"அவன் கெடக்குறான் சுண்டைக்காப் பய, நம்ம வந்த சோலிய பாப்போமா? இவுனுக ஒரு ஆளுண்ணு டென்சன் ஆகுற... வாண்ணே!'
தெருப் புழுதியைக் கிளப்பிக் கொண்டு இரண்டு அம்பாசிடர் கார்களும் பழைய பள்ளிக்கூட வாத்தியார் நடராசன் வீட்டுப் பக்கம் போய் நிற்க, படுத்துக் கிடந்த நாய் வெடுக்கென எழுந்து கத்தியவாறு சந்துப் பக்கம் ஓடியது.
"வாங்க! வாங்கண்ணி! எல்லாரும் வாங்க' நடராசனின் மனைவி சிரித்த முகத்துடன் வரவேற்க, நடராசனும் வரவேற்று அமர வைத்தார்.
"அண்ணன் வீட்டுக்குள்ள வரணும்னாலே கோழிப்பீய மிதிக்காம வர முடியாது. வாசல்ல அவ்ளோ கோழிமேயும்...'
"அதெல்லாம் அப்போ... இப்ப உங்க அண்ணியால இருக்குற ஒத்தப் பசுவைத் தொட்டுப் பாக்கவே முடியல. எங்கேர்ந்து கோழி அடைக்கறது. எல் லாத்தையும் விட்டாச்சு...'
நடராசனின் மெலிதான புன்னகையைத் தொடர்ந்து புரோக்கர் ராமையன் பழைய விசயங்களைக் கிளறினார். அப்போல்லாம் ஆரலூரு மெயின்ல எறங்குனா... ஆட்டாம்புழுக்க வாசத்த வச்சே அண்ணன் வீட்டுக்கு தானா வந்துர்றலாம்... எத்தன ஆடு, கறவ மாடு, ட்ராக்டர்... செட்டாப்பா விவசாயம் பாத்தவராச்சே!'
பலவாறு அங்குமிங்கும் பேச்சு போய் விசயத்துக்கு வந்தார் புரோக்கர். "அப்புறம் என்னாண்ணே, பொண்ணு புடிச்சுப் போச்சுன்னு ஏற்öகனவே சொல்லியாச்சு... மொறைக்குக் கைத் தாம்பூலமா மாத்திக்கலாமுன்னுதான் இன்னைக்கு வந்ததே... நம்மூரு பிரசிடெண்ட் பாலையன் இவுரு... ஊர் நல்லது கெட்டதுக்கு அண்ணன்தான்...ஹீ... ஹீ...'
"நம்ப குடும்பத்தப் பத்தி எங்கப்பா நிறைய சொல்லிருக்காரு, எங்கப்பா மூர்த்தி கூட உங்க தோப்புல அப்ப வியாபாரத்துக்கு காய் வெட்டிருக்காரு. செறுகுடி மூர்த்தின்னு கேள்விப்பட்டிருப்பீங்க!...' பிரசிடெண்ட் வாய் நிறைய புன்னகைக்க...
"ஓ! புரியுது... அவுரு புள்ளையா நீங்க... நம்ப காலம் முடிஞ்சு போச்சு... விவசாயிகளத் தேடி வர்றதே பெரிசா போச்சு...'
"பணம் கெடக்குதுங்க... வாழ்ந்த வழிமுறை வருமா? பொண்ணு எடுக்க வந்துருக்காங்கண்ணா, உங்க குடும்பத் தோட கவுரவம், ஊர்ல மதிப்பு, வாழ்ந்து பேரு வாங்குன குடும்பமாச்சே...'
"அப்புறம்?' புரோக்கர் நடராசனை அர்த்தம் பிடிபட பார்த்தார்.
"பிறகு என்ன? ஏற்öகனவே சொன்னதுதான்... இருபத்தஞ்சு பவுணு... குடும்பத்துக்கேத்த சமான், சட்டு, மத்ததெல்லாம் மொறையா நடக்கும்... வார்த்தை சுத்தமா இருக்கும்...'
"அது தெரிஞ்சதுதாங்களே... அப்புறம் மத்ததெல்லாம் உங்க விருப்பம்... உங்க பொண்ணுக்குக் கூட கொடுத்தாலும் நீங்கதான், கொறச்சு தந்தாலும் நீங்கதான்... பையன் டவுன்ல நல்ல வேலைல இருக்கிறதால... அந்த வண்டி மட்டும்...' புரோக்கர் இழுவை போட...
பிரசிடெண்ட் பாலுவும் சுதி சேர்த்தார். "மசங்காதீங்க... யார்த்தான் கைலவச்சி கிட்டு ஒரு காரியத்துல இறங்குறாங்க... உங்களால முடியாதது இல்ல. நல்ல பையன் துணிஞ்சு முடிங்க... உக்கும்...'
