மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்தச் சாமியார், பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியராகப் பணிபுரிந்து வந்த அசீமானந்தா. குண்டுவெடிப்புகளைத் திட்டமிட்டதாக ஆர்.எஸ்.எஸ் மையக் குழு உறுப்பினரில் இருந்து பல்வேறு மாநிலங்களில் முழுநேரமாகப் பணிபுரியும் பிரச்சாரக்குள் சிலரது பெயர்களையும் அவர் உதிர்த்திருக்கிறார். முதுகெலும்பைச் சில்லிட வைக்கும் அந்த உண்மைகளைத் தொடர்ந்து சம்பிரதாயத்திற்காக ஒரு சில வார்த்தைகளை உதிர்த்ததோடு தேசிய ஊடகங்கள் வழக்கம் போல நடிகைகளின் படுக்கையறைக்குள் முடங்கிக் கொண்டன. முக்கியமாக எவரும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தடை செய்வது பற்றிய பேச்சையே எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஜனவரியில் சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு கிழக்குப் பதிப்பகம் சார்பாக பா.ராகவன் எழுதிய "ஆர்.எஸ்.எஸ் மதம், மதம் மற்றும் மதம்" எனும் நூல் ஒன்று வெளியாகியிருக்கின்றது. ஆர்.எஸ்.எஸ் பற்றிய நடுநிலை ஆய்வு என்று நூலின் அட்டையில் குறிப்பிட்டிருந்தாலும், ஆர்.எஸ்.எஸ் வரலாற்றில் நடத்திய ரத்த வெறியாட்டங்களுக்கு மேம்போக்காக சில தடவிக் கொடுத்தல்களைச் செய்து விட்டு, தற்போது ஒரு ரத்தக் காட்டேரியாக மக்களிடையே தா@ன அம்பலமாகி நிற்கும் அவ்வியக்கத்திற்கு ஒளிவட்டம் காட்டும் வேலையைச் செய்திருக்கிறார் நூல் ஆசிரியர் பா.ராகவன்.
லாகூர் ராமனின் மகன் என்று நம்பப்படும் வால்மீகி முனிவருக்குப் பிறந்ததாகச் சொல்லப்படும் லவனால் நிர்மாணிக்கப்பட்டது என்கிற மாபெரும் வரலாற்றுக் கண்டுபிடிப்பிலிருந்து ஆரம்பிக்கிறார் பா.ரா. அந்நகரத்தில் 1940ஆம் ஆண்டு நடந்த முசுலிம் லீகின் மாநாட்டில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஒரு திகில் கதையைப் போல் விவரித்து கதையைத் துவக்குகிறார்.
சேது கால்வாய்த் திட்டத்தை நிறுத்த அங்கே ராமன் கட்டிய பாலம் இருக்கிறது என்று புராணப் புளுகை முன் வைத்து இந்து மதவெறியைக் கிளப்பிக் குளிர் காய நினைக்கும் "அவாளின்' பச்சையான புரட்டுக்கு நிகரான இந்த "லவலாகூர்' கதையின் அவசியம் என்ன? இப்பேர்ப்பட்ட லாகூரிலிருந்துதான் முசுலிம் லீகின் கொடூரமான பிரிவினை ஆரம்பிக்கிறது என்று சென்டிமெண்டாகப் போட்டுத் தாக்குவதுதான் பா.ரா.வின் நோக்கம்.
"ஒரு முடிவோடு இருந்தார் ஜின்னா. ஒரு முடிவோடு பிரச்சாரம் செய்தார்கள் முஸ்லிம் லீக்கைச் சேர்ந்தவர்கள். இது பஞ்சாபில் பல முஸ்லிம்களுக்கே பிடிக்கவில்லை. திடீரென்று இத்தனை அழுத்தமாக மத வாதம் பேச என்ன அவசியம்? இது சிக்கல் தரும். நிச்சயமாகப் பிரச்சினை வரும். மக்களின் அன்றாட அமைதி குலையப் போகிறது. சந்தேகமில்லை.' பக்.10.
