10032023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

ஹைத்தி தீவு மக்களைக் காப்பாற்றிய கூபாவின் (கியூபா) மருத்துவ சாதனை!

ஹைத்தியில் நடைபெற்ற இயற்கைப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றிய அவர்கள் தான் உண்மையான நாயகர்கள். தன் நாட்டுக்கு மிக அருகிலேயே நடைபெற்ற இந்த மனிதப் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பது தான் எங்கள் கடமை என்று வட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உறுதியேற்ற போதிலும், அவர்களைக் காப்பாற்றியது என்னவோ வட அமெரிக்கா எதிரியாக கருதும் கூபா (கியூபா) தான். ஆம் கூப மருத்துவர்களும், செவிலியர்களும் ஆற்றிய பணிகள் தான் வட அமெரிக்காவின் உண்மையான முகத்தை மக்களுக்குத் தோலுரித்துக் காட்டியது என்றால் அது மிகையன்று.

 

 

சுமார் 1,200 கூபர்களைக் கொண்ட ஒரு மருத்துவப் படையணி நிலநடுக்கத்தாலும், காலராவாலும் பாதிக்கப்பட்ட ஹைத்தி முழுக்க பணியாற்றி வருகின்றார்கள். முன்னாள் கூப அதிபர், பிடல் காஸ்ட்ரோவின் பன்னாட்டு மருத்துவ திட்டம் சோசலிச கூபாவிற்கு பல நண்பர்களை உருவாக்கித் தந்திருக்கின்றது. ஆனால் உலக அளவில் இந்தத் திட்டத்திற்கான அங்கீகாரம் என்பது மிகமிக சிறிய அளவிலேயே உள்ளது என்பது நகைமுரணாகும்.

ஏறத்தாழ 2,50,000 பேர் உயிரிழந்து, 15 இலட்சத்திற்கும் மேலான மக்கள் வீடிழந்த ஹைத்தி நிலநடுக்கம் தோற்றுவித்த இன்னல்களைச் சரி செய்து மக்களைக் காப்பாற்றி வருவது பன்னாட்டுத் தொண்டு நிறுவனங்கள் தான் என நீங்கள் எண்ணியிருந்தால் உங்களை "ஆண்டவர்' மன்னிப்பாராக.

1998லிருந்து 350 கூப மருத்துவ ஊழியர்கள் ஹைத்தி மக்களுக்கு மருத்துவம் செய்து வருகின்றார்கள். நிலநடுக்கம் ஏற்பட்ட உடனே இந்த 350 பேர் கொண்ட மருத்துவக்குழு நிவாரண வேலையில் இறங்கியது. வட அமெரிக்காவிலிருந்தும், இங்கிலாந்து அரசிடமிருந்தும் உதவிகள் வரும் என்று உலக ஊடகங்கள் கூவிக் கொண்டிருந்த வேளையில், நூற்றுக்கும் மேற்பட்ட கூப மருத்துவர்களும், செவிலியர்களும் எந்த ஒரு சிறு அறிவிப்பும் இன்றி ஹைத்தியில் வந்திறங்கினார்கள்.

பெரும்பாலான நாடுகளின் உதவிக்குழுக்கள் வழமை போலவே கூப மருத்துவர்கள் குழுவையும், எல்லையில்லா மருத்துவர்கள் குழுவையும் தனியே விட்டு விட்டு, இரண்டு மாதங்களில் பெட்டியைக் கட்டிக் கொண்டு தங்கள் நாடுகளுக்குப் பயணமானார்கள்.  கூப மருத்துவ குழுவும், எல்லையில்லா மருத்துவர்கள் குழுவும் தான் ஏழ்மையில் வாடும் மேற்கிந்திய தீவு மக்களுக்கு மருத்துவம் அளிக்கும் முதன்மையான அமைப்புகளாகும்.

