Language Selection

புதிய ஜனநாயகம் 2011

புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்.

 

காங்கிரசுடன் தொகுதிப் பங்கீடு இழுபறி நீடித்த போது, கூட்டணியிலிருந்தும் மைய அரசின் அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக அறிவித்த தி.மு.க.வின் வீராவேசம், கடைசியில் குடும்ப நலனைக் காப்பாற்றிக் கொள்வதற்கான கீழ்த்தரமானஉத்தியாகிப் போன கோமாளிக் கூத்து உயர்வானதா? அல்லது, இந்தக் கோமாளிக் கூத்துக்கு பக்கமேளம் வாசித்த வீரமணி, திருமா, ஆகியோர் ஆடிய குத்தாட்டம் மேலானதா? துணை நகரங்கள் அமைப்பது, தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் கொள்ளை, சில்லறை வணிகத்தில் ஏகபோக நிறுவனங்களின் நுழைவு, அரசின் டாஸ்மாக் சாராயக் கடை முதலானவற்றுக்கு எதிராகச் சவடால் அடித்து வந்த பச்சோந்தி ராமதாசு, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தி.மு.க. அரசுக்கு முழுமையாக ஆதரவு தருவோம் என்று இப்போது ஆடும் பிழைப்புவாதக் கூத்து மேலானதா? தன்னிச்சையாக தொகுதிகளை அறிவித்துக் கூட்டணி கட்சிகளுக்குத் தண்ணி காட்டிய ஜெயலலிதா நடத்தி ஆவேசக் கூத்துக்கு முதலிடமா? அல்லது பாசிச ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டிக் கொண்ட விஜயகாந்த் மற்றும் இடது  வலது போலி கம்யூனிஸ்டுகள் வீறாப்புகாட்டி நடத்திய கோமாளிக் கூத்து சிறந்ததா? அவமானப்படுத்திவிட்டதாகக் கூறித் தேர்தலைப் புறக்கணித்து காயடிக்கப்பட்ட பன்றியைப் போல கத்திக் கொண்டிருக்கும் வைகோவின் கூத்து உயர்ந்ததா? என்று புரியாமல் தமிழக மக்கள் தடுமாறுகிறார்கள்.

 

பிழைப்புவாத பொறுக்கி அரசியல் வியாபாரத்தில் மான அவமான உணர்ச்சிகளுக்கும் இடம் கிடையாது. கடந்த சட்டமன்றத்தில் கருணாநிதியை அடிக்கப் பாய்ந்த அ.தி.மு.க.வின் ரவுடியான சேகர் பாபு, இப்போது கருணாநிதியின் உடன்பிறப்பாக மாறி தி.மு.க.வேட்பாளராகப் போட்டியிடுகிறார். கற்பு நெறி பேசி நடிகை குஷ்புவுக்கு எதிராகச் சாமியாடிய ராமதாசும் திருமாவும் இன்று அவர் தி.மு.க. பேச்சாளராகிவிட்டதால் பம்முகின்றனர். பா.ம.க. ஒருபுறமிருக்க, ஆதிக்க சாதிக் கவுண்டர்களின் கொங்குநாடு முன்னேற்றக் கழகத்துக்கு 7 இடங்களை தி.மு.க. கூட்டணி ஒதுக்கியிருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணித் தலைவி ஜெயலலிதா, நடிகர் சரத்குமாரைத் தலைவராகக் கொண்ட நாடார் சாதியினரின் புதிய கட்சிக்கு சில தொகுதிகளை ஒதுக்கியுள்ளார். இலவசக் கவர்ச்சித் திட்டங்களோடு பணபலம், சாதியபலம், குண்டர்பலம் ஆகிய முப்பெரும் ஆயுதங்களே தமிழக ஓட்டுக்கட்சிகளின் தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பவையாக மாறிவிட்டன.

 

மறுகாலனியாக்க அரசியல்  பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, நாட்டின் இறையாண்மையும் மக்களின் வாழ்வுரிமைகளும் சூறையாடப்பட்டு வரும் சூழலில், ஓட்டுச்சீட்டு ஜனநாயகம் என்பதே இந்த அரசமைப்பிற்கு ஒரு கோமாளித் தொப்பியாக மாறி வருவதைத் தமிழகத் தேர்தல் நிகழ்ச்சிப் போக்குகள் நிரூபித்துக் காட்டுகின்றன. கொள்கைகளின் இடத்தைக் கவர்ச்சி  இலவசத் திட்டங்கள் பிடித்துக் கொண்டதைப் போலவே, கட்சிகளைப் பணமுதலைகள் கைப்பற்றிக் கொண்டு விட்டனர்.

