Language Selection

புதிய கலாச்சாரம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கற்பின் ஆதரவும், கலவியின் எதிர்ப்பும், கருத்துச் சுதந்திரத்திற்கு வேட்டு வைப்பதாகவும், சகிப்புத் தன்மையற்ற பாசிசச் சமூகமாக மாறுவதன் அடையாளமென்றும் ஓநாய் போல வருத்தப்படும் இந்தியா டுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் தமக்கு ஆதரவாக அமீர்கான், நரேன் கார்த்திகேயன், சானியா மிர்சா முதலான அகில இந்திய நட்சத்திரங்களைக் களத்தில் இறக்கி விட்டிருக்கின்றனர்.

 

இதையே சற்று "அறிவார்ந்த' தளத்தில் ஆதரிக்கும் வேலையினை அ.மார்க்ஸ், ஞாநி, கனிமொழி மற்றும் சிறு பத்திரிக்கைகள் செய்ய, செயல் தளத்தில் சற்று தாமதமாகவும், தயக்கத்துடனும் த.மு.எ.ச. கோமாளிகள் பேசி வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாதபடி, தங்களது பெயர்கள் ஊடகத்தில் தொடர்ந்து அடிபடுவதைக் கண்ட பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் உடனடி லாட்டரியில் கிடைத்த திடீர் பரிசின் மகிழ்ச்சியோடு ஆர்ப்பாட்டங்களையும், வழக்குப் போடுதலையும் தொடர்கின்றனர்.

 

இது போக தமிழில் வெளியாகும் செய்திகளில் இரண்டு உண்மைகள் சன் டி.வி. உண்மை, ஜெயா டி.வி. உண்மை உண்டென நிறுவி வரும் மேற்படி சானல்கள் குஷ்புசுகாசினியை எதிர்ப்பதையும், ஆதரிப்பதையும் பரபரப்புத் தளத்தில் செய்து வருகின்றனர். உறுதியாக "இன உணர்வு அற்றுப்போன தமிழ்ப் பாலைவனத்தின்' கதகதப்பில் சோர்ந்து சுருண்டிருக்கும் இனவாதப் பூனை, தமிழினம் தனது மரபு, கற்பு, பண்பாடு குறித்து சிறுத்தை போல சீறுவதாகக் கற்பித்துக் கொள்கிறது; ஒரு பகற்கனவுக்காரனின் இன்பத்தைத் துரத்தி மகிழ்கிறது தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி.

 

எது கருத்துச் சுதந்திரம்> யாருக்குக் கருத்துச் சுதந்திரம்?

இந்தப் பிரச்சினை கருத்திலும், காட்சியிலும் பரபரப்பாய் இருக்குமளவுக்கு அதன் உண்மை சூட்சுமமாய் மறைக்கப்பட்டிருக்கின்றது. மேட்டுக்குடியின் நனவுப் பத்திரிகையான இந்தியா டுடேயின் தலைமையில் குஷ்புவின் ஆதரவாளர்கள் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டு விட்டதாய் அலறுவது அதிலொன்று.

 

முதலாளித்துவ ஜனநாயகத்தின் தந்திரமான இருப்பே அது எல்லோருக்குமான நலனுக்காக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்தான் அடங்கியிருக்கிறது. இதில் முதலாளிகளின் நலன் பாதிக்கப்படும் போதெல்லாம் எல்லோரின் நலன் பாதிக்கப்படுவதாக கூக்குரல் எழுப்பப்படும். ஜனநாயகத்தின் கதி இதுதானென்றால் கருத்துச் சுதந்திரத்தின் கதியும் அதுதான். சட்டத்தின் ஆசியுடன், தண்டனையின் கண்காணிப்பில் போதிக்கப்படும் ஜனநாயகத்தின் மேன்மை போன்றே அனைவருக்கும் சமமான கருத்துச் சுதந்திரம் என்பதும் ஒரு மூடநம்பிக்கைதான்.

 

உண்மையில் கருத்துச் சுதந்திரம் என்று ஒன்று இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. பலரும் பல கருத்துக்களை பேசி, எழுதி, விவாதிக்கலாம். ஆனால் அவை அமலாக்கப்படும்போதோ, முடிவெடுக்கப்படும் போதோ ஆளும் வர்க்க நலனுக்குரியவை மட்டும்தான் தேர்வாகும். மற்றவை மறுக்கப்படும். எனவே எல்லாக் கருத்துக்களும் கருத்தளவில் உலவலாமே ஒழிய, பௌதீக ரீதியான செயலாக ஒருபோதும் மாற முடியாது. ஆக அரசும் ஜனநாயகமும் அதிகாரமும் ஒரு வர்க்கத்தின் நலனுக்காக மட்டுமே இருக்க முடியும் என்ற விதி கருத்துக்களின் உரிமைக்கும் பொருந்தும்.

 

குஷ்பு கூறிய சுதந்திரப் பாலுறவு பற்றிய பிரச்சினை மேற்கண்ட விதியுடன் நேரிட்டுப் புரிந்து கொள்ள முடியாத ஒரு பண்பாட்டுப் பிரச்சினை என்ற போதிலும் அந்த வேலையை இந்தியா டுடே சிறப்பாகச் செய்து வருகிறது. குஷ்பு, சுகாசினி கொடும்பாவிகள் எரிக்கப்படுவதைக் கண்டிக்கும் சாக்கில் அழகுப் போட்டிக்கு ஆபத்து, பேஷன் ஷோவிற்குத் தடை, ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் நொறுக்கப்படும் அராஜகம் போன்றவற்றையும் சேர்த்துக் கொண்டு கண்டிக்கிறது.