2010 அக்டோபரில் இருந்து இன்றுவரை 30,000க்கும் அதிகமான காலரா நோயாளிகளை 40 மருத்துவ மையங்களில் உள்ள கூப மருத்துவக்குழு குணப்படுத்தியுள்ளது என தற்போது வெளியாகியிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. ஹைத்தியில் உள்ள 40விழுக்காடு காலரா நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ள கூப மருத்துவர்கள் குழுதான் ஹைத்தியிலுள்ள மிகப்பெரிய வெளிநாட்டு மருத்துவக்குழு ஆகும். இது மட்டுமன்றி, அண்மையில் ஹைத்தியில் நூற்றுக்கும் அதிகமான மக்கள் ஒரு குறிப்பிட்ட நோயினால் மரணமடைவதை அறிந்ததும் கூபாவின் இயற்கைப்பேரழிவு, சிறந்த மருத்துவ நிபுணர்களைக் கொண்ட அவசர காலக் குழுக்களில் ஒன்றான ஹென்றி ரீவ் மருத்துவப் படையணியும்  ஹைத்திக்கு வந்து சேர்ந்தது.

கூபாவில் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ள மருத்துவ மையம் Escuela Latinoamericana de Medicina en cuba (Elam) வில் 1998லிருந்து 550 ஹைத்தி மருத்துவர்களுக்கு இலவசமாகப் பயிற்சி அளித்துள்ளது. மேலும் பணம் இல்லாத காரணத்தினால் தனது நாட்டில் மருத்துவம் படிக்க முடியாத திறமையான 400 மாணவர்கள் இன்று கூபாவில் மிகமிக குறைந்த செலவில் மருத்துவப் படிப்பு பயின்று வருகின்றார்கள்.

கனடாவின் டல்ஹோசி பல்கலைக்கழகத்தில் இலத்தின் அமெரிக்க கற்றலுக்கான விரிவுரையாளர் சான்கிர்க் கூபாவின் பன்னாட்டு மருத்துவக்குழுக்களைப் பற்றி பகுப்பாய்வு (Research) செய்துள்ளார். அவர் கூறுகையில், "ஹைத்தி நிலநடுக்கத்தில் பெரும்பாலான மருத்துவப் பணிகளை கூபமருத்துவக்குழு மட்டுமே செய்துள்ளது. ஆனால் இதைப் பற்றி யாரும் வாய்திறக்காமல், இதை ஏதோ உலக ரகசியம் போன்று மறைத்து வைத்துள்ளது, உலக நாடுகள்.'

இது ஏதோ இன்று புதிதாக நடக்கும் ஒன்றல்ல. கூப நாட்டிலிருந்து, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட சிலே நாட்டுக்கு 1960ல் ஒரு மருத்துவ படையணி சென்றதையும், 1963ல் அல்சீரியா நாட்டிற்கும் 50 பேர் கொண்ட மருத்துவக்குழு சென்ற தகவல்களும் உலகினால் மறைக்கப்பட்ட ஒன்று தான். புரட்சி நடந்து முடிந்த நான்கு ஆண்டுகளில் மேற் கூறிய நிகழ்வுகளை கூபா நடத்தி காட்டியது. நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் (7,000)  வட அமெரிக்காவை நோக்கி பறந்து கொண்டிருந்த காலம் இது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இது போன்று பல நாடுகளுக்கு பயணம் செய்யும் மருத்துவக் குழுக்கள் மூலமாக கூப நாட்டிற்கு பல நண்பர்கள் உலகம் முழுவதும் உருவாகியுள்ளனர். இதில் மிகவும் குறிப்பிடத்தக்க திட்டம் என்றால் "ஆப்பரேசன் அதிசயத்தை' கூறலாம். கூபாவிற்கு வெனிசுலா கொடுக்கும் எண்ணெய்க்குப் பதிலாக கூப கண் மருத்துவர்கள் வெனிசுலாவில் ஏழ்மையில் வாடும் கண் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே அத்திட்டமாகும். இந்தத்

திட்டத்தைத் தொடர்ந்து 35 நாடுகளில் 18 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் கண் தொடர்பான பிரச்சினைகள் கூப மருத்துவர்களால் களைய அவர்களுக்கு எல்லாம் கண் பார்வை மீளக்கிடைத்துள்ளது. இதில் 1967இல் சே குவேராவைக் கொன்ற பொலிவிய காவலாளியான மரியோ தெரனும் அடங்குவார் (அவரது கண் பார்வையையும் மீட்டுக் கொடுத்தது கூப மருத்துவக் குழுவே).

