Language Selection

புதிய கலாச்சாரம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 

ஜஸ்ப்ரீத் சிங் வறுமையால் வாடும் சாதாரண தலித் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். வீட்டின் மூத்த பிள்ளையான இவரோடு, மற்ற மூன்று இளைய சகோதரிகளையும் உள்ளடக்கியது அவரது குடும்பம். தந்தை வேலைக்குப் போகிறார். தாய் வீட்டு வேலைகளையும் கவனித்தபடியே தூங்கும் நேரம் தவிர எப்போதுமே தையல் வேலையைத் தொடர்ந்து செய்து வந்தார்.

படிப்பில் திறமையுடன் விளங்கிய ஜஸ்ப்ரீத்தின் படிப்புக்காக மொத்தக் குடும்பமுமே ரத்தத்தை வியர்வையாக்கி, உழைத்துத் தியாகம் செய்தது. மகனை ஒரு ஊர் போற்றும் மருத்துவனாகப் பார்க்க அந்தத் தாயும் ஆசைப்பட்டாள். மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு வரதட்சிணைக்கு பொருள் சேர்க்க வேண்டிய நமது இந்தியச் சூழலில் தனது மகனது கனவுப் படிப்புக்காகவும் அந்தத் தாய் ஓய்வறியாமல் வேலை செய்து வந்தார்.

சண்டீகர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜஸ்ப்ரீத் சிங் தனது மருத்துவப் படிப்புக்காக சேர்ந்தார். முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டீகரில் தனது மேற்படிப்பான எம்.டி படிப்பை படிக்க வேண்டும் என்பதுதான் ஜஸ்ப்ரீத் இன் திட்டம். இத்திட்டத்தின்படி நான்கு ஆண்டுகள் இளநிலை மருத்துவப்படிப்பில் பெரிய பிரச்சினைகள் இல்லாமல்தான் கழிந்தது.

அதன் பிறகுதான் அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண் எடுத்துத் தேர்ச்சியடைந்த ஜஸ்ப்ரீத்இன் வாழ்வில் சூறாவளி வீசத் துவங்கியது. இறுதியாண்டு படிக்கும்போதுதான் பேரா. என்.கே. கோயல் என்பவரது மூலம் தொல்லை ஆரம்பமானது. சாதி வெறியனான என்.கே. கோயல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்ப்ரீத்சிங்கை சாதியின் பெயரால் அவமானப் படுத்தினான்.

"தலித் என்பதால்தான் உனக்கு இங்கே படிக்க அனுமதி கிடைத்துள்ளது. எப்படியோ மருத்துவப் படிப்பில் இடம் பிடித்து விட்டாய். ஆனால் உன்னை தேர்ச்சியடைய விட மாட்டேன். உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள். நான் உன்னை மீண்டும் முதலிலிருந்து மருத்துவப் படிப்பை மேற்கொள்ளச் செய்யாமல் விட மாட்டேன்' என்றெல்லாம் சவால் விட்டுள்ளான்.

இதைத் தொடர்ந்து, மருத்துவப் படிப்பில் முக்கியப் பாடங்களில் ஒன்றான கம்யூனிட்டி மெடிசின் பாடத்தில் வேண்டுமென்றே ஜஸ்ப்ரீத் சிங்கை தோல்வியடையச் செய்தான். இந்த அநீதியைத் தனது சக மாணவர்களிடமும், பிற பேராசிரியர்களிடமும் எடுத்துரைக்க முற்பட்டார் ஜஸ்ப்ரீத். மீண்டும்தேர்வு எழுதியும் ஒரு மதிப்பெண் குறைவாகப் போட்டு அவரை தேர்வில் தோல்விடைய வைத்தான் சாதி வெறிபிடித்த கோயல்.

