ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கிடையே அரங்கேறிய கொலைக் கலாச்சாரம்
புளொட்டின் முதலாவது மத்தியகுழுவிலிருந்து ஜயர், சாந்தன் ஆகியோர் விலகிக் கொண்டபின் சுந்தரம்(சதாசிவம் சிவசண்முகமூர்த்தி-சுழிபுரம்), உமாமகேஸ்வரன்(கதிர்காமப்பிள்ளை நல்லைநாதன்-தெல்லிப்பளை), வசந்தன்(தம்பிப்பிள்ளை சந்ததியார்-சுழிபுரம்), ராஜன்(ஞானப்பிரகாசம் ஞானசேகரன்-பரந்தன்), காத்தான்(கிருஷ்ணகுமார்-மானிப்பாய்), பார்த்தன்(இராஜதுரை ஜெயச்சந்திரன்-திருகோணமலை, கண்ணன்(ஜோதீஸ்வரன்-வடலியடைப்பு), இராமலிங்கம் வாசுதேவா (மட்டக்களப்பு), பாபுஜி(மாதகல்), நிரஞ்சன்(சிவனேஸ்வரன்-உடுவில்), மாணிக்கம்தாசன்(நாகலிங்கம் மாணிக்கம்தாசன்-யாழ்ப்பாணம்), பெரியமெண்டிஸ்(பாலமோட்டை சிவம்) உட்பட பலர் இணைந்து புளொட்டை வளர்ப்பதை நோக்கி செயற்படத் தொடங்கியிருந்தனர்.
சுந்தரம், உமாமகேஸ்வரன், ரவி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டை தபால் நிலையக் கொள்ளையுடன் ஆரம்பிக்கப்பட்ட புளொட்டின் செயற்பாடுகள், சுந்தரத்தின் தலைமையில் ஆனைக்கோட்டை பொலிஸ்நிலையத்தை தாக்கி ஆயுதங்களைக் கைப்பற்றியும், கிளிநொச்சி வங்கியைக் கொள்ளையிட்டும் ஆயுதபலத்திலும் நிதிவளத்திலும் மேலோங்கி வந்த அதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளில் அங்கம் வகித்தபோதிருந்த நடைமுறையான "துரோகிகள்" ஒழிப்பிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
1970 வட்டுக்கோட்டை பாராளுமன்ற தேர்தலில் அமிர்தலிங்கத்தை தோற்கடித்த ஆ.தியாகராசாவையும் ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரான பாலசுப்பிரமணியம் என்பவரையும் கொலை செய்ததும் இதன்பாற்பட்டதே. தமிழீழ விடுதலைப் புலிகளையும் அவர்களது சுத்த இராணுவக் கண்ணோட்டத்தையும் கடுமையாக விமர்சனம் செய்த சுந்தரம் "புதிய பாதை" பத்திரிகை மூலமாக முற்போக்குக் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றார். இடதுசாரி அரசியலில் ஓரளவு தெளிவுபெற்றிருந்த சுந்தரத்தால் வெளியிடப்பட்ட "புதிய பாதை" பத்திரிகை தாங்கி வந்த கருத்துக்கள் புளொட்டின் கருத்தாகவே எடுத்துக் கொள்ளப்பட்டன. புளொட்டின் இராணுவ மற்றும் அரசியல் விடயங்களில் சுந்தரத்தினுடைய செயல்திறனும், ஆற்றலும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
காந்தீயம் செயற்பாடுளில் சந்ததியாருடன் ஈடுபட்டுக் கொண்டிருந்த பரந்தன்ராஜன் இராணுவ நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சந்ததியார் தொடர்ச்சியாக காந்தீயம் செயற்பாடுகளில் ஈடுபட்டுவந்ததோடு, காந்தீயத்திற்கூடாக பலரை புளொட்டுக்குள் உள்வாங்கத் தொடங்கியிருந்தார். மாறுபட்ட அரசியல் பின்னணியைக் கொண்ட, மாறுபட்ட சமூகப் பார்வை கொண்டவர்கள் ஒன்றிணைந்த செயற்பாடுகள் மூலம் புளொட் வளர்ச்சியடையத் தொடங்கியது. சுந்தரத்தின் கடின உழைப்பின் மூலம் வெளிவந்த "புதிய பாதை" பத்திரிகையும் இராணுவத் தாக்குதல்களும், சந்ததியாரால் காந்தீயம் அமைப்புக்கூடாக மக்கள் மத்தியில் மேற்கொண்ட பணிகளும் புளொட்டின் வளர்ச்சியை மிகவும் வேகமாக முன்நோக்கி கொண்டு சென்றது.
