வறட்சியோ, வெள்ளமோ இரண்டிலும் நீர் தரும் சிரமங்களைச் சுமப்பது மக்கள்தான். தண்ணீரைத் தனியார்மயமாக்கினால் இந்தச் சிரமங்கள் கூடுமா, குறையுமா?
தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் இக்காலத்தில், நீரைத்திட்டமிட்டுச் சேமிக்கவும், பொறுப்பாக விநியோகிக்கவும் நுகரவும் தண்ணீரைத் தனியார்மயமாக்க வேண்டும் என உலகவங்கி முதல் தாராளமய ஆதரவாளர்கள் வரை வலியுறுத்துகின்றனர். தற்போதைய மழையால் கிளம்பியிருக்கும் ஒரு செய்தி என்னவென்றால் இன்னும் இரண்டு வருட காலத்திற்கு தமிழகத்தில் குடிநீர்ப் பஞ்சம் இல்லையாம். இதன்படி பரிசீலித்தால் தற்போதைய தண்ணீர்ச் செழிப்பின் காரணமாகத் தண்ணீரைத் தனியாருக்கு விடவேண்டியதில்லை என்றாகிறது. தண்ணீரைத் தொழிலாக்க விரும்புபவர்கள் என்ன சொல்கின்றனர்?
""தண்ணீரைக் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற நிலை வந்தால்தான் மக்களிடம் பொறுப்பு வருமாம்; அதன்மூலம் மட்டுமே தண்ணீர் பற்றாக்குறையை நீண்டகால நோக்கில் திட்டமிட்டுத் தவிர்க்க முடியுமாம்.'' இதையே விவசாயிகளும் பாசனத்திற்கான நீரைப் பணத்தைக் கட்டிப் பெறுவதே நல்லது என பிரதமர் மன்மோகன் சிங்கும் கூறுகிறார். இவை வெறும் யோசனைகளோ, நீரின் பயன்பாடு குறித்த நல்லொழுக்க உபதேசங்களோ அல்ல. உலக வங்கியின் உத்தரவின்படி பல மாநிலங்களில் பல்வேறு வடிவங்களில் ஏற்கெனவே அமலுக்கு வந்துவிட்ட யதார்த்தம் என்பதுதான் முக்கியம்.
தண்ணீர் குறித்த இந்தப் பொறுப்புணர்ச்சியை வறட்சிக் காலத்திலிருந்து நகர்த்தி இப்போதைய வெள்ளக் காலத்திற்கு நீட்டித்துப் பார்ப்போம். சமீபத்திய மழை, வெள்ளம் உருவாக்கியிருக்கும் பிரச்சினைகள் மிகவும் விரிந்தது. தமிழகம் முழுவதும் இதுவரை 300 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 2000 ரூபாய், 10 கிலோ அரிசி என்ற நிவாரணப் பொருட்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அவலத்தில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக ஆறு சென்னைப் பெண்கள் பரிதாபகரமாக இறந்திருக்கின்றனர். காவிரி, கொள்ளிடத்தின் இருகரையோர விவசாய நிலங்களும், காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரிலும் பல்லாயிரம் ஹெக்டேர் நிலங்களும், இன்னும் வடதமிழகத்தின் பயிர் நிலங்களும் சாகுபடி முடியாத நிலையில் மூழ்கின. வடசென்னையிலும் திருச்சியிலும் தமிழக வடக்கு மாவட்டங்கள் முழுவதிலும் இன்னமும் நீர்வடியாத ஏழை மக்களின் சேரிகள் ஏராளம். இந்த இழப்புகளுக்கு யார் பொறுப்பேற்க முடியும்? தண்ணீரைத் தனியார் உடைமை ஆக்கியே தீர வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்கள் என்ன பதில் சொல்ல முடியும்?
பாசன நீரை பணம் கட்டிப் பெற வேண்டும் என்று பேசும் மன்மோகன் சிங் மூழ்கிய நிலங்களுக்கு யாரிடமிருந்து பணம் வாங்கித் தருவார்? மக்களிடமிருந்து பெற்ற வரிப்பணத்திலிருந்து நிவாரணம் என்ற பெயரில் பிச்சை மட்டும் இடுவார். அதைப் பெறுவதற்காக மக்கள் அடித்துக் கொண்டு சாக வேண்டும். விசயத்தைச் சுருக்கினால் இதுதான் உண்மை. தண்ணீர் தரும் இலாபம் முதலாளிகளுக்கு தண்ணீர் தரும் நட்டம் மக்களுக்கு. தண்ணீர் குறித்த தனியார்மய பொறுப்புணர்ச்சியின் இலட்சணம் இதுதான்.
