இது சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம். நண்பர் ஒருவருடன் பெருநகரம் ஒன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த ஓவியக் கண்காட்சி ஒன்றிற்கு செல்ல நேர்ந்தது. நகரின் மையப்பகுதியில் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அரங்கு அது. அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தவை மாடர்ன் ஆர்ட்வகைப்பட்ட ஓவியங்கள்.

 

 

அரையிருளில் இருந்த அரங்கத்தினுள் நல்ல இடைவெளியில் அழகான சட்டகங்களுக்குள் தனித்தனியாய் ஸ்பாட் லைட்டுகள் வைக்கப்பட்டு ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொன்றின் முன்பும் பணக்கார வாசம் வீசும் சிலர் எதையோ தேடுவது போன்ற பாவனையில் முகத்தை வைத்துக் கொண்டு ஓவியங்களை முறைத்துப் பார்த்தவாறே நின்றனர். குறிப்பிட்ட ஒரு ஓவியத்தின் முன் நின்ற சின்னக் கும்பலோடு நானும்  நண்பரும் இணைந்து கொண்டோம்.

அது ஒரு வண்ணக் குழப்பம். சரியாகச் சொல்வதானால், யாரோ ஒரு மார்வாடி  பான்பராக்கை மென்று வெள்ளைத் துணியில் காறித் துப்பியது போல் இருந்தது. நீண்ட நேரம் உற்று உற்றுப்பார்த்த பின்னரும் மார்வாடியின் முகத்தை என் மனத்திரையிலிருந்து அகற்ற முடியவில்லை. அரங்கத்திலோ குண்டூசியைப் போட்டாலும் குண்டு போட்டதைப் போன்ற சப்தம் எழுமளவுக்கு நிசப்தம்.  நான் மெல்ல எச்சிலைக்கூட்டி விழுங்கியபடியே, பக்கத்தில் நின்றவரிடம் "இது எதைப் பற்றிய ஓவியம்?' என்று கேட்டேன்.

மேலிருந்து கீழ் வரை என்னை ஒரு பார்வை பார்த்தவர், முகத்தைச் சுளித்துக் கொண்டே வெடுக்கென்று வேறு பக்கம் திரும்பிக் கொண்டார். அது கேட்கக் கூடாத கேள்வி என்று அப்போது எனக்குப் புரியவில்லை. கேட்கக்கூடாதவரிடம் கேட்டு விட்டோம் என்று எண்ணிக்கொண்டு, அந்தக் கண்காட்சியின் பொறுப்பாளரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடமும் அதே கேள்வியைக் கேட்டேன்.

அவரோ ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, "தனது அர்த்தத்தைத் தானே தீர்மானிக்காமல் பார்க்கும் கண்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை இந்த ஓவியங்கள் வழங்குகின்றன. ஒரு ஓவியம் எவ்வாறு தன்னை ஒழுங்கமைத்துக் கொள்வது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அந்த ஓவியத்துக்கே உரியது. தனக்கான மொழியை அது தானே தீர்மானித்துக் கொள்ளும்' என்றார். "அதே நேரம் ஓவியத்தைப் பார்க்கிறவரின் உரிமையிலும் அது தலையிடாது. பார்வையாளரின் உள்மன ஒளியில் இந்த ஓவியம் ஏற்படுத்தும் பிம்பங்கள் உண்டாக்கும் அர்த்தங்ளை அவரவர் விருப்பத்திற்கு விளங்கிக் கொள்ளலாம் என்றும் இவை ஒரு பயன்பாட்டையோ அர்த்தத்தையோ முன்வைத்து வரையப்பட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதெல்லாம் ஓவியரின் மேல் திணிக்கும் சர்வாதிகாரமாகும்' என்று ஆரம்பித்து பேசிக்கொண்டே போனார்.

அன்று அவர் வாயிலிருந்து வழிந்த வையென்னவோ 'தமிழ்' வார்த்தைகள் தான்; ஆனால் எனக்கோ பண்டைய அராமிக் பாஷையில் யாரோ என்னோடு பேசியது போன்றதொரு உணர்வு எற்பட்டது. சொற்களால் அவர் தீட்டிய சித்திரமும் கிட்டத்தட்ட அந்த பான்பராக் ஓவியத்தையே ஒத்திருந்ததால், மெதுவாக அந்த அரங்கிலிருந்து நழுவிவிட்டேன்.