 

இதிலெல்லாம் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்துள்ளது என்று அலறும் இந்தியா டுடே, வைகோ உள்ளிட்ட தமிழின ஆர்வலர்கள் பொடாவில் அநீதியாகச் சிறை வைக்கப்பட்டது குறித்து வாய் திறக்கவில்லை. ஏன்? ஈழப்போராட்டத்தை வெறும் மேடைப் பேச்சில் கூட ஆதரிப்பதற்குச் சுதந்திரமில்லையா? குஷ்பு, சுகாசினியை ஆதரித்து ஞாயிறு மலர் வெளியிடும் இந்துப் பத்திரிக்கை தனது சக பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபாலை ஜெயா அரசு பொடாவில் வாட்டி எடுத்தது குறித்து மூச்சு விடவில்லை.

 

எழுத்தாளர் சுந்தரராமசாமி மறைவையொட்டி பக்கம் பக்கமாக அழுது, அரற்றி, புலம்பித் தீர்க்கும் காலச்சுவடு, உயிர்மை முதலான சிறுபத்திரிக்கைகளும், போலிக் கம்யூனிஸ்டுகளின் கலைப்பிரிவான த.மு.எ.ச.வும், தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளென ஆந்திரத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரவரராவும் கல்யாண் ராவும் கைது செய்யப்பட்டதை ஒரு செய்தி என்ற அளவில் கூடக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் 60 ஆண்டுகளுக்கு முந்தைய ஸ்டாலினின் சோவியத் யூனியனில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்பட்டதான புனைவை பொய்யை இவர்கள் நினைவு கூறுவதற்கு தவறுவதில்லை.

 

சாதியின் பெயரால் மக்களைத் தன் பின்னே திரட்டி வைத்துக் கொண்டு பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் நடத்திவரும் பிழைப்புவாத, காரியவாத, சந்தர்ப்பவாத அரசியலையும், அதன் வழி அச்சாதிகளைச் சேர்ந்த மக்கள், சந்தர்ப்பவாதத்திற்குப் பயிற்றுவிக்கப்படுவதையும் பற்றிக் கவலைப்படாமல் உண்மையில் அவற்றை அங்கீகரித்துக் கொண்டு குஷ்பு எதிர்ப்பில் இவர்களது பாசிச மனோபாவத்தைக் கண்டுபிடித்துக் கவலைப்படுவது நகைப்பிற்குரியது; அருவறுப்பானது.

 

உலகமயமாக்கத்தின் விளைவால் விரிந்து செல்லும் மேட்டுக்குடியின் அலங்கார வாழ்வை மட்டுமே அங்கீகரிக்க முயலும் இந்தியா டுடே, இந்து பத்திரிக்கைகள் சுதந்திரப் பாலுறவு குறித்த சர்ச்சையில் எடுக்கும் நிலைப்பாடும், கவலைப்படும் விதமும் ஆச்சரியமானதல்ல.

 

உண்மையில் குஷ்பு, சுகாசினிக்கு ஆதரவாய் பிரபலங்களை நேர்காணல் செய்வதும், ஒத்த கருத்துள்ளவர்களை வைத்து "விவாதம்' நடத்திச் செய்தி வெளியிடும் இப்பத்திரிக்கைகளின் கருத்துச் சுதந்திரத்தில் யார் தலையிட்டார்கள், இல்லை, யார்தான் தலையிட முடியும்? விடுதலைச் சிறுத்தைகளோ, பா.ம.க.வினரோ தமக்கு எதிராக இப்பத்திரிக்கைகள் எப்படிச் செய்தி வெளியிட முடியும் என்று கேட்டதில்லையே. மேலும், அப்படிக் கேட்கத்தான் முடியுமா?

 

இதனால் இந்தியா டுடேயில் திருமாவளவனின் விருந்தினர் பக்கம் கிழிபடும் என்பதல்ல, இப்பத்திரிக்கைகளை எதிர்க்க நினைப்பது இந்திய அரசையே எதிர்ப்பது போல ஆகுமென்பது அவர்களுக்கு நிச்சயம் தெரியும். எனவே நிச்சயமின்மையில் மாட்டிக் கொள்ளும் அளவுக்கு அவர்கள் பாமரர்கள் அல்ல. கூட்டணியிலும், ஆட்சியிலும் சிறிய பங்கைப் பெற்றிருக்கும் அவர்களுக்கு தங்களது ஆட்டத்தை எந்த எல்லைவரை கொண்டு செல்லலாம் என்பதும் நன்கு தெரியும்.

 

எனவேதான் குஷ்புவுக்கு எதிராக ஆத்திரம் கொள்ளும் இச்சூரப்புலிகள் பார்ப்பனப் பத்திரிக்கைகள் தங்களைத் தவறாகச் சித்தரிப்பதாக வருத்தம் வெளியிடுகிறார்கள். திருமாவளவன் ஒருபடி மேலே போய் "துடைப்பம் தூக்கிய எங்காட்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை' என்று விலகிக் கொள்கிறார்.

 

இவ்வாறு பார்ப்பன ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்தை இவர்கள் பணிவுடன் அங்கீகரிக்கிறார்கள். விளக்குமாறு, செருப்பு, மட்டுமல்ல மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் ஆகிய அனைத்துமே சமூகத்தின் கருத்துரிமைக்கு எதிரான பாசிச நடவடிக்கைகள் என்று நிலைநாட்டுவதுதான் குஷ்பு விவகாரத்தின் மூலம் பார்ப்பன ஊடகங்கள் செய்ய விரும்பும் சதி.