தற்போதைய தொடர் மழையினால் சென்னைப் படுகை என்றழைக்கப்படும் நிலத்தடி நீரின் மட்டம் மூன்று முதல் நான்கு அடியாக உயர்ந்திருக்கிறதாம். இந்த உயர்வினால் மகிழ்ச்சி யாருக்கு? இந்தப் படுகையில் வரும் ஆரணி, குசஸ்தலையாற்றுப் படுகைகள் உலகவங்கி உத்தரவுப்படி தனியாருக்குத் தாரைவார்க்கப்பட இருக்கின்றன. சென்னைக் குடிநீர் வடிகால் வாரியத்தின் திட்டங்களுக்குக் கடன் கொடுப்பது உலகவங்கி என்பதால் சென்னையின் முழுமையான குடிநீர் விநியோகம் விரைவில் தனியாருக்குப் போகும் என்பது நிச்சயம். ஆக இதன்படி மழை தந்த நிலத்தடி நீர்மட்டம் அவர்களுக்கு. மழை தந்த வெள்ளமும் பேரழிவும் மக்களுக்கு! இலாபகரமான இயற்கை மட்டும் தனியாருக்கு என்பது அயோக்கியத்தனமில்லையா? நிலம் நீரை உறிஞ்ச முடியாதபடி நகரத்தை ஆக்கியது மக்களில்லையே, முதலாளிகள் தானே? எனவே ஒரு வர்த்தக நியதிப்படிப் பார்த்தாலும் முதலாளிகள் இயற்கையின் இரு முகங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வதுதானே சரியாக இருக்க முடியும்?
மேலும் மழைதந்த வெள்ளத்திற்கு மக்கள் எப்படிக் காரணமில்லையோ, அதுபோல இயற்கையும் காரணமில்லை என்பதுதான் அறிவியல்பூர்வமான உண்மை. வடகிழக்குப் பருவ மழை ஒவ்வொரு வருடமும் பெய்ய வேண்டிய அளவு இந்த ஆண்டு மொத்தமாகப் பெய்து விட்டது, அவ்வளவுதான். அடுத்து இந்த மழை அளவு 4,5 ஆண்டுகளுக்கொரு முறை பெய்ததும், பெய்யாமல் வறண்டு போனதும் உண்டு. அப்போதெல்லாம் வராத வெள்ள அபாயம் தற்போது வரக் காரணம் என்ன? ஒரே காரணம் வெளிநாட்டு உள்நாட்டு முதலாளிகளின் நலன்களுக்கேற்ப நகரங்கள் செயற்கையாக உப்பவைக்கப்பட்டதுதான்.
உயர்நீதி மன்ற உத்தரவின்படி ஏரிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வருவாய்த்துறை மட்டும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும் கையில் வரைபடத்தை வைத்துக் கொண்டு சென்னையிலுள்ள ஏரிகளைத் தேடுகின்றனர். சென்னை சேத்துப்பட்டு ஏரியைத்தவிர மற்ற ஏரிகள் இந்த இருபது ஆண்டுகளில் காணாமல் போயுள்ளன. பிரம்மாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்புக்கள், வணிக வளாகங்கள், குப்பைக் கிடங்குகள், வெளிநாட்டு கார் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப மையங்கள் ஆகியவற்றுக்காக அந்த ஏரிகள் உருமாறியுள்ளன. ஆளும் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், முதலாளிகள் கூட்டணியில் சக்கை போடு போடும் ரியல் எஸ்டேட் தொழிலின் ஆன்மாவே இந்த ஏரிகள்தான்.
