Language Selection

புதிய கலாச்சாரம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 

கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் வாரம், உலகக் கோப்பை கிரிக்கெட் முடிந்து ஐ.பி.எல் போட்டிகள் துவங்குவதற்கு இடைப்பட்ட அந்த நாட்களில், ஆங்கிலச் செய்தி ஊடகங்களின் அரங்குகளில் அனல் பறந்து கொண்டிருந்தது. அது வரை நாட்டு மக்களுக்கு எந்தவிதத்திலும்  அறிமுகமின்றி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத பயிற்சி முகாம்களின் பாடத்திட்டங்களில் மட்டுமே பதுங்கிக் கிடந்த அண்ணா ஹசாரே தில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் ஜன் லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை அப்போது தான் ஆரம்பித்திருந்தார்.

உடனே இதுதான் ஊழலுக்கு எதிரான இறுதி யுத்தம் என்று ஊடகங்கள் போர்க்குரல் எழுப்பத் துவங்கின. இந்தயுத்தத்தில் மட்டும் எப்படியாவது வென்று விட்டால் இந்தியா வல்லரசாவதை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என்று சொல்ல ஆரம்பித்தன. திசைதெரியாத இருளின் நிசப்தத்தில் ஆழ்ந்துகிடக்கும் ஒரு சமூகத்தில் இந்த உண்ணாவிரதம் ஒரு விடிவெள்ளியென்றும், மக்களுக்கான விடிவு இந்தப் போராட்டங்களில் பங்குகொள்வது மட்டும் தான் என்றும் சினிமா நடிகர்களும், பிற மேட்டுக்குடிப் பிரபலங்களும், சீமான்களும், சீமாட்டிகளும் தொலைக்காட்சித் திரையில் தோன்றி ஓயாமல் ஓதினர்.

இதைத் தொடர்ந்து அண்ணா ஹசாரேவைப் பின்னின்று இயக்கிய என்.ஜி.ஓ.க்கள் பல்வேறு நகரங்களில் கூட்டிய கூட்டங்களில் சில பத்து பேர்கள் பங்கு பெற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் வந்தனர். 'ஆஹா.. இதோ தெரிகிறது பாருங்கள் இந்தியாவின் தாஹீர் சதுக்கம்' என்று ஆங்கில ஊடகங்கள் புளகாங்கிதம் அடைந்தன. தமது ரசிகர்களையும் அவ்வாறே அடையச் செய்தன. அண்ணா ஹசாரேவின் போராட்டத்தை விமர்சித்த ஒரு சில ஊடகங்களும், இணையதளங்களும் இந்தத் திடீர்ப் போராளிகளுடைய ரசிகப் பட்டாளத்தின் கடுமையான விமர்சனங்களுக்குத் தப்பவில்லை.

அரசியல்வாதிகள் செய்யும் ஊழல்களுக்கு எதிராகவும், பிற முறைகேடுகளுக்கு எதிராகவும் எந்தவிதமான போராட்டங்களும் இன்றி நாடே மயான அமைதியில் ஆழ்ந்து கிடக்கும் நிலையில் வராது வந்த மாமணி போல் உதித்திருக்கும் அண்ணா ஹசாரேவை ஆதரிப்பது ஒன்றே இப்போதைய நமது கடமை என்றார்கள். இதை ஆதரிக்காதவர்கள் அனைவரையும் ஊழலுக்குத் துணை போகிறவர்களாகவே கருத முடியும் என்றார்கள். நீ எங்களோடு இல்லையென்றால் எமது எதிரியாகிறாய் என்று புஷ்ஷின் வார்த்தைகளில் அனல் கக்கினார்கள்.

நாடும் மக்களும் அமைதியாகத்தான் இருந்தனரா?