அன்றைக்கு ஓவியத்தை முன்வைத்து அவர் பேசிய அதே கருத்துகளை, கவிதை, சிறுகதை, நாவல் உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களை முன்வைத்தும் பலர் பேசுவதையும், "கலை கலைக்காகவே" என்ற கருத்து சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வித விதமான உருவங்களில் உலவுவதையும் பின்னாளில் கவனிக்க முடிந்திருக்கிறது.

ஒரு கதை, கவிதை அல்லது ஓவியத்தை கலைஞனின் உள்மன எழுச்சி தான் உருவாக்குகிறது என்பதை நாம் மறுக்கவில்லை. அப்படி ஒரு உண்மையான அக எழுச்சி இல்லாமலேயே மலர்விக்கப்படும் காகிதப்பூக்களும், சொற்களாலும் வண்ணங்களாலும் நிகழ்த்தப்படும் கழைக்கூத்துக்களும்தான் கலை, இலக்கிய உலகில் நிரம்பியிருக்கின்றன என்ற உண்மையையும் யாரும் மறுக்க முடியாது. எனினும், ஒரு கலை வெளிப்பாட்டை நோக்கி "அதன் பொருள் என்ன, அது வெளிப்படுத்தும் உணர்வு என்ன என்று கேள்வி எழுப்புவது அந்தக்கலையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்பதும், சர்வாதிகாரம் என்பதும் அவர்கள் தரப்பு வாதம்.

கலை இலக்கியம் ஓவியம் போன்ற துறைகளில் இத்தகைய சர்வ சுதந்திரக் கோட்பாட்டை குன்றின் மீது நின்று முழங்கிய பல சிங்கங்களுக்கு கறித்துண்டு போட்டு வளர்த்தவர்கள் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ வினர்தான் என்றொரு செய்தி நெடுநாட்களாகவே அடிபட்டு வந்தது எனினும், அது கம்யூனிஸ்டுகளின் அவதூறு என்றே இதுநாள்வரை  புறந்தள்ளப்பட்டு வந்தது.

பிரான்சிஸ் ஸ்டோனார் சாண்டர்ஸ் எழுதிய சி.ஐ.ஏ வும் பண்பாட்டுப் பனிப்போரும்  எ ன் ற   நூ ல்  (றூழ pயனை வாந pipநசஇ வுhந ஊஐயு யனெ வாந உரடவரசயட உழடன றயச)இதனை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. அப்ஸ்டார்க்ட் எக்ஸ்பிரஷனிசம் என்று வகைப்படுத்தப்படும் மாடர்ன் ஆர்ட் ஓவியங்களை சி.ஐ.ஏ. உருவாக்கவில்லை. எனினும் அதனை அடையாளம் கண்டு தடுத்தாட்கொண்ட பெருமை நிச்சயம் சி.ஐ.ஏ.வுக்கே உரியது.

இரண்டாம் உலகப்போர் முடிந்த பின் 1947 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சி.ஐ.ஏ என்ற உளவு நிறுவனம் துவங்கப்பட்ட போதே, பண்பாடு மற்றும் கலை இலக்கியத் துறைகளில் சோசலிச எதிர்ப்பு சக்திகளையும் உளவாளிகளையும் உருவாக்குவது அதன் இலக்குகளில் ஒன்றாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது. இரண்டாம் உலகப் போரில் உலகையும் ஐரோப்பிய கண்டத்தையும் பாசிச அபாயத்திலிருந்து காத்தது ரஷ்யாவின் செம்படை. ஹிட்லருக்கு எதிராக ரசியசெம்படை களத்தில் காட்டிய தீரம் தியாகம் மட்டுமின்றி, போருக்குப்பின் பாசிஸ்டுகளை விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிப்பதில் ரசியா காட்டிய தீவிரமும் மேற்கு ஐரோப்பிய நாட்டு மக்களிடமும், அறிவுத்துறையினரிடமும் கம்யூனிசத்தின் பால் ஒரு ஈர்ப்பை உருவாக்கியிருந்தது.