புளொட் மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று வந்ததோடு இராணுவத்தாக்குதல்களிலும் வெற்றிபெற்று வருவதை உன்னிப்பாகவும் காழ்ப்புணர்ச்சியுடனும் அவதானித்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழவிடுதலைப் போராட்டம் தனது கைகளிலிருந்து விலகிச் செல்வதை உணர்ந்து கொண்டார். இப்பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் பார்வை இலங்கை இனவாத அரசின் மீதல்ல, புளொட்டின் மீது விழுந்திருந்தது. ஜனவரி 2, 1982 "புதிய பாதை" பத்திரிகை ஆசிரியரும், புளொட் என்ற இயக்கத்தை உருவாக்க மூலகாரணமாய் விளங்கியதுடன் அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவருமான சுந்தரம், "புதிய பாதை" பத்திரிகையை வெளிக்கொணரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை சித்திரா அச்சகத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவின் பேரில் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஜே.ஆர். ஜெயவர்த்தனா தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சி பதவிக்கு வந்த காலத்திலிருந்தே தொடர்ச்சியாக தமிழர்களையும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களையும், அவர்களின் நியாயபூர்வமான போராட்டங்களையும் அரசபடைகளை ஏவிவிட்டு அடக்கிவந்தது. குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப்படுவதும் கைது செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாக மாறிவிட்டிருந்தது. மேயர் அல்பிரட் துரையப்பா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதாகி விடுதலையான நவாலியைச் சேர்ந்த இன்பம்(இரத்தினம் விஸ்வஜோதி), செல்வம் ஆகியோர் அவர்களது வீடுகளிலிருந்து இரவுவேளை அரசபடைகளால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின் அவர்களது சடலங்கள் அல்லைப்பிட்டி வீதியில் இலந்தையடி என்னுமிடத்தில் வீசப்பட்டிருந்தன.
தமிழீழ விடுதலை இயக்கத்தைச்(TELO)சேர்ந்த குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் எதிர்பாராத வகையில் பருத்தித்துறைக்கருகே மணற்காடு என்ற இடத்தில் அரசபடைகளால் கைது செய்யப்பட்டிருந்தனர். யாழ்ப்பாண நூல்நிலையமும், யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த வர்த்தக நிலையங்களும் ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசநாயக்கா போன்றோரின் நேரடி மேற்பார்வையில் தீக்கிரையாக்கப்பட்டன. 1977 பாராளுமன்றத் தேர்தலில் - "துரோகிகள்" துப்பாக்கி முனையில் ஒழித்துக்கட்டப்பட்ட தேர்தலில் - "தமிழீழமே ஒரே தீர்வு" என மக்களின் "ஆணை" பெற்று பாராளுமன்றம் சென்ற அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் மாவட்ட சபைகள் குறித்த கனவில் மூழ்கியவர்களாக தமது பாராளுமன்றப் பதவிகளை தக்கவைத்துக் கொண்டனர்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசின் பேரினவாதப் போக்கையும், அரசபடைகளால் இளைஞர்கள் கைது செய்யப்படுவதையும், இளைஞர்கள் கடத்தப்பட்டு கொல்லப்படுவதையும், அமைச்சர்களின் மேற்பார்வையில் திட்டமிடப்பட்டு ஏவிவிடப்படும் வன்முறைகளையும் சுந்தரம் தனது "புதிய பாதை" பத்திரிகைக்கூடாக மக்கள் மத்தியில் கொண்டு சென்றதுடன் தமிழர் விடுதலைக்கூட்டணியினர் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளாது, ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவுடன் கூடி உறவாடி தேனிலவில் திளைப்பதையும், தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு தமிழ் மக்களின் நலன் அல்ல, பாராளுமன்ற ஆசனங்களே அவர்களது ஒரே குறிக்கோள் என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். தமிழ் மக்கள் பேரினவாத அரசுக்கெதிராக மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் பேரால் பிழைப்பு நடாத்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கும் அவர்களது தவறான போக்குகளுக்கெதிராகவும் போராடவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்தார்.
ஆனால் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளோ, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இன அழிப்பு நடவடிக்கைகளையோ, அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் தமிழ்மக்களின் நலன்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டிருந்ததையோ புரிந்து கொள்ள முடியாதவர்களாக காணப்பட்டதோடு, "அண்ணன்" அமிர்தலிங்கத்தின் அரவணைப்பில் வளர்ந்த "தம்பி" பிரபாகரன் சுந்தரத்தை அழித்தொழித்ததன் மூலம் அண்ணன் மீதான தம்பியின் விசுவாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்ப காலங்களில் தன்னுடன் ஒன்றாகப் படுத்துறங்கிய மைக்கல், பற்குணம் போன்றவர்களை படுக்கையிலேயே சுட்டுக்கொலை செய்த, தமது இயக்கத்திலிருந்தவர்களை கொலை செய்வதற்கென குளிர்பானத்துக்குள் நஞ்சைக் கலந்து கொடுத்த கலாச்சாரத்தில் வளர்ந்த வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரினால் தலைமை தாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளும் சுந்தரத்தைப் படுகொலை செய்ததன் மூலம் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமது கொலைக் கலாச்சாரத்தை மக்கள் முன் அரங்கேற்றியிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து, அதிலிருந்து வெளியேறி வெளிப்படையாக தனது முற்போக்கு அரசியல் கருத்துக்களை முன்வைத்த சுந்தரத்தை படுகொலை செய்ததன் மூலம் யாருடைய நலன்களுக்காக தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் செயற்படுகின்றனர் என்பதையும் மக்களுக்கு வெளிப்படுத்தியிருந்தனர். ஈழவிடுதலைக்காகப் போராடிய போராளிகளுக்கெதிராக இலங்கை அரசும் அதன் படைகளும் மாத்திரம் அன்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் கூட தமது துப்பாக்கியை பகிரங்கமாக உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர்.