பேய்க்கதை மன்னன் பி.டி.சாமியின் மொழியில் பா.ரா சொல்வதன் பொருள் என்ன? லவன் விளையாடிய புண்ணிய பூமியில், இப்படி முசுலிம் லீக் அநீதியாக பிரிவினையைப் பேசியதன் காரணமாகவே அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் வண்ணம் ஆர்.எஸ்.எஸ். தன்னை கிருஷ்ண பரமாத்மாவாக களமிறக்கியது என்று அப்பாவி வாசகன் மண்டைக்குள் நஞ்
சைத் திணிப்பதே பா.ரா.வின் நோக்கம். முசுலிம் லீகின் பிரிவினைவாதம்தான் ஆர்.எஸ்.எஸ் பகவானது விசுவரூபத்திற்கு காரணம் என்பது உண்மையா?
தொடர்ந்து வரும் பக்கங்களில் ஆர்.எஸ்.எஸ் தோன்றியதற்கு பா.ரா கொடுக்கும் தத்துவப் புரணக்கதையை அதற்கு முன் பார்ப்போம்.
1919ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அகிம்சை முறையில் ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்த காந்தி, பின்னர் 1922இல் சௌரி சௌராவில் நடந்த "வன்முறை' சம்பவத்தை அடுத்து அந்தப் போராட்டத்தை பெற்று கொள்கிறார். இதைக் கண்டதுமே ஆர்.எஸ்.எஸ்.இன் முன்னோடியான சாவர்க்கர் மனம் கொதித்துப் போய் ஹிந்து மகாசபையில் இணைந்து கொண்டார் என்கிறார் பா.ரா. இதைப் படிக்கும் வாசகர் சாவர்க்கர் என்ற அந்தத் தலைவர் வெள்ளையனை எதிர்த்து அதுவரையிலும் பயங்கரமாகப் போராடிக் கொண்டிருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வார். உண்மை என்ன? அதைத் தெரிந்து கொள்ளும் முன் பா.ரா தனது நூலில் அவிழ்த்து விட்டிருக்கும் அடுத்த புளுகையும் சேர்த்தே பார்த்து விடுவோம்.
ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தி நிறுத்தியதைக் கண்டு கொதித்த கேசவ பலிராம் ஹெட்கேவார் எனும் மராத்திய சித்பவனப் பார்ப்பனர் 1925 இல் ஆர்.எஸ்.எஸ் ஐ ஆரம்பித்தாராம். இவர் ஏற்கெனவே திலகர் தலைமையில் காங்கிரசு கட்சியில் இருந்தார், சில அடையாளப் போராட்டங்களில் ஆபத்தில்லாமல் கலந்து கொண்டிருக்கிறார் என்பதெல்லாம் அரை உண்மைதான். உண்மையில் இவர் காங்கிரசில் அப்படிப் பட்டும் படாமலும் இருந்ததற்கு காரணம் ஆங்கிலேய எதிர்ப்பா, அல்லது இந்துத்வ மீட்சியா என்பதுதான் கேள்வி.
அதற்கு நாம் ஆர்.எஸ்.எஸ் ஆரம்பிக்கப்பட்ட காலத்தை அதன் வரலாற்றுப் பொருளை உள்ளது உள்ளபடி அறிந்து கொள்ள வேண்டும். அது போலவே, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னோடியாகவும், இந்து மகாசபையின் தலைவராகவும் இருந்த சாவர்க்கர், பா.ரா சொல்வதைப் போல் தீவிர தேசபக்தரா என்பதையும் மெய்யான வரலாற்றுப் பதிவுகளில் இருந்து புரிந்து கொள்ள வேண்டும்.
1911ஆம் ஆண்டு அந்தமானில் இரட்டை ஆயுள் தண்டனைக்காக சிறை வைக்கப்படும் சாவர்க்கர், ஆறே மாதத்தில் ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதங்கள் அனுப்ப ஆரம்பிக்கிறார்.
தொடர்ச்சியாக வந்த இந்த மன்னிப்புப் படையெடுப்புகளால் மனம் குளிர்ந்த வெள்ளையர்கள், சாவர்க்கரை மராத்திய மாநிலத்தில் உள்ள ரத்னகிரிக்கு 1922ஆம் ஆண்டு அனுப்புகின்றனர். "இந்த மாவட்டத்தை விட்டு வெளியேறக் கூடாது; வெள்ளையர்களை எதிர்க்கும் எந்த அரசியல் போராட்டத்திலும் பங்கேற்கக் கூடாது' என்று ஆங்கிலேயர்கள் விதித்த நிபந்தனைகளை அவர் ஏற்றுக்கொண்டதால் சிறை வாழ்க்கையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
1910களின் மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட இந்து மகா சபை எனும் இந்துத்வா அமைப்பு, வெள்ளையர்களின் மறைமுக ஆதரவுடன், அதாவது அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றுவது என்ற கொள்கையின் அடிப்படையில் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில்தான் சாவர்க்கர் அதில் சேருகிறார். வெள்ளையனை எதிர்த்து ஒரு எழுத்துக் கூட எழுதக்கூடாது; ஒரு சொல் கூட பேசக் கூடாது என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை பெற்ற சாவர்க்கர் ஒத்துழையாமை இயக்கத்தின் அருகில் கூட செல்லவில்லை.