பொருளாதாரம்,  இராணுவம் ஆகிய துறைகளில் சோசலிச முகாமுக்கு எதிராகத் தனது சொந்த நிறுவனங்களை உருவாக்க முடிந்த அமெரிக்காவால், அறிவுத் துறையினரிடையே, குறிப்பாக மேற்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரிடையே,  சோசலிசம் பெற்று வந்த செல்வாக்கைத் தடுக்க இயலவில்லை.

அமெரிக்க மெக்கார்த்தியிசத்தின் வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பு, சார்லி சாப்ளின்  உள்ளிட்ட பிரபல கலைஞர்களையெல்லாம் கூண்டிலேற்றியிருந்ததால், அமெரிக்க ஜனநாயகத்தின் முகவிலாசம் ஏற்கெனவே அம்பலமாகியிருந்தது.  பண்பாட்டுத்துறையில் முதலாளித்துவ கலைஞர்கள் மேற்கொண்ட சில அபாயமற்ற புதிய முயற்சிகளைக் கூட சகித்துக் கொள்ள இயலாத அளவுக்கு பிற்போக்கின் உச்சமாக இருந்தது மெக்கார்த்தியிசம். ஏற்கெனவே அமெரிக்க பண்பாட்டின் மீது மதிப்போ மரியாதையோ கொண்டிராத ஐரோப்பிய கலைஞர்களையும், அமெரிக்காவின் தலைமையிலான புதிய அரசியல் இராணுவ அணிசேர்க்கையை எதிர்த்த ஐரோப்பிய அறிவுத்துறையினரையும் தம் பக்கம் ஈர்ப்பதற்கு புதியதொரு அரசியல் அணியை உருவாக்க வேண்டும் என்பதை சி.ஐ.ஏ. உணர்ந்திருந்தது. கலை இலக்கியம் பண்பாட்டுத்துறையில்  "கட்டற்ற படைப்பு சுதந்திரம்', அரசியல் துறையில்  "ஜனநாயக இடதுசாரித்துவம்' என்பனவற்றை நைச்சியமாக முன்தள்ளியதன் மூலம், கம்யூனிசத்தில் ஜனநாயகமோ, தனிமனித படைப்பு சுதந்திரமோ கிடையாது என்பதை கம்யூனிசத்துக்கு எதிரான பனிப்போரின் மையமுழக்கமாக்கியது சி.ஐ.ஏ.

கலைஞனின் சூக்குமமான உளப்பதிவுளை முன்நிறுத்தும் (யுடிளவசயஉவ நஒpசநளளழைnளைஅ) மாடர்ன் ஆர்ட் வகைப்பட்ட ஓவியங்கள் கம்யூனிசத்துக்கு எதிரான போரில் ஏன் பயன்பட்டன என்பதை 1949இல் சி.ஐ.ஏ.வின் கலைத்துறை தலைமை அதிகாரியாக செயல்பட்ட டாம் பிராடன் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்: "எக்ஸ்பிரஷனிசம் என்பது சுதந்திரத்தின் சித்தாந்தம், கம்யூனிச எதிர்ப்பு சித்தாந்தம், சுதந்திர முதலாளித்துவத்தின் சித்தாந்தம். அது சூக்குமமானது, அரசியல்ரீதியில் மவுனமானது, சரியாகச் சொன்னால் சோசலிச எதார்த்தவாதத்துக்கு நேர் எதிரானது.'

இந்தப் பயன்பாட்டை மனதிற்கொண்டுதான் கலாச்சார விடுதலைக்கான காங்கிரசு என்ற அமைப்பையும், அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிச ஓவியங்களுக்கான ஒரு கண்காட்சிக் கூடமாக மியூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட்ஸ் (ஆழுஆயு) எனும் அமைப்பையும் சி. ஐ.ஏ நிறுவியது. சி.ஐ.ஏவின் முன்னாள் உயரதிகாரிகள் பலரும் இந்த ஓவியக் கண்காட்சிக் கூடத்தின் பொறுப்பு வகித்துள்ளனர். போல்லாக், டி கூனிங் போன்ற பிரபல ஓவியர்களின் கண்காட்சிகளை ஐரோப்பா முழுவதும் நடத்துவதற்கு சி.ஐ.ஏ. செலவு செய்தது. அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்பிரஷனிசக் கலைஞர்கள் சிலருக்குத் தாம் யாரிடம் இருந்து பணம் பெறுகிறோம் என்று தெரிந்துள்ளது  ஆனால், பெரும்பாலானவர்களுக்குத் தாம் யாரிடம் இருந்து பணம் பெறுகிறோம் என்கிற விபரம் தெரிவிக்கப் படவில்லை.

