Language Selection

புதிய ஜனநாயகம் 2011

"ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை! தனியார்மயமே இதன் ஆணிவேர்! இதனைத் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்று சேர்! கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! ஊழல் சொத்துக்களைப் பறித்தெடுத்து மக்களுக்குப் பங்கிடுவோம்!', "இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்! ஓட்டுப்போடாதே! புரட்சி செய்!' என்ற முழக்கத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து கடந்த ஜனவரியிலிருந்து கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகச் சூறாவளிப் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. கடந்த பிப்ரவரி இறுதியிலிருந்து மார்ச் இறுதி வரையிலான ஒரு மாத காலத்தில் நாளொன்றுக்கு ஒரு பொதுக்கூட்டம் என்ற அளவில் தமிழகமெங்கும் 30க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களைத் தொடர்ச்சியாக இவ்வமைப்புகள் நடத்தியுள்ளன.

 

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை அம்பலமாகியுள்ள நிலையில், தனியார்மயத்தையும் கார்ப்பரேட்முதலாளி வர்க்கத்தையும் ஒழிக்காமல் ஊழலை ஒழிப்பதாகப் பேசுவது பித்தலாட்டம் என்பதையும், எந்த ஊழல் கூட்டணி நம்மைக் கொள்ளையிடுவது என்பதற்கு நாமே லைசென்சு கொடுப்பதுதான் தேர்தல் என்பதை உணர்த்தியும்; யார் எந்தத் துறையில் அமைச்சராக்கப்படவேண்டும் என்பதை கார்ப்பரேட் முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார் என்றால், இந்திய நாடாளுமன்ற  சட்டமன்றத்தின் இயக்கத்தை கார்ப்பரேட் முதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்றால், எதற்காக நாம் வாக்களிக்க வேண்டும், தேர்தல்களைப் புறக்கணித்து இத்தகைய அரசியலமைப்பு முறையை வீழ்த்தி நமக்கான அரசமைக்க நாம் வீதியில் இறங்கிப்போராட வேண்டும் என்று அறைகூவியும் இப்பிரச்சாரஇயக்கம் வீச்சாக நடைபெற்றது.

 

ஓட்டுக்கட்சிகளைப் போல எந்தவொரு தொழில் அதிபரையோ, கருப்புப் பண புரவலரையோ சார்ந்திராமல், உழைக்கும் மக்கள் அளித்த நன்கொடைகளைக் கொண்டே இப்புரட்சிகர அமைப்புகள் இப்பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளன. கார்ப்பரேட் ஊழல் கொள்ளைக்கு எதிரான தமது வெறுப்பையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்திய உழைக்கும் மக்கள், இப்பிரச்சார இயக்கத்தை உற்சாகத்துடன் வரவேற்றுத் தாராள நன்கொடைகள் அளித்து ஆதரித்ததால், திட்டமிட்டிருந்த தெருமுனைக் கூட்டங்கள் பல பகுதிகளில் பொதுக்கூட்டங்களாக மாற்றப்பட்டன. ஓட்டுக்கட்சிகளை விஞ்சும் அளவுக்கு இப்புரட்சிகர அமைப்புகளின் கூட்டங்களில் உழைக்கும் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். பல இடங்களில் ம.க.இ.க. மையக் கலைக் குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி தொடங்கியதும் சாலையின் இருமருங்கிலும் கூட்டம் அலைமோதியது. எந்தவொரு ஓட்டுக்கட்சியின் பிரபல மேடைப் பேச்சாளரும் இந்த அளவுக்கு ஆதாரங்களையும் புள்ளிவிவரங்களையும் தொகுத்துப் பேசியதில்லை என்று மக்கள் பாராட்டினர். இப்பொதுக்கூட்டம் குறித்து குறிப்பெடுக்க வந்த உளவுத்துறை போலீசே தன்னிலை மறந்து மக்களோடு சேர்ந்து கைதட்டி வரவேற்கும் அளவுக்கு பேச்சாளர்களின் சிறப்புரை அமைந்திருந்தது.

 

பல பகுதிகளில் பேருந்துகளில் பிரச்சாரம் செய்தபோது ஊழலை ஒழிக்கவே முடியாது என்று விதண்டாவாதம் செய்தவர்களை பொதுமக்களே கேள்வி கேட்டு வாயடைத்தனர். சேலத்தில் தோழர்கள் பிரச்சாரம் செய்தபோது ஒரு கீழ்நிலை போலீசுக்காரர், என்னால் உங்களுக்கு நன்கொடை அளிக்க இயலவில்லை, என்னிடமுள்ள துப்பாக்கியை வேண்டுமானால் எடுத்துக் கொண்டு ஊழல் கொள்ளையர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்; நீங்கள்தான் உண்மையான நக்சல்பாரிகள் என்று இப்பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை உணர்ந்து ஊக்கப்படுத்தினார்.