கத்ரினா புயலுக்குப் பின்னர் பல வட அமெரிக்க மருத்துவர்களும் (முன்னாள் கூபர்கள்) ஹென்றி ரீவ் மருத்துவப் படையணியில் சேர்ந்து கொண்டார்கள். இந்த மருத்துவப் படையணிதான் 2005இல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கு முதலில் சென்று மருத்துவ உதவி செய்தது. வழமை போலவே மற்ற எல்லா தொண்டு நிறுவனங்கள் கிளம்பிய பிறகும், ஆறு மாதங்கள் கழித்தே இவர்கள் நாடு திரும்பினார்கள்.

விரிவுரையாளர் கிர்க் மேலும் கூறுகையில், "உலக நாடுகளில் வாழும் மக்களுக்கு ஆதரவளிப்பது (Solidarity) என்ற கொள்கைக்காக மட்டுமில்லாமல், கூப அரசியலமைப்பில் உள்ள வறுமையில் வாடும் நாடுகளுக்கு தேவைப்படும் போது எல்லாம் உதவ வேண்டும் என்ற நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டே இம்மருத்துவப் படையணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.' "கூபாவில் குறைந்த அளவு மட்டுமே ஊதியம் பெறும் இம்மருத்துவர்கள் இந்தக் குழுக்களுடன் பயணிப்பதன் மூலம் அதிகமான ஊதியம் கிட்டுவதுடன், தாங்கள் படித்த நோய்களைப் பற்றி மேலும் தெரிந்து கொண்டு, அதைத் தடுக்கும் வழிமுறைகளில் அவர்கள் ஈடுபடவும் உதவுகின்றது. அதிபர் பிடலின் முக்கியக் கொள்கையான இந்த மருத்துவக் குழுக்களினால் ஐக்கிய நாடுகள் சபையில் கூபாவிற்கு ஆதரவாக வாக்குகளும் விழுந்துள்ளது'.

எல் சாவ்டார், மாலி, கிழக்கு pமோர் உள்பட 77 வறிய நாடுகளில் 5,000 கூப மருத்துவர்களும் (கூபாவின் மொத்த மருத்துவர்களின் எண்ணிக்கையில் இது மூன்றில் ஒரு பங்கு), 10,000க்கும் அதிகமான மருத்துவ ஊழியர்களும் வேலை செய்து வருகிறார்கள். இவ்வளவு மருத்துவர்கள் கூபாவுக்கு வெளியே பணியாற்றி வந்த போதும், கூபாவில் 220 மக்களுக்குஒரு மருத்துவர் என்ற விகிதம் உள்ளது என்பதும், இதுதான் உலகிலேயே சிறந்த முதல் விகிதம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தில் 370 மக்களுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதமே இதற்கு அடுத்ததாகும்.

எங்கெல்லாம் கூப மருத்துவர்கள் அழைக்கப்படுகின்றார்களோ அந்தப் பகுதிகளில் எல்லாம் அவர்கள் நோயைத் தடுக்கும் வழிமுறைகளை செயல்படுத்தியும், வீடுகளுக்குச் சென்று மருத்துவம் செய்தும், குறிப்பாக பிரசவ கால பெண்களின் உடல்நிலையையும், குழந்தைகளின் உடல் நிலையையும் தொடர்ந்து கவனித்தும் வருகின்றார்கள். இந்த முறைகளின் மூலமாக "மிகப்பெரிய வித்தியாசத்தை' எல் சாவ்டார், கௌதமாலா, கோண்டு ராஸ் நாடுகள் கண்டுள்ளன. பிரசவகாலத்தில் குழந்தைகள் இறக்கும் விகிதம் குறைந்துள்ளது. குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களின் விழுக்காடு குறைந்தும் உள்ளது. மேலும் அந்தந்த நாடுகளில் இருக்கும் மருத்துவர்களுக்குத் தேவையான பயிற்சியையும் இந்தக் குழு  அளிக்கின்றது எனசான் கிர்க் தனது பகுப்பாய்வின் மூலம் நிறுவியுள்ளார்.

கூபாவில் மருத்துவப் பயிற்சி ஆறு ஆண்டு காலமாகும் (இங்கிலாந்தை விட இங்@க ஒரு ஆண்டு அதிகம்). பயிற்சி முடிந்த பின்னர் ஒவ்வொருவரும் குடும்ப மருத்துவர்களாக குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் வேலை செய்யவேண்டும். அவர் வாழும் சமூகக் கூட்டமைப்பில் உள்ள ”மார் 150லிருந்து 200 மக்களுக்கு  மருத்துவம் பார்க்க வேண்டும், இவருக்கு உறுதுணையாக ஒரு செவிலியரும் இருப்பார்.

