Language Selection

புதிய ஜனநாயகம் 2011

ஆப்கான், ஈராக்கையடுத்து, அமெரிக்கா தனது ஆக்கிரமிப்புப் போரை லிபியா மீது தொடுத்திருக்கிறது. நேடோ கூட்டணியைச் சேர்ந்த பிரிட்டன், பிரான்சு, இத்தாலி ஆகிய மூன்று ஏகாதிபத்திய நாடுகளும் அமெரிக்காவுக்கு இணையான வெறியோடு இப்போரில் இறங்கியுள்ளன. லிபியாவின் இராணுவ பலத்தை முற்றிலுமாகச் சிதைத்துவிடும் நோக்கில், அதன் இராணுவ, கப்பற்படைத் தளங்கள், போர் விமானங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் அனைத்தும் குறிவைத்துத் தாக்கி அழிக்கப்படுகின்றன. இப்போரினூடேயே லிபியாவின் அதிபர் மும்மர் கடாஃபியைக் கொன்றுவிடும் நோக்கமும் மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கு இருப்பதை, அவரது மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் காட்டிக் கொடுத்துவிட்டது.

 

ஆப்கான் மீதான ஆக்கிரமிப்புப் போர் தாலிபானையும், அல்காய்தாவையும் அழிப்பது என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டதைப் போல, ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போர் சதாம் இரகசியமாகப் பதுக்கி வைத்துள்ள பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களைத் தேடி அழிப்பது என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டதைப் போல, லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடி வரும் அந்நாட்டு மக்களைக் காப்பது என்ற பெயரில் அமெரிக்காவும், ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளும் நியாயப்படுத்தி வருகின்றன. ஆனாலும், லிபியாவில் கிடைக்கும் மிகவும் தரம்வாய்ந்த கச்சா எண்ணெய் வளத்தைக் கைப்பற்றிக் கொள்ளவே அமெரிக்கா, ஐ.நா.வின் ஆதரவோடு இப்போரில் குதித்திருக்கிறது என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.

 

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள லிபியா இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இத்தாலியின் காலனியாக இருந்தது. 1951இல் பெயரளவிலான சுதந்திரம் அடைந்த நாடாக மாறியபொழுது, லிபியாவின் கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வரும் செனுஸி என்ற இனக்குழுவைச் சேர்ந்த முதலாம் இத்ரிஸ் என்பவர் தலைமையில் மன்னராட்சியும் உருவாக்கப்பட்டது. கடாஃபா என்ற இனக்குழுவைச் சேர்ந்த மும்மர் கடாஃபி, மக்ரஹா, வர்ஃபல்லா என்ற இனக் குழுக்களோடு இணைந்து 1969இல் முதலாம் இத்ரிஸின் ஆட்சியைத் தூக்கியெறிந்துவிட்டு, லிபியாவின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினார். இந்த அதிகார மாற்றத்தின் பின், லிபியாவின் கச்சா எண்ணெய் வளம் தேசியமயமாக்கப்பட்டது.

 

எகிப்தின் முன்னாள் அதிபர் நாசர் உருவாக்கிய அகண்ட அரேபியா என்ற அரபு தேசிய சித்தாந்தத்தின் அடிப்படையிலும், (முன்னாள்) சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் தயவிலும் மேற்குலக ஏகாதிபத்தியங்களை எதிர்த்து வந்த கடாஃபி, மேற்காசியா நாடுகளில் இருந்து கம்யூனிசத்தை ஒழித்துக் கட்டுவதையும் தனது இலட்சியமாகக் கொண்டிருந்தார். கடாஃபியின் ஆட்சியின் கீழ் லிபியா, மற்ற ஆப்பிரிக்க நாடுகளைக் காட்டிலும் பொருளாதாரத்திலும், மனித வள மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியிருந்தாலும், கடாஃபியின் ஆட்சி என்பது மேற்காசியாவின் மற்ற சர்வாதிகார ஆட்சிகளிலிருந்து எவ்விதத்திலும் வேறுபட்டதாக இல்லை. இரகசிய போலீசு அமைப்புகள், இராணுவம், இனக் குழுக்களின் தலைவர்களைக் கொண்ட கவுன்சில்  இவைதான் அவரது ஆட்சியைத் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக உருவாக்கப்பட்டன.

