05302023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

ஊழல் ஒழிப்பு: ஹசாரேவின் நாடகமும் நக்சல்பாரிகளின் போராட்டமும்

கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி, விருத்தாசலத்திலுள்ள தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கு துறையின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், ஒரு மூட்டைக்கு 8 கிலோ அளவுக்கு எடை கூடுதலாக வைத்து நெல் கொள்முதல் செய்த மோசடியை அறிந்து, அங்கே குவிந்திருந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளை அணிதிரட்டி விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் நெல் கொள்முதல் நிலைய ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். 19.1.2011 முதல் 3.3.2011 வரை எத்தனை மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டனவோ, அவை அனைத்திற்கும் மூட்டைக்கு நான்கு கிலோ வீதம் பணம் தந்துவிடுவதாக நெல் கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் உறுதியளித்தார். வாக்குறுதி அளித்த அந்தப் பெருச்சாளி தப்பியோடியதைத் தொடர்ந்து, அந்நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட 4000 நெல் மூட்டைகளையும் அதன் அலுவலக பதிவேடுகள், இரு எடைபோடும் இயந்திரங்கள் ஆகியவற்றையும் விவசாயிகளின் ஒப்புதலோடு பூட்டிவிட்டு,  அலுவலகத்தைத் தனது கட்டுப்பாட்டில்வி.வி.மு. எடுத்துக்கொண்டது.

 

 

5.3.2011 அன்று அலுவலகத்தைத் திறக்க வந்த நெல் கொள்முதல் நிறுவனத்தின் அதிகாரிகள், அந்த ஊழல் எழுத்தரை ஒப்படைக்க மறுத்துவிட்டு அங்கிருந்து காரில் ஏறி தப்பிக்க முயன்ற போது, வி.வி.மு. வழிகாட்டுதலில் அந்த அதிகாரிகளை விவசாயிகள் சிறை பிடித்தனர். இதனால் குலை நடுங்கிப்போன அதிகாரிகள், கொள்ளையில் கூட்டுச் சேர்ந்துள்ள உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தர, குடிமைப் பொருள் வழங்கு துறையின் கடலூர் மாவட்டத் துணை மேலாளர் தலைமையிலான உயர் அதிகாரிகள் குழு 6.3.2011 அன்று பேச்சு

வார்த்தைக்கு வந்தது. இருப்பினும், விவசாயிகளிடம் கொள்ளையடித்த நெல்லுக்கான பணத்தைத் தர மறுத்ததால், அவர்களும் முற்றுகையிடப்பட்டு சிறைபிடிக்கப்பட்டனர்.

பின்னர், எடை இயந்திரங்களை பழுது பார்ப்பவர்களை வரவழைத்து இரு எடை இயந்திரங்களும் அதிகாரிகள் முன்னிலையில் சோதிக்கப்பட்டது. இதில், ஒரு மூட்டைக்கு 4 முதல் 8 கிலோவரை எடை மோசடி நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டதால் அதிகாரிகள் தேள்கொட்டிய திருடனை போல் விழித்தனர். இம்முற்றுகை தொடர்ந்ததால், அதிகாரிகளை விடுவிக்காவிட்டால் வழக்குப் போடுவோம் என போலீசு மிரட்டியது. இதைத் துச்சமாக மதித்து 7.3.2011 அன்று அதிகாரிகள் திருடியதைத் திருப்பி எடுப்போம் என்ற போராட்டத்தை வி.வி.மு. அறிவித்தது.

பின்னர் ஏழாம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில், 4000 நெல்முட்டைகளையும் எடை போட்டு, விவசாயிகளிடம் கூடுதலா கக் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்குப் பணம் தந்துவிடுவதாக அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர். குடிமைப் பொருள் வழங்கு துறையில் பணிபுரியும் பட்டியல் எழுத்தர் ஒருவரையும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் கண்காணிப்பாளர் ஒருவரையும் இடைத்தரகர்களாக உயரதிகாரிகள் அனுப்பி வைத்தனர். கடைசி இரு நாட்களில் கூடுதலாகக் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு மட்டும் பணம் தந்துவிட்டு, ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட அனைத்து நெல் மூட்டைகளையும் ஏற்றிச் செல்லும் திட்டத்தோடு இவர்கள் விவசாயிகளை ஏய்க்க முயற்சித்தனர். 4000 நெல் மூட்டைகளில் மேலே அடுக்கி வைக்கப்பட்டிருந்த முட்டைகளில் 10 மூட்டைகளை மட்டும் எடை போட்டுக் காட்டிவிட்டு, கீழே இருந்த மூட்டைகளில் 2 முதல் 4 கிலோ வரை கூடுதலாக நெல் இருந்ததை மறைக்க இவர்கள் மேற்கொண்ட முயற்சி விவசாயிகளிடம் அம்பலப்பட்டுப் போனதால், இடைத்தரகர்கள்

அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். திருடப்பட்ட நெல்லிற்கு பணம் தராமல், நெல் மூட்டைகள் வெளியேறக்கூடாது என 6 லாரிகளை சிறைபிடித்து வி.வி.மு.வினர் முடக்கினர். இச்செய்தி பரபரப்பாக நாளேடுகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளிவந்து அதிகாரிகளின் கொள்ளை இம்மாவட்டமெங்கும் நாறியது.

அரண்டு போன உயரதிகாரிகள், வி.வி.மு. கோரியபடி 4000 மூட்டைகளுக்கும் ரூபாசூ 1 லட்சத்து 70 ஆயிரத்தை குடிமைப் பொருள் வழங்கு துறையின் கொள்முதல் அதிகாரி முன்னிலையில் வி.வி.மு.விடம் அளித்தனர். இதன் மூலம் விவசாயிகளிடம் அதிகாரிகள் அடித்த கொள்ளையில் ஒரு பகுதியை வி.வி.மு. மீட்டது. இப்பணத்தை அனைத்து விவசாயிகளுக்கும் கணக்கிட்டு 14.3.2011 அன்று வி.வி.மு. பிரித்துக் கொடுத்தது. குடிமைப் பொருள் வழங்கு துறையின் வரலாற்றில் அதிகாரிகள் திருடிய பணத்தைத் திரும்பப் பெற்ற முதல் நடவடிக்கை இதுதான்!

இத்தகைய அதிகார வர்க்க ஊழலையும் திருட்டையும் சட்டத்தாலோ, சில மேதைகளின் நடவடிக்கைகளாலோ ஒழித்துவிட முடியாது. மாறாக, உழைக்கும் மக்களை அணிதிரட்டி களத்தில் இறங்கிப் போராடுவதன் மூலம்தான் அதிகாரிகளின் ஊழலை ஒழிக்க முடியும் என்ற   உண்மையை இந்தப் போராட்டம் மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது. அன்னா ஹசாரேவின்   மெழுகுவர்த்தி போராட்டத்தையே மாபெரும் புரட்சியாக ஊடகங்களும் நடுத்தர வர்க்கமும் சித்தரித்துவரும் வேளையில், அத்தகையோரால் நினைத்தும் பார்க்க முடியாத போராட்டம் இது. ஏனெனில், இது நக்சல்பாரிகளின் போராட்டம்!

தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி,

விருத்தாசலம் வட்டம்.