பெறுபவர்கள் இருக்கட்டும், கொடுப்பவரான அமெரிக்க அரசின் அதிபர் ட்ருமெனுக்கே இது தெரியாது. "இதுவெல்லாம் கலை என்று சொன்னால், என்னை காட்டுமிராண்டி என்று அழைத்துக் கொள்ளவே நான் விரும்புவேன்' என்று மாடர்ன் ஆர்ட் ஓவியங்களைப் பற்றி கருத்து கூறியவர்  ட்ருமென். அவர் மட்டுமல்ல, வெளிப்படையான கம்யூனிச எதிர்ப்பாளர்களான பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நாசூக்கான முறையை விளக்கிப் புரிய வைத்து நிதி ஒதுக்கீடு பெறுவது இயலாது என்று சி.ஐ.ஏ வுக்கு புரிந்திருந்ததால், அது தனது ரகசிய நிதியிலிருந்தும், ராக்பெல்லர் போன்ற முதலாளிகளிடம் பெற்ற நன்கொடைகளிலிருந்தும் இத்தகைய கண்காட்சிகளை நடத்தியது. இர்விங் கிரிஸ்டல், மெல்வின் லாஸ்க்கி, ஐசாயா பெர்லின், ஸ்டீபன் ஸ்பென்டர், சிட்னி ஹ_க், டானியல்பெல், ட்வெய்ட் மெக்டொனால்ட், ரோபர்ட் லோவெல், ஹன்னா, மேரி மெக்கார்த்தி உள்ளிட்ட பல்வேறு அறிவுஜீவிகளின் புரவலராக சி.ஐ.ஏ செயல்பட்டுள்ளது.

பிற்காலத்தில் கலாச்சார காங்கிரஸ், மோமா போன்ற கலை கலாச்சார நிறுவனங்களுக்கும் சி.ஐ.ஏவுக்கும் இடையிலான உறவு அம்பலமானபோது, அது பற்றி கருத்து தெரிவித்த மோமாவின் முன்னாள் தலைவரான ப்ராடன், சி.ஐ.ஏ தனது பாத்திரத்தை ஏன் இரகசியமாக வைத்துக் கொண்டது என்பதை விளக்குகிறார்.

"எது சிறந்த பிரச்சாரமாக அமையும் என்பதை சி.ஐ.ஏ வரையறுத்துள்ளது. கலைஞன் (சி.ஐ.ஏ.வின் மொழியில் "சப்ஜெக்ட்') நாம் விரும்பும் திசையில் சிந்திக்க வேண்டும். ஆனால் அது நாம் சொல்லிக் கொடுத்ததாக இல்லாமல், தனக்கு சொந்த முறையில் சரி என்று படுகின்ற காரணங்களுக்காக, அவனே அந்த திசையை தெரிவு செய்ததாக இருக்க வேண்டும்.'

கம்பனை சடையப்ப வள்ளல் அடையாளம் கண்டு வாரி வழங்கலாமேயன்றி, வள்ளல் சொல்படி கம்பன் என்று இராமாயணம் எழுதினால் எடுபடாது என்பதைத்தான் பிராடன் கூறுகிறார். அமெரிக்காவின் வெறி கொண்ட கம்யூனிச எதிர்ப்பு, பாப் கலாச்சாரம் மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தின் சீரழிவுகள், அமெரிக்கத் திமிர் ஆகியவை குறித்து ஐரோப்பிய கலைஞர்களுக்கு வெறுப்பு இருந்ததென்னவோ உண்மைதான். எனினும், கம்யூனிச எதிர்ப்பின் இடத்தில் கட்சி எதிர்ப்பு, பாப் கலாச்சாரத்தின் இடத்தில் மேட்டிமைக் கலாச்சாரம், அமெரிக்க திமிரின் இடத்தில் அறிவாளித் திமிர் ஆகியவற்றைக் கொண்டிருந்த ஐரோப்பிய அறிவுத்துறையினர், அமெரிக்க நாணயத்தின் மறு பக்கமாகவே இருந்தனர். தமது சொந்தக் காரணங்களுக்காகவே சி.ஐ.ஏ விரும்பிய வழியில் சென்றனர்.