கொடுங்கையூர் ஏரி தொழிற்சாலை மற்றும் மாநகரக் கழிவுகள் கொட்டப்படும் பிரம்மாண்டமான குப்பை மேடாக மாற்றப்பட்டு விட்டது. இன்று குப்பையும், வெள்ள நீரும், கழிவுநீரும் கலந்து வடசென்னையே கூவமாகி விட்டது. இந்த வருடம் மட்டுமல்ல இனிவரும் வருடங்களிலும் சிறு மழை கூட இங்கு பிரச்சினைதான். மழையின் தொடர்கதையாக காலரா, டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்களும் தமிழகத்திலேயே முதன்முதலாக வடசென்னையில்தான் பரவும். ரியல் எஸ்டேட் மற்றும் தொழிற்சாலை முதலாளிகளின் நலனுக்காக வடசென்னை வடக்கிருக்கும் சென்னையாக மாற்றப்பட்டு விட்டது.
அதேபோல மதுரவாயல், அம்பத்தூர், போரூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிகளும் ரியல் எஸ்டேட் முதலாளிகளால் வளைக்கப்பட்டு அதிகாரவர்க்க ஆதரவுடன் விற்கபட்டிருக்கின்றன.
நகரின் நிலம் முதலாளிகளால் அபகரிக்கப்படுவதற்கேற்ப மழைநீர் வடியாமல் தேங்குவது அதிகரித்து வருகின்றது. சென்னை நகரின் புறம்போக்கு இடங்கள் முதலில் ஆளும் கட்சி பிரமுகர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நகர், சத்யா நகர் என்று குடிசைப் பகுதிகள் போட்டு, பின்பு குடிசைகள் அகற்றப்பட்டு பல வணிக மையங்களும், பொழுதுபோக்குப் பூங்காக்களும் கட்டப்பட்டுள்ளன. சென்னையின் குடிசைப்பகுதிகள் அனைத்தும் தினம் ஒன்றாய் தீப்பிடித்து எரிவதற்குக் காரணம் அந்நிலத்தை முதலாளிகள் கைப்பற்றுவதற்குத்தான். தற்போது தமிழக அரசு ஐ.டி. (ஐ.கூ.) எனப்படும் தகவல் தொழில் நுட்பத் துறைக்கு பல ஹெக்டேர் நிலத்தை இலவசமாகவோ, பாதி விலைக்கோ, எவ்வித வரிகளின்றியும் தருகின்றது. தற்போது சென்னை நிலம் அதிகமும் இத்துறைக்காக ஒதுக்கப்படுகின்றது.
நிலம் பொதுச்சொத்தாக இருக்கும் போது வெள்ள அபாயம் குறைவாகவும், தனிச்சொத்தாக மாற மாற அபாயம் அதிகரிக்கும் என்பதை யாரும் உலக வங்கியின் கடனுதவியுடன் செய்யப்படும் ஆய்வின்றிப் புரிந்து கொள்ளலாம். அடுத்து சென்னையில் ஓடும் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் மூன்றும் கடந்த சில ஆண்டுகளாகக் குறுக ஆரம்பித்துள்ளன. இவற்றின் கரைகளில் பெரும் வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. சென்னையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் வடிகால் குழாய்கள் சுமார் 600 கிலோமீட்டர் நீளத்திற்கு உள்ளன. இவை தனியார் தொலைபேசி நிறுவன முதலாளிகளின் கேபிள் பதிக்க தோண்டப்பட்டு உடைபட்டு அடைபட்டு எவ்விதப் பராமரிப்பும் இல்லாமல் இருக்கின்றன. இறுதியில் மழைநீர் வடிகால் முறைகள் அடைபட்டு, வெள்ளம் ஊருக்குள் ஓடுவது தவிர்க்க முடியாத நிகழ்வாகி விட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 30,000 ஏரிகள், அதற்கும் அதிகமான குளங்கள், கண்மாய்கள் இப்படித்தான் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நீர் நிலைகளும் இவற்றை இணைக்கும் கால்வாய்களும் அருகி வருவதோடு, இருப்பவையும் தூர்வாரப்படாமல், கரையைப் பலப்படுத்துவதும் இல்லாமல் வீணாகி வருகின்றன அல்லது மராமத்து வேலைகள் நடப்பதாகக் கணக்கு காட்டி ஊழல் செய்து கொள்ளையடிப்பதற்குப் பயன்படுகின்றன. தண்ணீர் தனியார்மயமானால் என்ன நடக்கும்? தமிழகத்து நீர் நிலைகள் ஒட்டு மொத்தமாகப் பராமரிக்கப்படாது. அல்லது, காசு வசூலாகும் வாய்ப்புள்ள இடங்கள் மட்டும் பராமரிக்கப்படும்.
உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும், மன்மோகன் சிங்கும் நீரை இலாபம் பார்க்கும் வணிகமாக மாற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
இந்தப் பெருமழையினால் தமிழகத்தில் 2 வருடம் தண்ணீர்ப் பஞ்சம் வராது என்பது ஒரு திட்டமிட்ட வதந்தி தவிர உண்மையில்லை. சமீபத்தில் மேட்டூரில் திறந்து விடப்பட்ட வெள்ளம், கொள்ளிடம் வழியாக விநாடிக்கு 2 முதல் 3 இலட்சம் கனஅடிநீர் கடலில் கலந்தது. கொள்ளிடத்தின் அருகில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் பொன்னேரி எனும் பிரம்மாண்டமான ஏரி இன்னமும் வறண்டு தான் உள்ளது. இதைப்போல பல ஏரிகள் இன்னும் இவ்வளவு மழைபெய்த பிறகும் வறண்டுதான் உள்ளன. சென்னையில் கூட 2 வருடத்திற்குக் குடிநீர்ப் பஞ்சம் இல்லையென்று சொல்வது தினசரி வீட்டுக்குழாயில் நீர் பிடிக்கும் வசதி உள்ளவர்களுக்குத்தான். பெரும்பான்மை மக்கள் லாரி மூலமே நீர் பிடிக்கும் நிலையில் சென்னையின் குடிநீர்ப் பஞ்சமும் அதன் காட்சிகளும் பெரிதும் மாறிவிடாது. இத்துடன் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை இரண்டிலும், மழை பெய்யாத மழை மறைவு மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலியில் ஓடும் தாமிரவருணி அமெரிக்க கொக்கோ கோலா நிறுவனத்திற்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளது, குடிநீர்ப் பஞ்சத்தை அதிகரிக்கவே செய்யும்.
எனவே தமிழகத்தின் நீர் நிலைகளைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும் என்பதை மொத்த மக்கள் நலனை வைத்துத்தான் திட்டமிட்டுச் செயல்படுத்த முடியும். இதைவிடுத்து தண்ணீரைத் தனியார்மயமாக்கும் முயற்சிகள் நாட்டையும், மக்களையும் பேரழிவுக்குத்தான் தள்ளும். இதை ஒரு எடுப்பான எடுத்துக்காட்டு மூலம் பரிசீலிப்போம்.
மேட்டூர் ஸ்டான்லி அணைக்கட்டு ஒரு தனியார் முதலாளிக்குச் சொந்தம் என வைத்துக்கொள்வோம். என்ன நடக்கும்? ஆண்டுக்கு அதிகநாட்கள் 121 அடி நீரைத் தேக்கி காசு கொடுக்கும் விவசாயிகளுக்கு நீர் அளிப்பது மட்டும்தான் அந்த முதலாளியின் கவலையாக இருக்கும். மாறாக, காவிரி ஆறு, அதன் கிளை நதிகள், பாசனப் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், வெள்ள அபாயம் உள்ள 10 மாவட்டங்கள் என தமிழகத்துக் கவலையாக இருக்காது. ஏற்கெனவே அரசு நிர்வாகம் இப்படிக் கவலைப்படவில்லை என்பதால்தான் காவிரியில் வெள்ளம் வந்தது. கர்நாடகத்திலிருக்கும் கிருஷ்ணராஜசாகர், மற்றும் கபினி அணைகளிலிருந்து மேட்டூருக்கு வரும் நீரின் அளவை கர்நாடகம் தினசரி தெரிவிக்கும். தற்போது வெள்ளம்வந்த நாட்களில் ஒரு ஞாயிறு அரசு விடுமுறை என்பதால் அன்றைய நிலவரத்தை கர்நாடகம் தெரிவிக்கவில்லை. இப்படி சனி இரவிலிருந்து திங்கள் காலை வரை வந்த பெரும் வெள்ளம் வேறு வழியின்றி திடீரென அணை திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது. ஏற்கெனவே மழை அதிகமாகப் பெய்துவரும் நிலையில் மேட்டூர் அணையின் உயரத்தை 110 அடியாக வைக்கும்படி அப்பகுதி விவசாயிகள் மன்றாடியிருக்கிறார்கள். இதனால் வெள்ளம் வரும் போது அதிகம் திறந்து விட்டால் சமாளிக்க முடியும். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரவர்க்கம் இந்த யோசனையைக் கேட்க வில்லை. இந்த அலட்சியங்கள் ஒன்று சேர்ந்தே காவிரிகொள்ளிடத்தில் வெள்ளமாக பல ஊரை அழித்திருக்கின்றது.