 

மக்கள் தமது கோரிக்கைகளை மனுக் கொடுத்தும் பயனில்லை என்பதால் மறியல் செய்து போராடுகிறார்கள். நாக்பூரில் கோவுர் இனப் பழங்குடி மக்கள் மந்திரியைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்று போலீசின் தடியடி நெரிசலில் 150 பேரைப் பலி கொடுத்தனர். நெல்லையில் மாவட்ட ஆட்சியரைப் பார்த்து மனுக் கொடுக்கச் சென்ற மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் 18 பேர் போலீசால் கொல்லப்பட்டனர்.

 

கேவலம் மனுக் கொடுப்பதற்குக் கூட உரிமையோ, சுதந்திரமோ, அனுதாபமோ இல்லாத இந்த நாட்டில் தான் குஷ்புவுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லையென்று கண்ணீர் விடுகிறார்கள். தமது கருத்துக்களை வெளியிடுவதற்கு வழியே இல்லை என்பதால்தான் சுவரொட்டியாய், சுவரெழுத்தாய், ஊர்வலமாய், மறியலாய் மக்கள் தங்களது கோரிக்கைகளை வெளியிடுகிறார்கள். இந்தியாடுடே, இந்து போன்ற பத்திரிக்கைகள் கையில் இருந்தால் போலீசிடம் அடிபட்டு ஏன் சாகவேண்டும்? எனவே, கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் கூட மக்களுக்கு இல்லை, முதலாளிகளுக்கு மட்டும்தான்.

 

அம்பானியின் குடும்பச் சண்டையை தேசியப் பிரச்சினையாக்கிய தேசியப் பத்திரிக்கைகள் அதைத் தீர்த்து வைப்பதற்குக் காட்டிய முனைப்பும், சகாரா முதலாளி சுபத்ரா ராய் தலைமறைவானது குறித்து அவை காட்டிய கவலையும், பாரிசில் உலக இரும்பு இந்திய முதலாளி லட்சுமி மிட்டல் உலகமே வியக்கும்படி நடத்திய திருமணம் குறித்த பெருமிதமும், மக்களுக்கு கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் இல்லை என்பதும் வேறுவேறல்ல.

 

தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் அடங்கிய செய்தி ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் ஊடக முதலாளிகள். செய்தி ஊடகங்களின் முக்கிய வருவாயான விளம்பரத்தை அளிப்பவர்கள் அரசு, தொழில் துறை மற்றும் சேவைத் துறை முதலாளிகள். இந்நிலையில் ஆளும் வர்க்க நலனுக்குஉகந்தவை என்று முடிவு செய்யப்படுபவை மட்டுமே செய்தியாக, கட்டுரையாக, நிகழ்வாக, ஆய்வாக, அறிவாக முன்னிறுத்தப்படும். மற்றவை கிள்ளுக் கீரையாக மறுக்கப்படும்.

 

"மனம் போல தினம் ஜமாய்' என்று கோக்கை குடிக்குமாறு அமீர்கான், விவேக், விக்ரம் வலியுறுத்துவதற்கு இருக்கும் சுதந்திரம் கோக்கை மறுப்பதற்கு இல்லை. நெல்லையில் "அமெரிக்க கோக்கை அடித்து விரட்டுவோம்' என்ற எமது இயக்கத்தின் சுவரெழுத்துப் பிரச்சாரத்திற்காகவே, பிணையில் வர இயலாத வழக்கு காவல் துறையால் போடப்பட்டது. இன்றும் கிராமப்புறங்களில் பிரச்சாரம் செய்யும் எமது தோழர்களை தொடர்ந்து தடுக்கும் போலீசு மக்களையும் மிரட்டி வருகிறது.

 

""கங்கை கொண்டான் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கொக்கோகோலாவுக்கு ஆதரவாக இருப்பதால் நீங்கள் நடத்தும் எதிர்ப்புப் பிரச்சாரம் பொது அமைதியைச் சீர்குலைத்து விடும்'' என்று எழுத்துப்பூர்வமாகவே கருத்துரிமையை மறுக்கிறது நெல்லைப் போலீசு. குஷ்புவின் கருத்துரிமைக்காகக் குமுறி வெடிக்கும் சென்னை உயர்நீதி மன்றம், நெல்லைப் போலீசு அதிகாரிகளை வேலை நீக்கமா செய்யப் போகிறது?

 

குஷ்பு, சுகாசினி எதிர்ப்பை தமிழ் ஊடகங்கள் செய்தியாக்குவதன் காரணம், அதன் சினிமா பரபரப்பைக் காசாக்குவதுதானேயொழிய வேறு எதுவுமில்லை. அதனால்தான் குஷ்புவை ஆதரித்து ஆங்கில ஊடகங்கள் வெளியிடும் செய்தியின் "தரம்' தமிழில் இல்லை. குஷ்பு பிரச்சினை குறித்த விவாதமொன்றில் சினிமா தயாரிப்பாளர் பழ.கருப்பையா குஷ்புவை அவள் இவள் என்று பேசியதைக் கண்டிக்கிறார்கள். கண்டிப்பாக இது பழ.கருப்பையாவின் ஆணாதிக்கம்தான். ஒத்துக் கொள்வோம். ஆனால் நக்சலைட்டுகளையும், காசுமீர் போராளிகளையும் அவன், இவன் என்று எழுதுவதும், தீ.கம்யூனிஸ்டுகள், தீவிரவாதிகள் என்று அவதூறு செய்வதும் என்ன வகை ஆதிக்கம்?

 

பழ.கருப்பையாவது அவள், இவளென்று நிறுத்திக் கொண்டார். பெண்கள் விசயத்தில் சங்கராச்சாரி என்ன பேசினார், எப்படி நடந்து கொண்டார் என்பது நிர்வாணமான நிலையில் எந்தப் பத்திரிகையும் சங்கராச்சாரியைப் பொறுக்கி என்று எழுதவில்லை. எழுதவில்லை என்பது மட்டுமல்ல தீபாவளித் திருநாளில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டதை வைத்து, அடிப்படை ஜனநாயக உரிமை பறிபோனதாக ஒரு பாட்டம் அழுது தீர்க்கவும் செய்தார்கள். ஆனால் அப்துல் கலாமை அரசவைக் கோமாளி என்று ஒரு உலகறிந்த உண்மையை எழுதியதற்காக தருமபுரியில் எமது தோழர்கள் 55 நாட்கள் சிறையில் இருந்தனர்.