 

தயாநிதியும் ராசாவும் மைய அமைச்சர்களாக்கப்பட்டதற்கும் மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக்கப்பட்டதற்கும் காரணம் என்ன? வீரபாண்டி ஆறுமுகம் போன்ற தி.மு.க. பழம் பெருச்சாளிகள் தமது வாரிசுகளுக்கு சீட் வாங்கியிருப்பதும், காங்கிரசின் கிருஷ்ணசாமியின் மகன் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதும் குடும்பத்தோடு நாட்டுக்குச் சேவை செய்வதற்கா? இதில் புரியாத இரகசியம் ஒன்றுமில்லை. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, தி.மு.க.அமைச்சர் எ.வ.வேலுவின் சொத்தும் கரூர் பழனிச்சாமியின் சொத்தும் கோடிக்கணக்கில் அதிகரித்திருக்கிறது. தாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் என்ன என்பதில் வேட்பாளர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.

 

எந்தவொரு கட்சியின் தலைவர்களும் பிரமுகர்களும் கொள்கை இலட்சியத்துக்காக அந்தக் கட்சியில் அங்கம் வகிப்பதில்லை. அதுபோலவே எந்தவொரு கூட்டணியும் பொதுவான கொள்கை  இலட்சியத்தின் அடிப்படையில் உருவாவதுமில்லை. நாற்காலிகளைப் பகிர்ந்து கொள்வதும் கருப்புப் பணம் கைமாறுவதும்தான் கூட்டணிகள் உருவாவதற்கும், வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்குமான அடிப்படை என்பதும்; கோடீசுவரர்கள், சுயநிதிக் கல்லூரி அதிபர்கள், கந்துவட்டி மணற்கொள்ளை ரியல் எஸ் டேட் மாபியாக்கள்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதும் இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. கோடீசுவரர்கள் மட்டும்தான் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியும் என்ற இந்த நிலைமை, கட்சி என்ற அமைப்பையே இல்லாமல் செய்விட்டது. தற்போதைய ஓட்டுச்சீட்டு அரசியலுக்குக் கட்சியும் தொண்டர்களும் எந்த விதத்திலும் தேவைப்படவில்லை என்பதே உண்மை.

 

இன்றைய கார்ப்பரேட் ஜனநாயகத்தில், யாரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பது ஓட்டுக்கட்சித் தலைமைகளிடம் இல்லை. ராசாவை அமைச்சராக்க டாடா சிபாரிசு செய்த கதை நாடெங்கும் அம்பலமாகியுள்ளது. அமெரிக்காவின் விசுவாசி மன்மோகன் சிங்கைப் பிரதமராகவும், உலக வங்கி அதிகாரியாக இருந்த மான்டேக் சிங் அலுவாலியாவை நிதியமைச்சராகவும் நியமிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்த கதை வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் உத்தரவுப்படி மணிசங்கர் அய்யரை நீக்கிவிட்டு பெட்ரோலிய அமைச்சராக முரளி தியோரா அமர்த்தப்படுகிறார். அப்படியானால் ஓட்டுச்சீட்டு ஜனநாயகத்தின் உண்மைப் பொருள்தான் என்ன?

 

மக்களால் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளும்கட்சியின் அமைச்சரவை அரசின் கொள்கை முடிவுகளை வகுப்பதில்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் நலனும் விருப்பமுமே கொள்கையாக்கப்படுவதும் அதிகார வர்க்கம் இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுவதுமே இப்போதைய நிர்வாக முறையாகிவிட்டது. துறைசார் வல்லுனர்கள் என்ற பெயரில் ஏகாதிபத்திய ஆலோசனை நிறுவனங்கள் பரிந்துரை செய்வதும், நேரடியாகக் கொள்கை வகுத்துத் தருவதும், நீரா ராடியா போன்ற தரகர்களைக் கொண்டு ஒப்பந்தங்களையும் திட்டங்களையும் நிறைவேற்றிக் கொள்வதும், நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் முதலாளிகள் அங்கம் வகிப்பதுமாக நிர்வாக முறைமாறிவிட்டது. இத்தகைய குழுக்கள் பரிந்துரைத்ததன் அடிப்படையில் ஒப்பந்தம் போடப்பட்டதாகவே நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் அமைச்சர்கள் பதிலளிக்கின்றனர்.

