Language Selection

புதிய கலாச்சாரம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

ஜனநாயகத்தைக் காக்கும் காவல் நாய் என்பது போலச் சித்தரிக்கப்பட்ட முதலாளித்துவ ஊடகங்கள், எதார்த்தத்தில் டாடா அம்பானிகளின் பங்களா நாய்களாக இருந்துள்ளது, இந்த ஜனநாயக அமைப்பை நம்பியவர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பத்திரிகையாளர்கள் என்றவுடன் உங்கள் நினைவுக்கு எப்படியானதொரு சித்திரம் தோன்றுகிறது? ஒல்லியான உருவம் ஒன்றில் ஒட்டிக் கொண்டிருக்கும் அழுக்கான பைஜாமா, லேசாகக்குழி விழுந்த கண்கள், ஒட்டிய கன்னங்கள், கனமான கண்ணாடி, அதற்குள் சிவந்த கூர்மையான கண்கள். இவரது ஆளுமை பற்றிய பிம்பமாக, அதிகாரத்தையும் முறைகேடுகளையும் எப்போதும் எதிர்த்துக் கொண்டிருப்பது, மக்களுக்கு உண்மைகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற முனைப்பில் உயிரையே கூடத் துச்சமாக மதிப்பது, நேர்மை... இத்யாதி இத்யாதி.. என்றால், நீங்கள் இன்னமும் எண்பதுகளில் வெளியான தமிழ் சினிமாக்களின் தாக்கத்திலிருந்து விடுபடாதவர் என்று பொருளாகின்றது.

இறக்குமதி செய்யப்பட்ட காரில், பளீரென்ற மேக்கப்பில், டிசைனர் உடைகளோடும் நுனி நாக்கில் புரளும் ஆங்கிலத்தோடும், ஒரு சினிமா நடிகருக்கு ஒப்பான தோற்றம் தான் இன்றையநவீன பத்திரிகையாளர்களின் தோற்றம்! பண்பில் ஏற்பட்ட மாற்றம் தான் தோற்றத்தில் பிரதிபலிக்கிறது. மிகவும் சகஜமாக அதிகார வர்க்கத்தினரிடையேயும், அரசியல் மட்டத்திலும் கிடைக்கும் தொடர்புகள் அவர்களுக்குத் தரகர்களாக ஆகும் வாய்ப்பை எளிதாக்குகிறது. இந்திய அளவிலான பத்திரிகையாளர்கள் இந்திய அளவில் தரகு வேலை செய்கிறார்கள் என்றால், மாநில அளவிலான பத்திரிகைகளின் நிருபர்கள் மாநில அளவிலும், மாவட்ட அளவிலான நிருபர்கள் மாவட்ட அளவிலும் இதே வேலையை வௌவேறு அளவுகளில் வௌ;வேறு விதமாக செயல்படுத்தியே வருகின்றனர்.

தமிழகத் தேர்தல் சமயங்களில் போயஸ் கார்டனை விட்டு ஒரு மர்மப்புன்னகையோடு வெளியேறும் துக்ளக் சோவை தவறாமல் தமிழ்ச் செய்தி ஊடகங்களில் பார்த்திருக்கிறோம். சுயேச்சையாய் செய்திகளை அளிக்கும் கடமை உள்ள ஒரு பத்திரிகையாளருக்கு அரசியல் அணிச் சேர்க்கைகளுக்காக தரகு வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி இது வரை எழுந்ததில்லை. இலங்கை இந்தியா இடையே இந்து பத்திரிகையின் என்.ராம் செய்து வரும் தரகு வேலைகளும், இலங்கை இனவெறி பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக இங்கே அவர் செய்து வரும் எத்து வேலைகளும் எவரும் அறியாத இரகசியங்கள் அல்ல.

தற்போது வெளியாகியிருக்கும் நீரா ராடியாவின் பதிவு செய்யப்பட்ட உரையாடல்களைத் தொடர்ந்து, ஏதோ பர்க்கா தத்தும் வீர் சங்வியும் மட்டும் தான் தரங்கெட்டுப் போய் விட்டதைப்போன்றும்,  "நாங்களெல்லாம் யோக்கிய சிகாமணிகள்" என்பது போலவும் மற்ற முதலாளித்துவப் பத்திரிகைகள் நடிக்கின்றன. இல்லாத புனிதம் கெட்டுப் போய்விட்டதைப் போல் அலறிக் கொள்கின்றன. உரையாடற் பதிவுகள் முழுமையாகக் கைக்குக் கிடைக்கும் வரையில் பொறுமையாக இருந்து விட்டு, தாம் சம்பந்தப்பட்ட விவரங்கள் வெளியாகவில்லை என்பதை உறுதிசெய்து விட்டு இப்போது பர்க்கா தத்தையும் வீர் சங்வியையும் மட்டும் காவுகொடுத்து விட்டு மற்றவர்கள் தப்பிக்க முடியுமா என்று பார்க்கிறார்கள்.