 

சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வீழ்ந்த பின், கடாஃபியின் மேற்குலக ஏகாதிபத்திய எதிர்ப்புச் சவடால்கள் ஆட்டங்கண்டு போயின. அமெரிக்கா, ஈராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த பின், கடாஃபியின் மேற்குலக ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது முற்றிலும் பழங்கதையாகிப் போனது.

 

2003இல் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது, லிபியா. இதன் பிரதிபலனாக, அமெரிக்காவால் "ரவுடி நாடாக'க் கருதப்பட்ட லிபியா, அமெரிக்காவின் நட்பு நாடாகியது. மேற்குலக ஏகாதிபத்தியங்கள் லிபியாவின் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடையுத்தரவுகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டதோடு, லிபியாவிற்குத் தேவைப்படும் நவீன, கனரக ஆயுதங்களைத் தருவதாகவும் உடன்பாடு செய்துகொண்டன. சர்வதேச நாணய நிதியம்கூட வியந்து பாராட்டும்படி தனியார்மயத்தை நடை முறைப்படுத்தத் தொடங்கினார், கடாஃபி. எல்லாவற்றுக்கும் மேலாக, அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் நம்பத் தகுந்த கூட்டாளியாகவும் விளங்கினார், கடாஃபி. குறிப்பாக, அமெரிக்காவால் கைது செய்யப்படும் "தீவிரவாதிகளை' இரகசியமாக அடைத்து வைத்துச் சித்திரவதை செய்வதற்குத் தனது நாட்டின் சிறைச்சாலைகளைத் திறந்துவிட்டார், கடாஃபி.

 

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியோடு சமாதான சகவாழ்வு நடத்தி வந்த அமெரிக்கா, இப்பொழுது அவரை அகற்றிவிட அந்நாட்டின் மீது ஒரு போரையே ஏவிவிட்டிருப்பது, விளங்கிக் கொள்ள முடியாத புதிரல்ல. ரவுடிகளை வளர்த்துவிடும் போலீசு, பின்பு அவர்களை என்கௌண்டரில் போட்டுத் தள்ளுவது போன்றதுதான் இதுவும்.

 

தனது மேலாதிக்க நலன்களுக்காக சர்வாதிகாரிகளை அரவணைத்து வளர்த்து விடுவதும், அதே மேலாதிக்க நலன்களுக்காக அச்சர்வாதிகாரிகளைப் பதவியிலிருந்து தூக்கியெறிவது தொடங்கி பரலோகத்திற்கு அனுப்பிவைப்பது வரை அரசியல் சதுரங்க விளையாட்டுக்களை நடத்துவது அமெரிக்காவின் வாடிக்கை. மக்களிடம் அம்பலப்பட்டுப் போன சர்வாதிகாரியின் இடத்தில், தனக்கு விசுவாசமான வேறொரு கும்பலைப் பதவியில் அமர்த்தும் வாய்ப்பு இருந்தால், தனக்கு மிகவும் விசுவாசமாக இருந்தவர் என்றுகூடப் பார்க்காமல் அமெரிக்கா அச்சர்வாதிகாரிகளைப் பதவியில் இருந்து அப்புறப்படுத்திவிடும் என்பதற்கு எகிப்தின் முபாரக்கையும், சிலியின் பினோசெட்டையும் எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அ@தபொழுதில், ஈராக்கின் சதாம் உசேனைத் தூக்கிலிட்டும், பாகிஸ்தானின் ஜியா உல் ஹக்கைக் குண்டு வைத்தும் கொலை செய்தது, அமெரிக்கா. அந்த விளையாட்டின் வரிசையில் இப்பொழுது கடாஃபியும் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