 

அமைச்சர்கள் இத்தகைய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதற்கு மேல் ஒன்றும் செய்வதில்லை. நாடாளுமன்ற  சட்டமன்றங்களில் சில நாட்கள் கூச்சல் போடுவதும், தீர்மானங்களை அவசரமாக நிறைவேற்றுவதும்தான் நடக்கிறது. மக்கள் நலனுக்கு எதிரானதாக இருந்தாலும், இத்தகைய கொள்கை முடிவுகளில் தலையிடமுடியாது என்று நீதிமன்றங்கள் ஒதுங்கிக் கொண்டு கார்ப்பரேட் கொள்ளைஊழலுக்குச் சேவை செய்கின்றன. சட்டமன்றங்கள், நாடாளுமன்றம் மட்டுமல்ல் உள்ளூராட்சிகளில் கூட உலக வங்கி மற்றும் பன்னாட்டு ஏக போக நிறுவனங்களின் எடுபிடிகளாக உள்ள தன்னார்வ நிறுவனங்களே திட்டங்களைத் தயாரித்துக் கொடுத்துத் திணிப்பதாகவும், அவற்றின் ஆலோசனைப்படியே உள்ளாட்சிகள் இயங்குமாறும் நிர்வாக முறை மாற்றப்பட்டிருக்கின்றன.

 

போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ன என்பதை தகவல் அறியும் சட்டத்தின் மூலமாகவும் அறிய முடியாது. இவை அனைத்தும் இரகசியமாக்கப்பட்டுள்ளன. அணுசக்தி ஒப்பந்தம் போல, இது நாட்டின் வளர்ச்சிக்கானது என்று கூறி மறைக்கப்படுகின்றன. குடிமக்களுக்கோ, சட்டமன்ற நாடாளுமன்றப் பிரதிநிதிகளுக்கோ இவை தெரிய வேண்டியதில்லை என்பதுதான் அரசின் கொள்கையாக உள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதாகக் கூறப்படும் நாடாளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ, உள்ளாட்சி அமைப்புகளுக்கோ கூட இது பற்றிக் கேள்வி கேட்கவும் எவ்வித உரிமையும் இல்லை. ப.சிதம்பரம், அபிசேக் மனு சிங்வி, அருண் ஜேட்லி உள்ளிட்ட பல ஓட்டுக்கட்சி பிரமுகர்கள் பன்னாட்டு நிறுவனங்களின் சட்ட ஆலோ சகர்களாகவும், வழக்குரைஞர்களாகவும் பணியாற்றுவதோடு, இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களிலும், கான்கிரீட் வீடு கட்டும் திட்டம், மருத்துவக் காப்பீடுபோன்ற ஒப்பந்த நிறுவனங்களிலும் ஓட்டுக் கட்சி பிரமுகர்கள் பங்குதாரர்களாக இருந்தும் ஆதாயமடைவதால், அவர்கள் இத்தகைய ஒப்பந்தங்கள் பற்றி வாய்திறப்பதுமில்லை.

 

ஓட்டுரிமை என்பது ஐந்தாண்டுகளுக்கு என்ன வேண்டுமாலும் செய்து கொள்ளுமாறு அளிக்கப்படும் ஒப்பந்தப் பத்திரமாகிவிட்டது. ஒருமுறை எழுதிக்கொடுத்துவிட்டால் பின்னர் அதை மாற்றவும் முடியாது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை தட்டிக் கேட்கவோ, அவரது பிரதிநிதித்துவத்தை ரத்து செய்யவோ மக்களுக்கு உரிமையும் கிடையாது. மொத்தத்தில் தேர்தல் என்பது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சடங்காகவும், கார்ப்பரேட் நாயகமே ஜனநாயகமாகவும் மாறிவிட்டது. இவ்வளவுக்குப் பின்னரும் ஓட்டுப் போடுவதால் என்ன பயன்?