 

ஆக, இந்தியத் திருநாட்டில் ஒருநபரை எப்படி அழைக்கலாம், அழைக்கக் கூடாது என்பதில் கூட கருத்துச் சுதந்திரம் கடுகளவும் இல்லை. எப்போதெல்லாம் ஆளும் வர்க்க நலன் இலேசாக உரசப்படுகிறதோ உடனே கருத்துச் சுதந்திரமும் பாதிக்கப்படுவதாகக் கூக்குரல் எழுகிறது.

 

கலாச்சாரப் போலீசைக் கண்டிக்கும்

சட்டம் ஒழுங்கு போலீசு!

குஷ்புவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான வன்முறை என்றும், இவர்களைக் கலாச்சாரப் போலீசு என்றும் சித்திரிக்கும் பார்ப்பன ஊடகங்களும், போலி கம்யூனிஸ்டுகளும், அறிஞர் பெருமக்களும் இக்கருத்தை வெளியிடும்போது சட்டம் ஒழுங்கு போலீசின் குரலில் பேசுகிறார்கள். அதுமட்டுமல்ல ஏற்கெனவே ஜனநாயகமும், கருத்துரிமையும் சட்டப்படி நிலவி வருவதைப் போன்ற பிரமையையும் உருவாக்குகிறார்கள். பாசிசத்தை ஜனநாயகம் என்று அங்கீகரிக்கும் இவர்கள் "கற்பை' பிற்போக்குத்தனம் என்று சாடுவது நல்ல நகைச்சுவை.

 

கற்பை ஆதரிக்கும் கருத்துப் பிரச்சாரம் செய்யலாமாம். ஆனால் அதைக் கண்ணியமான முறையில் செய்ய வேண்டுமாம். துடைப்பம், செருப்பு, கொடும்பாவி ஆகியவை கூடாதாம். செருப்பு, துடைப்பம் வைத்து ஆர்ப்பாட்டம் செய்வதோ, வழக்குப் போடுவதோ உலகெங்கும் உள்ள ஏற்றுக் கொள்ளப்பட்ட ஜனநாயக முறைகள்தானே, இதில் எங்கே வன்முறை உள்ளது? உண்மையில் இத்தகைய ஆர்ப்பாட்ட முறைகளின் மீது நடுத்தர வர்க்கத்திற்கு உள்ள வெறுப்பையே இந்து பத்திரிகை முதல் ஷங்கர் படம்வரை வெளிப்படுத்துகிறார்கள். இந்த வெறுப்பே நீதிமன்றங்கள் மூலம் பல விதங்களில் சட்டமாகியிருக்கின்றது.

 

அடுத்து குஷ்பு, சுகாசினியை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு போடுவதைப் பாசிசம் என்கிறார்கள். இதை எப்படிப் பாசிசம் என்று சொல்ல முடியும்? லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுமில்லாத வழக்குகளுக்காகவும், வாய்தாக்களுக்காகவும் அலைந்து கொண்டிருக்கும்போது, குஷ்பு மேட்டூர் நீதிமன்றத்தில் படியேறியது குறித்துக் கண்ணீர் விடுகிறார்கள். உண்மையில் இது "நாங்கள் நீதிமன்றம், வழக்கு, விசாரணைக்கு அப்பாற்பட்டவர்கள்' என்ற மேட்டிமைத்தனமே அன்றி வேறல்ல. சென்னை உயர்நீதி மன்றமும் குஷ்பு மீது வழக்குகள் போடுவதைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

 

ஆளும் வர்க்க நலன் பாதிக்கப்படும் போது மட்டும் எல்லோருக்குமான சட்டம் ஒழுங்கு "எங்களுக்கில்லை' என்ற மனோபாவம்தான் இவர்கள் பேசும் ஜனநாயகத்தின் உண்மையான இலக்கணம். கோவை குண்டு வெடிப்பில் கைதான அப்பாவி முசுலீம்கள், பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகள் போன்றோர் உயர்நீதி மன்றத்தின் அநீதிக் கண்களுக்குத் தெரிவதில்லை. குஷ்புவின் கருத்தை எதிர்க்கும் கற்பு ஆதரவாளர்கள் தமிழ்ப் பிற்போக்காகவே இருக்கட்டும். அவர்கள் போடும் வழக்கை சட்டபூர்வமாக எதிர்கொண்டு நிரபராதி என்று நிரூபிப்பதில் என்ன பிரச்சினை?

 

பாசிசத்தின் பாதந்தாங்கியாகக்

கருத்துச் சுதந்திரம்!

ஒரு கருத்தை கருத்தால் சந்திக்காமல், துடைப்பத்தை எடுப்பது வன்முறை என்றால் தங்கர்பச்சான் நடிகைகளைப் பற்றி தெரிவித்த கருத்துக்காக அவரை மன்னிப்புக் கேட்க நிர்ப்பந்தித்ததும் வன்முறைதான் என்று ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். காசுக்காக தனது கருத்தையும், கலைத் திறமையையும், உடலையும் விற்பனை செய்கின்ற விபச்சாரர்கள் நிரம்பிய திரையுலகத்தில் விபச்சாரிகளை மட்டுமே சாடிய தங்கர்பச்சானின் ஆணாதிக்க மனோபாவத்தைக் கண்டிப்பதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது?