இந்தத் திட்டத்தின் மூலமாக கூபா உலகில் எந்த நாடும் அடைய முடியாத பல்வேறு மருத்துவ முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனால் இதற்காக ஒரு ஆண்டிற்கு நபர் ஒன்றுக்கு அரசு செய்யும் செலவு 400 டாலர் மட்டுமே. இதுவே இங்கிலாந்தில் நபர் ஒன்றுக்கு அரசு செய்யும் செல்வு 3000 டாலர்களாகவும், வட அமெரிக்காவில் 7,500 டாலர்களாகவும் இருக்கின்றது என பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கான கூட்டமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு நாட்டிலுள்ள மருத்துவத்துறையின் செயல்பாடுகளை அறியும் மிக முக்கியமான குறியீடான பிரசவத்தின் போது குழந்தைகள் இறக்கும் விகிதம் 1000க்கு 4.8 ஆக மட்டு@ம இங்கு உள்ளது. இது இங்கிலாந்தில் உள்ள விகிதத்திற்கு சமமானதும், வட அமெரிக்காவில் உள்ள விகிதத்தை விட குறைவானதும் ஆகும். நீண்ட கால உடல் நலத்தில் முக்கிய பங்கு வகிப்பது பிறந்த குழந்தையின் எடையாகும். கூபாவில் 5 விழுக்காடு குழந்தைகளே பிறக்கும்போது குறைவான எடையுடன் பிறக்கின்றார்கள். மேலும் பிரசவகாலத்தின் போது ஏற்படும் இறப்பு விகிதத்தில் இலத்தின் அமெரிக்காவிலேயே கூபா தான் மிகக்குறைவான இறப்பு விகிதம் கொண்ட நாடாகும்.

இந்தப் புள்ளிவிவரங்கள் எல்லாம் உலக சுகாதார நிறுவனத்தால் (றுர்ழு) எடுக்கப்பட்டவையாகும். கூபாவில் உள்ள மருத்துவ மையங்கள், 24 மணி நேரமும் இயங்குகின்றன. அவசர மற்றும் சிறப்பு மருத்துவ மையங்கள் குடும்ப மருத்துவ மையங்களுக்கு அடுத்த நிலையில் உள்ளவையாகும். இந்த மையங்களில் முழு நேர மருத்துவ ஆலோசகர்களும், சிறப்பு மருத்துவர்களும் உள்ளார்கள். இந்த இரண்டு மையங்கள் மூலமாகவும் 15,000 முதல் 20,000 வரையிலான நோயாளிகள் 24 மணி நேரமும் மருத்துவ உதவி பெறுகின்றார்கள்.

கூபாவின் மூன்றாவது பெரிய நகரமான காமாகுவேயில் நடைபெறும் பன்னாட்டு மருத்துவ ஊழியர்களுக்கான பயிற்சிப் பட்டறையைத் தலைமை ஏற்று நடத்தும் டெர்பியைச் (இங்கிலாந்து) சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவரான இமிதி சோனாரா கூறுகையில் "கூபாவில் உள்ள மருத்துவத்துறை மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக குடும்ப மருத்துவர்கள், அவர்களின் தன்னார்வம் நோய் உருவாகும் வாய்ப்புகளைத் தடுக்கின்றது... இதில் வேடிக்கையான நிகழ்வென்னவென்றால், புரட்சி வெற்றி பெற்ற பின்னர் இங்கிலாந்துக்கு வந்து தேசிய சுகாதார மையம்  (Nர்ளு) எவ்வாறு வேலை செய்கின்றது எனப் பார்த்துக் கற்றுக் கொண்டு, அதை மேலும் முறைப்படுத்தி அடுத்த நிலைக்கு அவர்கள் கொண்டு சென்றுள்ளார்கள். ஆனால் இங்கிலாந்தோ இன்று வட அமெரிக்க மாதிரியை (தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்க ளைச் சார்ந்தது) நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது'.