 

திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி, சட்டக் கல்லூரி வாயில்களில் 2.3.2011 அன்று காலை முதல் மாலை வரை கார்ப்பரேட் கொள்ளைக்கும் தனியார்மய தாராளமயத்துக்கும் எதிராகக் கல்லூரி மாணவர்களிடம் கையெழுத்து இயக்கத்தை பு.மா.இ.மு. நடத்தியது. பெரியதட்டியில் ஊழல் கொள்ளைக்கு எதிரான தங்களது கருத்துக்களைச் சுதந்திரமாகப் பதிவு செய்வதாக அமைந்த இந்த இயக்கம், மாணவர்களிடம் விழிப்புணர்வூட்டும் சிறப்பானதொரு பிரச்சாரமாக அமைந்தது.

 

கொள்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்ற ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகளின் பண்பாட்டுக்கு எதிரான கலகமாக, போராட்டமே வாழ்க்கையாகக் கொண்டுள்ள பு.ஜ.தொ.மு.வின் முன்னணித் தோழரான அருள்தாசின் திருமணம், திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நடந்த பொதுக்கூட்ட மேடையிலேயே நடந்தது. சாதிமதச் சடங்குகளையும் பெண்ணடிமைத்தனத்தின் அடையாளமான தாலியையும் புறக்கணித்து பொதுமக்களின் முன்பாகப் பொதுக்கூட்ட மேடையில் நடந்த தோழர் அருள்தாஸ் கவிதாவின் இப்புரட்சிகரத் திருமணம், கம்யூனிஸ்டுகளுக்கு வாழ்க்கை ஒரு திறந்த புத்தகமாக இருப்பதை நிரூபித்துக் காட்டியது.

 

கடந்த மார்ச் மாதத்தில் கோவில்பட்டி, விழுப்புரம், திருவாரூர், ஓமலூர், உடுமலை, பள்ளிப்பாளையம், மதுராந்தகம், விழுப்புரம்காணை, பென்னாகரம், செங்குன்றம், சென்னைடிரஸ்ட்புரம், மதுரை, பரமக்குடி, பட்டுக்கோட்டை, சீர்காழி, நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றன. ம.க.இ.க. மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன், பு.ஜ.தொ.மு. மாநில அமைப்புச் செயலர் தோழர் வெற்றிவேல் செழியன், கோவை ம.க. இ.க. செயலர் தோழர் மணிவண்ணன், சிவகங்கை பு.ஜ.தொ.மு. தோழர் நாகராசன், விருத்தாசம் வி.வி.மு. தோழர் ஜெயகாந்த் சிங், ம.க.இ.க. தோழர் துரை.சண்முகம், கோவை மண்டல பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத் தலைவர் தோழர் விளவை. ராமசாமி, கம்பம் வி.வி.மு. தோழர் மோகன், சென்னை பு.மா.இ.மு. தோழர் கணேசன், மதுரை ம.உ.பா.மையத்தின் இணைச்செயலரும் வழக்குரைஞருமான தோழர் வாஞ்சிநாதன், பெங்களூரு உயர்நீதி மன்ற வழக்குரைஞர் தோழர் பாலன் ஆகியோர் இப்பொதுக்கூட்டங்களில் சிறப்புரையாற்றியுள்ளனர்.

 

கோவை மற்றும் சில இடங்களில் பொதுக்கூட்டம் நடத்த போலீசு அனுமதி மறுத்தது. இன்னும் சில இடங்களில் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை விதித்தது. பொதுக்கூட்டத்தை அறிவித்துச் சுவரொட்டி ஒட்டவும் தடை விதித்தது. கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான சுவரெழுத்துக்கள் அழிக்கப்பட்டன. இத்தனை இடர்ப்பாடுகளுக்கு மத்தியிலும் இவ்வமைப்புகளின் தோழர்கள் துவளாமல் இப்பிரச்சார இயக்கத்தை வீச்சாக நடத்தியுள்ளனர்.

 

தேர்தல் பாதையைப் புறக்கணித்து, கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களைப் பறித்தெடுப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற போராட்ட விதை இப்புரட்சிகர அமைப்புகளால் உழைக்கும் மக்களின் நெஞ்சங்களில் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளது. அது வளர்ந்து, தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாக்கத்துக்கு எதிரான உழைக்கும் மக்களின் புரட்சிப் புயலாகச் சுழனறடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

 

பு.ஜ.செய்தியாளர்கள்