05292023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்

இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின்போது நடந்த படுகொலைகள், அத்துமீறல்கள் குறித்துப் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களின்படி எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்துத் தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நடந்த இன்னுமொரு மிகக் கொடூரமான இனப்படுகொலை பற்றியும், மனித உரிமை மீறல்கள் அட்டூழியங்களையும் இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. போர்க்குற்றங்கள் பற்றிய அனைத்துலகச் சட்டங்களின் படி, இலங்கை அரசே விசாரணையை நடத்திக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும், வடக்கு  கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி, அதன் செயற்பாடுகளைக் கண்காணிக்க சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை ஐ.நா. பொதுச் செயலர் அமைக்க வேண்டும் என்றும் இந்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கை இலங்கை அரசு பாரிய போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாகப் பட்டியலிடும் அதேசமயம், புலிகளும் பெருமளவிலான போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாகப் பட்டியலிட்டு இருதரப்பையும் சம அளவில் வைத்துத்தான் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், "புலிகள் அளித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் ஒருதலைபட்சமான அறிக்கையை ஏற்க இயலாது' என்றும், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் எல்லைமீறித் தலையிட்டு அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஐ.நா. குழு சீர்குலைப்பதாகவும் குற்றம் சாட்டி, ராஜபக்சே கும்பல் தேசிய வெறியையும் இனவெறியையும் தூண்டிவிட்டு வருகிறது.

ஐ.நா. பொதுச் செயலர் தனிப்பட்ட முறையில் தனக்கு ஆலோசனை வழங்க இக்குழுவை நியமித்துள்ளாரே தவிர, இது ஐ.நா. மன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அல்ல. இக்குழுவின் அறிக்கையும் ஐ.நா. மன்றத்தின் அறிக்கையோ, போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையோ அல்ல. இப்படித்தான், கடந்த 2009ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில் என்ற எவ்வித அதிகாரமும் இல்லாத அமைப்பின் வாயிலாக, ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதிப் போரின்போது நடந்த ஈழத் தமிழினப் படுகொலையையும் போர்க் குற்றங்களையும் சாடி அனைத்துலக மனித உரிமைக்கான தன்னார்வ அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததால் ஜனநாயக நாடகமாடுவதற்காகவும், ஐரோப்பிய நாடுகளில் போராடிய புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தற்காலிக மனஆறுதல் தருவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட பாசிபிச சதியாகவே இப்படியொரு தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இதை ஐ.நா. பொதுச் சபையில் வைத்து விவாதித்துப் பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கீகரித்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால், அத்தீர்மானம் வெறும் காகிதத் தீர்மானமாக முடங்கிப் போனது. இப்போது மீண்டும் அதேவழியில் ஐ.நா. பொதுச் செயலர் நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையும் அமைந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான இன்றைய ஒற்றைத் துருவ ஏகாதிபத்திய உலகில், இனப்படுகொலைகளை நடத்திவரும் பாசிச  இராணுவ சர்வாதிகார அரசுகள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் விருப்பத்திற்கேற்ப கண்டும் காணாமல் விடப்படுகின்றன அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தலையீடும் ஆக்கிரமிப்பும் தொடர்கின்றன. அதேசமயம், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் தலையீட்டையோ அத்துமீறலையோ ஆக்கிரமிப்பையோ யாரும் வாயளவில்கூட கண்டிக்க முடியாது.