மேலும் அந்த இயக்கத்தை அவர் எதிர்த்திருக்கிறார். ஏனெனில் கிலாபத் இயக்கத்தின் தொடர்ச்சியாக வந்த ஒத்துழையாமை இயக்கம் என்பது முசுலிம்களுக்கு ஆதரவானது என்பதே அவர் கருத்து. உண்மை இப்படி இருக்க நமது அஜினமோட்டோ பா.ரா தனது புத்தகத்தைப் படிப்பவனெல்லாம் அடி முட்டாள்கள் என்று துணிந்து சாவர்க்கரை ஆங்கிலேய எதிர்ப்பு வீரராக அறிமுகம் செய்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பை ஹெட்கே வார் ஆரம்பிக்க என்ன காரணம்? அதை அவரது வார்த்தைகளிலேயே பார்ப்போம். "மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் காரணமாக நாட்டில் (தேசியத்திற்கான) உற்சாகம் குறைந்து வருகிறது. அந்த இயக்கம் தோற்றுவித்த தீமைகள் சமுதாயத்தில் அச்சமூட்டும் வகையில் தலைதூக்கியுள்ளன. தேசியப் போராட்ட அலைதணிந்து வந்த போது ஒருவருக்கொருவரிடையே உள்ள குரோதங்களும் பொறாமைகளும் வெளிப்படத் தொடங்கின. எங்கு பார்த்தாலும் தனிப்பட்டவர்களிடையே சச்சரவுகள். பல்வேறு சமூகங்களுக்கிடையே மோதல்கள் தொடங்கியிருந்தன. பிராமணருக்கும் பிராமணரல்லாதோருக்கும் இடையிலான முரண்பாடு அப்பட்டமாகவே தெரியத் தொடங்கியது. எந்த ஒரு அமைப்பிலும் ஒருமைப்பாடோ ஒற்றுமையோ இருக்கவில்லை. ஒத்துழையாமை இயக்கத்தின் பாலைப் பருகி வளர்ந்த யவனப் பாம்புகள் நஞ்சைக் கக்கிப் படமெடுத்தபடி தேசத்தில் கலவரங்களைத் தூண்டி விட்டுக் கொண்டிருந்தன' ((The brotherhood in saffron: The RSS and Hindu revivalism. Anderson and Damle & எஸ்.வி.ராஜதுரையின் இந்து இந்தியா நூலிலிருந்து)
இந்த விளக்கத்தைக் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றாமல் மேலோட்டமாகப் பார்த்தால் கூட, ஒத்துழையாமை இயக்கம் குறித்த போதாமைகளை அதாவது காந்தியின் மிதவாதத்தை ஹெட்கேவார் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பது புரியும். இங்கே அவரது கவலை என்ன? சமூகங்களுக்கிடையேயான மோதல் என்று அவர் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதோருக்கும் இடையே தோன்றியிருந்த முரண்பாடுகளைக் குறிப்பிடுகிறார். அவருக்கு மன உளைச்சலை உண்டாக்கிய அந்தக் காலச் சூழலை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
அதைப்பற்றித் தெரிந்து கொள்ளும் முன், இந்த இடத்தில் பா.ரா செய்திருக்கும் நயவஞ்சகமான இருட்டடிப்பு ஒன்றைக் குறித்து நாம் தெளிவு பெற்றாக வேண்டும். இவர் யாரை மறைத்து இருட்டடிப்பு செய்கிறார் என்பதை அறிந்து கொள்வதில் இருந்துதான் இவர் இந்துத்துவா கோழைகளை முன்தள்ளுவதன் அயோக்கியத்தனத்தை முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியும்.
காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் அருமை பெருமைகளை அடித்துவிடும் பா.ரா, பின்னர் காந்தி அதை நிறுத்தியவுடன் காங்கிரசில் இருந்த தேசபக்த தீவிரவாத சிங்கங்கள் அதிருப்தியுற்று தனிப்பாதையில் பயணித்தனர் என்கிறார். இந்த தீவிரவாதப் பெருமையைத்தான் வெள்ளைக்காரனை எதிர்த்து வாயே திறக்காத சாவர்க்கருக்கும், ஹெட்கேவாருக்கும் அளிக்கிறார் பா.ரா. கூடவே அவர்கள் காந்தியின் முசுலிம் ஆதரவை ஏற்கவில்லை என்று ஒரு விளக்கம் அளிக்கிறார். அதிலும் அந்தக் காலகட்டத்தில் முசுலிம்களுக்கென்று தனிநாடு கோரிக்கையை எழுப்பியே இராத முசுலிம் லீக்கை பிரிவினை பேசினார்கள் என்று வாய் கூசாமல் புளுகுகின்றார். காரணம் இப்போது உள்ள முசுலிம் மீதான வெறுப்புணர்வு கொண்ட இந்துப் பொதுப்புத்தி இதைக் கேள்வி கேட்காமலேயே ஏற்றுக் கொள்ளும் என்ற அவரது நம்பிக்கைதான்.
ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கு காந்தி இழைத்த துரோகத்தைக் கண்டு சினமுற்றவர்கள் சாவர்க்கர், ஹெட்கேவார் முதலான தொடை நடுங்கிகள் அல்லர். அவர்கள் சந்திரசேகர ஆசாத், பகத் சிங் முதலான தோழர்கள். அவர்கள் ஆரம்பித்த அந்த புரட்சிப்பணிதான் அடுத்த பத்தாண்டுகளில் இந்திய அரசியல் வானில் மையமாக இருந்தது. 1931 ஆம் ஆண்டு ஒரு சிங்கம் போல பகத் சிங் தூக்குமேடையில் நின்று கொண்டிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் கோழைகள் வெள்ளைக்காரனது முழுமையான ஆசிர்வாதத்தோடு மைதானத்தில் கபடி ஆடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் நமது அக்மார்க் அம்பியான பா.ராகவன் அந்தப் புத்தகத்தின் பக்கங்களே கதறி அழுமளவுக்கு பகத்சிங் @பான்ற தோழர்களின் வீர அத்தியாயத்தை ஒட்டுமொத்தமாக மூடிமறைத்துவிட்டு, அந்த இடத்தில் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளைத் திருட்டுத்தனமாகத் திணித்து விடுகிறார். வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் பின் ஒளிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ் விளக்குமாற்றுக்குத் தனது நூலில் பட்டுக் குஞ்சலம் கட்டுகிறார் பா.ராகவன்.
உண்மையில், ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவாரின் மனக்குடைச்சலுக்குக் காரணம் என்ன?
வெள்ளையர்கள் ஆதிக்கம் வரும் முன்பு 18ஆம் நூற்றாண்டில் மராட்டியத்தின் அரசியல், சமூக அதிகாரத்தில் இருந்தவர்கள் பேஷ்வாக்கள். சித்பவன் எனும் பார்ப்பன பிரிவைச் சேர்ந்த இவர்களது ஆட்சிக் காலம்தான் பார்ப்பனர்களின் பொற்காலம். அதாவது சூத்திரர்களும் பஞ்சமர்களும் அடிமைகளாக அவதிப்பட்ட இருண்ட காலம்.
இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைத் தனது சாம்ராஜ்யத்தில் இணைத்த வெள்ளையர்கள் மராட்டியத்தையும் கைப்பற்றினார்கள். தங்களது இருண்ட காலத்தில் இருந்து விடுதலை பெற விரும்பிய சூத்திரர்கள் குறிப்பாக மகர்கள் எனப்படும் தலித் மக்கள், வெள்ளையர்களின் இராணுவத்தில் சேர்ந்து உணர்வுப்பூர்வமாகப் போரிட்டு சித்பவன பேஷ்வாக்களை வீழ்த்துவதற்குக் காரணமாக இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை அது பார்ப்பனக் கொடுங்கோன்மையிலிருந்து விடுவித்த சொந்தப் போர்.