மனம் கலங்கிய மாணவர் ஜஸ்ப்ரீத் இதனைத் தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். தாயும் மகனைத் தேற்றி வரும் தேர்வில் நன்றாக எழுத ஊக்கம் கொடுத்துள்ளார். ஆனால் சாதிவெறி என்ற எதார்த்தத்தில் தனது கனவு நனவாகப் போவதில்லை என்பதைப் புரிந்து கொண்ட ஜஸ்ப்ரீத் ஜனவரி 27, 2008 அன்று தனது 22வது வயதில் கல்லூரி நூலகத்தின் ஐந்தாவது மாடியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அவரது சட்டைப் பையில் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், அநீதி இழைத்த கோயலையும் குறிப்பாக எழுதி வைத்துவிட்டு மறைந்து விட்டார் ஜஸ்ப்ரீத் சிங்.

தன்னுடைய ஒரே மகனை இழந்த பெற்றோருக்கு கிடைத்த அந்தத் துருப்புச் சீட்டைக் கொண்டே காவல் நிலையத்தில் புகார் செய்தனர் அந்தப் பெற்றோர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. உடனே அங்கிருந்த காவல்துறைக் கண்காணிப்பாளரை வேறு இடத்திற்கு மாற்றல் செய்தது அரசும், ஆளும் வர்க்கமும். இந்த வழக்கில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த ஏழைத் தந்தையின் தொடர்ச்சியான சட்டப் போராட்டத்தின் பிறகே தாழ்த்தப்பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கினைப் பதிவு செய்தனர்.

அதன் பிறகு சில உண்மைகள் வெளி வந்தன. முதலாவதாக தற்கொலைக் குறிப்பு ஜஸ்ப்ரீத் எழுதியதுதான் என நிரூபணமானது. அடுத்ததாக, அவர் தேர்ச்சியடையவில்லை என கோயலால் நிராகரிக்கப்பட்ட ஜஸ்ப்ரீத் இன் கம்யூனிட்டி மெடிசின் தேர்வுத்தாள் அனைத்தும் மூன்று வௌ;வேறு பேராசிரியர்களால் மறு மதிப்பீடு செய்யப்பட்டது. அதில் ஜஸ்ப்ரீத் தேர்ச்சி பெற்றிருப்பது தெரிய வந்தது. ஆனால் இந்தச் செய்தியைக் கேட்க அதனை எழுதிய ஜஸ்ப்ரீத் உயிரோடு இல்லை.

இவ்வளவு ஆதாரப்பூர்வ தகவல்கள் இருந்தும் என்.கே. கோயல் ஒருநாள் கூட சிறையில் இருக்கவில்லை. பேராசிரியராக, துறைத்தலைவராக இன்றும் தொடருகிறான். என்ன நடக்கும் என இலக்குத் தெரியாமலேயே இந்த வழக்கைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது அந்தக் குடும்பம். மறுஆண்டு சகோதரத்துவத்துக்காக கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தன்று தனது இயலாமை, பிரிவுத் துயருடன் கோபத்தை அடக்க முடியாத ஜஸ்ப்ரீத் சிங்இன் இளைய சகோதரி நீதி வேண்டி தனது உயிரையே மாய்த்துக் கொண்டாள்.

சாதிவெறி ஆட்டத்தால், கொடுமையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு இளம்வயதினர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்டுள்ளனர். இதனை ஒரு பொருட்டாகவே மதிக்காது, நீதி வழங்குவதை தவிர்த்து ஒரு தலித் வாழ்வின் மதிப்பு இவ்வளவுதான் என உறுதி செய்யும் அரசின் கொட்டத்தை நேரில் அனுபவித்திருந்தாலும்  தங்களுக்கு என்ன நேர்ந்தாலும் சரி, நீதி கிடைக்காமல் ஓய மாட்டோம் எனத் தொடர்ந்து போராடி வருகிறார்கள் ஜஸ்ப்ரீத் சிங்கின் குடும்பத்தார்.

