02052023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

அணு மின் உற்பத்திக்குத் தொழிலாளர் பலிகிடா!

ஜப்பானில் கடந்த மார்ச் 11 அன்று ஏற்பட்ட பூகம்பம்  சுனாமியால், ஃபுகுஷிமா டாய்ச்சி அணு மின்நிலைய அணு உலைகள் பகுதியளவிற்கு உருகிப் போனதையடுத்து, உலகெங்குமே அணு உலைகளின் பாதுகாப்பு குறித்தும், அவை ஏற்படுத்தும் கதிர்வீச்சு அபாயம் குறித்தும் அச்சங்கள் எழுப்பப்பட்டு வருவதையும், அணு மின் உலைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருவதையும் எள்ளளவும் பொருட்படுத்தாது, மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூரில் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 6 அணு உலைகளுடன் கூடிய மிகப் பெரிய அணுமின்நிலைய வளாகத்தை அமைத்திட மையஅரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த அணு மின் நிலையவளாகத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மாண்டுபோனார்.

 

 

"இந்த அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து மக்கள் அக்கறை கொள்ளத் தேவையில்லை; அது எங்கள் பொறுப்பு' எனத் திமிராகப் பதில் அளித்து வருகிறார், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். "உலகின் முன்னணி கட்டுப்பாட்டு அமைப்புகளின் தரநிர்ணயங்கள் இத் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு முழுப்பாதுகாப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்' என்று இந்திய அணுசக்திக் கழகமும் உறுதி அளித்துள்ளது.

எனினும், செயல் இழந்து போன ஜப்பானின் ஃபு குஷிமா அணு மின் நிலையம் மட்டுமின்றி, ஜப்பானில் உள்ள 55 அணு மின்நிலையங்களில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தற்பொழுது கசிந்து வெளியே வரும் செய்திகள், இந்திய அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து இந்திய அணுசக்திக் கழகம் தரும் உத்தரவாதங்களை முழுமையாக நம்பிவிட முடியாது என்பதைத்தான் உறுதிப்படுத்துகின்றன. குறிப்பாக, ஜப்பானின் அணுமின்   நிலையங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களே கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்; அப்பாதிப்புகள் வெளியே தெரிந்துவிடாதபடி இருட்டடிப்பு செய்யப்படுகின்றன எனும் பொழுது, தொழில்நுட்பத்தில் பின்தங்கிய, மக்களுக்குப் பொறுப்பற்ற அதிகாரவர்க்கம் நிறைந்துள்ள இந்தியாவின் அணு மின் நிலையங்களின் பாதுகாப்பு எந்த விதத்தில் மேம்பட்டதாக இருந்துவிட முடியும்? அணுமின் நிலையங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களையே அணுக் கதிர் வீச்சு பாதிப்பிலிருந்து பாதுகாத்திட முடியாத நிலையில், அணு மின் நிலையங்களைச் சுற்றி வாழும் இலட்சக்கணக்கான மக்களின் பாதுகாப்பிற்குத் தரப்படும் உத்தரவாதத்தை எந்த அளவிற்கு நம்ப முடியும்?

தனது மின்தேவைக்கு பெருமளவு அணுசக்தியை நம்பியுள்ள ஜப்பானில், வணிகரீதியான அணுமின்நிலையங்களும் உள்ளிட்டு 55 அணு உலைகள் இயங்கி வருகின்றன.  அந்நாட்டில் அணு உலைகளின் உற்பத்தி, கட்டுமானம், பராமரிப்பு போன்ற கேந்திரமான பணிகள் தோஷிபா, ஹிட்டாச்சி போன்ற ஏகபோக நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அணு உலைகளை இயக்கும் பொறுப்பு டோக்கியோ எலெக்ட்ரிக் போன்ற தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த அணு உலைகளின் பாதுகாப்பை ஜப்பான் அரசின் அணுசக்தி மற்றும் தொழில் பாதுகாப்பு முகமை மேற்பார்வையிட்டு வருகிறது.

ஜப்பானின் அணுசக்தி மற்றும் தொழில் பாதுகாப்பு முகமை மார்ச் 2010  இல் வெளியிட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி, அந்நாட்டிலுள்ள 18 வணிகரீதியான அணு மின்நிலையங்களில் பணிபுரியும் 83 ஆயிரம் தொழிலாளர்களில் 88 சதவீதம் பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆவர். இந்த ஒப்பந்த தொழிலாளர்கள் அணுசக்தியில் நிபுணத்துவமோ, அதில் முறையான பயிற்சியோ இல்லாதவர்கள். ஃபுகுஷிமா அணு உலையில் நேர்ந்த விபத்தால் ஏற்பட்டுள்ள அணுக்கதிர் கசிவைக் கட்டுப்படுத்தும் பொறுப்பில் இந்த அனுபவமற்ற தொழிலாளர்கள்தான் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

 

இதே போன்று, அணு மின்நிலையங்களில் கதிரியக்க அபாயம் நிறைந்த வேலைகளான, அணு உலைகளில் நீரற்று வறண்டு போன தொட்டிகளைச் சுத்தம் செய்வது, எரிபொருள் தீர்ந்து போய்விட்ட பின், அவை வைக்கப்படும் தொட்டிகளைச் சுத்தம் செய்வது; அணுக்கழிவுகளை உருளைகளில் அடைப்பது போன்றவையும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களின் தலையில்தான்

சுமத்தப்படுகின்றன. சாதாரணக் கட்டுமானத் தொழிலாளர்களும், கூடுதல் வருமானம் தேவைப்படுகின்ற விவசாயிகளும் கதிரியக்கம் நிறைந்த அபாயகரமான வேலைகளைச் செய்ய அதிகச் சம்பள ஆசைகாட்டி அழைத்து வரப்பட்டு, இவ்வேலைகளில் தள்ளப்படுகின்றனர்.