 

கருத்துச் சுதந்திரக்காரர்களின் இந்த இரட்டை வேடம் தவிர்க்க இயலாமல் அவர்களைப் படுகுழியில் இறக்குகிறது. ""பாபர் மசூதியை இடித்தது குற்றம்தான், ஆனால் "மசூதி இருந்த இடத்தில் ஏற்கெனவே கோவில் இருந்தது' என்று கூறுவதற்கும், "அங்கே கோவில் கட்டுவோம்' என்று கருத்து தெரிவிப்பதற்கும் இந்துத்துவவாதிகளுக்கு கருத்துரிமை உண்டு'' என்று கூறுகிறார் அ.மார்க்ஸ். அரை அம்மண நடனங்கள், ஏகாதிபத்திய நுகர்வு வெறிக் களியாட்டங்கள் இவற்றின் அடிப்படையில் அமைந்த தனிநபரின் பாலியல் உரிமைகள் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டு பாசிசத்தின் கருத்துரிமையையும் ஆதரிக்க வேண்டியிருக்கிறது. குஷ்புவின் கருத்துரிமைக்காக முசுலீம்களின் வாழ்வுரிமையையும், வழிபாட்டுரிமையையும் காவு கொடுக்கிறார் அ.மார்க்ஸ்.

 

முற்போக்குக் கலைஞரான பிரளயனோ தனியாருக்குச் சொந்தமான டிஸ்கோத்தே அரங்கிற்குள் போலீசு எப்படி அத்துமீறி நுழையலாம் என்று நட்சத்திர ஓட்டல் முதலாளியைப் போல இடி முழக்கம் செய்கிறார். இந்த வாதத்தின்படி தனிச்சொத்துடைமையின் பெயரால் சாதி தீண்டாமையையும், கருத்துரிமையையும் அங்கீகரிக்க வேண்டியிருக்கும்.

 

எல்லா கருத்துக்களுக்கும் சமஉரிமை என்ற கருத்தே ஒரு பித்தலாட்டம். சாதி தீண்டாமையும், இந்து மதவெறிப் பாசிசமும், கற்பும், முல்லாக்களின் பத்வாக்களும், உழைக்கும் மக்களுக்கெதிரான கருத்துக்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்ற யாரும் அவர்களுடைய கருத்துச் சுதந்திரத்திற்காகக் குரல் கொடுக்க முடியாது. அவற்றை அங்கீகரிக்கவும் முடியாது.

 

பெண்ணடிமைத்தனத்தை

வளர்க்கும் பாலுறவு சர்வேக்கள்

இந்தியா டுடேயின் செக்ஸ் சர்வேயிலோ, குஷ்பு கூறிய கருத்திலோ ஆணாதிக்கம் குறித்து ஒரு வெங்காயம் கூடக் கிடையாது. மாறாக, மாநகர மேட்டுக்குடி இளம் பெண்களிடம் விதவிதமான பாலியல் ருசிகளை அறிமுகப்படுத்துவதற்காகவே அந்த செக்ஸ் சர்வே எடுக்கப்பட்டது. அந்த சர்வேயில் கேட்கப்பட்ட கேள்விகளைப் பார்த்தால் இனிமேல் சரோஜாதேவிப் புத்தகங்களுக்குத் தேவையில்லை என்று தோன்றும். நடுத்தர வர்க்கம் மற்றும் மேட்டுக்குடியை விழுங்கி வரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம்தான் இந்த சர்வே.

 

உலகமயம், தாராளமயம், தனியார்மயம் உருவாக்கி வரும் நுகர்வுப் பண்பாடு, சமூகம் சூழ வாழும் ஒரு தனிநபரை பொருட்கள், ஆசைகள் சூழப்பட்ட நபராக மாற்றுகிறது. இந்த நபர் மேலும் மேலும் தனிமனிதனாக மாறி சகிப்புத் தன்மையற்ற நபராக மாறி, தனது ஆசைகளை நிறைவேற்றுவதற்காக ஏனைய மனித உறவுகளை ரத்து செய்கிறார். பாலுறவிலும் நுழையும் இந்தக் கண்ணோட்டம் எந்த அளவுக்குப் பரவுகிறதோ அந்த அளவுக்கு ஆணாதிக்கத்தை எதிர்த்தோ, பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்தோ, பெண்ணடிமைத்தனத்தை எதிர்த்தோ உள்ள மங்கலான போராட்ட உணர்வைக் கூட பெண்களிடமிருந்து துடைத்தெறிந்துவிடும். இது தனது ஆசை, தேவைகளுக்காக எல்லா விழுமியங்களையும் துறந்து தேர்ந்த காரியவாதியாக மாறுவதைப் பயிற்றுவிக்கிறது.

 

இந்தியா டுடேயின் சர்வே கேள்விகளில் ஒன்றான "வேலை கிடைப்பதற்காக உடலை விற்பீர்களா?' என்ற கேள்வி அவர்களின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தி விடுகிறது. அது மாறும் சூழ்நிலைக்கேற்ப "அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து கொள்ளுமாறு நவீன காலப் பெண்களைப் பச்சையாகக் கேட்கிறது. கற்பு குறித்த பிற்போக்குத்தனத்தை, செத்த பாம்பை அடிக்கும் இவர்கள் தங்கள் சர்வேயில் பாலியல் வன்கொடுமை பற்றியோ, சமூகத்தில் விரவியிருக்கும் ஆணாதிக்கம் குறித்தோ ஒரு கேள்விகூடக் கேட்கவில்லை.