இத்தகைய நிலைமையில், அமெரிக்காவும் அதன் தலைமையிலான ஏகாதிபத்திய உலகமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களைக் கண்டு கொள்ளாமல் ஒதுக்கிவிடவே விரும்புகின்றன. அதேசமயம், ஈழத் தமிழின அழிப்புப் போர் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தால், ஜனநாயக நாடகமாடவும் செய்கின்றன. ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்கு ஏற்பச் செயல்படும் கைப்பாவையான ஐ.நா.மன்றமும் அதற்கேற்ப தலையாட்டுகிறது. இறுதிக்கட்ட ஈழப் போரில் நடந்துள்ள மனித உரிமை மீறல்களைப் பட்டியலிட்டு நிபுணர் குழு மூலம் ஆவணப்படுத்தி, அவசியமேற்படும்போது ராஜபக்சே கும்பலுக்கு எதிராக அதைப் பயன்படுத்தலாம் என்பதுதான் ஏகாதிபத்தியங்களின் திட்டமாக உள்ளது. மனிதஉரிமை  ஜனநாயகம்  பயங்கரவாத எதிர்ப்பு நாடகமாடிக் கொண்டு ஈராக், ஆப்கான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள் மட்டுமல்ல் அண்மைக்காலமாக, அரபு நாடுகளில் அமெரிக்க விசுவாச சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தமது ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்கும் எதிரானதாகத் திரும்பிவிடாதிருக்க, மனித உரிமை  ஜனநாயக நாடகமாடிக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுகின்றன.

மறுபுறம், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவுக்குப் போட்டியாக இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாகவே இலங்கை அரசுக்கு ரஷ்யா, சீனா முதலான நாடுகள் ஆதரவளிக்கின்றன. இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையை தாஜா செய்யும் நோக்கத்துடன் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியான பாகிஸ்தான், ஈழப்போரின்போது இலங்கைக்கு ஏராளமான ஆயுதங்களை விற்று ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்றது. இலங்கை அரசு சீனா பக்கம் சாய்ந்து விடாமல் தனது மேலாதிக்கப் பிடியில் இருத்தி வைப்பதற்காகவே இந்தியா, ஈழத்தில் மறைமுகமாகப் போரை வழிநடத்தி ராஜபக்சே கும்பலுக்கு உற்ற துணையாக நின்றது. மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இத்தகைய நிலைமை கள்தான் இலங்கை அரசை இந்த நாடுகள் ஆதரிக்கக் காரணமாக உள்ளன.

இந்திய அரசு ஈழத்தமிழின அழிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்திருப்பது மட்டுமல்ல் காஷ்மீர், வடகிழக்கிந்தியாவின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் மற்றும் இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் காட்டுவேட்டை என்ற பெயரில் நடத்திவரும் நரவேட்டை முதலானவற்றிலும் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து அப்பட்டமான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர அரசு என்பது நிரூபணமாகியுள்ளது. இருப்பினும், ஒரு போரில் மனித உரிமை ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் அட்டூழியங்களில் ஈடுபடுவதுதான் போர்க் குற்றம் என்பதாகவும், உள்நாட்டில் அரசு பயங்கரவாத அட்டூழியங்களையும் புரட்சிகர ஜனநாயக இயக்கங்களின் போராட்டங்களையும் சமப்படுத்தி இருதரப்பும் மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டுவதாகவும்தான் ஏகாதிபத்தியங்கள் மற்றும் சில மனித உரிமை அமைப்புகளின் நடவடிக்கைகளாக உள்ளன. தமிழினவாதிகளும் ஈழ ஆதரவு நாடகமாடும் ஓட்டுக் கட்சிகளும், ஏதோ இந்திய அரசு இதுவரை போர்க்குற்றங்களில் ஈடுபடாதது போலவும், ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்று ஈழப் போரை வழிநடத்தியதுதான் போர்க்குற்றம் என்பதாகவும் மாய்மாலம் செய்து, இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கின்றனர்.

இன்றைய நிலையில், சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் போர்க்குற்றவாளியான ராஜபக்சே கும்பலுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர். ராஜபக்சே கும்பல் மீது போர்க்குற்றம் சாட்டும் மேலைநாடுகளின் மனித உரிமை இயக்கங்களும் கூட ஒரு சில செயல்வீரர்களின் நடவடிக்கைகளாகவும் ஊடகங்களின் அம்பலப்படுத்தல்களாகவும் அமெரிக்காவின் தலையீட்டைக் கோருவதாகவும் உள்ளனவே தவிர, மக்கள்திரள் இயக்கமாக முன்னேறவில்லை. இந்நிலையில், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்குவதும், ஏகாதிபத்திய சதிகளை அம்பலப்படுத்தி, அக்கும்பலைத் தண்டிக்க மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்து இறுதிவரை முன்னெடுத்துச் செல்வதும்தான் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.