கூப மருத்துவத் துறையில் பெரும்பாலான இடங்களில் அரசியல் ஊடுருவிச் செல்கின்றது. வட அமெரிக்காவின் தடையின் மூலமாக (வடஅமெரிக்கா மற்ற நாடுகள் கூபாவுக்கு மருத்துவக் கருவிகள் ஏற்றுமதி செய்வதையும் தடுத்து வருகின்றது)  தங்களுக்கு கிடைக்காத மருந்துகள், மருத்துவக் கருவிகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ மனைகள் தயார் செய்து அரசிடம் கொடுக்கின்றன.

2009-10 ஆண்டிற்கான பட்டியலில் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்று நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள், எச்.ஐ.வி, ஆர்த்தர நோய்களைக் குணப்படுத்துவதற்கான மருந்துகள், சில மயக்க மருந்துகள், நோய்களைக் கண்டறியவும், உடல் உறுப்புகளை பாதுகாப்பாக வைக்க  உதவும் சில வேதிப்பொருட்களும் தங்களிடம் இல்லை என இப்பட்டியல்கள் அறிவிக்கின்றன. கூபாவில் உள்ள மருந்தகங்களை ஒரு நீண்டவரிசையிலான மக்களைக் கொண்டு எளிதாக அடையாளம் காணலாம். ஒரு சில முறையான மருந்துகள் மட்டுமே ஒழுங்காக வைக்கப்பட்டிருக்கும். மீதமுள்ள மருந்துகள் எல்லாம் ஒழுங்கற்றே வைக்கப்பட்டிருக்கும்.

சுகாதார அமைச்சகத்தில் பணிபுரியும் அந்தோனியோ பெர்ணான்டசு கூறு கையில் "எங்களுக்குத் தேவையான 80 விழுக்காடு மருந்துகளை நாங்களே உற்பத்தி செய்கின்றோம். மீதமுள்ள 20 விழுக்காடு மருந்துகளை சீன, முன்னாள் சோவியத்து நாடுகள், ஐரோப்பிய நாடுகளிடமிருந்து (எங்களுக்கு மருந்துகளைக் கொடுக்கும் மற்ற நாடுகளிடமிருந்தும்) இறக்குமதி செய்து கொள்கின்றோம். தொலைதூரத்திலிருந்து இந்த மருந்துகள் வர வேண்டியிருப்பதால், இதற்கான செலவு மிக அதிகமாகின்றது' என்கிறார்.

மொத்தத்தில் பார்க்கையில் ஹைத்தியிலும், மற்ற வறிய நாடுகளிலும் தாங்கள் செய்யும் பணிகளைக் கண்டு கூப மக்களுக்கு மகிழிச்சியே. உலக நாடுகளில் தங்களது தகுதிக்கும் மீறிய மருத்துவப் பணிகளையே அவர்கள் செய்து வருகின்றார்கள். வெளிநாடுகளில் பாதி மருத்துவர்கள் இருப்பதால், உள்நாட்டில் மருத்துவர்களைப் பார்க்க நீண்டநேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகச் சில மக்கள் புகார் தெரிவித்துள்ளார்கள். எல்லாப் பொருட்களையும் போலவே மருந்துப் பொருட்களும் கூபாவில் கள்ளச் சந்தைகளில் கிடைக்கின்றது. இதைக் கள்ளச்சந்தையில் வாங்கும் போதோ, விற்கும் போதோ பிடிபட்டால் அவர்கள் பெரும் தொகையை அபராதமாகச் செலுத்தநேரிடும்.

பன்னாட்டுப் பயணம் என்பது கூபர்களுக்கு இயலாத ஒன்று. ஆனால் தகுதி வாய்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களது பயிற்சி முடிந்து பின் இது போன்ற மருத்துவ குழுக்களில் இருப்பதன் மூலம் ஐந்தாண்டுகளுக்கு பல நாடுகளைச் சென்று பார்க்கும் வாய்ப்பு கிட்டுகின்றது.