இந்த முரண்பாட்டை வெள்ளையர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள் என்பதும், இப்படி தமது சமூக அதிகாரத்தை இழந்த சித்பவன பார்ப்பனர்கள் வெள்ளையர்களின் மீது ஆத்திரம் கொண்டனர் என்பதும்தான் வரலாற்று உண்மை. ஆகவே மராட்டியத்தைப் பொறுத்த வரை அங்கே சித்பவன பார்ப்பனர்களிடையே தோன்றிய ஆங்கிலேய எதிர்ப்பு என்பது காலனிய எதிர்ப்பு உணர்வல்ல. அது வாழ்ந்து கெட்ட ஒரு பண்ணையாரின் கசப்புணர்வு.
அதைத் தொடர்ந்து 19ஆம் நூற்றாண்டில் ஜோதிராவ் பூலே வருகிறார். வேதத்தை மறுத்து, பார்ப்பனர்களின் மேலாண்மையை எதிர்த்து, சூத்திர பஞ்சமர்களின் சம உரிமைக்காக அயராது பாடுபடுகிறார். இதுவும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்துகிறது. ஏற்öகனவே ஆட்சியிழந்த பார்ப்பனர்கள் இதனால் மேலும் வயிறெரிந்து போகிறார்கள்.
இப்படித்தான் மராட்டியத்தில் திலகர் உள்ளிட்ட சித்பவன பார்ப்பனர்கள் காங்கிரசில் சேர்ந்து வெள்ளையனை எதிர்க்கிறார்கள். அந்த எதிர்ப்பின் உள்ளடக்கமாக இழந்துவிட்ட வர்ணசாதி ஆதிக்கத்தை மீட்டெடுப்பதே இருந்தது. விதவை மறுமண எதிர்ப்பு, பால்ய விவாகத் தடை எதிர்ப்பு போன்றவற்றில் திலகர் தீவிரமாக ஈடுபட்டார். பிளேக் நோயை பரப்பும் எலிகளை ஒழிப்பதற்காக எடுக்கபட்ட நடவடிக்கைகளை எதிர்க்கிறார்; அதற்காக விநாயகர் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறார். ஆகமொத்தம் இந்த நடவடிக்கைகளில் இருப்பது வெள்ளையர் எதிர்ப்பா, இல்லை பார்ப்பன மீட்பா?
இதே காலத்தில் தென்னிந்தியாவில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாதோர் இயக்கம் திராவிடர் இயக்கமாக வளர்கிறது. தமது சமூக ஆதிக்கத்தை இழக்க விரும்பாத பார்ப்பனர்கள் வெள்ளையர்களது அரசில் சேர்ந்து கொண்டும், காங்கிரசில் இருந்து கொண்டும் தந்திரமாக வேலை செய்கின்றனர். அன்று காங்கிரசு தலைவரான சத்தியமூர்த்தி அய்யர் தேவதாசி தடைச் சட்டத்தை கடுமையாக எதிர்த்தார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மேற்கு வங்கத்தில் முசுலிம் நவாபுகளை வீழ்த்திய வெள்ளையர்களை அங்கிருந்த பார்ப்பன "மேல்'சாதியினர் வரவேற்றனர். அதன் மூலம் இழந்து விட்ட தமது சமூக ஆதிக்கத்தை மீண்டும் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. இப்படி இந்தியா முழுவதும் பார்ப்பனர்களின் வெள்ளையர் எதிர்ப்பு அல்லது ஆதரவு இரண்டுமே பார்ப்பனிய சாதி ஆதிக்கத்தின் மீட்போடு தொடர்புடையது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் துவக்கப்பட்ட கால கட்டத்தில்தான் அம்பேத்கரும் தனது செயல்பாடுகளைத் துவங்குகிறார். 1920கள் மற்றும் 1930களில் அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் மீதான தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து பொதுக்குளத்தில் நீரெடுக்கும் போராட்டம், கோவில் நுழைவுப் போராட்டம் முதலானவற்றை நடத்துகிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவார் இத்தகைய சோதனைகளால் இந்துக்களுக்கு அதாவது பார்ப்பனர்களுக்கு நேர்ந்துவிட்ட அபாயத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்.
இத்தகைய வரலாற்றுப் பின்னணியிலிருந்து ஆர்.எஸ்.எஸ் ஏன் தோற்றுவிக்கப்பட்டது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். பார்ப்பன மீட்சிக்காகத் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ்.சின் வரலாற்றை மூடி மறைக்கும் நூலாசிரியர் பா.ரா, பல்வேறு புளுகுகள் மூலம் ஒரு மோசடியான வரலாற்றை உருவாக்க எத்தனித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்இன் புரவலர்கள் யார்?