சர்வதேச அளவில் உலகமயமாக்கப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டதன் உச்சவிளைவாய் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தத்திற்கான எதிர்விளைவுகள் உலகளவில் கடந்த பத்தாண்டின் மத்தியப் பகுதியில் இருந்து வெளிப்பட்டுக்

கொண்டுதானிருக்கிறது. ஐரோப்பியநாடுகள் ஒன்றைத் தொடர்ந்து ஒன்று திவாலாகிக் கொண்டிருந்தன.  அந்நிலையில் பல்வேறு நாடுகளில் வேலை இழப்பிற்கும், சமூக நலத்திட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கும் எதிராக நடந்த போராட்டங்களால் ஐரோப்பியக் கண்டமே கொதிநிலையில் இருக்கிறது.

அதேபோல் வட ஆப்ரிக்க நாடுகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமுல்படுத்தப்பட்டதன் விளைவாய் வாழ்விழந்த தொழிலாளர்கள் தமது போராட்டங்களைத் துவங்கியிருந்தனர். ஆங்காங்கே சின்னதும் பெரியதுமாய் குமிழ் விட்டுக் கொண்டிருந்த போராட்டங்கள் கடந்த இரண்டு வருடங்களில் மாபெரும் மக்கள் கிளர்ச்சிகளாக வெடித்தெழுந்துள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் பங்குபெற்ற அப்போராட்டங்களின் விளைவாய் சில நாடுகளில் ஆட்சியாளர்களே அஞ்சி ஓடும் நிலைமை கூட உருவானது.

ஆனால், ஒரு புரட்சிகரமான அரசியல் தலைமையின்றி தன்னெழுச்சியாக நடந்த அப்போராட்டங்கள் ஆட்சியாளர்களை மாற்றுவது என்கிற அளவில் தம்மைச் சுருக்கிக் கொண்டன. இருப்பினும், இன்றளவும் எகிப்தில் புதிதாய் அதிகாரத்தில் அமர்ந்துள்ள இராணுவத்திற்கெதிராக  மக்கள் போராட்டங்கள் நடந்து தான் வருகின்றன. ஏமன், பஹ்ரைன் போன்ற நாடுகளில் அரசின் கொடூரமான அடக்குமுறையைத் தாண்டி இன்றும் போராட்டங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஒருபக்கம் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகள் தீவிரமாக அமுல்படுத்தப்படுவதைத் தொடர்ந்து சமூக நலத்திட்டங்களை அரசு கைவிட்டது. இன்னொரு பக்கம் பொருளாதாரப் பெருமந்தத்தினால் ஏற்பட்ட வேலையிழப்பு என்று நடந்த இரு முனைத் தாக்குதல் மேற்கில் மக்களைத் தெருவிற்கு இழுத்து வருகிறது. புதிய பொருளாதாரக் கொள்கைகள் விளைவித்த சமூகப் பொருளாதாரச் சீர்குலைவிற்கான எதிர்வினை இந்தியாவிலும் இதே காலகட்டத்தில் வேறு வகைகளில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.

நெருக்கடியிலிருந்து மீளவும், மேற்கில் சரிந்த தனது சந்தைகளை மறுகட்டமைப்பு செய்யவும் மூன்றாம் உலக நாடுகளின் வளங்களை அபரிமிதமாய் கொள்ளையடித்துச் செல்ல வேண்டிய தேவை பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும், தேசங்கடந்த தொழிற்கழகங்களுக்கும் இருந்தது. இவர்களுக்குச் சேவை செய்வதில் ஓட்டுக்கட்சிகளிடையே எந்தப் பாகுபாடும் இன்றி காங்கிரசு, பாரதிய ஜனதா, போலிக் கம்யூனிஸ்டுகள் என்று அனைவரும் ஓரணியில் நின்றனர். நாட்டின் எல்லைகளையும், வளங்களையும் பன்னாட்டு மூலதனத்திற்குத் திறந்து விட்டனர். இதன் வெளிப்பாடுதான் நிலப்பறிப்பு, இயற்கை வளங்களை கேள்விமுறையின்றி கூறுபோட்டு விற்பது என்று பச்சையாக வெளிப்பட்டது.