கவர் வாங்கிக் கொண்டு "கவர்" ஸ்டோரிகள் எழுதுவது முதலாளித்துவப் பத்திரிகைகளுக்கு ஒன்றும் புதிய விவகாரம் இல்லையென்றாலும், நேரடியாக 'இன்னதற்கு இன்ன ரேட்' என்று நிர்ணயித்துக் கொண்டு மக்கள் தம்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையைக் கூறு போட்டு விற்கும் போக்கு சமீப ஆண்டுகளில் பரவலாகி வருகின்றது.

தற்போது கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்வதில் (ஆதர்ஷ் ஊழல்) முறைகேடுகள் செய்து அம்பலமாகி ஊரே காறித்துப்பிக் கொண்டிருக்கும் மகாராஷ்டிர (முன்னாள்) முதல்வர் அசோக் ராவ் சவாண் பற்றி அம்மாநில சட்டமன்ற தேர்தல் சமயத்தில் "ஆற்றல் மிக்க இளம் தலைவர்" என்று தலைப்பிட்டு லோக்மத் எனும் மராட்டிய இதழ் லஞ்சம் வாங்கிக் கொண்டு செய்தி வெளியிட்டது. அது மட்டுமல்லாமல், அந்தக் காலகட்டத்தில் சவாண் பற்றி பல்வேறு சிறப்பிதழ்களையும் வெளியிட்டது. இவை எதுவும் விளம்பரம் என்று குறிக்கப்படாமல், செய்தியைப்போலவே வெளியிடப்பட்டது பின்னர் அம்பலமாகி நாறியது.

அரிந்தம் சௌத்ரி "இதிலெல்லாம் என்னய்யா பிரச்சினையக் கண்டுட்டீங்க?" என்கிறார். "அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகளில் இப்படி பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சிகளுக்கு சார்பு நிலையெடுப்பதோ லையசன் (தரகு) வேலை பார்ப்பதோ ஒன்றும் புதிதில்லையே? இத்தனைக்கும் நம்மை விட அவர்களோ முன்னேறிய ஜனநாயக நாடு அல்லவர் நாம் மட்டும் ஏன் இன்னும் பழைய பஞ்சாங்கமாகவே இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பத்திரிகைகள்  இனிமேல் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு அரசியல் கட்சிகளுக்கு சார்பு நிலையெடுக்கவோ தரகு வேலை பார்க்கவோ வேண்டாம் அதை வெளிப்படையாக நேரடியாகவே செய்து விடலாம்" என்று தனது சண்டே இண்டியன் பத்திரிகையில்எழுதியுள்ளார்.

அரிந்தமின் அந்தக் கட்டுரையை ஒரு வேளை சோ ராமசாமி படித்திருந்தால் "ஹௌ; ஹௌ; ஹே.. இவாள்ளாம் இப்பத்தான் எல்.கே.ஜி.க்கே  வந்திருக்கா... நாமெல்லாம் பி.ஹெச்.டி.யே முடிச்சுட்டோமே' என்று இந்து ராமைப் பார்த்து சொல்லியிருக்கக் கூடும்.

பத்திரிகைகளின் தரகுத்தனம் என்பது தனியே ஆதாரமில்லாமல் அந்தரத்தில் தொங்கும் அதிசய மாங்காய் அல்ல.  "முதலாளித்துவப்' பத்திரிகைகள் என்று நாம் சொல்வது அதன் இயங்கும் விதத்தை வைத்து மாத்திரமல்ல அவைகள் அடிப்படையிலேயே முதலாளித்துவ குணாம்சங்களைக் கொண்டுள்ளன. அவைகள் தாம் வெளியிடும் "செய்தியை" ஒரு பண்டமாகக் கருதி உற்பத்தி செய்து சந்தையில் திணிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்வதில்லை. தம்மிடம் விலை போகக் கூடிய சரக்கு என்னவெல்லாம் உண்டோ அவையத்தனையையும் பட்டியல் போட்டு விற்கத் தயங்குவதில்லை  நீதி, நேர்மை, நியாயம் என்று இவர்களின் அனைத்திற்கும்  ஒரு விலை உண்டு.