 

குஷ்புவும் கூட தனது கருத்தில் திருமணத்துக்கு முந்தைய பாலுறவில் "பாதுகாப்பாக விளையாடுமாறு' கவலை கொள்கிறார். இங்கும் சுதந்திரப் பாலுறவின் பெயரால் பெண்ணுடலை நுகர் பொருளாக்கும் ஆணாதிக்கம் குறித்து எந்தக் கேள்வியுமில்லை. அதனால்தான் இவர்கள் கற்பை பிற்போக்கு என்று தெளிவாக வரையறுப்பதுபோல, பெண்களுக்கான முற்போக்கு எது என்பதை தெளிவாக வரையறுக்க முடியவில்லை. அதற்கு மாறாக பெண்ணுடலை வெறும் காமப் பொருளாக உறிஞ்சக் கொடுக்கும் அடிமைத்தனத்தை அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் சிபாரிசு செய்கிறார்கள். இதுவும் கற்பு என்ற பிற்போக்குத்தனத்திற்கு கடுகளவும் குறையாத பிற்போக்கத்தனம்தான்.

 

சுதந்திரப் பாலுறவு என்ற கோட்பாடு நடைமுறையில் ஆணின் பொறுக்கித்தனத்திற்கும், பெண்ணின் அடிமைத்தனத்திற்கும் உதவுமேயன்றி அதில் வேறு எந்த தத்துவ ஆராய்ச்சிக்கும், மயிர் பிளக்கும் விவாதத்திற்கும் இடமில்லை. அவ்வகையில் விடுதலைச் சிறுத்தைகள் பா.ம.க.வினரின் மலிவான பரபரப்பு அரசியலை விட இந்தியா டுடேயின் பாலுறவு அரசியல் அபாயகரமானது.

 

ஐ.டி. (ஐ.கூ) எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறை குறித்து ஆகா, ஓகோ என்று புகழ்பாடும் இந்தியா டுடே அதில் பெண்கள் படும் துயரம் குறித்து இதுவரை எந்த சர்வேயும் எடுத்ததில்லை. இத்துறைப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு அதிகமாக ஆளாகிறார்கள், பணிநிரந்தரம் பாதுகாப்பு இல்லை, தொழிற்சங்க உரிமை இல்லை, வரையறுக்கப்பட்ட பணி நேரம் இல்லை. மேலும், வார இறுதிக் கேளிக்கைகளுக்கு கட்டாயமாக வரவழைக்கப்படுகிறார்கள். இதற்கு மறுப்பவர்கள் இத்துறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள் அல்லது பழமைவாதி என்று கேலி செய்யப்படுகிறார்கள். அந்தப் பழமைவாதிகளை ஜாலியான அடிமைகளாகப் பழக்கப்படுத்துவதுதான் இந்தியா டுடேயின் வேலை. மாறாக, அந்த நவீனப் பெண்ணடிமைகளை விடுதலை செய்வதற்கல்ல.

 

இந்தியா டுடேயின்

"புதிய முற்போக்கு'

கற்பு எனும் நிலவுடைமைப் பிற்போக்கைச் சாடும் சக்கில் இந்தியா டுடே உலகமயமாக்கத்தின் கேடுகளை நைசாக முற்போக்கு என்று சேர்த்து விடுகிறது. பழைய தொழிற்சங்கச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் இது முற்போக்கு, தொழிற்சங்கம் வேண்டுமெனச் சொல்வது, வேலை நிறுத்தம் செய்வது இவை பிற்போக்கு. பேஷன் ஷோ, அழகிப் போட்டி முற்போக்கு. புகைபிடிக்கும் காட்சிகளைத் தடைசெய்வது, கடைகளின் பெயரைத் தமிழில் எழுதுவது பிற்போக்கு. இறுதியில் இந்த "முற்போக்கை' மறுத்து "பிற்போக்கை' ஆதரிப்பவர்களை தாலிபான்கள் என்று முத்திரையும் குத்தி விடுகிறது இந்தியா டுடே. காலாவதியாகும் கற்பை வைத்து உலகமயமாக்கத்தின் கேடுகளை ஏற்கச் செய்யும் இந்தச் சதித்தனம் எத்தனை பேருக்குப் புரியும்.

 

முன்னேறிக் கொண்டிருக்கும் சமூகத்தை குஷ்புவை ஆதரிப்பவர்கள் பின்னுக்கு இழுப்பதாக ஒரு சிறப்புக் கூட்டம் போட்டுப் புலம்பிய த.மு.எ.ச. அறிவாளிகளை ஏன் கோமாளிகள் என்று அழைத்தோம் என்பது இப்போது புரிந்திருக்கும். ஆனால் தொழிற்சங்கம் கூடாது என்ற "முற்போக்கை' மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா ஏற்றுக் கொண்டுள்ள படியால் அவர்களை முற்றிலும் ஏமாந்த கோமாளிகள் என்றும் சொல்லிவிட முடியாது.

 

கருத்துச் சுதந்திரத்திற்காக மார்தட்டும் இந்தியா டுடே தொழிற்சங்கம் வேண்டுமா வேண்டாமா என்பது குறித்தும், தாராளமயத்தால் தற்கொலை செய்யும் விவசாயிகள் குறித்தும், அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் ஏன் சர்வே எடுக்க முன் வரவில்லை? ஆனால் பாலியல் குறித்து மூன்று மாதத்திற்கொரு முறை சர்வே எடுக்கும் வேகமென்ன, குஷ்புவுக்கு ஆதரவாக ஒதுக்கப்படும் பக்கங்களென்ன, சமூகம் "முன்னேறி'ப் போவதன் இலட்சணம் இதுதான். குஷ்புவை எதிர்ப்பதில் தீவிரம் காட்டும் பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் கூட இத்தகைய சமூக முன்னேற்றத்தோடு கருத்து வேறுபாடு கொண்டவர்களல்லர். அவ்வகையில் அவர்களது சண்டை அட்டைக் கத்திகளோடுதான்.