இதன் காரணமாக ஒரு பக்கம் தேசத்தின் இயற்கை வளங்களைக் கைப்பற்ற பன்னாட்டுக் கம்பெனிகளிடையேயும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளிடையேயும் பெரும் போட்டி உண்டாகிறது. இந்தப் போட்டியும், அதனூடாய் நடந்த கழுத்தறுப்புகளும், உள்குத்துகளும் அவற்றில் நடந்த ஊழல்களை வெளிப்படுத்தி சந்தி சிரிக்க வைத்தது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் வெளிப்பட்டது கூட முதலாளிகளிடை@ய நடந்த கழுத்தறுப்புப் போட்டியின் விளைவாகத் தான். இன்னொரு பக்கம் பன்னாட்டு மூலதனத்தின் காலடியில் சரணடைந்திருந்த ஆளும் கும்பல் வளங்களைக் கைப்பற்றி அவர்களுக்குப் படையலிட மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து மூர்க்கத்தனமாய் வெளியேற்றிக் கொண்டிருந்தது.

வரலாறு காணாத ஊழல்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்த அதே நேரத்தில், இழந்த தமது வாழ்வுரிமையை மீட்க மக்கள் போராட்டங்கள் நாடெங்கும் வெடித்துக் கிளம்பியது. நிலப்பறிப்பை எதிர்த்தும் வாழ்வுரிமையை மீட்கவும் சிங்கூர், நந்திகிராம், லால்கர், ஒரிசா, சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் மற்றும் இந்தியாவெங்கும் நடந்த மக்கள் போராட்டங்களின் செய்திகளே சென்ற ஆண்டு தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்திருந்தது. இதுவே தேசமெங்கும் விவாதத்தில் இருந்தது.

நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் மக்களோடு கைகோர்த்து, களத்தில் நின்று அரசின் அடக்குமுறைக் கருவிகளை நேர்கொண்டு எதிர்த்தனர். இப்போராட்டங்களை நசுக்கியழிக்க மத்திய அரசு பச்சை வேட்டைப் படுகொலைகளை நிகழ்த்தியது. மத்திய இந்தியாவெங்கும் போராடும் மக்கள் சிந்திய இரத்தத்தால் சிவந்தது. தட்டிக் கேட்க நாதியில்லை என்று அம்மக்களை அற்பமாகநினைத்து நிலங்களையும், வளங்களையும் கேட்பாரின்றி தேட்டை போடலாம் என்று வாயில் எச்சிலூற கணக்குப் போட்டு வந்த பன்னாட்டுக் கம்பெனிகள் இன்று வரை கையைப் பிசைந்துகொண்டு நிற்கின்றன.

பச்சை வேட்டைப் படுகொலைகள் பற்றிய செய்திகள் மனச்சாட்சி உள்ள எவரையும் பிடித்து உலுக்கும். புதிய பொருளாதாரக் கொள்கைகளால் பலனடைந்த நடுத்தர வர்க்கத்தின் பெரும்பான்மை அரசின் இந்த பயங்கரவாத வெறியாட்டத்தை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவ்வர்க்கத்தின் ஒரு பிரிவினர் அரச பயங்கரவாதத்தைக் கண்டிக்க முன்வந்தனர். நாடெங்கும் நடந்த பச்சை வேட்டைப் படுகொலைகளுக்கு எதிரான கருத்தரங்குகளிலும், வேறு போராட்ட வடிவங்களிலும் இப்பிரிவினர் கணிசமான அளவில் பங்கு கொண்டனர்.

அறியாமையில் ஆழ்ந்திருக்கும் அப்பாவிக் கூட்டம் தானே என்று சாமானியமாய் கணக்குப் போட்டு களத்தில் இறங்கிய சிதம்பரம்  மன்மோகன் கும்பலால் மக்களுக்கு எதிரான இப் போரில் தீர்மானகரமான எந்த ஒரு வெற்றியையும் பெற முடியவில்லை. பல லட்சம் கோடி மதிப்பு கொண்ட கனிமங்களைச் சுரண்டிச் செல்ல பல நூறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு காத்துக் கிடந்த பன்னாட்டு முதலாளிகளின் நிலவரம் தேன் கூட்டில் கையை வைத்த கதையாகிப் போனது.