சி.ஐ.ஏ.வின் எலும்புத்துண்டுகளைப் பொறுக்கிக் கொண்ட கலைஞர்கள், அமெரிக்காவின் எல்லா வெளியுறவுக் கொள்கையையும் அப்படியே ஆதரிக்க வேண்டுமென்பதில்லை, அவ்வப்போது எதிர்க்கலாம் என்ற சுதந்திரத்தை சி.ஐ.ஏ இவர்களுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அதற்குரிய எல்லையையும் தீர்மானித்திருந்தது. சி.ஐ.ஏ.விடம் பெருமளவு நிதியுதவி பெற்ற என்கவுன்டர் எனும் பத்திரிகையில் முன்னாள் ஆசிரியராக இருந்த மெக்டொனால்ட், பின்னர் ஒரு சந்தர்பத்தில் தனது "அமெரிக்கா அமெரிக்கா" எனும் கட்டுரையில் அமெரிக்க நுகர்வு பற்றியும், வெகுஜன கலாச்சாரம் பற்றியும் விமரிசித்து எழுதிய கட்டுரை சி.ஐ.ஏ.வால் நிறுத்தப்பட்டது.

தங்களது சுதந்திரத்தின் எல்லை குறித்தும் இந்தப் படைப்பாளிகள் அறிந்தே இருந்தனர். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் நிலவிய வெள்ளை இனவெறியைக் குறித்தோ, இந்தோசீனப் பகுதிகளிலும் அல்ஜீரியாவிலும் அமெரிக்கா நிகழ்த்திய கொத்துக் கொத்தான படுகொலைகள் பற்றியோ இவர்கள் பேசவில்லை. "அப்படி பேசுவது கம்யூனிசத்துக்கு ஆதரவாகப் போய்விடும்' என்று மெல்வின் லாஸ்கி மற்றும் சிட்னி ஹ_க் போன்ற 'அறிவுஜீவிகள்' கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அறுபதுகளின் இறுதியில் இந்த விவரங்கள் ஓரளவு கசியத் துவங்கிய போது சில அறிவுஜீவிகள் தமக்கு ஒன்றுமே தெரியாது என்று கைகழுவி விட எத்தனித்தனர். தாங்கள் யோக்கிய சிகாமணிகள் என்றும், சி.ஐ.ஏ தமக்கே தெரியாமல் தங்களைப் பயன்படுத்திக் கொண்டது ஒரு அயோக்கியத்தனமான நடவடிக்கை என்றும் 'பொங்கியெழுந்தனர்'. இந்தப் பொங்கல் எல்லாம் அமெரிக்கா அதன் மேல் தண்ணீர் தெளிக்கும் வரைதான் நீடித்தது.

சி.ஐ.ஏ.வின் டாம் ப்ராடன் தமது பட்டியலில் இருந்த கலைஞர்கள் பற்றியும், அவர்கள் தெரிந்தே தம்மிடம் கைநீட்டி சம்பளமும் கிம்பளமும் வாங்கிய விவரங்களையும் வெளியிட்டதும் அறவுணர்ச்சியோடு பொங்கியவர்கள் அப்படியே மௌனத்தில் ஆழ்ந்து விட்டனர். (மேற்படி நூல், பக்கம்  397 - 404)

சி.ஐ.ஏவின் இரகசிய ஆவணங்கள் தொண்ணூறுகளில் வெளிடப்பட்ட போது இந்தக் கள்ளக் கூட்டு இன்னும் விமரிசையாக அம்பலமானது. எனினும், அறிவுத்துறையினர் எவரும் தமது அப்ஸ்ட்ராக்ட் எக்ஸ்ப்ரஷனிசக் கலைகளையும் படைப்புகளையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த முன்வரவில்லை. ஏனெனில் அவர்கள் உணர்வுப் பூர்வமாகவே அந்தக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டிருந்தனர்.