 

எய்ட்ஸ் நோயின் ஊற்றுக் கண்ணான விபச்சாரத்தையும், மக்களைக் காமவெறி பிடித்த விலங்குகளாக மாற்றும் திரைப்படங்களையும் தடை செய்வது குறித்து மூச்சுவிடாமல், நாடெங்கும் ஆணுறை எந்திரங்களை வழங்குவதன் மூலம் ஆண்களுக்குப் "பாதுகாப்பை' வழங்குகிறார் அமைச்சர் அன்புமணி. பெண்களுக்கு கற்புக் கவசம் அணிவித்து ஆண்களிடமிருந்து "பாதுகாக்கிறார்' அப்பா இராமதாசு. சிகரெட் உற்பத்திக்குத் தடை இல்லை; சினிமா நிழலுக்குத் தடை. சில்லறை விற்பனையில் பன்னாட்டு நிறுவனங்களை நுழைத்து தமிழ் வணிகர்களை ஒழிக்க டெல்லியிலிருந்து திட்டம். அழியவிருக்கும் சிறுவியாபாரிகள் தமிழில் போர்டு வைத்த பின்தான் அழியவேண்டும் என்பதற்குத் தமிழ்நாட்டில் போராட்டம்.

 

குஷ்பு, சுகாசினி

மேட்டுக்குடியின் மனச்சாட்சி!

பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் எப்படி தமிழினத்தின் பிரதிநிதிகள் இல்லையோ அதேபோல குஷ்புவும் பெண்ணினத்தின் பிரதிநிதியல்ல.

 

குஷ்பு தின்று தினவெடுத்த வர்க்கத்தின் பிரதிநிதியாக இருந்து, சுதந்திரப் பாலுறவு குறித்துப் பேசுகிறார். அவரை தேர்ந்த சமூகவியலாளரைப் போலப் பேசுவதாகக் குறிப்பிடுவது நகைப்பிற்குரியது. அப்படிப் பேசியிருந்தால் ஒரு நடிகையாக கோடீசுவரியாக தான் நிலைபெறுவதற்குச் செய்த "தியாகங்களை' குறைந்தபட்சம் ஒரு மேலோட்டமான சுயவிமர்சனமாகக் கூடச் சொல்லியிருப்பார். ஆனால் அவரைப் போன்ற பெண்கள் தம்மை இழப்பது குறித்தல்ல, பெறுவது குறித்தே கவலைப்படுகிறார்கள். அதையே ஒரு வாழ்க்கை முறையாக மற்றவர்களுக்கும் பரிந்துரை செய்கிறார்கள்.

 

குஷ்புவிடம் கேட்கப்பட்ட கேள்வியை ஏழ்மையினால் விபச்சாரியாக்கப்பட்ட பெண்ணிடம் கேட்டால் என்ன பதில் வரும்? நிச்சயமாக "அட்ஜஸ்ட்மெண்ட்' செய்து வாழுவதைச் சரியெனக் கூறமாட்டார். காரணம், இங்கே இழப்பினால் நடிகைகளுக்கு கிடைக்கும் ஆடம்பர வாழ்வு கிடைக்காது. அவலம்தான் கிடைக்கும். நல்ல கணவன், குழந்தைகள், கல்வி, குடும்பம் என்ற சராசரிப் பெண்ணின் ஏக்கம்தான் அந்த விபச்சாரியிடம் வெளிப்படும். குஷ்புவிடம் இல்லாத ஆணாதிக்கக் கொடுமையின் மீதான கோபமும், வெறுப்பும் இந்தப் பெண்களிடம் கண்டிப்பாக இருக்கும்.

 

சுகாசினி, குஷ்பு போலத்தான் என்றாலும் கூடுதலாக பார்ப்பன மேட்டிமைத்தனம் கலந்த கலவை எனலாம். தமிழின வெறுப்பும், இந்துத்துவ ஆதரவும், மேட்டுக்குடியின் போலியான தேசபக்தியும் கொண்ட, "தேசியப் படங்களை' எடுத்த மணிரத்தினத்தின் மனைவி என்ற தகுதியை அவர் சரியாகக் கொண்டிருக்கிறார்.

 

மணிரத்தினத்தின் வீட்டில் குண்டு வெடித்ததை வைத்து, ரஜினியிடம் சமூக உணர்வு பொங்கியதைப் போல, குஷ்புவிற்கு ஏற்பட்ட நிலைமை குறித்து சுகாசினியிடம் கோபம் கொம்பு போல சட்டென்று வெளிப்படுகிறது. மற்றபடி சராசரி தமிழ்ப் பெண்களின் வேதனை, அவலம் குறித்து அவரிடம் ஏதும், எப்போதும் வெளிப்பட்டதில்லை. பிரச்சினைகளை மேட்டிமைத்தனமாகப் பேசும் மேட்டுக்குடிப் பெண்கள், பெண்ணினத்தின் போராளியாகச் சித்தரிக்கப்படுவது, பெண்ணினத்தின் சாபக்கேடேயன்றி, பெருமைக்குரியதல்ல.

 

பிழைப்புவாதத்தைப் பாதுகாக்கும்

"தமிழ் ஆணுறை'!

தமிழக அரசியல் பொதுக்கூட்டங்களில் பேசும் பேச்சாளர்கள், அதிலும் தீப்பொறி, வெற்றிகொண்டான், நடராசன் போன்றோர் தலைவர்கள் பெண்டாளுவதைப் பெருமையாகவும், தலைவிகள் சோரம் போனதைத் தரக்குறைவாகவும் பேசுவது ஒரு நீண்ட மரபு. அவ்வகையில் திராவிட இயக்க அரசியலில் ஆணாதிக்கத் திமிரும், பெண்களைக் கேவலமாகப் பேசுவதும் இரத்தத்தோடு கலந்து விட்ட ஒன்று.