1925க்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் எப்படி பரவியது? யார் உதவினார்கள்? சுதந்திரப் போராட்டம் தங்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதில் தீர்மானகரமாய் இருந்த ஆர்.எஸ்.எஸ்.ஐ குண்டாந்தடிகளுடன் இராணுவ பயிற்சி மேற்கொள்ள வெள்ளையர்கள் அனுமதித்தார்கள்.
அந்த விசுவாசத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர்களிடம் நிறைய சந்தர்ப்பங்களில் நாம் காணலாம். உதாரணத்திற்கு ஒன்று"We should remember that in our pledge we have talked of freedom of the country through defending religion and culture. There is no mention of departure of British in that.'' (Shri Guruji Samgra Darshan, Vol 4, p. 2)'
இது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் "குருஜி' என்று ஏற்றிப் போற்றும் அவர்களது இரண்டாவது தலைவர் கோல் வால்கர் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம். இப்படித்தான் ஆங்கிலேயர்கள் ஆசிர்வாதத்துடனும், மேல்மட்ட பார்ப்பனிய சனாதனிகளின் உதவியுடனும் நாட்டின் பல்வேறு இடங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் பரவியது.
வட இந்தியாவில் குமாஸ்தாக்களை உருவாக்கும் ஆங்கி@லயக் கல்விமுறையின் பரவலால் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரிருவர் முன்னேறியதைப் பார்த்து தமது அஸ்திவாரத்தில் லேசான ஆட்டம் கண்டு போயிருந்த வருணாசிரம இந்து தரும ஆதிக்கத்தைக் காப்பாற்றவும், சமஸ்கிருதத்தை மீண்டும் உயிர்த்தெழவைக்கும் நோக்கத்திற்காகவும் ஜமீன்தார்கள், நிலப்பிரபுக்களிடம் நன்கொடை திரட்டி பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியிருந்தார் காங்கிர”க்காரரும் இந்து மகாசபையை தோற்றுவித்தவர்களுள் ஒருவருமான மதன் மோகன் மாளவியா. இந்த பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.க்கு என்று தனியாக கட்டிடமே கட்டிக் கொடுதிருந்தார். இத்தகைய புரவலர்களால் தான் ஆர்.எஸ்.எஸ் நாடெங்கும் பரவியது.
ஆனால் பா.ரா.வோ, பத்துப் பதினைந்து வயதுச் சிறுவர்களுடன் சேர்ந்து கபடி விளையாடிய ஹெட்கேவார் "மெல்லியக் குரலில்' சித்தாந்தப் பயிற்சியளித்ததாகவும் அதிலிருந்து தேறியவர்கள் வடநாடு முழுக்கப் பரவி பத்தே ஆண்டுகளில் நாற்பதாயிரம் பேராகப் பெருகியதாக அதிசயக்கிறார்.
பிரிவினையை முதலில் பேசியது முசுலிம் லீகா, இந்து மகா சபையா?
அடுத்து புத்தகத்தின் துவக்கத்திலேயே முசுலிம் லீக் கட்சியினர் தனிநாடு கோரி பிரிவினை பேசினார்கள் என்றும் அதன் காரணமாக நடந்த கலவரங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்துக்கள் தரப்பில் களமிறங்கியதாலேயே அது பரவலான வெளிச்சத்துக்கு வந்தது என்றும் சொல்கிறார் பா.ரா.
ஆனால், உண்மையில் முசுலிம் லீக்கின் தனிநாடு கோரிக்கை வெளிப்பட்ட பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு 1923 ஆம் ஆண்டு சாவர்க்கர் எழுதி வெளியிட்ட "ஹிந்துத்துவம்: யார் ஹிந்துக்கள்?' எனும் நூலில் தான் முதன்முறையாக இசுலாமியர்கள் இந்த நாட்டில் இந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது எனும் பிரிவினைவாதம் பேசப்பட்டது. ஹெட்கேவார் அப்புத்தகம் கையெழுத்துப் பிரதியாக இருக்கும்போதே வாசித்தவர்.