ஜூனியர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்த பொழுது உருவாக்கப்பட்ட புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டத்தின்படி, வளைகுடாப் பிராந்தியத்தின் பாதுகாப்பில் நிரந்தரமான பாத்திரத்தை ஆற்ற வேண்டும் என அமெரிக்கா கருதுகிறது. லிபியா, சிரியா, ஈரான் ஆகிய நாடுகளை அடக்கி வைக்க வேண்டும் என்றவொரு ஆலோசனையையும் இத்திட்டம் முன் வைத்துள்ளது. முன்பு ஈராக் மீதும் தற்பொழுது லிபியா மீதும் தொடுக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்புப் போர்களை இந்தப் பின்னணியில் இருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

எகிப்திலும், துனிசியாவிலும் மாபெரும் மக்கள் எழுச்சி எழுவதற்கு, அந்நாடுகளில் நடைபெற்று வந்த பாசிச சர்வாதிகார ஆட்சி மட்டுமின்றி, தனியார்மயம்  தாராளமயம் உருவாக்கிய வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளும் பின்புலமாக இருந்தன. ஆனால், லிபியாவிலோ கடாஃபியால் ஆட்சி அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட செனுஸி இனக்குழுவைச் சேர்ந்தவர்களும், 1969இல் கடாஃபியோடு இணைந்து அதிரடிப் புரட்சியை நடத்திய அரபு தேசியவாத குழுவைச் சேர்ந்தவர்களும், கடாஃபியால் 1996 இல் கொடூரமாகக் கொல்லப்பட்ட இசுலாமியவாதிகளின் வழிவந்தவர்களும், அவர்களின் உறவினர்களும்தான் தற்பொழுது கலகத்தில் இறங்கியுள்ளனர். இக்கலகத்தை வர்ஃபல்லா இனக்குழு தலைவர்களும் ஆதரிக்கின்றனர்.

 

கடாஃபியைப் பதவியில் இருந்து தூக்கியெறிந்துவிட்டு அதிகாரத்தைக் கைப்பற்றவேண்டும் என்ற நோக்கத்தைத் தவிர, வேறெந்த எந்த அரசியல் நோக்கமும் இக்கலகக்காரர்களுக்குக் கிடையாது. கடாஃபியைவிட, செனுஸி இனக்குழுவைச் சேர்ந்த தலைவர்கள் மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்பது ஏற்கெனவே வரலாற்றுரீதியாக நிரூபணமாகியிருப்பதால்தான், அக்கலகத்திற்கு அமெரிக்கா ஆதரவு அளிப்பதோடு, இந்த அதிகாரப் போட்டியை ஜனநாயகப் போராட்டமாகவும் திரித்துச் சித்தரிக்கிறது.

 

கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்தில் இந்த அதிகாரப் போட்டி தொடங்கியவுடனேயே, கலகக்காரர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதற்கு ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த உளவுப் பிரிவு அதிகாரிகள் லிபியாவின் கிழக்குப் பகுதியில் நுழைந்தனர்.

கலகக்காரர்களுக்குத் தேவைப்படும் ஆயுதங்கள் லிபியாவின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள எகிப்தின் வழியாகக் கடத்தப்பட்டன. கடாஃபியின் தலைமையில் அமைந்துள்ள அரசைப் பலவீனமாக்கும் வண்ணம், ஏகாதிபத்திய வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த லிபியாவின் சேமிப்புகள் முடக்கப்பட்டன. அதிபர் கடாஃபியும், அவரது உறவினர்களும் வெளி

நாடுகளுக்குச் செல்வது தடை செய்யப்பட்டதோடு, அந்நாட்டிற்கு ஆயுதம் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டது. மேலும், சொந்த நாட்டு மக்களையே கொலை செய்கிறார் என்ற காரணத்தை முன்வைத்து, கடாஃபியை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கும் தீர்மானத்தையும் ஐ.நா.வின் மூலம் ஏகாதிபத்தியங்கள்நிறைவேற்றின.