அணு உலைகளைப் பராமரிக்கும் தோஷிபா, ஹிட்டாச்சி போன்ற நிறுவனங்களில் ஒப்பந்ததாரர், உள் ஒப்பந்ததாரர், அவருக்கும் கீழ் ஒப்பந்தம் எடுத்திருப்பவர் எனப் பலபடித்தான முறைகளில் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாகச் சேர்க்கப்படுகின்றனர். இந்தப் படிநிலை அமைப்பு கீழே செல்லச்செல்ல, அதற்கு ஏற்றவாறு அவ்வேலைகளைச் செய்யும் ஒப்பந்தக் கூலிகளுக்குக் கொடுக்கப்படும் கூலியும் குறைந்து கொண்டே போகும்; பாதுகாப்பு அம்சங்களின் தரமும் கீழே விழுந்துவிடும்.

கதிர்வீச்சு நிறைந்த பகுதியில் உள்ள வால்வுகளைக் கையாளுவதுகூட அபாயம் நிறைந்ததாகும். இப்பகுதிகளில் உள்ள வால்வைத் திறந்த ஒரு சில நொடிகளிலேயே கதிர்வீச்சு அதிகரித்து விடும். எனவே, வால்வைக் கையாளும் வேலையில். தொழிலாளர்கள் சுழற்சி முறையில் உடனுக்குடன் மாற்றப்பட்டுக் கொண்டே இருப்பர். இத்தகைய சுழற்சி முறையில் ஒரே வேலையைப் பல தொழிலாளர்கள் செய்கின்றனர். வேலைச்சூழலில் எந்நேரமும் கதிர்வீச்சின் அளவை அளவிட்டுக் கொண்டே இருப்பது மிக முக்கியமானதாகும். இதற்கென கதிர்வீச்சின் அளவைக் கணக்கிடும் டோசி மீட்டர்களைத் தொழிலாளர்கள் கையோடு எடுத்துச் செல்வர். டோசிமீட்டரில் அளவு 50 மில்லி சீவர்ட்ஸைத் தாண்டி விட்டால், கதிரியக்கம் உடம்பைத் துளைத்து விடும். இந்த அளவை எட்டும்போது அவர்களின் அன்றைய வேலை முடிவுக்கு வந்து, உலையிலிருந்து வெளியேற்றப்படுவர்.

 

கதிர் வீச்சு அபாயம் நிறைந்த பகுதிகளில் வேலை செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கதிர்வீச்சால் தாக்கப்பட்டு, அதனால் தங்களுக்கு ஏற்படும் சிராய்ப்புகளும் வெட்டுக்காயங்களும் வெளியே தெரிய வந்தால், கதிர் வீச்சுப் பிரச்னை அம்பலமாகித் தங்கள்  வேலை அதனால் பறிக்கப்படலாம் எனும் அச்சத்தால், அக்காயங்களைத் தோலின் நிறங்கொண்ட பேண்டேஜ்களால் மறைத்தபடியே பணிபுரிகின்றனர்.

பகுதியளவு உருகிப் போன ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தில் இது போன்ற அபாயகரமான வேலைகளை ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு செய்வதற்காக, அவர்களுக்கு அதிக சம்பளம் தருவதாக நாளொன்றுக்கு 350 அமெரிக்க டாலர் முதல் 1,000 டாலர் வரை  ஆசை காட்டி அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறுகிறார், அம்மின் நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மாஸாயுகி இஷிஜாவா.

1980  இல் வருடாந்திர பராமரிப்பிற்காக ஃபுகுஷிமா அணு உலை எண் 1 நிறுத்தப்பட்டபோது, எரிபொருள் கிடங்கின் உள்ளே இறங்கி, அதன் சுவர்களில் ஒட்டியிருந்த அணுக்கழிவுகளை ப்ரஷ் களாலும், கந்தல் துணிகளாலும் அழுத்தித் துடைத்துச் சுத்தம் செய்ததைப் பயங்கரமான அனுபவமாகக் கருதும் 64 வயதான டாக்கேஷி கவாகாமி, அவ்வேலையை 20 நிமிடங்களுக்கு மேல் செய்ய முடியாது என்கிறார். "நான் மயக்கமடையப் போவதாக உணர்ந்தேன்; நான் என்ன செய்கிறேன் என்பது எனக்கே தெரியவில்லை தாங்கமுடியாத வெப்பத்தால் ஏற்பட்ட வியர்வையால் தெப்பமாக நனைந்து, எனது வியர்வையிலேயே நான் மூழ்கிப் போய்விடுவதாக நினைத்தேன்' என அந்த அனுபவத்தை நினைவு கூறும் கவாகாமிக்கு, வயிற்றிலும் பெருங்குடலிலும் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

