12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

நேர்காணல்: தோழர் கிரண், துணை தலைவர் மையக்குழு ஒன்றிணைந்த நேபாள கம்யூனிச கட்சி (மாவோயிஸ்ட்)

கேள்வி:

கடந்த இரு ஆண்டுகளாக தேசிய அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் ஏற்பட்ட தங்களுடைய அனுபவங்களையும், நேபாள காங்கிரசு போன்ற பிற்போக்குவாத பாராளுமன்ற வலதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கை குறித்து எவ்வாறு கருதுகிறீர்கள்?

பதில்:


 

கடந்த இரண்டு ஆண்டுகளில் சட்டவரைபு சபையில் பிற பாராளுமன்ற கட்சிகளுடனான, நேபாள காங்கிரசு போன்ற கட்சிகளுடனான எமது உறவுகள் பெரிதும் கசப்பானதாகவும், சிக்கல் நிறைந்ததாகவும் இருந்தது. இந்த ஒட்டு மொத்த நிகழ்வுப் போக்கில், இரு முரண்பட்ட போக்குகளுக்கு இடையே, தீவிரமான கருத்தாக்க போராட்டம் நடைபெற்று வருகிறது. மக்கள் விடுதலைப் படையை தேசிய படையுடன் மரியாதை மிக்க வகையில் இணைத்துக் கொள்வதா அல்லது அவர்களது ஆயதங்களைப் பறித்து நிராயுத பாணியாக சரணடையச் செய்வதா என்ற கருத்துகளிடையே உள்ள முரண்பாடும், ஏகாதிபத்திய எதிர்ப்பும், அரை நிலப்பிரபுத்துவ எதிர்ப்பும் உள்ளடக்கமாகக் கொண்ட மக்களின் அரசியல் சட்டத்தை எழுதுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதா அல்லது தற்போதைய நிலைமையை அடிப்படையாகக் கொண்ட பாராளுமன்றவாத அரசியல் சட்டத்தை எழுதுவதா என்ற கருத்துக்களுக்கிடையேயான முரண்பாடும் காணப்படுகின்றன. இந்த போராட்டத்தில் நாளுக்கு நாள் எங்களது கட்சி வலுவிழந்து வருகிறது.

இந்த நிகழ்வுப் போக்கில் கடந்த காலம் தொட்டு இன்று வரை மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சமரசங்கள் குறித்தும் மதிப்பீடு செய்வதை குறித்து இருவழிப் போராட்டம் நடந்து வருகிறது.

 

கேள்வி:

இந்திய மாவோயிஸ்டுக்கள் உங்களைப் போன்றே இந்தியாவில் செயல்படுபவர்கள், தற்போதுள்ள அரசு கட்டமைப்புக்கள் வீழ்த்தாமல் நீங்கள் பாராளுமன்ற பாதையை தேர்வு செய்வதை குறித்து சற்று சந்தேகத்துடன் அணுகுகின்றனரே. உங்கள் கட்சி முதலாளித்துவ பாராளுமன்றத்தில்  பங்கேற்று அரசு கட்டமைப்பை மாற்றியமைப்பது என முடிவு செய்தது. இது குறித்து உங்கள் மீளாய்வு எவ்வாறு உள்ளது?

பதில்:

பழைய அரசு கட்டமைப்பை உடைத்து எறிந்து புதிய சனநாயக அரசு அதிகாரத்தை நிலை நிறுத்துவதற்காக எங்களது கட்சி பெரும் மக்கள் யுத்தத்தை துவங்கி நடத்தியுள்ளது. இருப்பினும் நாங்கள் இடையில் இந்த பெரும் செயலை செய்து முடிக்க சில சமரசங்களை மேற்கொண்டு, அரசு கட்டமைப்பிற்குள் மறுசீரமைப்பது என்ற கொள்கைளை ஏற்றுக் கொண்டோம். இது எங்களது செயல்பாட்டின் வரம்பாகவும் கட்டாய தேவையாகவும் இருந்தது. எனவே எமது கட்சியை குறித்து இந்திய மாவோயிஸ்டுக்கள் சந்தேகத்துடன் கவனிப்பது இயல்பானது தான். எமது கட்சியின் வருங்கால நடைமுறைகளைக் கொண்டு தான் இந்திய தோழர்களின் சந்தேகத்திற்கு சரியான விடையளிக்க முடியும். அல்லது எமது பாதையின் அவசியம் அல்லது அவசியமற்றதை நியாயப்படுத்த முடியும்.

கேள்வி:

உங்களது நாடு தெற்காசியாவில் இரு பெரும் மிகப் பெரிய நாடுகளின் அதாவது இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் அழுந்தி கிடக்கிறது. துவக்கத்தில் சீனாவை விட இந்தியா தான் உங்களது புரட்சிகர செயல் வீச்சிற்கு கேடு விளைவிக்க கூடியதாக நீங்கள் கருதினீர்கள். பின்னர், உங்களது கட்சி தலைவர் பிரசண்டா அவர்கள் இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை கைவிட்டு அதனை நேச நாடாகக் கருதுகிறார். இந்த இரட்டை நிலையை எவ்வாறு விளக்க முடியும்?