 

இவ்வளவுக்குப் பிறகும், கலகக்காரர்களால் லிபியாவின் கச்சா எண்ணெய் வளம் நிறைந்த பென்காசி நகர் அமைந்துள்ள பகுதியைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியவில்லை. இதனையடுத்துதான், லிபியாவின் வான்வழியில் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கும் முடிவை ஏகாதிபத்தியங்கள் எடுத்தன. அம்முடிவை அவர்களே முன்வைத்தால் தமது குட்டு அம்பலமாகிவிடும் என்பதற்காக, அரபுக் கூட்டமைப்பின் வாயிலாக அத்தீர்மானத்தை ஐ.நா.மன்றத்தில் முன்மொழியச் செய்தனர். அத்தீர்மானத்திலுள்ள "இம்முடிவை எந்த வழியிலும் நடைமுறைப்படுத்துவதற்கு உறுப்பு நாடுகளுக்கு அதிகாரம் உண்டு' என்ற வாசகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அத்தீர்மானம் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட மறுநாளே லிபியா மீது அமெரிக்காவும் நேடோ கூட்டணி நாடுகளும் இணைந்து வான்வழி மற்றும் கடல் வழித் தாக்குதல்களைத் தொடுத்தன.

 

 

ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்த ராஜபக்சே கும்பலோடு தோளோடு தோள் உரசிக் கொண்டு நிற்கும் மேற்குலக ஏகாதிபத்திய அரசுகள், லிபியா மீது பொருளாதாரத் தடையை விதிக்கின்றன. சொந்த நாட்டு மக்களை நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கும் கடாஃபியைக் குற்றவாளியாக அறிவித்து, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கும் ஐ.நா. மன்றமும், அதன் உறுப்பு நாடுகளும், ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்காவும் நேடோ கூட்டணி நாடுகளும் நிராயுதபாணியான அப்பாவி மக்களைப் பத்தாயிரக்கணக்கில் கொன்று குவித்து வருவதை வேடிக்கை பார்த்து வருகின்றன. இசுரேல் காசா முனையில் நடத்திய போர்க் குற்றங்கள் பற்றிய உண்மை அறிக்கையை ஐ.நா. மன்றத்தில் முன்வைக்கப்படுவதைத் தனது ரத்து அதிகாரம் மூலம் தடுத்து நிறுத்திய அமெரிக்கா, கடாஃபியின் கொலைக் குற்றங்கள் பற்றி முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

 

கடாஃபி கலகக்காரர்கள் மீது நடத்தும் தாக்குதலைப் போர்க் குற்றமாகக் குற்றஞ்சுமத்தும் அமெரிக்கா, பஹ்ரைனில் மன்னராட்சிக்கு எதிராகப் போராடுபவர்களை ஒடுக்க சவுதி அரேபியாவின் இராணுவமும் ஐக்கிய அரபு நாடுகளின் போலீசு பட்டாளமும் இறங்கியிருப்பதைக் கண்டு கொள்ளவில்லை. பஹ்ரைனில் மன்னராட்சிக்கு எதிராகப் போராடி வரும் எதிர்க்கட்சித் தலைமையான இசுலாமிய சமூகக் கட்சி மீது அமெரிக்காவிற்கு நம்பிக்கையில்லை. அக்கட்சி ஆட்சியைப் பிடித்தால் பஹ்ரைனில் உள்ள தனது கப்பற்படைத் தளத்தைக் காலி செய்யச் சொல்லி உத்தரவிடலாம் என சந்தேகிக்கிறது, அமெரிக்கா. பஹ்ரைனில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் அதன் எதிரொலி மன்னராட்சி நடக்கும் சவுதி அரேபியாவிலும் கேட்கும் என்றும் அஞ்சுகிறது. அதனால்தான், பஹ்ரைனில் மன்னராட்சியைத் தாங்கிப் பிடித்து வருகிறது, அமெரிக்கா. மேலும், பஹ்ரைனில் ஜனநாயக உரிமைகளுக்காக நடக்கும் போராட்டத்தை ஷியா  சன்னி மோதலாக மாற்றும் சதியிலும் ஆளும் கும்பல் இறங்கியிருக்கிறது.