Paid news விவகாரம் பற்றி பத்திரிகையாளர் பி.சாய்நாத் எழுதிய கட்டுரையை வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் சில நாட்கள் பஜனைகள் நடத்தி முடித்த பின், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா அவ்விவகாரம் பற்றி விசாரிக்க சீனிவாச ரெட்டி மற்றும் பரஞ்சோய் குகா தலைமையில்  இரு நபர்கமிட்டி ஒன்றை அமைத்தது. அக்கமிட்டியின் விசாரணைகளில், இந்தியாவின் மிகப் பெரிய ஊடக நிறுவனங்கள், நேரடியாக பங்குச்சந்தையின் பங்குகளை வாங்குவதும், அப்படிப் பங்குகள் பெற்ற நிறுவனங்களைப் பற்றிய விளம்பரங்களை 'செய்தி' போல வெளியிட்டு ஆதாயம் அடைந்திருப்பதும் அம்பலமானது.

பங்குச்சந்தையைக் கண்காணிப்பதற்கான அமைப்பான செபி, இப்படிப்பட்ட 'தனி ஒப்பந்தங்கள்' முறையை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் தாய் நிறுவனமான பென்னட்  கோல்மன் நிறுவனமே அறிமுகம் செய்தது என்றும், தற்போது பல்வேறு ஊடக நிறுவனங்களும் அவ்வாறான நடைமுறையைப் பின்பற்றுவதாகவும் உறுதி செய்தது. பங்குகளை வாங்குவதையும் விற்பதையும் சந்தையின் மனநிலையைப் பொறுத்தும் பங்கு வெளியிட்டுள்ள நிறுவனத்தின் மேல் சந்தையில் நிலவும் "நல்லெண்ணத்தையும்' வைத்தும் அதில் முதலீடு செய்வதைப் பற்றி சாதாரண முதலீட்டாளர்கள் முடிவு செய்கிறார்கள் என்கிற நிலைமை, இப்படி சந்தையின் மனநிலையையும் பங்குகளை வெளியிட்டுள்ள நிறுவனங்களின் மேலான நல்லெண்ணத்தையும் பங்குகளை கைக்கூலியாகப் பெற்றுக் கொண்டு ஊடகங்கள் "உற்பத்தி' செய்கின்றன.

2005ஆம் ஆண்டு விடியோகான், கைனடிக் போன்ற நிறுவனங்கள் கணக்கற்ற பங்குகளை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகைக்கு கையூட்டாக அளித்து தமது நிறுவனங்களைப் பற்றி பென்னட் கோல்மன் குழுமத்தைச் சேர்ந்த டைம்ஸ் ஆப் இந்தியா , டைம்ஸ் நௌ, பிசினஸ் டைம்ஸ் போன்ற எல்லா பத்திரிகைகளிலும் "நல்ல விதமாக' செய்தி வரும்படி பார்த்துக் கொண்டன. டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, தான் முதலீடு செய்திருந்த நிறுவனங்களைப் பற்றி அதன் தலையங்கங்களிலேயே எழுதத் துணிந்தது.

2007ஆம் ஆண்டு இறுதிவாக்கில், டைம்ஸ் குழுமம் மட்டுமே கிட்டத்தட்ட 140 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து, தனியார் நிறுவன முதலீட்டாளர்களிலேயே முதலிடத்தைப் பிடித்தது. ஜூலை 2008ஆம் ஆண்டு பத்திரிகையொன்றிற்கு பேட்டியளித்த பென்னட்  கோல்மன் நிறுவனத்தின் சிவக்குமார், அப்போதைய நிலவரத்தின் படி 'தனி ஒப்பந்தங்கள்'  மூலம் சுமார் 200 நிறுவனங்களில் பென்னட்  கோல்மன் முதலீடு செய்திருப்பதாகவும் அதன் அளவு 4000 கோடிகளாக இருக்கலாம் என்றும் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தார்.

பிரஸ் கௌன்சில் ஆப் இந்தியாவின் அந்த விசாரணை அறிக்கையில், இந்தப் போக்குகளுக்கு எதிராக சில பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தது. பத்திரிகை நிறுவனங்கள் தாம் பங்குச்சந்தையில் செய்திருக்கும் முதலீடுகள் பற்றிய விபரங்களைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும், விளம்பரமாக வரும் 'செய்திகளின்' கீழே அது விளம்பரம் தானென்று குறிக்க வேண்டும் என்பதையும் உள்ளிட்டு செய்திருந்த பரிந்துரைகளை, 12 பத்திரிகைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் எதிர்த்து, இறுதியறிக்கையில் இந்த விபரங்கள் ஏதும் வராமல் இருட்டடிப்பு செய்துள்ளனர்.

 

இவர்கள் தான் இப்போது பத்திரிகைத் தொழிலின் 'புனிதம்' கெட்டு விட்டதாக ஓலமிடுகின்றனர்.

