தை விழும்போதெல்லாம் கழிவறைகளில் இருந்தாலும் அப்படியே கழுவாமல் ஓடோடி வந்து, ஊடகங்களில் நடைபெறும் மாபெரும் விவாதங்களில் பங்கேற்று 'எல்லாம் சரியாகிவிடும்' என அபயம் அளிக்கிறார்கள் மத்திய அமைச்சர்களும், பொருளாதாரவல்லுநர்களும்.
இந்த விவாதங்களில் பங்கேற்கும் கருத்து கந்தசாமிகள், அரை நொடியைக் கூட வீணாக்காமல் கருத்துச் சொல்லும் வல்லமைப் படைத்தவர்கள். யோசித்து பேச காட்சி ஊடகங்களில் வாய்ப்பில்லை. ஒவ்வொரு நொடியும் ரூபாய் நோட்டுக்களால் அளக்கப்படும்போது பட, பட என்று கருத்துக்கள் விழ வேண்டும். அவை சரியாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. தவறாக இருந்தாலும் யாரும் கண்டு கொள்ளப் போவதில்லை. சொல்பவருக்கும், கேட்பவருக்கும் நடக்கும் விவாதம் குறித்து எல்லாம் தெரியும் என்று சொல்ல முடியாது. உளறலும் கூட சிந்தனையின் வடிவங்கள்தான். பிரதமரை முட்டாள் என்று சொல்லலாம். ஆனால், அம்பானியை அப்படி அழைக்கக் கூடாது. நீதிபதியை தயக்கத்துடன் விமர்சிக்கலாம். ஆனால், நீதித்துறையை முணுமுணுப்பாகக் கூட கேள்வி கேட்கக் கூடாது.
ஹாலிவுட் பாணியில் ஒரு ஹீரோ,ஒரு ஹீரோயின், ஒரு வில்லன்; ஒரு ஆரம்பம், ஒரு நடுப்பகுதி, ஒரு முடிவு... என செய்திகளை வழங்கினால், அந்த நிகழ்ச்சி சக்சஸ். எப்பொழுதுமே அரசியல்வாதிகள்தான் வில்லன். தனியார் நிறுவன முதலாளிகள்தான் ஹீரோ. இந்த விதிக்கு கட்டுப்பட்டு நிகழ்ச்சிகளை நடத்துபவர்களையும், விவாதங்களில் பங்கேற்பவர்களையும் ஒரே இரவில் அறிவுஜீவிகளாகச் செய்தி ஊடகங்கள் மாற்றி விடும். பிறகு அவர்கள் சிறுநீர் கழித்தாலும் அது ஸ்கூப் நியூஸ்.
காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இராணுவத்தினரும், துணை இராணுவத்தினரும் நடத்தும் பாலியல் வன்முறைகள் இயல்பானது. பொங்கி எழுந்து மக்கள் அவர்களை நோக்கிக் கற்களை வீசினால் அது பயங்கரவாதம். செய்தியை எப்படி வழங்க வேண்டும் என்பதை இப்படித்தான் இருபத்து நான்கு மணிநேர செய்தி ஊடகங்கள் கற்றுத் தருகின்றன.
காலையில் தெய்வ வழிபாட்டுடன் தான் பெரும்பாலான பொழுதுபோக்குக் காட்சி ஊடகங்கள் கண் விழிக்கின்றன. சுப்ரபாதமும், கந்த சஷ்டி கவசமும், தேவாரமும் தினமும் ஒ(லி)ளிபரப்பப்படுகின்றன. அதன்பிறகு உடற்பயிற்சி, யோகா, நாள்பலன். பின்னர் செய்திகள். தொடர்ந்து ஏதேனும் ஒரு துறை வல்லுநருடன் நேர்காணல். இதனையடுத்து நகைச்சுவை நேரம் என்கிற பெயரில் திரைப்படத் துணுக்குகள் அல்லது திரைப்படப் பாடல். பின்னர் முப்பது முப்பது நிமிடங்களாக இரவு பத்து மணிவரை சின்னத்திரை நாடகங்கள். நடுவில் ஒரு திரைப்படம். இதுதான் வார நாட்களில் தொலைக்காட்சியின் 'மெனு'. அதுவேவார இறுதி என்றால், ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள்.
ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் கூட, 'உருப்படாத மாணவர்களும்', 'குடும்பப் பொறுப்பில்லாத பெண்களும்' வாரம் இரண்டு, மூன்று திரைப்படங்களைத் தாண்டி பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் அடித்தட்டு, நடுத்தர வர்க்க மக்கள் வரை அனைவரது வீட்டிலும் ஊடுருவிவிட்ட தொலைக்காட்சிப் பெட்டியின் முன்னால் இன்று ஒட்டுமொத்தக் குடும்பமும் அமர்ந்து தினமும் திரைப்படங்களைப் பார்க்கிறது; ரசிக்கிறது. அதா
வது இன்று வாழ்க்கையில் உருப்பட, ஒருநாளைக்கு மூன்று திரைப்படங்கள்வரை பார்க்க வேண்டும் என்பதான புரிதலுக்கு மக்கள் வரவழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தெய்வ வழிபாட்டுடன் தொடங்கும் அன்றைய பொழுது, "குற்றம் நடந்தது என்ன' என்பதை அறிந்து கொள்வதுடன் முற்றுப்பெறும். இதன் ஊடாகத்தான் பார்ப்பனக் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. 'தெய்வ தரிசனம்' பார்ப்பன கடவுள்களின் அருமை பெருமைகளைப் பட்டியலிடுகிறது என்றால், 'நிஜம்' நிகழ்ச்சி சிறுதெய்வ வழிபாடுகளை ஏதோ காட்டுமிராண்டித்தனமான செயல் என்பது போல் சித்தரிக்கிறது.
தமிழகத்தில் ஒரு நாளைக்கு அனைத்துச் சேனல்களுமாகச் சேர்த்து சுமாராக முப்பது சீரியல்கள் வெளியாகின்றன. அதாவது முப்பது அரைமணி நேரங்கள். இவையனைத்தின் கதைகளும் ஏறக்குறைய ஒரு ஆணுக்கு இரு மனைவிகள், மாற்றாந்தாய் கொடுமை, திருமணத்துக்கு ஜாதகம் தடை, தம்பி அல்லது அண்ணன் ஊதாரி; உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் அக்கா, அண்ணியின் கொடுமை, ஏமாற்றிக்கைவிடும் காதலன்... போன்ற பீம்சிங் காலத்து 'ப' வரிசைப் படங்களின் கதைகளை ஒற்றித்தான் இருக்கின்றன.
'தங்கம்' சீரியலில் மாவட்ட ஆட்சியாளராக இருக்கும் கங்கா (ரம்யா கிருஷ்ணன்), தனது கணவர் உடல்நலம் குன்றி சுயநினைவு இல்லாமல் இருந்த போது, மண்சோறு சாப்பிட்டாள்; தீ மிதித்தாள்; நூற்றியெட்டு குடங்களில் அம்மனுக்கு அபிஷேகம் செய்தாள். மருத்துவம் குணப்படுத்த வேண்டிய நோயை அம்மன் குணப்படுத்தியதாக கதை பின்னப்பட்டது, மூட நம்பிக்கைகள் நிறைந்த சென்ற நூற்றாண்டில் அல்ல. அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பமும் வளர்ந்துள்ள இன்றைய பொழுதில்தான் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமல்லவா?