தொடர்ச்சியாக தலித் மாணவர்கள் மீதான தாக்குதல் பல கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு மேலும் ஒரு உதாரணம் மருத்துவர் பால்முகுந்த் பார்தி என்ற தலித் மாணவனின் கதை. மத்தியப் பிரதேசத்தில் உள்ள குணதேஸ்வர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் இவர். ஒடுக்கப்பட்ட  சாம்பர் இனத்தைச் சேர்ந்த இவர் நன்றாகப் படிக்கக் கூடியவர். மேல் நிலை வகுப்பில் 78 சதவீத மதிப்பெண்களைப் பெற்று அதற்காகக் குடியரசுத் தலைவர் விருதையும், ஐஐடி நுழைவுத் தேர்வில் அகில இந்திய அளவில் 8 வது இடத்தையும் பெற்றுள்ளார். கால்நடை மருத்துவப் படிப்பில் முதலில் சேர்ந்த அவருக்கு ஆறு மாதம் கழித்து AIMS இல் இருந்து அழைப்பு வந்தது. மருத்துவத் துறையில் ஆர்வம் இருந்த காரணத்தால் அங்கிருந்து வந்த அழைப்பை ஏற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளார். CM-BT தேர்வில் கூட வெற்றிபெற்றுள்ளார். மேலும் இந்திய ஆட்சிப்பணிக்கான தேர்வுக்கும் தன்னைத்தயார் செய்து வந்தார். கல்விப்புலத்தில் மிகச்சிறந்த நபராகத்தான் இருந்து வந்தார் பால் முகந்த்.

அவரது குடும்பம் மிகவும் ஏழ்மையான சூழலில் இருந்தது. இரண்டு மகன், ஒரு மகள் என்ற அந்தக் குடும்பத்தில் தந்தை மட்டுமே வேலைக்குப் போகிறார். தாய் வீட்டைக் கவனித்துக் கொள்கிறாள். படிப்பில் சிறந்து விளங்கியதால் மொத்தக் குடும்பமுமே பால் முகுந்தை மருத்துவராக்க தன்னாலியன்ற வரை முயற்சி செய்துள்ளது. வங்கியில் மாத்திரமன்றி வெளியிலும் கடன் வாங்கித்தான் அவரை படிக்க வைத்துள்ளனர். அவரது தந்தைக்குக் கூலி சில சமயங்களில் மூன்று மாதமாகக் கூட கைக்கு வந்து சேராமல் இருக்கும். அதுபோன்ற தருணங்களில் திருமணமான சகோதரி கூட தலா 2500 ரூபாய் வரை மாதந்தோறும் கொடுத்து உதவியுள்ளார்.

இது வெறும் குடும்பப் பாசம் மட்டுமல்ல, அந்த சமூகத்தில் கடந்த 50 ஆண்டுகளில் ஒருவர் கூட கண்டறியாத கனவு மருத்துவராவது. இவர் மூலமாக அச்சமூகத்தின் பிற இளைஞர்களும் உந்தப்பட்டு உயர்வடைவார்கள் என அக்குடும்பத்தினர் கருதினர். ஆனால் அவர்களது இந்த கனவுக்கோட்டையை சாதி என்னும் கருங்கல் வந்து சுக்குநூறாக நொறுக்கியது.

டாக்டர் பால் முகுந்த்இன் சாதி இன்னது என அறிந்த அஐஐஆகு பேராசிரியர்கள் அவரை முதல் நாளில் இருந்தே அவமானப்படுத்தத் தொடங்கி விட்டனர். படிப்பில் சிறந்து விளங்கிய அவரை, வெறும் சாதி அடிப்படையில் மட்டுமே தகுதி பெற்று மருத்துவம் படிக்க வந்தவர் என்று கேலி செய்தனர். முதலாமாண்டு துவங்கிய இந்த அவமானப்படுத்தல்கள் அவர் தற்கொலை செய்து கொண்ட இறுதி ஆண்டு வரை தொடர்ந்தது. இப்படிச் செய்தவர்களில் ஐவர் பேராசிரியர்கள். இது தவிர்த்து கல்லூரி முதல்வரும் "தலித் ஆகிய நீங்கள் எல்லாம் மருத்துவராக முடியாது' என்று அவரிடம் சவால் விட்டுள்ளார். பிரச்சினையைப் பெரிதுபடுத்தினால் தனது எதிர்காலம் பாதிக்கப்படுமே என்று கருதி, அதனைப் பொருட்படுத்தாமல் படிப்பில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வந்தார் பால் முகுந்த்.

பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரிடம் தான் சந்திக்கும் அன்றாடப் பிரச்சினைகளையும், அதனால் ஏற்படும் மனவருத்தத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். தங்களை சாதியைச் சொல்லியே பேராசிரியர்கள் அழைப்பதையும், தங்களைப் பார்க்க மற்றும் பேச அவர்கள் மறுப்பதையும் மிகுந்த மனவேதனையுடன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். தலித் மாணவர்கள் வகுப்பில் கேட்கும் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்குப் பேராசிரியர்கள் பதிலளிக்க மறுப்பதை எடுத்துச் சொல்லி புலம்பியுள்ளார். செய்முறைத் தேர்வுகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களைத் தேர்ச்சியடைய விடாமல் தடுப்பதுதான் இந்தப் பேராசிரியர்களின் தலையாய பணியாக இருந்திருக்கிறது.

இதனையெல்லாம் பார்த்த பால் முகுந்த் படிப்பு முடிந்தவுடன் இந்தியாவை விட்டுச் சென்றுவிட வேண்டும் என்று தனது வீட்டாரிடம் கூறியுள்ளார். தன்னுடைய குடும்பப் பெயரையும், சாதியையும் மாற்ற முடியுமா என்றெல்லாம் முயற்சி செய்துள்ளார். ஒரு கட்டத்துக்குப் பிறகு இந்தச் சாதிக்கொடுமையைச் சகித்துக் கொண்டிருக்க முடியாமல், அதேநேரத்தில் தனது எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் நிலையை உணர்ந்த பால் முகுந்த் இறுதியாண்டு படிக்கும்போது மார்ச் 3, 2010 அன்று தற்கொலை செய்து கொண்டார். அதற்கு இரு நாட்களுக்கு முன்னர்தான் அவரது தற்கொலை முயற்சி ஒன்று அவரது நண்பனால் தடுக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தை அப்படியே விட்டுவிடுமாறு  அஐஐஆகுஇன் டீன் ராணிகுமார், பால் முகுந்த்இன் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டாராம். அதற்கு அவர்கள் மறுக்கவே "எங்கு சென்றாலும் நீங்கள் ஜெயிக்க முடியாது' என்று சவால் விட்டு, மன உளைச்சல் காரணமாகத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி வழக்கை முடிக்கப் பார்க்கிறது கல்லூரி நிர்வாகம். பால்முகுந்த் இன் மன உளைச்சலுக்கு யார் அல்லது எது காரணம் என்று பெற்றோர் கேட்கும் கேள்விக்கு நிர்வாகம் பதில் அளிக்க மறுக்கிறது.

என்ன நடந்தாலும் சரி, நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறது பால் முகுந்த்இன் குடும்பம். "எங்களிடம் இழப்பதற்கு எதுவுமில்லை. எனவே இந்திய அரசிடம் நீதி கேட்டு இறுதிவரை போராடுவோம். நீதி கிடைக்காதபட்சத்தில் நாங்களும் தற்கொலை செய்து கொள்வோம்" என்று கூறிவிட்டு அழத் துவங்குகிறார் பால் முகுந்தஇன் தந்தை. மகனை இழந்த தாயோ "புத்திசாலியான என்மகனைக் கொன்று விட்டார்களே. என் மகனே! என்னை விட்டு எங்கு சென்றுவிட்டாய்' என்று ஒப்பாரியுடன் அழுது கொண்டே இருக்கிறாள்.