பழைய பெருமைகளை உசுப்பேற்றியே நினைத்ததை முடித்தவாறு "ஊம்... ஊம்... வாங்க... வாங்க... தட்டமாத்துங்க' என்று புரோக்கர் கன கச்சிதமாக வேலையை முடித்தார். இயலாமையை ஒரு மெல்லிய புன்னகையால் மறைத்தவாறு... இப்போதே கடன் வாங்கும் திசைகளைத் தேடுவது போல முடிவின்றி அங்குமிங்கும் விழிகளை அலைய விட்டார் நடராசன்.
"தை, மாசி, பங்குனி, இன்னும் ரெண்டு மாசந்தான். மளமளன்னு வேலை ஆகட்டும். அண்ணி
வாரேன்...' புரோக்கர் பெரிய கும்பிடோடு விடை பெற்றார்.
•••
"மாப்புள வாத்தி பயகிட்ட இன்னும் புடுங்கலாம் போல. எருக்குழி கிட்ட பழைய ட்ராக்டர் ஒண்ணு என்னமா நின்னுச்சு பாத்தியா?'
"இல்ல தலைவரே! உண்மையிலேயே நொடிச்சுப் போய்தான் கெடக்குறான். ரெண்டாவது பய வூட்ல பவுணுக்குத்தான் நமக்கு காசு... ஒரே இருட்டா இருக்கு தடமே தெரியல... பாத்து நடங்க...'
"பேசாம, கார்லயே பாலம் வரைக்கும் போய் எறங்கியிருக்கலாம்... ஒத்தலைட்ட மாத்துங்கடான்னு நேத்துதான் சொன்னேன்.'
"ஊர் சனம் திட்டிகிட்டே போவுதுங்க... ஏற்பாடு பண்ணுங்க. பேரு கெட்டுப் போயிடும்... பத்து ட்யூப் லைட்ட தின்னாலும்... ஒத்த குண்டு பல் பையாவது கண்ணுல காட்டுனா.. அடங்கிப் போவானுவ...'
"ஏய்... ஊத்துன கட்டிங்கு என்கிட்டயே நக்கல் பேச சொல்லுது... தோ! இந்தா... ஒண்ணுக்கு போயிட்டு வாரேன்...' பேசிக் கொண்டே இருட்டில் ஓரமாய் உட்கார...
"அய்யோ! ராமையா... வெடுக்குன்னு ஏதோ புடுங்கிடுச்சுடா... கடுக்குதே... அய்யோ கடு கடுன்னு மேலே ஏறுதுடா... அய்யோ... ஆளக் கூப்பிடு...'
"அப்பவே சொன்னேனே... இருட்ல ஒதுங்காதீங்கன்னு... நான் என்ன பண்ணுவேன்...'' எதிரே தென்பட்ட ஆட்களைத் திரட்டி... அலேக்காக பிரசிடெண்டைத் தூக்கிக் கொண்டு ஆஸ்பத்திரி பக்கம் ஓடினான் ராமையன்.
எல்லாம் ஒரு நொடியில் முடிந்தது மாதிரி ஆகி விட்டது. பந்தநல்லூர் விமல் கையை விரித்து, காரைப் பிடித்து தஞ்சாவூர் மெடிக்க கா@லஜ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்தாகி விட்டது.
"பேசாம, பொண்ணு வீட்டுக்கு தட்டு மாத்தப் போய் வந்தவனுக்கு கதியப் பாத்தியா... பொல்லாப் பாம்மாம்... சாகுற நிலைமைக்குப் போய் உசிரு திரும்பியிருக்கு...' பேசிக் கொண்டே வந்த குழந்தை சாமியை வழிமறித்து விசாரித்தாள் சின்னப் பொண்ணு, "அத ஏன் கேக்குற! அது மெடிக்கலு. ஊர் கடைசில இருக்கு, போனா மனுசன் பாம்பு போலவே சுருண்டு கெடக்கான்... பாம்பு மூச்சுவிடும் பாரு! அதே போலவே வயிறு இழுக்குது... மொகம் கருத்து.. நல்ல வேளை உசிருக்கு சேதாரமில்லாம தப்புனது... இவ்ளோ சனம் இருட்டுல போவுல வரல, விதி... இழுத்து கொண்டு வுட்ருக்குது!'
"விதியா?... அந்தப் பொண்ணு சாதகம் அப்படி... கேட்ட நட்சத்திரமா இருந்தா கேட்டோன்னயே அடிச்சிடுமாம்! நம்ம டீக்கடை சாமிநாதன் அப்படித்தானே. நல்லா இருந்த மனுசன்... பொண்ணு பாத்து வந்த கையோட முதுகுல எதுவோ கடிச்சு உடனே போனாரு... கிரகம் மட்டும் சும்மா வுட்டுட்டு தேடாது! ஆங்!' கூட இருந்த தங்கையன் புகையிலையைக் கசக்கினான்.