 

லிபியா மீதான போர், ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றியெல்லாம் கூப்பாடு போட்டு வரும் அமெரிக்காவின் கபடத்தனத்தையும், இரட்டை வேடத்தையும் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்திவிட்டது. குறிப்பாக, கருப்பர் இனத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பின், அதன் மேலாதிக்கக் கொள்கையே தலைகீழாக மாறிவிடும் எனக் கூறி, அவருக்கு ஒளிவட்டம் போட்டுக் காட்டப்பட்டது. ஆனால், ஒபாமா ""புஸ்ஸ்ஸாகிவிட்டார்'' என்பதைத்தான் லிபியப் போரும், ஆப்கானிலும், ஈராக்கிலும் நடந்து வரும் படுகொலைகளும் பச்சையாக எடுத்துக்காட்டுகின்றன. அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடியையும், உள்நாட்டில் சரிந்து விழுந்துவிட்ட தனது செல்வாக்கையும் இத்தகைய போர்வெறி பிடித்த மேலாதிக்க நடவடிக்கைகளின் மூலம்தான் ஈடுகட்டப்பார்க்கிறார், ஒபாமா.

 

லிபியா மீதான ஐ.நா.வின் தீர்மானம் பாதுகாப்பு கவுன்சிலில் ஓட்டுக்குவிடப்பட்டபொழுது, ரசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் ஓட்டுப் போடாமல் ஒதுங்கிக் கொண்டன. இதனைக்காட்டியே, இந்தப் போரை தாங்கள் எதிர்ப்பதாக இந்நாடுகள் கூறிவருகின்றன. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கும் ரசியாவும், சீனாவும் தமது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி இத்தீர்மானத்தை முறியடிக்காமல், ஓட்டுப் போடாமல் ஒதுங்கிக் கொண்டது அந்நாடுகளின் சந்தர்ப்பவாதப் போக்கைத்தான் காட்டுகின்றன. இப்போருக்கு அந்நாடுகள் தெரிவிக்கும் எதிர்ப்பு முனை மழுங்கிப்போன ஒன்றாகும்.

 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக உள்ள இந்தியா, ஓட்டுப் போடாமல் ஒதுங்கிக் கொண்டாலும், அதன் அமெரிக்க அடிவருடித்தனத்தை மறைத்துவிட முடியாது. அமெரிக்கா, ஆப்கானில் நடத்தி வரும் ஆக்கிரமிப்புப் போரின் இரத்தக்கறைகள் இந்தியாவின் கைகளிலும் படிந்துள்ளன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

 

சாவேஸ், பிடல் காஸ்ட்ரோ உள்ளிட்ட சில தென் அமெரிக்க நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்கும் அதே சமயம், கடாஃபியை ஆதரிக்க வேண்டும் எனக் கூறி வருகின்றனர். கடாஃபியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது சந்தர்ப்பவாதமானது என்பது ஏற்கெனவே நிரூபணமாகிவிட்டது. கடாஃபி இத்தருணத்தில் மேற்குலக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கிறார் என்பதற்காக அவரது சர்வாதிகார ஆட்சிக்கு அரணாக நிற்க முடியாது. தங்க ஊசி என்பதற்காகக் கண்ணைக் குத்திக் கொள்ளவா முடியும்? அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போரையும், கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியையும் எதிர்த்துப் போராடுவது மட்டுமே முரணற்ற ஜனநாயகமாக இருக்க முடியும்.

 

திப்பு