 

பா.ம.க.வும், விடுதலைச் சிறுத்தைகளும் இந்தப் பொது நீரோட்டத்தோடு கூட்டணி வைத்துக் கலந்தவர்கள்தான். இரண்டு பிரபலமான பெண்கள் பேசியதை வைத்து, தமிழ்ப் பண்பாடு, மரபு, பெருமைக்குப் போராடுபவர்களாகக் காட்டிக் கொள்ள நினைக்கும் இவர்கள், தமிழ்க் கற்பு குறித்துக் கதைப்பது வெறும் பம்மாத்தே. தமிழ்ப் பெண்களின் வாழ்வைச் சூறையாடும் தாராளமயக் கொள்கையர்களின் ஆட்சியில் பங்குதாரராக இருந்து கொண்டே தமிழ்க் கற்பு பற்றிக் கதைக்கின்றனர்.

 

எத்தனை மேன்மைமிக்கதாக இருந்த போதிலும் கற்பு என்பது நடைமுறையில் ஒரு தனிநபரின் பாலியல் ஒழுக்கம் சார்ந்த விசயம் மட்டும்தான். ஆனால் பொது வாழ்வில் ஒழுக்கம் என்ற சொல்லை தமது அகராதியிலிருந்தே நீக்கிய கனவான்கள் தமிழ்ப் பெண்களின் கற்பு நெறி குறித்தும், மக்களின் உணர்வு புண்படுவது குறித்தும் அலட்டிக் கொள்வது அருவெறுக்கத்தக்கது; கேலிக்குரியது.

 

குஜராத் இனப்படுகொலை நடந்தபோது கண்ணை மூடிக் கொண்டு பா.ஜ.க. வழங்கிய பதவிச் சுகத்தை அனுபவித்து இன்பம் கண்ட கருணாநிதி, இராமதாசின் அரசியல் ஒழுக்கத்திற்கு விளக்கம் தேவையில்லை. "தலித் விடுதலை'க்காக மூப்பனார், பெர்ணாண்டஸ், சங்கராச்சாரி, ஜெயலலிதா, கருணாநிதி, சிதம்பரம் கோவில் தீட்சிதர் உள்ளிட்ட யாருடனும் கூட்டு சேர தயங்காத திருமாவளவனின் அரசியல் ஒழுக்கமோ "அப்பழுக்கற்றது'. வாழ்க்கையை விருப்பம்போல அனுபவிக்கவும், முன்னேறவும் விரும்பும் பெண்களுக்கு குஷ்பு சிபாரிசு செய்யும் பாதுகாப்புக் கவசம் "ஆணுறை'. பதவி சுகத்திற்காக அரசியல் விபச்சாரத்தில் ஈடுபடும் இவர்களுக்கு "கொள்கை பாதுகாப்பு' வழங்கும் ஆணுறை "தமிழ்'.

 

தாராளமயக் கொள்கைக்கு இசைவாகச் சுதந்திரப் பாலுறவையும் உள்ளடக்கிய புதிய பார்ப்பனப் பாரதக் கலாச்சாரத்தை உருவாக்க விரும்பும் இந்து, இந்தியா டுடே அடங்கிய பழைய பார்ப்பனக் கும்பல்; தாராளமயக் கொள்கையினூடாகவும் தமிழ் மக்கள் மீது பழைய பார்ப்பனக் கற்பை நிலைநாட்டப் போராடும் கருணாநிதி, இராமதாசு, திருமாவளவன் ஆகியோர் அடங்கிய புதிய பார்ப்பன வேளாளக் கும்பல்!

இந்தத் திருடன் போலீசு விளையாட்டை ஊதிப் பெருக்கி தேசியப் பிரச்சினையாக்கி அதனூடாகத் தமிழ் தொழிற்போட்டியை நடத்திக் கொள்ளும் சன் டி.வி, ஜெயா டி.வி! இதுவரை கற்பு என்ற கருத்தை வைத்து எந்தத் தமிழ்ச் சினிமாவும் சம்பாதிக்க முடியாத பணத்தையும், ஈர்க்க முடியாத கவனத்தையும் இந்த நாடகம் பெற்று விட்டது.

 

தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பா.ம.க.வையும், பா.ம.க.வுடன் கூட்டணி வைத்திருக்கும் விடுதலைச் சிறுத்தைகளை அ.தி.மு.க. கவர இருக்கும் நிலையில், அவர்களை தி.மு.க. கூட்டணியில் வைத்திருப்பதற்காகவே, ஜெயா டி.வி. சார்பான குஷ்புவை எதிர்க்கும் இவர்களது நாடகத்தை சன் டி.வி., தமிழ் முரசு ஊதிப் பெருக்குவதாகச் சிலர் சொல்வதில் உண்மை இல்லாமலில்லை. ஆனால் கற்பை விட எம்.எல்.ஏ. சீட்டு பருண்மையானது. நாளையே ஜெயா அதிக சீட்டு கொடுத்து இவர்களைக் கவர்ந்திழுக்கலாம்.

 

பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளால் ஆதரிக்கப்பட்ட தமிழ்ப் பெண்களும், ஜெயாவால் ஆதரிக்கப்பட்ட குஷ்புவும் இரு தரப்பினராலும் கைவிடப்பட்டு அரசியல் கற்புக்குப் புது விளக்கங்கள் வழங்கப்படலாம். இந்தியா டுடேயும் மாறிவரும் செக்ஸ் விருப்பங்கள் குறித்து புதியதொரு சர்வேயை வெளியிடலாம்.

 

நன்றி : புதியகலாச்சாரம் இளநம்பி