டோக்கியோ எலெக்ட்ரிக் நிறுவனம் அரசாங்கத்திற்கு அனுப்பிய அறிக்கையில் (அக்டோபர் 2010), டர்பைன் கட்டிடத்தினை ஒப்பந்தத் தொழிலாளர் ஒருவர் துடைத்துச் சுத்தப்படுத்தி வந்தபொழுது, தற்செயலாக சுத்தப்படுத்தப் பயன்படுத்திய துண்டால் தனது முகத்தைத் துடைத்ததால், அளவுக்கதிகமான கதிர்வீச்சுக்கு அவர் ஆட்பட்ட விபத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்விபத்துக்குப் பின் அந்நிறுவனம் கதிர்வீச்சு நிறைந்த பகுதிகளைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும் தொழிலாளர்களுக்கு, இனி கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படுத்தாத சிறப்பு துண்டுகள் வழங்கப்படும் என அறிவித்தது. அதாவது, இந்தத் தனியார் ஏகபோக நிறுவனங்கள், தொழிலாளர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட பிறகுதான், பாதுகாப்பு அம்சங்கள் குறித்துப் பேசுகின்றன என்பதைத்தான் இவ்விபத்து அம்பலப்படுத்துகிறது.

ஏப்ரல் 7ஆம் @ததி நிலவரத்தின்படி, ஃபுகுஷிமா மின்நிலையத்தில் இருந்த 21 ஊழியர்களுள் ஒவ்வொரு வருமே 100 மில்லி சீவெர்ட்ஸ் அளவுக்கும் மேலான கதிர்வீச்சுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. 100 மில்லி சீவெர்ட்ஸ் என்பது நெருக்கடி காலகட்டத்தின் கதிர்வீச்சளவாகும். இதற்கு இரண்டு வாரங்கள் முன்னதாக கதிர்வீச்சு நிறைந்த தண்ணீரில் இறங்கி வேலை செய்யுமாறு நிர்பந்திக்கப்பட்ட இரண்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் கதிர்வீச்சினால் காயமடைந்தனர். கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைத்துக் காட்டுவதற்காகவே, தற்பொழுது இந்த நெருக்கடி காலக் கட்ட கதிர்வீச்சின் அளவு 100 மில்லி சீவெர்ட்ஸிலிருந்து 250 மில்லி சீவெர்ட்ஸாக உயர்த்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்களின் தரம் அதிகரிக்கப்பட்டதால், தொழிலாளர்கள் கதிர்வீச்சால் பாதிக்கப்படுவது 1990களில் இருந்து குறைந்து வருவதாக ஜப்பான் அரசு கூறி வருகிறது. ஆனால், எழுபதுகளில் நிறுவப்பட்ட அணு உலைகளின் ஆயுள் முடியும் நிலைக்கு வந்து கொண்டிருப்பதால், 2000ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவற்றில் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு, பணிப் பாதுகாப்பு குறைந்து வருகிறது. எனவே, ஒரு வேலையை ஒரே குழு தொடர்ச்சியாகச் செய்யும் முறையை மாற்றி, அதே வேலையைப் பல குழுக்கள் சுழற்சி முறையில் செய்யும் முறையே அமல்படுத்தி, கதிர்வீச்சின் பாதிப்பைக் குறைத்துக் காட்டி வருகின்றனர். அரசின் கோப்புகளில் தனியொரு தொழிலாளிக்கு ஏற்படும் கதிர் வீச்சின் பாதிப்பு குறைவாகக் காட்டப்படும் அதே சமயம், கதிர்வீச்சு நிறைந்த சூழலில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதுதான் உண்மை.

தொழில்நுட்பத்தில் மிகவும் முன்னேறிய நிலையிலுள்ள ஜப்பானிலேயே உயிருக்குப் பெரும் அச்சுறுத்தலாகவும், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்குக் காரணமாகவும் அணு உலைகள் இருப்பது ஃபுகுஷிமா  அணு உலைகள் வெடிப்பிற்குப் பின் தௌ;ளத் தெளிவாகி விட்டது. பல ஐரோப்பிய நாடுகள் கூட அணுமின் உற்பத்தியைப் பற்யிய மறுபரிசீலனைக்குத் தயாராகிக் கொண்டுள்ளன. ஆனால், சாக்கடை அடைப்பைச் சுத்தம் செய்ய அதனுள் இறங்கும் தொழிலாளிக்குத் தேவைப்படும் சாதாரண பாதுகாப்பைக்கூடச் செய்து தர மறுக்கும் இந்திய அரசு, இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள அணு உலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கச்சிதமாகச் செய்யப்பட்டுள்ளதாகக் கூறுவதைக் கேட்டு நகைக்கத்தான் முடியும்!

கதிர்