மறைக்கப்பட்ட அந்த முழு அறிக்கையை இந்தச் சுட்டியில் வாசிக்கலாம்

http://www.scribd.com/doc/35436631/The&Buried&PCI&Report&on&Paid&News

மக்களுக்கு எதிரான கூட்டணி..!

இது ஒரு நுட்பமான வலைப்பின்னல். தரகு முதலாளிகளும், ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும், பெரும் முதலாளித்துவ பத்திரிகைகளுமாகச் சேர்ந்து மக்களுக்கு எதிராய் அமைத்துள்ள மெகா கூட்டணியே தற்போதைய ராடியா டேப் விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது. வெளியாகியுள்ள துண்டு துண்டான அந்தப் பதிவுகளினூடே ஜனநாயகம் என்பதைப் பற்றி மெய்யாலுமே இவர்கள் கொண்டிருக்கும் சித்திரம் மிகத் தெளிவாகப் புலனாகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு  மக்களுக்காக அமைக்கப்படும், மக்களுடைய அரசாங்கம் என்று  அலங்காரமாகச் சொல்லப்படும் இந்த ஜனநாயக அரசின் யோக்கியதை சிரிப்பாய்ச் சிரிக்கிறது.

இந்த 'மக்கள்' பிரதிநிதிகளைத் தேர்தல்களில் தேற்றி விடுவது முதலாளித்துவப் பத்திரிகைகள்; அப்படி ஒருவரைத் தேற்றுவதும், வென்றபின்யாருக்கு எந்தப் பதவி என்பதைத் தீர்மானிப்பதும்  முதலாளிகள் எனும் போது இவர்களின் விசுவாசம் யாரிடம் இருக்கும்? ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியாகி ஊரே காறித்துப்பிய நிலையிலும், ரத்தன் டாடா "தமிழ் தாத்தா'வுக்கு கைப்பட எழுதியனுப்பும் மடலே அதைத் தெளிவாக்குகிறது. "ஆ.இராசாவின் செயல்பாடுகள் ஒரு புதிய வரலாற்றைப் படைத்து விட்டது" என்று அன்றைக்கு அவர் சொன்னதன் பொருள் என்னவென்பது இன்றைக்குத் தெளிவாகிறது. அந்த வரலாற்றின் பின்னே பத்து சைபர்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது.

காலனிய ஆட்சிக் காலம் முதல் இந்தியா முதலாளித்துவ நாடுகளுக்கு வளங்களை சல்லிசாக அள்ளிக் கொடுக்கும் பின்நிலமாகவே இருந்துள்ளது என்றாலும், உலகமயமாக்கலுக்குப் பின் அதன் வேகம் கூடியுள்ளது. தொன்னூறுகளுக்கு முந்தைய ஊழல் என்றால் எவருக்கும் உடனே நினைவுக்கு வருவது போஃபர்ஸ் ஊழல் தான். அதன் மதிப்பே 64 கோடிகள் தான். ஒருவரையும் தண்டிக்க முடியாத  அட குறைந்தது அந்த 64 கோடியையாவது திரும்பப் பெற முடியாத அளவுக்கு நடந்த அதன் விசாரணைச் செலவு மாத்திரம் இருநூற்றுச் சொச்சம் கோடிகள்!

ஆனால், அதன் பின் கடந்த இருபத்தாண்டுகளில் நடந்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பின் முன்போஃபர்ஸ் ஊழல் ஒரு கொசுவைப் போல் தோற்றமளிக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கையில் சந்தை மட்டும் திறந்துவிடப் படவில்லை இந்த நாட்டின் எல்லைகளும் பன்னாட்டுத் தொழிற்கழகங்களுக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

தேசத்தின் வளங்கள்  கொள்ளை போவதை எதிர்த்துப் போராடும் மக்களையும் புரட்சிகர சக்திகளையும் "தீவிரவாதிகள்' போல் சித்தரிப்பதையும், வளங்களைச் சுரண்டிக் கொழுக்கும் பயங்கரவாதிகளை யோக்கியர்கள் போல் சித்தரிப்பதையுமே முதலாளித்துவப் பத்திரிகைகள் செய்து வருகின்றன. இந்த மக்கள் விரோதிகளைப் புரிந்து கொள்வதோடு, இவர்களைப் பாதுகாக்கும் இந்தப் போலி ஜனநாயக ஏற்பாட்டிற்கு மாற்றான மெய்யான ஜனநாயக அரசியல் அமைப்பை உருவாக்க, மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்துப் போரிட ஜனநாயகத்தில் பற்றுள்ளஅனைவரும் முன்வர வேண்டும்.

(வினவு இணையதளத்தில் வெளியான கட்டுரை - www.vinavu.com)