சுந்தரத்தின் படுகொலையை அடுத்து உமாமகேஸ்வரன், கண்ணன் (சோதீஸ்வரன்), உடுவில் சிவனேஸ்வரன், அரபாத் போன்றோர் இந்தியா சென்று விட்டிருந்தனர். சந்ததியாருடன் செயற்பட்டுவந்த பரந்தன் ராஜன், பாபுஜி, மாணிக்கம்தாசன் உட்பட பலர் ஏற்கனவே இலங்கை அரசபடைகளால் கைது செய்யப்பட்ட நிலையிலும், சந்ததியார் தொடர்ச்சியாக காந்தீய செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததோடு, காந்தீய அமைப்புக்கூடாக புளொட்டை வளர்க்கும் செயற்பாடுகளை செய்தவண்ணமிருந்தார். உமாமகேஸ்வரன் இந்தியாவில் தங்கிவிட்டிருந்த நிலையில் தளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கு மத்தியிலும் புளொட்டுக்குள் பலரை உள்வாங்கிக் கொண்டு சந்ததியார் செயற்பட்டார். ஆனால் இக்கால கட்டத்தில் புளொட் ஒரு அமைப்பு வடிவத்தையோ, ஒரு அரசியல் கொள்கைத் திட்டத்தையோ, ஒரு வேலைத்திட்டத்தையோ கொண்டிருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தினரால் சுந்தரம் படுகொலை செய்யப்பட நிகழ்வானது புளொட் உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கடுமையான உணர்வலைகளையும் ஏற்படுத்திவிட்டிருந்தது. ஈழ விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட புளொட் உறப்பினர்கள் அரச படைகளின் தேடுதல்களுக்கும் கெடுபிடிகளுக்கும் மட்டுமல்லாது ஈழ விடுதலைக்காகப் போராடுவதாக கூறிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைக் கரங்களில் இருந்தும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியவர்களாகவும் இருந்தனர். ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் புளொட்டின் முன்னணி உறுப்பினர்களை குறிவைத்து தமது கொலைத் திட்டங்களை வகுத்துச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
நியாயுதபாணியான சுந்தரத்தைக் கொலை செய்தும் அத்துடன் திருப்தியடையாத வேலுப்பிள்ளை பிரபாகரன் உமாமகேஸ்வரன் மீதான கொலை முயற்சியில் இறங்கினார், மே 19, 1982 சென்னை பாண்டிபஜாரில் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார். வேலுப்பிள்ளை பிரபாகரனின் துப்பாக்கி பிரயோகத்தில் இருந்து உயிர் தப்பிய உமாமகேஸ்வரனும் கண்ணனும் இந்தியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன் உமாமகேஸ்வரன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரனும் ராகவனும் கூட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் புளொட் உறுப்பினர்கள் மீது தொடர்ந்து வந்த கொலை முயற்சிகளால் ஏற்கனவே சுந்தரம் படுகொலையின் பின் கடுமையான உணர்வலைகளுக்கு உட்பட்டிருந்த புளொட் உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய உறவில் இருந்த அளவெட்டியைச் சேர்ந்த பரநிருபசிங்கம் இறைகுமாரன், சிவபாலசிங்கம் உமைகுமாரன் ஆகிய இருவரையும் கடத்திச் சென்று சுட்டுக் கொலை செய்திருந்தனர்.
ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டமாக முன்னெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் பின் கருத்து முரண்பாடுகளையும், அரசியல் முரண்பாடுகளையும் ஜனநாயக முறையில் தீர்த்துக் கொள்வதற்கு மாறாக துப்பாக்கி முனையில் தீர்க்கப்படும் கொலைக் கலாச்சாரமாக ஈழ விடுதலைப் போராட்டம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
சுந்தரம் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டது எப்படி நியாயப்படுத்த முடியாத ஒன்றோ அதேபோல் புளொட்டினால் இறைகுமாரன், உமைகுமாரன் படுகொலை செய்யப்பட்டதும் எத்தகைய காரணங்களாலும் நியாயப்படுத்த முடியாததாகும். ஈழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலை உணர்வுடன் தம்மை இணைத்துக் கொண்ட போராளிகள் இலங்கை அரசபடைகளால் மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவதாகக் கூறிக் கொண்டு தமது தலைமையைக் காப்பதற்கான போட்டியிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருந்தனர்.
(தொடரும்)
1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1
2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2
3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3
4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4
5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5
6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6
7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7
8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8
9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9
10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10
11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11
12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12
13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13
14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14
15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15
16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16
17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17
18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18
19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19
20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20
21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21
22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22
23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23
24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24
25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25
26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26
27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27
28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28
29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29
30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30
31. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31
32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32
33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33
34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34
35.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 35