பதில்:

எங்களது தேசம் சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையில் அழுந்தி கிடப்பது உண்மைதான். நாங்கள் இந்த இரு நாடுகளுடனும் அவரவர்களின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் மரியாதையை மதித்து அண்டை நாட்டுடனான நட்புறவை பேண விரும்புகின்றோம். இவர்களுடன் பல்வேறு சமனற்ற உடன்படிக்கைகள் 1950 களின் இந்திய நேபாள உடன்படிக்கை உட்பட நிலையில் உள்ளன. ஆனால் சீனாவுடன் அத்தகைய சமனற்ற உடன்படிக்கை எதுவும் இல்லை. இந்த விதத்தில் காணும் போது, இந்திய ஆளும் வர்க்கத்தை நாங்கள் எதிர்க்கின்றோம். ஆயின் இந்திய மக்களுக்கு நாங்கள் எதிராக இல்லை. இந்த சமனற்ற உடன்படிக்கைகளை கைவிட்டு புதிய இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயன்படக்கூடிய சமத்துவமான உடன்படிக்கையில் கையொப்பமிட நாங்கள் தயாராக உள்ளோம்.

இந்தியாவை குறித்த தலைவர் பிரண்டாவின் கருத்தையும், நடைமுறையையும் இரட்டை நிலையாகக் காணத் தேவையில்லை. ஏனெனில் அரசியலுக்கும் நாடுகளை கையாளுதலுக்கும் இடையிலான இயங்கியல்  உறவின் பின்னணியில் நமது செயல்பாட்டின் வரையறையை அவர் வெளிப்படுத்தியதாகவே அதனை நாம் காண முடியும்.

கேள்வி:

இந்த தெற்காசியாவில் வட்டார உறுப்பினர்களின் தேசிய உள்ளுணர்வுகளுக்கு எதிரான விரிவாதிக்க நாடாக இந்தியாவை நீங்கள் இன்றும் கருதுகிறீர்களா?

பதில்:

ஆம் அப்படியே கருதுகிறோம். எமது கட்சியின் நிலைப்பாடு இந்திய ஆளும் வர்க்கத்தை நோக்கி, மிக சிறுபான்மையினரான அவர்களுக்கு எதிரானது. இந்திய மக்களை பொறுத்தவரை அவர்களை நேபாள புரட்சியின் நண்பர்களாக சமத்துவத்துடன் நாங்கள் மதிக்கிறோம்.

கேள்வி:

தேர்தல் நிகழ்வு போக்கில் பங்கேற்கும் போது, ஆயுதம் தாங்கிய அரசு கட்டமைப்பை தூக்கியெறிவது என்ற நிலைப்பாட்டை கைவிட்டு, அமைதியான வழியில் அதிகாரத்தை கைப்பற்றுவதாக நீங்கள் முன்வைத்தீர்கள். நகர்புற எழுச்சியை அணிதிரட்ட (Fusion) ஒன்றிணைப்பு தத்துவத்தை நீங்கள் முன் வைத்தீர்கள் அது பற்றிய தங்கள் கருத்து என்ன?

பதில்:

ஆம் அரச அதிகாரத்தை ஆயுதம் தாங்கி தூக்கி எறிவது என்பதில் இருந்து எமது கவனத்தை திசை திருப்பி அமைதியான தேர்தல் பாதையில் நாங்கள் பங்கேற்பது என்பதில் கவனம் செலுத்தினோம். இங்கு எங்களுக்கு பல்வேறு குறைபாடுகளும், வரம்புகளும், கட்டாய தேவைகளும் இருந்தன. இவையனைத்தையும் எந்த ஒரு சமரசமும் இன்றி தொகுத்துக் கொண்டு நாங்கள் முன்னேற விரும்புகிறோம்.

ஒன்றிணைவு என்ற கருத்தாக்கத்தை பொறுத்தவரை நகர்ப்புற எழுச்சியை அணிதிரட்டி முன் வைக்கப்பட்ட இந்த கருத்தாக்கம் சரியானதாகும். புதிய தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து, ஏகாதிபத்திய உலகமயமாக்கல் வளர்ந்து விட்ட சூழலில் நீண்ட கால மக்கள் யுத்த பாதையில் ஆயுதம் தாங்கிய எழுச்சியின் சில அம்சங்களை ஒன்றிணைத்து வளர்த்தெடுக்க நாங்கள் முயல்கிறோம். இவை இரண்டிற்கும் சரியான கவனம் செலுத்த வேண்டிய தேவை நமக்கு உள்ளது. மேலும் ஆய்வு செய்து நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்த வகையில் கட்சி வலது திரிபு வாதத்தில் மூழ்கிவரும் அபாயம் உள்ளது என்பதையும், அது குறித்து கவனமாக செயல்பட வேண்டும் என்றும் நாங்கள் உணர்கின்றோம்.

நேர்காணல்: சுதாகர்
தொகுப்பு : பீட்டர்

பின்குறிப்பு: நேபாள கம்யூனிச கட்சி (மாவோயிஸ்ட்) தோழர்கள் பசந்தா, கிரண் ஆகியோரது இந்த நேர்காணல்கள் விரைவில் வரவிருக்கின்ற “நேர்காணல்களும், கட்டுரைகளும்”தொகுப்பில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. நேர்காணலுக்கான விபரங்கள் விரிவாக வெளிவர இருக்கும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கால சூழல் கருதி இந்த நேர்காணலகள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன.

மற்றும் சில “தோழர்கள்” இந்த நேர்காணல்கள் குறித்து அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அவசரப்பட்டுள்ளார்கள். நேபாள மாவோயிஸ் தோழர்களை சந்திப்பது என்பது“ஒரு ஒற்றை சாரள வழிப் போக்கல்ல” என்பதை புரிந்து கொள்வார்கள் என நம்புகின்றோம். பொதுத்தளத்தில் செயல்பட முயல்பவர்களுக்கு பொறுமையும் அவதானிப்பும் அவசியம் தேவை.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்