அலுவலகமோ, ஏற்றுமதி நிறுவனமோ சக்கையாகப் பிழியப்பட்டு துப்பப்படும் பெண் தொழிலாளர்கள் வீடு திரும்பியதும் அக்கடாவென ஓய்வெடுக்கத் தொலைக்காட்சித் தொடர்கள்
விடுவதில்லை. வீட்டு வேலைகள் ஒருபுறம் என்றால், 'திருமதி செல்வத்தில்' அர்ச்சனா வாழ்க்கையில் முன்னேறுவாளா... 'தங்கத்தில்' கங்காவின் தங்கை ரமாவுக்கு சுகப்பிரசவம் நிகழுமா அல்லது அவளது மாமனாரே அவள் கருவைக் கலைத்து விடுவாரா... 'தென்றலில்' தமிழ் துளசி வாழ்க்கையை சாரு எப்படி அழிக்கப் போகிறாள், இந்தச் சூழ்ச்சிக்கு இந்தத் தம்பதிகள் பலியாவார்களா... 'செல்லமே' தொடரில் தன் மாமியாரிடமிருந்து அமுதாவுக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும், செல்லம்மா பிரிந்த சகோதரர்களை எப்படி சேர்க்கப் போகிறாள்... என்பதை யெல்லாம் கட்டாயம் தெரிந்து கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
பெண்களின் ஓய்வுநேரங்கள் இப்படியாக கொள்ளையடிக்கப்படுகிறது என்றால், ஆண்களின் கழுத்து விளையாட்டை நோக்கித் திருப்பப்படுகிறது. இலங்கை அணியின் ஸ்கோரை இந்திய கிரிக்கெட் வீரர்கள் எட்டுவார்களா? என மனம் துடிக்கத் துடிக்க, நகத்தை கடித்தபடி கொட்டக் கொட்ட விழித்திருந்து பதற வேண்டும்.
இப்படிப் பாலினம் சார்ந்து பொழுது போக்கைப் பிரித்துக் கொள்ளையடிக்கும் ஏகாதிபத்தியங்கள், குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. சுட்டி டிவியும், போகோவும், ஜெட்டிக்ஸ{ம் அவர்களது ஓய்வுநேரத்தைப் பந்தாடுகின்றன. இதெல்லாம் எங்களுக்கு நன்றாகத்தெரியும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது 'வெறும் டைம்பாஸ்'க்குத் தான் என்று சொல்ல முடியாது. பன்னாட்டு முதலாளிகளுக்கு வேண்டுமானால் இது பொருந்தலாம். ஆனால், உழைக்கும் மக்களுக்கு பொருந்தாது. ஏனெனில் உழைப்பைத் திருடுவது நிகழ்காலத்தைத் திருடுவது என்றால், ஓய்வுநேரத்தை கொள்ளையடிப்பது எதிர்காலத்தைத் திருடுவதற்கு சமமானது.
நாற்பதுக்கும் மேற்பட்ட சருமசோப்புகளுக்கும், முப்பதுக்கும் மேற்பட்ட துணிக்கடை விளம்பரங்களுக்கும், இருபதுக்கும் மேற்பட்ட வாஷிங் சோப்புகளுக்கும், பத்துக்கும் மேற்பட்ட ஷாம்புகளுக்கும், ஐந்துக்கும் மேற்பட்ட பற்பசைகளுக்கும் இடையில் உங்கள் ஓய்வுநேர பொழுதுபோக்கை இன்பமாக அனுபவிக்கும் மதிப்புக்குரிய நடுத்தர மக்களே...
உங்கள் சரும பளபளப்புக்கும், பற்கள் மின்னவும், தலைமுடி காற்றில் பறக்காமல் இருக்கவும் எந்த நிறுவனத் தயாரிப்பை பயன்படுத்துகிறீர்கள்? எது சட்டென்று உங்கள் நினைவுக்கு வருகிறது? மாதாந்திர மளிகைப் பொருட்கள் லிஸ்டில் நுகர்வுப் பொருட்களுக்காக எவ்வளவு ஒதுக்குகிறீர்கள்..? மற்றவர்கள் 'பார்வை'யில் அழகாகத் தென்படவேண்டும் என்று மெனக்கெடும் நீங்கள், உங்கள் 'பார்வை'யால் துணிக்கடை முதலாளிகள் அடுத்தடுத்த ஊர்களில் கிளைகள் திறக்க மாதந்தோறும் எத்தனை கோடி ரூபாய்களை 'நன்கொடை' வழங்குகிறீர்கள் என்பதைப் பத்து விநாடிகள் யோசித்து விட்டுச் சொல்லுங்கள்.
கேபிள் டிவியில் ஏகபோகமாக ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சி செலுத்துவதும், பகல் கொள்ளைக்கு சமமாக மக்களிடமிருந்து மாதந்தோறும் நூற்றி ஐம்பது ரூபாய் வரை வசூலிப்பதும் மட்டும்தான் பிரச்சனையா?
• அறிவுச் செல்வன்