படைப்பாளியின் சுதந்திரத்தை மறுப்பதால்தான் கம்யூனிச அமைப்புகளையும் சித்தாந்தத்தையும் எதிர்ப்பதாக சண்டமாருதம் செய்த இந்தக் கலைஞர்கள், தங்களது ஓவியங்களையும் படைப்புகளையும் ஆதரித்து விழா எடுத்ததற்கான காரணத்தை சி.ஐ.ஏ வெளிப்படையாகக் கூறிவிட்ட பின்னரும் அதுகுறித்து கருத்து கூறவில்லை. சி.ஐ.ஏ.வின் காசில்தான் தங்கள் கலை "உலக உலா' வந்திருக்கிறது என்று தெரிந்த பின்னரும் வெட்கப்படவில்லை.

இது தான் இவர்கள் சோசலிச எதார்த்தவாதக் கலைகளுக்கும் படைப்புகளுக்கும் எதிராக நிறுவ முயன்ற சுதந்திரத்தின் யோக்கியதை. அதாவது அமெரிக்காவிற்கு நேர்ந்து விடப்பட்ட இந்த  அடிமை ஆடுகள், அந்த அடிமைத்தனத்தையே சுதந்திரம் என்று வரித்துக் கொண்டதோடு, சமூக நோக்கத்திற்காக படைப்பூக்கத்துடன் செயல்பட்ட படைப்பாளிகளை அடிமைகள் என்று முத்திரை குத்தி குற்றம் சாட்டினர்.

இவர்களை வெறுமனே கைக்கூலிகள், அடிமைகள் என்று சொல்வது முழுவதும் சரியல்ல. இவர்கள் கைக்கூலித்தனத்தையும் அடிமைத்தனத்தையும் தமது சொந்த சிந்தனையின் அடிப்படையில் ஆத்மார்த்தமாக வரித்துக் கொண்டவர்கள். அமெரிக்க நுகர்வு வெறியின்பின்னுள்ள அதே அராஜகவாதத்தையே இவர்கள் வேறொரு நளினமான மொழியில் வெளிப்படுத்தியவர்கள். வெளிப்பாடுகள் வேறு வேறென்றாலும் உள்ளடக்கம் ஒன்று தான்.

•••

சி.ஐ.ஏ.வும் அதன் கையாட்களாகச் செயல்பட்ட அறிவாளிகளும் ஓரளவுக்கு அம்பலப்பட்டுவிட்டனர் என்ற போதிலும், சிறந்த கம்யூனிச எதிர்ப்பு ஆயுதம் என்று சி.ஐ.ஏ வால் தேடித் தெரிவு செய்யப்பட்ட அந்தக் கலைக் கோட்பாடு இன்றும் செல்வாக்கு செலுத்தவே செய்கிறது. கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலர், பல்வேறு அரசியல் சமூகப் பிரச்சினைகளில் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகவும், முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகக் கருத்து தெரிவிக்கின்றனர். சிலர் போராடவும் செய்கின்றனர்.

ஆனால், அவர்கள் படைக்கின்ற ஓவியம், இசை, இலக்கியம் ஆகியவற்றில் வர்க்கப்போராட்டம் குறித்த கருத்தோ, ஏகாதிபத்திய எதிர்ப்புக் கருத்தோ உள்ளடக்கமாக இருப்பதில்லை. ஏனென்றால், புறவயமான உண்மைகள் அல்லது கருத்தியல் ரீதியான உண்மைகள் ஆகியவை தமது கலைப்படைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்குமாயின், தமது படைப்பு கலைத்தரம் இழந்து, வெறும் பிரச்சார இலக்கியமாகிவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர்.

அன்று, பனிப்போர் காலத்தில் ஐரோப்பிய அறிவுஜீவிகளின் மூளையைக் குறிவைத்து சி.ஐ.ஏ தொடுத்த தாக்குதல், உலகெங்கும் உள்ள படைப்பாளிகளின் சிந்தனையை இன்றளவும் ஆட்டு விப்பதையே நாம் காண்கிறோம்.

.தமிழரசன்