ஆளும் கும்பல் உருவாக்கியளித்த 'வில்லன்' பொம்மை கூட்டத்தோடு நிற்கும் கள்ளன்' இதோ கள்ளன். அதோ கள்ளன்' என்று எல்லோருக்கும் முந்திக் கூச்சலிட்டு மற்றவர்களின் கவனத்தை மாற்றுவானாம். மொத்தக் கூட்டமும் அங்கும் இங்கும் அலைக்கழிந்து கொண்டிருக்க கள்ளனோ ஓசைப்படாமல் நழுவி ஓடுவானாம். அரசின் நிலப்பறிப்பையும், வாழ்வுரிமையை அழிப்பதையும் எதிர்த்து நாடெங்கும் மக்கள் போராடிக் கொண்டிருக்கையில் முதலாளித்துவ ஊடகங்கள் இதோ இது தான் உங்களது தலையாய பிரச்சினை என்று 'ஊழலை' அடையாளம் காட்டுகிறது.

நாடெங்கும் மெழுகுவர்த்தியும், கையுமாய்க் கூடும் சில பத்து மேட்டுக்குடியினரை வீரதீரமிக்க போர்வீரர்கள் என்கிறார்கள். இவற்றையெல்லாம் செய்திகள் போலல்லாமல் இருபத்து நான்கு மணி நேரமும் திரும்பத் திரும்பச் சொல்லி ஏதோ மொத்த நாடும், நாட்டு மக்களும் ஒட்டுமொத்தமாக வரிந்து கட்டிக் கொண்டு ஊழலை எதிர்த்துக் களத்தில் நிற்பது போலச் சித்தரிக்கிறார்கள்.

இவையெல்லாம் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கான செய்தி ஊடகங்களின் திருகு வேலைகள் தானேயென்று புறந்தள்ளி விட முடியாது. இவர்கள் தான் தேசத்தின் அரசியல் அரங்கில் எது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவேண்டும், எது பின் தள்ளப்பட வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். தேசிய அரசியலின் அவ்வப்போதைய திசைவழி என்னவென்று கார்ப்பரேட் செய்தி ஊடகங்களின் ஸ்டூடியோக்களில் இருந்து தான் தீர்மானிக்கிறார்கள். செய்தி ஊடகங்கள் அண்ணா ஹசாரேவையும், பாபா ராம்தேவையும் நோக்கி தமது கேமராக்களைத் திருப்பிய இந்த இடைவெளியில் நிலப்பறிப்புக்கு எதிராகவும், தமது வாழ்வுரிமைக்காகவும் நடக்கும் மக்கள் போராட்டங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.

அண்ணா ஹசாரேவுடன் இன்முகத்தோடு பேசும் அதே அரசு தனது பயங்கரவாத முகத்தை ஐரோம் ஷர்மிளாவிடம் காட்டிக் கொண்டிருப்பதை மக்களின் கவனத்திற்கே வராமல் தடுக்கிறார்கள். இது ஒருபுறம் என்றால், புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அமுலாக்கத்தால் விளைந்துள்ள சீர்குலைவுக்கு எதிராக மக்களிடையே இயல்பாகத் தோன்றக் கூடிய ஆவேசம் எந்தத்திசையில் செல்ல வேண்டும் என்பதையும், அதன் இலக்கு என்னவாக இருக்கவேண்டும் என்பதையும் இவ்வூடகங்களின் ஸ்டூடியோக்களிலேயே தீர்மானிக்கிறார்கள்.

இதோ மும்பையின் இரண்டாவது பெரிய சேரிப்பகுதியிலிருந்து உழைக்கும் மக்களை பலாத்காரமாய் விரட்டியடித்து விட்டு அந்நிலத்தைப் பிடுங்கிரியல் எஸ்டேட் முதலைகளின் கைகளில் ஒப்படைக்க மகாராஷ்டிர அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை அம்மக்கள் எதிர்த்து நிற்கிறார்கள். ஜெய்தாபூரின் அணுமின் நிலையத்தை எதிர்த்துப்போராடும் மக்களுடன் துப்பாக்கிக்குழல் மூலம் பேச்சு வார்த்தை நடத்துகிறது அரசு. ஒரிசாவிலோ தென்கொரியாவின் போஸ்கோ நிறுவனம் உருக்காலை அமைப்பதற்காக அரசு மேற்கொண்டு வரும் நிலப்பறிப்பை எதிர்த்து மக்களுடன் சிறுவர்களும் களமிறங்கியுள்ளனர்.