அப்புத்தகம்தான் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்திற்கு ஆரம்பத்தில் ஒரு தத்துவ அடிப்படையை வழங்குவதாக இருந்தது. மிகத்தெளிவாக பார்ப்பனிய இந்து மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்பவர்களைத் தவிர்த்து வேறு எவருக்கும் இந்தியாவில் இடமில்லை என்பதை அப்புத்தகத்தில் தெளிவாக சாவர்க்கர் அறிவிக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் வெகுகாலம் முன்னதாகவே இந்துத்துவம் என்பது பேச்சளவிலும் செயல் அளவிலும் காங்கிரசில் இருந்த புகழ் பெற்ற பார்ப்பனப் பெருச்சாளிகளின் செயல்பாட்டில் இருந்தது.
இந்துத்வா காங்கிரசில் முசுலிம்கள் இணைய முடியுமா?
மேலும் இந்திய அரசியலில் மதத்தைக் கலந்து அரசியல் செய்த முதல் கட்சியே காங்கிரசுதான். ஏற்கெனவே அதன் தடங்களை திலகரது வரலாற்றில் பார்த்து விட்டோம். பின்னர் காந்தியின் காலத்திலும் அதுவே நடந்தது. இந்துக் கடவுளர்களின் உருவகமாக நாட்டைச் சித்தரித்து பாடும் வந்தே மாதரம் முசுலிம்களின் எதிர்ப்புக்கிடையிலும் காங்கிரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. காங்கிரசின் தலைவர்கள் பலர் இந்துத்வத்தின் பொற்காலத்தை மீட்டெடுக்கும் கனவினைக் கொண்டிருந்தவர்கள்தான். அதற்காக முசுலிம்களை, அவர்களது சம உரிமைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
சாவர்க்கர், ஹெட்கேவார் கும்பலுக்கும் முன்பாகவே காங்கிரசில் விபின் சந்திர பால் போன்ற மிதவாத இந்துத்துவவாதிகளும் லாலா லஜபதிராய், திலகர், மதன் மோகன் மாளவியா போன்ற தீவிர இந்துத்துவ வாதிகளும் நிறைந்திருந்தனர். காங்கிரசில் உறுப்பினர்களாக இருக்கும் போதே லாலா லஜபதிராய் ஆரிய சமாஜத்தில் இயங்கி வந்துள்ளார். மாளவியா உத்திர பிரதேசத்தில் "பாரத தர்ம மகா மண்டலம்' என்கிற அமைப்பை நிறுவியவர் தான் இறக்குவரை காங்கிரசில் இணைந்திருந்தவர். பின்னாளில் இவர்கள் சேர்ந்து ஆரம்பித்த இயக்கம் தான் ஹிந்து மகாசபா. இதற்காக காங்கிரசு இவர்களைக் கண்டித்து வெளியேற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்தக் காலகட்டத்தில் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்களின் உறுப்பினர்களும் தலைவர்களும் காங்கிரசிலும் இருந்துள்ளனர். இவர்கள் தீவிரமான ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் காங்கிரசை ஒரு தீவிரமான இந்துத்வா போக்கில் மாற்றிட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களாக இருந்தார்கள். 1937ஆம் ஆண்டுதான் வேறு இயக்கங்களில் உறுப்பினர்களாக இருப்பவர்கள் காங்கிரசிலும் உறுப்பினர்களாக இருப்பதைத் தடை செய்து ஒரு விதியைக் கொண்டு வருகிறது காங்கிர”. இங்கே புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், காங்கிரசை அனைத்துப் பார்ப்பனியவாதிகளும் "இது நம்ம ஆளு கட்சி' என்றுதான் கருதினார்கள். இப்படிப்பட்ட மனநிலை கொண்ட இந்து காங்கிரசுக் கட்சியில் முசுலிம்கள் எப்படிச் சேர்ந்து பணியாற்ற முடியும்?
இப்படி இந்துத்துவ வாதிகளின் கூடாரமாய் காங்கிரசு சீரழிந்து கிடந்த நிலையில் அதற்கான எதிர்வினையாக வேறு வழியின்றி தோன்றியது தான் முசுலிம் லீக். ஆங்கிலேயர்களும் இந்த முரண்பாட்டைத் திறமையாகப் பயன் படுத்தி அதனை முற்ற வைத்தார்கள். முசுலிம் லீக் அதன் துவக்க காலத்தில் தேசப் பிரிவினையை செயல் திட்டமாகக் கொண்டிருக்கவில்லை. முசுலிம்களைக் கல்வியறிவு பெறச் செய்வது, மாகாண அரசுகளில் போதிய பிரநிதித்துவத்தைக் கோரிப் பெறுவது போன்றவைகளையே அதன் தலைவர்கள் முன் வைத்தனர். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தோடு சமரசமாகச் சென்று சில சில்லறைக் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வது எனும் அளவில் காங்கிரசின் இசுலாமியப் பிரதி தான் முசுலிம் லீக்.