"என்னவோ! போ... அவன பாம்பு புடுங்கப் போயி, பாவம் இன்னமே அந்த எடமே வேணாம்னு பையன் வீட்லேயும் பொண்ண வேண்டாமுன்னுட்டாங்களாமே!'
"பின்ன, இம்புட்டு நடந்த பின்ன மனம் துணியுமா?'
"என்ன இருந்தாலும் தட்டு மாத்துன கல்யாணம் நின்னா, பொண்ண யாருகட்டுவா?'
"தே! நீ வேற? மனுசன் உசிரே போகுதுங்குறான், கிரகம் சரியில்லாத பொண்ண யாரு கட்டுவா?' பேசிக் கொண்டே கலைந்தார்கள்.
"என்னா மாரி? பிரசிடெண்ட்டயா பாத்துட்டு வார?'
"ஆமாம் சின்ன பொண்ணு, கேள்விப்பட்டு எப்புடி பாக்காம இருக்கறது? மனுசன் கெடையாதான் கெடக்குறான்! வீட்டு லோனுக்கு வேற அந்தாளத்தான் பாக்கணும். அதுக்குள்ள இப்புடி இழுத்து வுட்டுட்டு கெடக்குறான்.'
சுற்றி முற்றும் பார்த்துக் கொண்டு, சின்னப் பொண்ணும் பல்லை நறநறத்தாள். ""பண்ண கோளாறு அவ்வளவு, மதகு கட்டுனதுல பத்து மூட்டைக்கு மேல சிமுண்டு மூட்டைய வித்துருக்கான்.. ஒரு லெட்டர் கொடுக்க எம்புட்டு காசு வாங்குறான்.. ரொம்ப அநியாயம் பண்ணா... ஒருத்தர் சாபம் இல்லேண்ணா... ஒருத்தர் சாபம் பலிக்காதா... பாம்பு விழுந்து புடுங்கிடுச்சு...'
"ஏய் நீ வேற வாயை பொத்துடி... யாராவது கேட்டு வைக்கப் போறாங்க...' மாரி குரலைத் தாழ்த்திப் பேச "பின்ன... அந்த தாலியறுத்தவ கொல்லையை வேலிய வச்சு வளச்சானே.. அந்தப் பாவம்லாம் சும்மாவுடுமா...' சின்னப் பொண்ணு பொரிந்து தள்ள, மாரி ஜாடை காட்டினான். எதிரே வந்த பால்க்கார மணி விசாரித்தான்.
"ஆமப்பா... பாவம் பிரசிடெண்ட்டு பாம்பு கடிச்சு கெடக்காறாம். போயிபாக்கணும்.. புள்ள குட்டிக்காரரு... நேரம் யார விட்டுச்சு.. ஏதோ கீழ்மாந்தூர் மகமாயிதான் காப்பாத்தியிருக்கா? சின்னப் பொண்ணு அப்படியே முகத்தை மாற்றிக் கொண்டு ஏற இறங்கப் பேசினாள்.
"அதுக்குத்தான் ஜாதகத்த சரியாப் பாக்கணும். எக்குத்தப்பா போய் விழுந்தா எல்லாத்தையும் அடிச்சிடும்.. கல்யாணத்தை நிப்பாட்டிட்டானாம்ல புரோக்கர்... இப்ப வலிச்சு என்னத்த ஆகறது? இருட்டறதுக்கு முன்னால புத்திவேணும்?'
பால்க்கார மாரி பேசிக் கொண்டே சைக்கிளில் ஏறினான்.
"ஏய் மாரி! வா இருட்டுறதுக்குள்ள நாம எட்டுவச்சுப் போவோம்! பூச்சு பொட்டு திரியுற நேரம் வருது.. புள்ளதாச்சி பொம்பளயா இருந்தாலும் இந்த இருட்லதான் போக வேண்டியிருக்கு... எவன் கண்டுக்குறான்...?
"அது என்னாக்கா! கருப்பாய் கொல்லையே புடிச்சு எரியுற மாதிரி வெளிச்சமா தெரியுது!'
"இது தெரியாதா? அதாண்டி கருப் பூரு பவர் பிளாண்ட்டு... நம்ப நடவாளு வலாம் இப்ப அங்கதான வேலக்குபோறாவ! கரண்ட்டு தயாரிக்கிறானுவளாம்...'
"பாத்து! பாத்து! நீ நடுவாலயே நடந்து வா... பேசிக்கிட்டே வா.. பூச்சிபொட்டு கெடந்தா ஓடட்டும்..' மாரியும், சின்னப்பொண்ணுவும் முன்னிருட்டில் நடக்க மேலேறி வந்த நிலா வெளிச்சம்... மின் கம்பியில் பட்டு ஒளிர்ந்தது.
• துரை. சண்முகம்