எல்லா உழைக்கும் மக்களைப் போலவே, மருத்துவர்களுக்கும் குறைவான மாத ஊதியமே (20 டாலர்) இங்கு வழங்கப்படுகின்றது. அரசு தரப்பு ஆவணங்களில் இல்லாத ஊழல் மருத்துவத் துறையின் சில இடங்களில் காணப்படுகின்றது. தேவையான சிகிச்சைகளில் தங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்காக மருத்துவர்களுக்குத் தேவையான உணவையோ அல்லது சில பெசோக்களையோ (கூப நாட்டு ரூபாய்) நோயாளிகள் மருத்துவர்களுக்குக் கொடுக்கின்றார்கள்.

பன்னாட்டு மருத்துவத் துறையைக் கட்டமைப்பதென்பது கூபாவின் மிக முக்கியமான செயலுத்தியாகும். ஹைத்தியில் அரசின் பொது மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்காக கூப அரசு அதிகாரிகள் பிரேசிலுடனும், வெனிசுலாவுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளார்கள். இவ்விரண்டு நாடுகளுமே இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்க ஏதுவாக உள்ளன.

கூபா நடத்தும் மருத்துவப் பயிற்சிகள் மற்றுமொரு முன்மாதிரியாகும். 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வந்துள்ள 8,281 மாணவர்கள் Escuela Latinoamericana de Medicina en cuba (Elam) ல்  மருத்துவப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றார்கள். உடூச்ட் மருத்துவ மையம் கடந்த மாதம் தனது பதினொன்றாம் ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளது. இங்கு படிக்கும் மாணவர்கள் தங்கள் நாடுகளிலுள்ள வறிய சமூகங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்ற சமூக சிந்தனையையும் மாணவர்கள் மனதில் பதியவைக்க எண்ணியுள்ளது கூப அரசு.

வட அமெரிக்காவிலிருந்து கூபா வந்து மருத்துவம் பயிலும் 171 மாணவர்களில் (இதில் 47 மாணவர்கள் ஏற்கெனவே படித்து முடித்து விட்டார்கள்) ஒருவரான டேமியன் சோயல் சுவாரேசு கூறுகையில் "இங்கு சேகுவேர ஒரு தேசியத் தலைவர் ஆவார். ஆனால் அவரை நாங்களும் ஒரு தலைவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என இங்கு ஒருவரும் எங்களை வற்புறுத்துவதில்லை' என்கிறார். மேலும் அவர் கூபாவின் பரப்புரை இயந்திரங்களில் ETAM  ஒன்று என்பதையும் மறுதளித்துள்ளார்.

இலத்தின் அமெரிக்கக் கண்டத்தில் ஒரு இலட்சம் மருத்துவர்களை உருவாக்க வேண்டும் என்று 2005இல் உறுதி மொழி ஏற்றுக்கொண்ட பிடல் காஸ்ட்ரோவும், சாவேசும் இணைந்து உருவாக்கிய El Nuevo Pograma de Formacion de Medicos Latinoamericonosதிட்டத்தில், இதுவரை 41,000 மாணவர்கள் பதியப்பட்டு, அவர்களுக்கான மருத்துவப் பயிற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் இதை விமர்சிப்பவர்கள் இதில் பயிற்சி பெறும் மாணவனின் திறமை எவ்வாறு இருக்கும் எனக் கேள்விகள் எழுப்பியுள்ளார்கள்.

ஆனால் மேற்கூறிய விமர்சனத்தை மறுக்கும் விரிவுரையாளர் கிர்க், "இலண்டன், டொரண்டோவில் மக்களுக்கு வழங்கப்படும் அதி நவீன மருத்துவச் சிகிச்சை என்பது மூன்றாம் உலக நாடுகளில் வறுமையில் இருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு தேவை இல்லாதது. கூபர்கள் வழங்கும் மருத்துவப் பயிற்சிகளை விமர்சிப்பதென்பது இவர்களுக்கு எளிதான ஒன்று. ஆனால் மருத்துவர்களே இல்லாத பகுதிகளில் வாழும் மக்களுக்கு மருத்துவர் கிடைப்பதென்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு நிகழ்வேயாகும்'.

கண்டிப்பாக கிர்க் கூறிய இக்கருத்தை தொன்னூறு இலட்சம் ஹைத்தி மக்களும் ஒப்புக் கொள்வார்கள்.

நினா லக்கானி, நன்றி: தி இன்டிபெண்டன்ட். தமிழாக்கம்: ப.நற்றமிழன் (வினவு இணையத்தளத்தில் வெளியான கட்டுரை)