இயற்கையின் கொடையான தண்ணீர் அனை வருக்கும் பொதுவானது, அதனை அனைவரும் பகிர்ந்து கொள்ளும் உரிமை உள்ளது என்ற நியதிக்கு, முதலாளித்துவம் என்றுமே கட்டுப்பட்டதில்லை. மற்ற வளங்களைப் போலவே தண்ணீரையும் ஒரு விற்பனைப் பண்டமாக்கிவிடவே, அது துடித்துக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் நீர் ஆதாரங்களைக் கைப்பற்ற உலக வங்கியின் துணையுடன் பல வழிகளில் பன்னாட்டு நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அதன்ஒரு பகுதியாக, "இந்தியாவின் வளர்ந்து வரும் தண்ணீர் வர்த்தகத் துறையின் 50 பில்லியன் டாலர் (2,50,000 கோடி ரூபாய்) மதிப்பிலான சந்தையைக் கைப்பற்றுவோம்'' என்ற முழக்கத்துடன் அமெரிக்க கார்பரேட் கூட்டம் ஒன்று கடந்த பிப்ரவரி மாத இறுதியில் பெங்களூருவிற்கு வந்து சென்றுள்ளது.

 

அமெரிக்க வர்த்தகத் துறை தனது நாட்டு முதலாளிகள் மற்ற நாடுகளின் இயற்கை வளங்களைச் சூறையாடுவதற்கு உதவுவதற்காகவே, "சர்வதேச வர்த்தக மலாண்மைக் கழகம்' ன்ற அமைப்பை வைத்துள்ளது. அந்த அமைப்பு இந்தியா போன்ற ஏழை நாடுகளின் தண்ணீர் வளங்களைச் சூறையாட, "தண்ணீர் வர்த்தக இயக்கம்' என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. இயற்கையின் கொடையான தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கும் சரக்காக மாற்றுவதுதான் இவர்களது இலட்சியம். இந்தியத் தண்ணீர் வர்த்தகத்தின் தற்போதைய மதிப்பு இரண்டரை இலட்சம் கோடி ருபாய்கள் எனக் கணக்கிட்டுள்ள இவர்கள், அதில் முதலீடு செய்து கொள்ளை இலாபமடிக்க தற்போது இந்தியாவை வட்டமடித்து வருகின்றனர்.

தண்ணீர் வர்த்தகத்திற்கான சந்தையைப் பற்றித் தெரிந்துகொள்வது, இத்துறையில் தங்களுக்கு உதவக்கூடிய தரகு முதலாளிகளை அடையாளம் கண்டு கூட்டாளிகளாகச் சேர்த்துக் கொள்வது போன்ற திட்டங்களுடன் இந்தியா வந்த இந்தக் குழுவினருக்கு பெங்களூரு நகரில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. பல்வேறு இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்புகளும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நடத்திய போராட்டங்களின் காரணமாக, இவர்கள் தங்களது கூட்டத்தை வேறொரு இரகசிய இடத்திற்கு மாற்றிவிட்டனர். இந்தக் குழுவின் வருகை பற்றி எதுவும் தெரியாது என இறுதிவரை சாதித்த மாநில அரசு, கூட்டம் ஒழுங்காக நடைபெற அனைத்து உதவிகளையும் செய்தது.

குடிநீர் சுத்திகரிப்புக்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆலோசனைகளை வழங்குதல், தொழில்நுட்ப உதவிகள் வழங்குதல், கழிவுநீர் மேலாண்மைக்கு உதவுதல் என்ற பெயரில் இக்குழு உள்ளே நுழைந்தாலும், இவர்களது உண்மையான நோக்கம் தண்ணீர் தனியார்மயம் தான். தண்ணீர் வியாபாரத்தில் பன்னாட்டு நிறுவனங்களே நேரடியாகக் களத்திலிறங்கிக் கொள்ளையடிக்கும் கொச்சபம்பா பாணி தனியார்மயம், மக்களிடையே பெரும்

எதிர்ப்புக்குள்ளாகி தோல்வியடைந்துவிட்டதால், தற்போது இவை போன்ற பெயர்களில் புறவாசல் வழியாக உள்ளே நுழைகின்றனர். உள்நாட்டு குடிநீர் விநியோகத்தைக் கைப்பற்றுவதோடு, இந்தியாவிலிருந்து மற்ற நாடுகளுக்குத் தண்ணீரை ஏற்றுமதி செய்யவும் இவர்கள் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர்.

 

தண்ணீர் வியாபாரத்திற்கு ஏற்றவாறு சட்டங்களைத் திருத்துவது, அரசின் தண்ணீர்க் கொள்கை மற்றும் வரிவிதிப்புகளில் தலையிட்டு அவற்றை மாற்றுவது, இதற்கான அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்குவது, இவையனைத்திற்கும் மேலாக தண்ணீர் வியாபாரத்திற்கு ஆதரவானதொரு பொதுக் கருத்தை உருவாக்குவது போன்ற வேலைகளில் இவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஏற்கெனவே பல இந்திய நகரங்களின் குடிநீர் விநியோகம் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுவிட்டன. கர்நாடக மாநிலத்தில் மட்டும் மைசூரு, {ஹப்ளி, தார்வாடு, பெல்காம், குல்பர்கா ஆகிய ஐந்து நகரங்களின் குடிநீர் விநியோகம் பன்னாட்டு நிறுவனங்கள் வசம் உள்ளது. ஆனால், இந்த மாற்றங்கள் அனைத்தும் வெளிப்படையாக நிகழவில்லை. யாருக்கும் தெரியாமல் அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தங்கள் மூலமே அவை நிறைவேற்றப்பட்டுவிட்டன. நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ, ஏன் அந்தந்த நகர்மன்றங்களிலோ கூட இதுபற்றி விவாதிக்கப்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துப் பேசும் பன்னாட்டு நிறுவனங்கள் இரகசியமாகவே தங்களது காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றன. தற்போது வந்து சென்றிருக்கும் குழுவினர்கூட பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளைச் சந்தித்துப் பேசுவதைத் தங்களது திட்டத்தில் வைத்திருந்தனர்.

 

பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும் பரிந்துரைகளை ஏற்று இயற்கை வளங்களை, கார்ப@ரட் நிறுவனங்கள் சுரண்டிக் கொழுக்க வகை செய்யும் மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் அங்கமாக இது போன்ற எண்ணற்ற குழுக்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து வருகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்படும் நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ இதுபற்றிக் கேள்வி கேட்கவோ, ஏன் தெரிந்து கொள்ளவோ கூட எவ்வித உரிமையும் இல்லை. இந்த அவைகளின் உறுப்பினர்களே தனியார்மயத் தாசர்களாக இருப்பதால், இது பற்றியெல்லாம் கேள்வியெழுப்பவும் விரும்புவதில்லை.

 

இளங்கோ