இன்னும் இது போல் காஷ்மீரிலும், வடகிழக்கிலும் மற்றும் நாடெங்கும் விலைவாசி உயர்வுக்கெதிராக, விவசாயம் அழிக்கப்படுவதற்கெதிராக என நடந்து வரும் போராட்டங்களையெல்லாம் பின்தள்ளி விட்டு அண்ணா ஹசாரே புன்னகைக்கிறார். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இருக்கும் ஒரே பிரச்சினை 'ஊழல்' தான் என்றும், சகல பிரச்சினைகளுக்கும் சர்வரோக நிவாரணி இதோ இந்த ஜன் லோக்பால் மசோதா மட்டும் தான் என்றும் அண்ணா முன்மொழிகிறார். அதையே வழிமொழிகின்றன ஊடகங்கள்.

ஜன் லோக்பால் நிறைவேறி, அதன் மூலம் ஊழல் ஒழிந்து, நாடு உடனடியாய் வல்லரசாக மாறுவதை சில அரசியல்வாதிகள் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்கள் மட்டும் தான் எதிர்க்கப்பட வேண்டிய வில்லன்கள் என்றும் ஊடகங்கள் எடுத்துக் கொடுக்கின்றன. ஆனால், எதார்த்தத்தில் ஊழல் சட்டப்பூர்வமாகி, அதன் ஆன்மாவும் உயிரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளினுள் புதைந்து கிடக்கும் நிலையில், அதன் நடைமுறையில் ஏற்படும் சில்லறைத் திருட்டுகளையே ஒட்டு மொத்தமாக ஊழல் என்று முன்தள்ளுவதன் மூலம் உண்மையான ஊழலை மக்களின் பார்வையில் இருந்து இவர்கள் மறைக்கிறார்கள்.

புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் உருவாகியிருக்கும் ஒரு புதுவிதமான  நடுத்தர வர்க்கத்திற்கு இந்தக் கோரிக்கையும், இவர்கள் சொல்லும் போராட்ட வடிவமும் ஏற்புடையதாய் இருக்கிறது. ஊழல் என்றில்லை, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஒரு வீடியோ கேம் முடியும் நேரத்தில் முடிந்து விட வேண்டும். அதிலும், வலி மிகுந்த போராட்டங்கள் ஏதுமின்றி அது சாத்தியப்பட வேண்டும் என்று கருதும் இவ்வர்க்கம், தமது ஊசலாட்ட மனப்போக்கிற்கு ஏதுவாக வைக்கப்படும் இது போன்ற எளிய தீர்வுகளைச் சட்டென்று பற்றிக் கொள்கிறது.

ஊழல் பேர்வழிகளைத் தூக்கில் போடுவோம் என்று அண்ணா ஹசாரே, பெய்டு நியூஸ் விவகாரத்தில் ஊழல் கறைபடிந்து ஊரெல்லாம் அம்பலமான டைம்ஸ் நௌ தொலைக்காட்சியிலும், நீரா ராடியா சார்பாக தரகு வேலை பார்த்து மாட்டிக் கொண்ட பர்க்கா தத்திடமும் எந்தக் கூச்சமும் இன்றிச் சொல்ல முடிகிறது என்றால், அதற்கு அடிப்படையாய் இருப்பது அவரது இரசிகர்களின் ஆழமான அரசியல் புரிதலற்ற மழுங்கல் தனமும், உடனடி விளைவைக் கோரும் அவர்களின் பாப்கான் காலாச்சாரமும் தான்.