முதல் இந்திய சுதந்திரப் போரில் இந்து, முசுலிம் என மத வேறுபாடு இல்லாமல் மக்கள் ஒருங்கிணைந்து போராடியதைக் கண்டு உணர்ந்த ஆங்கிலேயர்கள் பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்கிறார்கள். இந்த சூழ்ச்சியை முறியடித்து மதச் சார்பற்ற தேசிய இயக்கத்தைக் கட்டுவதற்குப் பதில் இந்துத்வா வழியில் காங்கிரசுக் கட்சியைக் கட்டினார்கள் அதன் பிதாமகர்கள்.
இந்த வரலாற்று உண்மையை மறைத்து விட்டு, இதை அப்படியே புரட்டி போட்டு முசுலிம்கள்தான் ஆர்.எஸ்.எஸ்.ஐ துவங்குவதற்கு காரணம் என்று பா.ரா. ஒரு பொய்யை விரல் கூசாமல் எழுதுகிறார். இது மட்டுமல்லாமல் நெருக்கடி நிலையின் போது, மண்புழுக்களே வெட்கித் தலைகுணியும் வண்ணம் கோழைத்தனத்தை வெளிப்படுத்தி இந்திராவின் காலில் விழுந்து கிடந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை வீரர் போலச் சித்தரித்துள்ளார் பா.ராகவன். மேலும், மக்களுக்காக எந்த விதத்திலும் போராடாமல் இந்து பயங்கரவாதச் செயல்களுக்கு காலாட்படையாக செயல்பட உழைக்கும் மக்களில் இருந்து ஒரு பிரிவினரை மதவெறியூட்டி தயாரிப்பதற்காகவே செயல்படும் பல்வேறு சங்கப் பரிவாரங்களைப் பற்றி வாசகருக்கு ஒரு பிரமிப்பு ஊட்டும் வகையில் விவரித்துச் செல்கிறார்.
இது போன்ற மோசடிகளைத் தகர்க்கும் விதமாக ஒரு முழுமையான கட்டுரை வினவு இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அவ்விவரங்களைத் தெரிந்து கொள்ள கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ் வெளியீடுகள் இத்தனை காலமும் தமது சொந்தப் பதிப்பகத்திலிருந்து வெளியாகி வந்தது. பொதுவில் புத்தகங்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு விஷம் இன்னதென்று இனங்கண்டு ஒதுக்கித் தள்ளுவதில் பெரிய சிரமங்கள் இருந்திருக்கவில்லை. இப்போது ஆர்.எஸ்.எஸ் மூளை கார்ப்பரேட் பாணியில் இயங்கும் கிழக்கு போன்ற பிரபலமான பதிப்பகங்களையும் ஊடுருவியுள்ளது ஆபத்தான அறிகுறி. அவர்களது ஒழுக்கவாத வேடங்கள், சுதேசிப் பசப்பல்கள், குண்டு வைக்கும் பயங்கரவாத முகம் என்று சகலமும் அம்பலமாகி, தேசமெங்கும் மக்களால் புறக்கணிக்கப்படும் ஒரு நிலையில் இன்னொரு முனையிலிருந்து 'நடுநிலை' என்றும் கவசத்தோடு மக்களை ஊடுருவும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
இந்தப் பின்னணியில் உண்மையான வரலாற்றை நாம் உணர்ந்து கொள்வதும், களத்திலும் அறிவுத்தளத்திலும் மோசடியான வரலாற்றுத் தகவல்களை எதிர் கொண்டு வீழ்த்துவதும் இன்றைய காலத்தின் அவசியத் தேவையாகிறது. ஏனெனில் பார்ப்பனியம் என்பது இன்னமும் செத்த பாம்பல்ல. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடும் நச்சுப் பாம்பு! கட்டுரையின் முழுமையான வடிவம்
http://www.vinavu.com/2011/01/19/pa&raghavan&kizhakku&rss
(வினவு இணையத்தளத்தில்வெளியான கட்டுரை)