டாக்டர் ஜஸ்ப்ரீத் சிங் மற்றும் டாக்டர் பால் முகுந்த் பார்த்தி ஆகியோரின் தற்கொலை பற்றி ஒரு செய்திப் படம் எடுக்கப்பட்டுள்ளது. டெத் ஆஃப் மெரிட் என்ற அந்த ஆவணப் படத்தில் சம்பவங்களுடன் இளைஞர்களின் குமுறல்களும் இடம் பெற்றுள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இவ்வாறு மேற்படிப்புக்குப் போய் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட தலித் மாணவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

மும்பை ஐஐடிஇல் பி.டெக் படித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த், 2007 புத்தாண்டுப் பிறப்பன்று இக்கணக்கைத் துவக்கி வைத்தார். ஐஐஎஸ்சிஇன் ஆய்வு மாணவர் அஜய் எஸ்.சந்திரா, ஹைதராபாத் பல்கலை இயற்பியல் ஆய்வு மாணவர் செந்தில்குமார், கான்பூர் ஐஐடிஇன் பி.டெக் மாணவர் பிரசாந்த் குரீத், எம்.டெக் மாணவன் ஜி.சுமன், அங்கித வெக்தா என்ற அகம

தாபாத் நர்சிங் மாணவி, ஷியாம் குமார் என்ற பிடெக் மாணவர், அமராவதி என்ற ஆந்திரப் பிரதேச குத்துச்சண்டை வீராங்கனை, அவ்வூரைச் சேர்ந்த பி.காம் மாணவி பாந்தி அனுஷா, புஷ் பாஞ்சலி பூர்தி என்ற பெங்களூரு எம்பிஏ மாணவி, லக்னோ மருத்துவக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவர் சுசீல்குமார் சவுத்ரி, பெங்களூரில் விவசாய விஞ்ஞானம் படித்த ரமேஷ், கான்பூர் ஐஐடிஇல் பிடெக் படித்த மாதுரி செல், ஹைதராபாத்இல் பிடெக் மாணவியான வீ.வரலட்சுமி, ரூர்கிஇன் பிடெக் மாணவன் மணீஷ் குமார், லினேஷ் மோகன் காவ்லே என்ற டெல்லி பிராந்திய பொறியில் கல்லூரி ஆராய்ச்சி மாணவன் என அப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

புதிதாக இப்பட்டியலைப் பார்ப்பவர்களுக்கு இத்தனை சாதிக் கொடுமைகள் நம் நாட்டிலா? என்று ஆச்சரியமாக இருக்கலாம். இவையனைத்தும் கணக்கில் வந்தவை. ஆகவே இவை விதிவிலக்கானவைதான். எல்லாவற்றையும் தொகுத்தால் பட்டியல் தாங்காது. இந்தத் தற்கொலைகள் கோழைத்தனமானவையா? இல்லை, நிச்சயம் இல்லை. இவை ஆதிக்க சாதிவெறி நடத்தியிருக்கும் படுகொலைகள்.  வல்லரசாகப்போகும் இந்தியாவின் சாதனைகள் இந்தக் கொலைகள்.  தாங்கள் நாகரீக உலகைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்துக்கொள்ளும் ஒவ்வொருவரையும் கூனிக்குறுக வைக்கின்றன இந்தக் கொலைகள்.

இவை பார்ப்பனியத்தின் சாதி ரீதியான அடக்குமுறை என்று மட்டும் பார்க்க கூடாது. அடித்தட்டு வர்க்கங்களிலிருந்து மருத்துவர்கள் வந்தால் அவர்கள் எப்படி மக்களது சிரமங்களைப்புரிந்துகொண்டு மக்கள் மருத்துவராகப் பணியாற்றுவார்கள் என்பதறிவோம். அந்த வகையில் இந்த நாட்டின் ஏழைகளுக்கான மருத்துவர்களை வரவிடாமல் செய்யும் நாசகாரச் செயலாகத்தான் இந்தக் கொலைகளைக் கருது முடியும். ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்கும்

உரிமையை பல நூற்றாண்டுகளாக மறுத்து வரும் பார்ப்பனியத்தை என்றைக்குக் கல்லறைக்கு அனுப்புகிறோமோ அன்றுதான் நம் நாட்டு மக்களுக்கு சமூக விடுதலை கிடைக்கும்.

அதுவரை இன்னும் எத்தனை இளைஞர்களை இழக்கப் போகிறோம்?

• ஜென்னி