Language Selection

புதிய கலாச்சாரம் 2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 

 

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பது முஸ்லிம்களால் முன்கூட்டியே திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்ற தங்களது கூற்றை இந்தத் தீர்ப்பு நிரூபித்து விட்டதாகவும், மதச்சார்பின்மை பேசுவோர் முகத்தில் கரி பூசப்பட்டு விட்டதாகவும் கூறி எக்காளமிடுகிறது பாரதிய ஜனதாக்கட்சி. விபத்தா, தீ வைப்பா என்று தெரிவதற்கு முன்னாலேயே, அதனை" ஐ.எஸ்.ஐ சதி' என்று பிரகடனம் செய்தார் அன்று மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி. "வினை ஒன்று நடந்தால் அதற்கு எதிர்வினை வரத்தான் செய்யும் என்று கூறி, குஜராத் முஸ்லீம்களுக்கு எதிராக பார்ப்பன பாசிஸ்டுகள் நடத்திய இனப் படுகொலையை நியாயப்படுத்தினார் மோடி.

"கோத்ரா ரயில்பெட்டி எரிப்பு என்பது இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்கள் திட்டமிட்டு நடத்திய படுகொலை  அதன்பின்  குஜராத் முழுதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையோ, கோபம் கொண்ட இந்துக்களின் திட்டமிடப்படாத எதிர்வினை'  இதுதான் குஜராத் படுகொலையை நியாயப்படுத்துவதற்கு சங்கபரி வாரத்தினர் முன்வைத்து வரும் வாதம். தற்போது வந்துள்ள தீர்ப்பு ஆர்.எஸ்.எஸ்இன் வாதத்தைத்தான் வழிமொழிகிறது.

கோத்ராவைத் தொடர்ந்து குஜராத் முழுதும் பார்ப்ப பாசிச குண்டர்கள் நடத்திய முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள், படுகொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கொலைக்கருவிகள், திரட்டப்பட்டிருந்த கொலைப்படைகள், உடல்களும் தடயங்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டது, முஸ்லிம் மக்களின் வீடுகளும், தொழில்களும், குடியிருப்புகளும் ஆக்கிரமிக்கப்பட்டு அவர்கள் அகதிகளாக வெளியேற்றப்பட்ட முறை, இவை அனைத்தும் போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.. போன்றவற்றை அவதானித்த பிறகுதான் பல்வேறு ஊடகவியலாளர்களும், சிவில் உரிமை அமைப்பினரும், ஜனநாயக சக்திகளும் குஜராத்தில் நடைபெற்றது கோத்ரா சம்பவத்தின் விளைவாகத் திடீரென்று வெளிப்பட்ட எதிர்வினை அல்ல, மாறாக, அது வெகு நீண்ட காலமாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கை என்ற முடிவுக்கு வந்தனர்.

பின்னர் தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதான் நடத்திய புலனாய்வு, சங்கபரிவாரத்தின் தலைவர்கள் முதல் கீழ்மட்ட தொண்டர்கள் வரை இந்த இனப்படுகொலை நடவடிக்கையில் எப்படி திட்டமிட்டு இயங்கியிருக்கின்றனர் என்பதை அவர்கள் வாயாலேயே வீடியோ வாக்குமூலமாக வரவழைத்தது. ஆகவே, கோத்ரா சம்பவம் என்பது குஜராத் முழுதும் சங்கபரிவாரத்தினர் நடத்த திட்டமிட்டிருந்த இனப்படுகொலைக்குத் தேவைப்பட்ட  முகாந்திரம் மட்டுமே; கோத்ரா என்பது குஜராத் என்ற வெடிமருந்துக் கிடங்கைப் பற்ற வைப்பதற்குப் பயன்பட்ட  திரி மட்டுமே என்பது நிரூபணமானது.

தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக எத்தகைய கொடிய பயங்கரவாத செயல்களைச் செய்வதிலும் தேர்ந்த கிரிமினல்களே இந்து பாசிஸ்டுகள் என்பதற்கு வரலாறு முழுவதும் பல ஆதாரங்கள் உண்டு. அசீமானந்தாவின் வாக்கு மூலம் இதற்கு சமீபத்திய சான்று. சங்கபரிவாரத்தின் உறுப்பினராயினும், பாஜக அமைச்சராயினும் அவர்களைக் கொலையும் செய்யத் தயங்காதவர்களே பார்ப்பன பாசிஸ்டுகள் என்பதற்கு பிரக்யா சிங் தாகூரும் மோடியுமே சிறந்த எடுத்துக் காட்டுகள். ஆகவே, இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும். இந்த ஊகம் அடிப்படையற்றதல்ல. கோத்ரா முஸ்லிம்கள் மீதான குற்றச்சாட்டுதான் அடிப்படையற்றது.

தற்போதைய கோத்ரா வழக்கு விசாரணையின் யோக்கியதையே அதனை நிரூபிக்கிறது. குஜராத் இனப்படுகொலை தொடர்பான பல வழக்குகளில் இனப்படுகொலையை முன் நின்று நடத்திய மோடியும், குஜராத் போலீசும் நடத்திய மோசடிகள் மறைக்க முடியாத வண்ணம் அம்பலமாயின. தீஸ்தா சேதல் வாத் போன்றோரின் பெருமுயற்சியின் விளைவாக, குஜராத் படுகொலை தொடர்பான பல வழக்குகளில் மறுவிசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குஜராத் போலிசின் பொறுப்பில் இருந்த 9 முக்கிய குற்ற வழக்குகளின் விசாரணைகள், சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு மாற்றப்பட்டன.

26, மார்ச், 2008இல் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்த சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவராக முன்னாள் சிபிஐ இயக்குநர் இராகவன் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவின் மற்ற மூன்று உறுப்பினர்களும் குஜராத் போலீசு ஐ.ஜிக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புலன் விசாரணைக்குத் தேவையான அதிகாரிகளையும் இந்தக் குழு குஜராத்திலிருந்தே பொறுக்கி எடுத்துக்கொண்டது.

கோத்ரா வழக்கில் ஏற்கெனவே குஜராத் போலீசு நடத்தியிருந்த புலன் விசாரணையையும், போலீசு தரப்பு சாட்சிகளையும் தாங்கள் முற்றிலுமாக பரிசோதித்து பார்த்து விட்டதாகவும், குஜராத் போலீசின் விசாரணை சரியான பாதையில்தான் அமைந்திருக்கிறது என்பதால், தாங்கள் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வதாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் இராகவன் பிப்ரவரி 2009இல் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்தார். இவர்கள் "முற்றிலுமாகப் பரிசீலித்து சான்றிதழ் அளித்த' குற்றவாளிகள் 94 பேரில் 63 பேரை நிரபராதிகள் என்று கூறி விடுதலை செய்திருக்கிறது சிறப்பு நீதிமன்றம்.

இது சிறப்புப் புலனாய்வுக் குழு மோடி அரசுடன் சேர்ந்து அரங்கேற்றியிருக்கும் கூட்டுக்களவாணித்தனம்தான் என்பதற்கான ஆதாரங்களை தெகல்கா நிருபர் ஆஷிஷ் கேதான் அடுக்கடுக்காக முன்வைக்கிறார். இந்த சதியின் முதன்மைக் குற்றவாளியாக போலீசால் சித்தரிக்கப்பட்ட மவுல்வி உமர்ஜியை நீதிமன்றம் விடுவித்துவிட்டது. இது முன்கூட்டி திட்டமிடப்பட்ட சதி என்ற தீர்ப்பு, பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவரின் சாட்சியத்தை சார்ந்து இருக்கிறது. அந்த இரு சாட்சிகளும் "துணை போலிசு சூப்பிரெண்டு நோயல் பார்மர், தங்களுக்கு தலா 50,000 கொடுத்து பொய் சாட்சி சொல்லச் சொன்னதாகவும் அந்த அடிப்படையில் தாங்கள் பொய் சாட்சி கூறியதாகவும் தெகல்கா நிருபரிடம் 2007 இல் வீடியோ வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