இவை அரசு அதிகாரவர்க்கமும் முதலாளிகள் போலத்தான் சிந்திக்கின்றனர் என்பதைத் தெளிவாக காட்டுகின்றது. இருப்பினும் அரசு நிர்வாகம், பொது மக்களின் பிரதிநிதி அமைப்பு என்ற முறையில் நாம் கேள்வியாவது கேட்க முடியும். மாறாக, தனியார் முதலாளியாக இருந்தால் நாம் எதுவும் கேட்க முடியாது.
இதேபோல 113 பேர் கொல்லப்பட்ட செகந்தராபாத்துக்கு அருகில் நடந்த ஆந்திர ரயில் விபத்தைப் பாருங்கள். வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த புயல் தெற்கு ஆந்திரக் கடற்கரையைக் கடக்கப் போவது தெரிந்தும், அங்கே கன மழை பெய்யப்போவது தெரிந்தும், விபத்து நடந்த ரயில் பாலத்தின் அருகாமை ஏரிகள் நிறையப் போவது தெரிந்தும், அங்கிருந்து வரும் வெள்ளம் இருப்புப் பாதைகளை அரிக்கும் என்று தெரிந்தும் அந்த விபத்து நடந்திருக்கிறது. அதாவது அரசின் வானிலைத்துறை, வருவாய்த்துறை, நீர்ப்பாசனத்துறை, ஊராட்சித் துறை, இரயில்வே துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைக்கப்படாமல் அலட்சியமாக இருந்ததற்கு 113 மனித உயிர்களின் இழப்பு. இந்தத் துறைகள் அனைத்தும் ஒவ்வொரு முதலாளியிடம் இருந்தால் என்ன நடக்கும்? விபத்து இன்னமும் மோசமாக இருக்கும்.
கத்ரீனா சூறாவளி அமெரிக்காவின் நீயூ ஆர்லியன்ஸ் மாநிலத்தைச் சூறையாடியபோது என்ன நடந்தது? நிலவுக்கு மனிதனை அனுப்பிய நாடு, செவ்வாய் கிரகத்திற்குச் சென்று வருவதை ஹாலிவுட் படங்கள் மூலம் சாதித்த நாடு, சிலிக்கான் வேலி மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் புரட்சி செய்த நாடு பூவுலகின் சொர்க்கபுரி எல்லாம் சரிதான். ஆனால் ஒரு புயல் தாக்கிய போது சொந்தநாட்டு மக்களைப் பாதுகாக்க முடியாமல் பஞ்சைப் பராரிகளாக வைத்ததேன்? அதுதான் அமெரிக்கா. அது முதலாளிகளின் நலனுக்காக உருவான நாடு; அதன் அரசும் இதர உறுப்புக்களும் பொதுமக்கள் நலனுக்காகச் செயல்படுபவை அல்ல் அதன் அன்றாட அரசு எந்திரம் தனியாருக்கும், முதலாளிக்கும் ஆதரவாக வடிவமைக்கப்பட்டவை.
எனவே, தனியார்மயம் பொதுவில் அநீதியானது என்பதோடு இயற்கை தன்னியல்பிலேயே பொதுச் சொத்தாக இருப்பதைத்தான் கோருகிறது. அதைப் பிரித்து தனித்தனி முதலாளிகளுக்கு வழங்குவதனால் நாட்டை அழிக்க சுனாமியோ, அணுகுண்டோ தேவையில்லை, தனியார்மயம் மட்டும் போதும்.
இளநம்பி