Language Selection

புதிய கலாச்சாரம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 

"சே! மெட்ராஸ்ல செம வெயிலு' என்று ஊரையும் வெயிலையும் வெறுத்தவர்கள், ஒய்யாரமாக தான் மட்டும் ஏ.சி. அறையில் உட்கார்ந்திருக்கும் நிலைய அதிகாரியிடம் ஏன் மின்விசிறியை சுழல விடவில்லை என்று சூழ்நிலையிலிருந்து சிந்தித்து கேள்வி எழுப்பவும் தயாராக இல்லை. ஆனால் ஈரப்பதத்தைத் தேடித் தேடி இடத்தேர்வு செய்து கொண்டிருந்த ஒரு நாய் நிலைய அதிகாரி அறையை ஒட்டிப் போய் படுக்கையைப் போட, மோப்பம் பிடித்து சே! என அதிகாரி வந்து விரட்ட, பதிலுக்கு நாய் திட்டிக்கொண்டே ஓடியது. இப்படி பல்வேறு காட்சிகளுக்கிடையே வராண்டா பகுதியின் ஒரு மூலையில் கும்பலாகக் கொட்டிக் கிடந்தது போல குவியலாகப் படுத்துக் கிடந்தவர்களை ஒரு குரல் "ஏய், உட்டோ... உட்டோ.. என்று விரட்ட, வாரிச்சுருட்டிக் கொண்டு குரல் காட்டிய திசைக்கு ஓட்டம் பிடித்தனர்.

ஆட்கள் எழுந்துபோன பின்பும் அவர்களின் ஆவி படுத்துக் கிடப்பது போல அவர்கள் படுத்துக்கிடந்த வியர்வைக்கறை தரையில் வரைபடம் போல படிந்து கிடந்தது. திரும்பவும் எங்கிருந்தோ வந்தவர்கள் கும்பலாக அதே இடத்தில் படுத்தனர் என்பதை விடகளைப்பில் விழுந்தனர் என்பதுதான் சரியாக இருக்கும். அனைவருமே இருபத்தைந்து வயதுக்குட்பட்ட இளைஞர்கள். காலில் கேன்வாஸ் ஷ_, இறுக்கமான, கந்தலான ஜீன்ஸ், எண்ணெய்  அறியாத

தலைமுடி, கழுத்து முகம் என வியர்த்து ஓடுவதைத் தாண்டியும் தூக்கம் அவர்களை எதையும் உணர முடியாதவர்களாகக் கொன்று போட்டிருந்தது. அவர்களுக்கெல்லாம் காவல் போல அவர்களின் பைகளுக்குப் பக்கத்தில் ஒருவர் கண்களெல்லாம் மிளகாய் போல சிவந்து முழங்காலைக் கட்டிக் கொண்டு அசைந்து கொண்டே உட்கார்ந்திருந்தார்.

தோளில் ஒரு அழுக்குத் துண்டு, முழுதும் வியர்வையில் நனைந்து நிறம் மாறிய முழுக்கைச் சட்டை என்ற அவரது அடையாளம் தொலை தூரத்தி லிருந்து பயணித்து வந்திருப்பதை பல வகையில் அடையாளங் காட்டியது. கைக்குப் பக்கத்தில் அவர் சொந்தம் கொண்டாடிய தண்ணீர் பாட்டில் என்னை ஈர்த்தது. வழக்கமாகத் தூக்கி எறியப்பட்ட அந்தப் பாட்டிலில் தண்ணீரோடு அடியில் கறுப்பாக கால்வாசி பகுதி மணிமணியாகத் தெரிந்தது என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட்டது எனக்கு.

எனக்கு இந்தி தெரியாது. இருந்தாலும் தொடர்புகொள்ள வேண்டிய ஆர்வத்தில் யுவர் ஸ்டேட் உ.பி.? என்று கலந்து அடித்தேன். அவரோ எந்த மாநிலம் என்று கேட்டதை எனது உடல் மொழி வாயிலாகப் புரிந்து கொண்டு "பிகாரி' என்றார் புன்சிரிப்புடன். பாட்டிலின் அடிப்பகுதியைக் காட்டி "கியா' என்றேன் மீண்டும். "ஓ! இத்தா... சன்னா... என்றார். பாட்டிலைக் குலுக்கி யும் காட்டினார். "ஓ! கொஞ்சம் தமிழ் தெரியுமா?' என்று ஆர்வமானேன். விரலைக் காட்டி ரெண்டு வருஷம்.. ஹமாரா.. தமிழ்நாடு.. இப்போ ட்ரிச்சி போறான்....' என்று திருச்சி போவதை எனக்கு நன்றாகவே புரிய வைத்தார். எனது  ஆர்வம் பெரும்பாலும் அந்தப்பாட்டிலைப் பற்றியே இருந்தது. என்னது பாட்டிலுக்கு அடியில சன்னாவா.. கடலையா? என்று ஜாடை காட்டிக் கேட்டேன்.

"ஆமா.! சன்னா.. சன்னா.. தெர்ராது... உங்களுக்கு கல்லையா.. இன்னாகல்ல... எனக்கு தெர்ல.. நீ சன்னா தெரியாது...' என்னிடம் திரும்பக் கேட்டார். மேலும் தண்ணீர்ப் பாட்டிலை என் முகத்துக்கு நேரே உயர்த்திக் காட்டினார். "ஓ! தெரியுது மூக்கு கடலை... இதுக்கு பேரு மூக்கு கடலை என்றேன்.

"இன்னா... மூக்கு கல்ல..' சொல்லி சொல்லிப் பார்த்து சிரித்தார். பெரும்பாலும் பேச்சுக்குப் பேச்சு சிரித்தவாறு, களைப்பை மறந்து புன்னகை முகமாகக் காட்சியளித்தார்.

"எதுக்கு தண்ணியில... மூக்கு கல்ல... சன்னா? சன்னா?' என்று ஜாடையோடு கேட்டேன்.

"நம்ப, த்ரீ டேஸ் ட்ரெயின்ல வர்றான்... எல்லா டைம் கானா நை! சன்னா வாட்டர் குடிச்சி தோ சன்னா சாப்ட்டா... இன்னா சொல்லுவ நீ பூஃக், பூஃக் அதான் .. என்று வயித்தைக் காட்டி ஹேய் அதான் பசி நிக்கல் ஜாயா!... ஹா.. ஹா... ஓங்கி சிரித்தார். ஜாடை பல காட்டி எனக்குப் புரிய வைத்த களைப்புடன், ஒரு மடக்கு மூக்கு கடலை தண்ணீரைக் குடித்து, ரெண்டு கடலையையும் மென்று கொண்டு ஹேய்... இதி... நம்பபடா கானா.. என்று மீண்டும் என்னைப் பார்த்து சிரித்தபடியே ஒரு மடக்குத் தண்ணீரைக் குடித்துக் கொண்டிருந்தார்.

பசியின் வேகத்தில் மூக்கு கடலை தண்ணீரோடு மோதி, ஏறி இறங்கும் அவரது குரல்வளையின் வேகத்திலும், சத்தத்திலும் குலை நடுங்கிப்போனேன் நான்! அந்த பிகாரியைப் பார்த்து என்னால் பதிலுக்குச் சிரிக்க முடியவில்லை.

• சுடர்விழி