அது இரு போர்களை இணைக்கும்
ஒரு அமைதியென்ற காலம்..!அந்த அமைதி நிலவும் மண்ணிலிருந்து
என்னுடைய அடிவேர் பிடுங்கி
ஊரையும் உறவுகளையும் மறுதலித்து
என்னை நான்
வடதுருவப் பனிநோக்கி
புலம்பெயர்த்திய காலமது நீண்டதாச்சு.
எந்தனின் ஊர்மண்ணுக்கும்
எனக்கும் இடையேயான வெளியை
இந்த நீண்டகாலம் தான்
அனைத்தையும் மீறி – அது
தனக்குள் அடக்கிக் கொண்டது.
ஆயினும்..!
எந்தனின் மண்ணில்
என்னில் தடைகளிட – இன்று
எந்தத் தடையுமில்லை – என்ற
இறுமாப்பு என்னிலே கிடந்தது.
அதனாலோ என்னவோ
இன்று நான்
எந்தனின் பாதப் பதிவுகளை
மீண்டும் புதிதாக
மண்ணதனில் பதிக்கப் போகின்றேன்.
என்றோ பண்பட்ட – அந்த
மண்பார்த்த மனம் எனதில்
இன்றும் புண்பட்டு – அதில்
காரைமுள்ளாய்க் குத்தி வலிக்கின்றது.
இருந்தும்..!
இருந்துமிருந்தும்..!!
காலிரண்டும் என் தெருவில்
தானே நடைபயில..,
குடையில்லா மழைபோல – என்
விழியிரண்டும் கண்ணீரால் மூழ்கியது.
அந்நீரை – என்
கரமிரண்டும் – சிறு
பாய்மரத்தின் துடுப்புகள்போல
வலிந்துவந்து துடைத்துச் செல்கிறது.
அந்தத் தெரு முழுதும்…
எனைப் பார்க்கும் – அந்த
அக்கம் பக்க நிலபுலங்களும்…
பேய்க்குப் பேன்பார்க்கும் – ஒரு
சூனியப் பிரதேசம்போல்..!
கிளறிக் கிண்டிய இடுகாடுபோல்..!!
உழவனின் ஏர் ஏறாத மண்ணாகி
போர் ஊர்திகள் குண்டடெறிந்து
உழுது குழிபறித்த – இந்த
மண்ணில் முன்பு..!?
(தொடரும்)
மாணிக்கம்
16/04/2011