இந்த வீடியோவும், தெகல்கா நிருபர் கேதான் கோத்ரா வழக்கின் மற்ற சில சாட்சிகள் பற்றி அளித்த வாக்குமூலமும், வீடியோ பதிவுகளும் சிறப்புப் புலனாய்வுக் குழுவால் திட்டமிட்டே வழக்கிலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன. லஞ்சம் கொடுத்து பொய் சாட்சி கூறச் சொன்னதற்காக, குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டிய  நோயல் பார்மர் எனும் போலீசு அதிகாரியை, கோத்ரா வழக்கின் விசாரணை அதிகாரியாக சேர்த்துக் கொண்டு, இதற்கு கடுமையான எதிர்ப்பு எழவே, பின்வாங்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு.

ரயில் பெட்டிகளை இணைக்கும் வெஸ்டிப்யூலைக் கிழித்து உள்ளே நுழைந்து பெட்ரோல் ஊற்றித் தீவைத்தனர் என்ற குற்றச்சாட்டு கூட சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், வெஸ்டிப்யூல் கிழிக்கப்படவில்லை என்று கூறிய தடய அறிவியல் அறிக்கை ரத்து செய்யப்பட்டு, மோசடியாக இரண்டாவது அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதையும் தெகல்கா நிருபர் ஆதாரத்துடன் சுட்டிக் காட்டுகிறார்.

கோத்ரா தொடர்பாக நியமிக்கப்பட்ட பானர்ஜி குழுவின் அறிக்கை, "பெட்டி வெளியிலிருந்து கொளுத்தப்படவில்லை' என்பதை ஆணித்தரமாக நிறுவியிருக்கிறது. ஆனால், குஜராத் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்று இந்த அறிக்கையை முடக்கியுள்ளது மோடி கும்பல். அரசியல் ரீதியிலும் சரி, ஒரு கிரிமினல் குற்ற வழக்கு என்ற முறையிலும் சரி, கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பது, இந்து பாசிஸ்டுகள் அரங்கேற்றிய சதித்திட்டம் என்பதற்கான ஆதாரங்களே மிகுந்திருக்கின்றன.

ஆனால் குஜராத் படுகொலை குறித்து மோடியிடம் விசாரணை நடத்திய சிறப்புப் புலனாய்வுக் குழு, இப்படு கொலையில் மோடியை குற்றம் சாட்டுவதற்கு போதிய ஆதாரங்கள் இல்லையென்று கூறியிருக்கிறது அதே நேரத்தில், கோத்ரா வழக்கில் மீதமுள்ள 20 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என மேல்முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்திருக்கிறது. கோத்ரா எரிப்புதான் "ஆதிமுதல் சதி' என்று சட்டப்படி நிறுவுவதன் மூலம்தான் நரோதா பாட்டியா, பெஸ்ட் பேக்கரி உள்ளிட்ட மற்ற கொடூரமான இனப்படு கொலைகள் அனைத்தையும் இந்துக்களின் தவிர்க்கவியலாத எதிர்வினையாகக் காட்டமுடியும்.

ஸ்டேன்ஸ் பாதிரியாரும் அவரது குழந்தைகளும் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் தூக்குதண்டனையை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், "என்ன இருந்தாலும், இது கட்டாய மதமாற்றத்துக்கான  எதிர்வினை என்பதைக் கணக்கில் கொள்ளவேண்டும்' என்று குறிப்பிட்டது நினைவிருக்கிறதா, "2002 குஜராத் படுகொலை என்பது ஒரு எதிர்வினை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்' என்றுதானே மோடியும் வலியுறுத்தி வருகிறார். சிறப்புப் புலனாய்வுக் குழு, மத்திய காங்கிரசு அரசு, நீதித்துறை ஆகிய அனைவரும் மோடி காட்டும் திசையில்தான் செல்கின்றனர் என்று இதனைக் கூறலாமா, அல்லது இந்து மனச்சாட்சிகளிடையே நிலவும் தற்செயலான ஒற்றுமைதான் இது என்று புரிந்து கொள்ளவேண்டுமா?