ஆக, நடந்து வரும் இந்தக் கோமாளிக் கூத்துகள் அனைத்தும் நடுத்தர வர்க்க மக்கள் எதிர்த்துப் போராடி 'விளையாட' ஒரு வில்லன் பொம்மையை உருவாக்கிக் கொடுத்துள்ளது. இது கருத்துருவாக்கம் போன்றதொரு எதிர்ப்புருவாக்கம். இந்த எதிர்ப்பு என்பதும் அதற்கான போராட்டம் என்பதும் ஊழலுக்கு மெய்யான காரணமாக இருக்கும் பருண்மையான காரணிகள் அல்ல  இது வெறும் நிழல் சண்டைதான். எதார்த்தத்தில் இவர்கள் காற்றோடு கத்தி வீசிக் கொண்டிருக்கும் அதே வேளையில் நாட்டு வளங்கள் அனைத்தும் பின்வாசல் வழியே கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது.

அண்ணா கோரும் ஜன் லோக்பால் மசோதாவும், பாபாராம் தேவ் கருப்புப் பணத்தை திரும்பப் பெற முன்வைக்கும் யோசனைகளும் நடைமுறையில் சாத்தியமே இல்லாத தீர்வுகள். மொத்த அரசு இயந்திரமும் பழுதுபட்டுள்ளது என்று அறிவிக்கும் அண்ணா ஹசாரே, அதன் சிதைந்து போன பாகங்களைக் கொண்டே ஊழல் எதிர்ப்புக்கான புதிய இயந்திரத்தை உருவாக்கப் போவதாகச் சொல்கிறார். அதற்கு, அவர் 'பேச்சு வார்த்தை' நடத்திக் கொண்டிருப்பதும் அவரே ஊழல்மயமானது என்று சொல்லும் அதே பழைய இயந்திரத்தோடுதான்.

இப்படி நுனிக் கிளையில் உட்கார்ந்து கொண்டு அடிக்கிளையை வெட்டும் யோசனை என்பது எதார்த்தத்தில் இவற்றையெல்லாம் உண்மை என்று  நம்பி மெழுகுவர்த்தியோடு களத்தில் நிற்கும் கும்பலை ஒரு கட்டத்தில் சோர்வுக்கும், அவநம்பிக்கைக்குமே உள்ளாக்கும். ஏற்கெனவே அரசியல் நீக்கம் செய்யப்பட்டு மழுங்கடிக்கப்பட்டிருக்கும் இவர்கள், இந்தப் போராட்ட அனுபவங்கள் தரும் ஏமாற்றத்தையும், தோல்வி மனப்பான்மையையும் தமது ஆயுசுக்கும் மறக்க மாட்டார்கள். அதோடு சேர்ந்து இனிமேல் உண்மையான சமூக மாற்றத்திற்கான எந்த விதமான போராட்டங்களுக்கோ முன்னெடுப்புகளுக்கோ ஆதரவு கூட அளிக்காமல் முற்றிலும் தம்மைத் தாமே சமூக விலக்கம் செய்து கொள்ளவும் கூடும்.

இதைத் தான் ஆளும் வர்க்கமும் எதிர்பார்க்கிறது. இதனால் தான் தமது வாழ்வுரிமைக்காக போராடும் மக்கள் மேல் ஆயுதப் படைகளை ஏவும் அரசு, அண்ணா ஹசாரேவோடு முகம் கொடுத்துப் பேசுகிறது  பாபா ராம் தேவை வரவேற்க நான்கு காபினெட் அமைச்சர்களை அனுப்பி வைக்கிறது. மக்கள் இந்த மோசடிகளைப் புரிந்து கொள்வதோடு, தமது போராட்டத்தின் தெளிவான இலக்கு மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளும், அதை ஒரே குரலில் ஆதரிக்கும் ஓட்டுப் பொறுக்கிகளும் தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பானையில் கொதிக்கும் ஊழல்களுக்கும், முறைகேடுகளுக்கும், லஞ்ச லாவண்யங்களுக்கும், கருப்புப் பணப் பதுக்கலுக்கும் காரணமாக இருப்பது அதன் அடியில் எரியும் மறுகாலனியாக்கக் கொள்ளி தான். எரியும் கொள்ளிக்கட்டையைப் பிடுங்கி விட்டால் கொதிக்கும் முறைகேடுகள் தானே அடங்கிவிடும்.

•  பாலன்