 

வாழ்விழந்த விவசாயிகளும் வேலையிழந்த தொழிலாளர்களும் பல கோடிப் பேராக உள்ள நிலையில், தமிழகத்தின் உயிராதாரமான இப்பிரச்சினைகளுக்குக் காரணம் என்ன என்பதைப் பற்றி எந்த ஓட்டுக் கட்சியும் வாய் திறப்பதில்லை. விவசாயம் நசிந்து போனதற்கும், கைத்தறி  விசைத்தறி  சிறுதொழில்களின் அழிவுக்கும், பஞ்சம் பிழைக்க மக்கள் ஊரை விட்டு ஓடும் அவலத்திற்கும் இந்தத் தேர்தலுக்கும் என்ன உறவு? மறுகாலனியாக்கத்துக்கும் விவசாயம்  சிறு தொழில்களின் அழிவுக்கும் என்ன உறவு? இவையனைத்தும் ஓட்டுக்கட்சிகளாலும் செய்தி ஊடகங்களாலும் திட்டமிட்டே இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. அரசியலற்ற அற்ப விவகாரங்களும் கிசுகிசுக்களும் வதந்திகளும் ஊகங்களுமே அரசியலாக ஊதிப் பெருக்கிக் காட்டப்படுகின்றன.

 

உள்ளூர் தொழிலுக்கும் விவசாயத்துக்குமான மின்சாரத்தை தி.மு.க. அரசு வெட்டி, தமிழகத்தை இருளில் தள்ளிய போதிலும் பன்னாட்டு நிறுவனங்களுக்குச் சலுகை விலையில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ஏரிகுளங்கள் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் அவசரச் சட்டம் போட்டு நிலமற்ற விவசாயிகள் குறுகியகால சாகுபடி செய்வதையும் ஊருணிகள், குளங்களில் உள்ளூர் மக்கள் மீன் பிடித்துவந்த பாரம்பரிய உரிமையையும் பறித்துவிட்டது. வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டம், வேளாண் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம் முதலானவற்றின் மூலம் பாரம்பரிய வேளாண் அறிவையும் தற்சார்பையும் முற்றிலுமாக அழித்து, தமிழக விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்க ஏற்பாடு செய்துள்ளது. பன்னாட்டு கம்பெனிகளின் ஆலோசனைப்படி, மரபணு மாற்றுப் பயிர்கள் கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன.

 

உலகமயமாக்கலுக்கு ஏற்ப சென்னையை நவீனகாலனியாக்கி, பன்னாட்டு நிறுவனங்களின் நலன்களைக் காத்திட உலக வங்கி தீட்டித்தந்த திட்டப்படி இரண்டாவது மாஸ்டர் பிளான் தயாரிக்கப்பட்டு, சென்னையின் மீனவர்களும் குடிசைவாழ் மக்களும் கறிவேப்பிலை போல வீசியெறியப்பட்டனர். உலகவங்கி திட்டப்படி, புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டு நகர்ப்புற சேவைகளைத் தனியார்மயமாக்கும் வேலை செயல்படுத்தப்பட்டது. பெருந்தொழில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எங்கு, எந்த நிலம் எவ்வளவு வேண்டுமோ, அவற்றை அபகரித்துக் கொடுக்கும் வேலையையும், தமிழ்நாட்டில் அனுமதி பெற்ற 70 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலம் பறிக்கும் வேலையையும் சிப்காட் மற்றும் டிட்கோ ஆகிய அரசு நிறுவனங்களே செய்கின்றன.

 

தி.மு.க.வின் மைய அமைச்சர்களின் ஊழல் கொள்ளைப் பற்றி அடுக்கடுக்காக குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. கருணாநிதி குடும்பம் தமிழகத்தைக் கொள்ளையடித்த கதையைப் பேசுகிறார். ஆனால், தமிழகத்தை இருளில் தள்ளிவிட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையற்ற மின்சாரம் வழங்கும் தி.மு.க. அரசின் அநியாயத்தை எதிர்க்கவில்லை. அரசு தொலைபேசித் துறையை முடமாக்கி டாடா, அம்பானி முதலான தனியார் தொலைபேசி முதலாளிகளைக் கொழுக்க வைத்தவர்தான் "ஸ்பெக்ட்ரம் புகழ்' ராசா என்று அவர் குற்றம் சாட்டுவதில்லை. டிரிப்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மருந்துகளின் விலையை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக்கியவர் தான் அன்புமணி என்று சாடுவதில்லை. தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எவ்வித தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருப்பதைப் பற்றி கருணாநிதி அரசின் சர்வாதிகாரப் போக்கிற்கு ஒரு சான்றாகக்கூடக் காட்டுவதில்லை. தி.மு.க. அரசை விஞ்சும் வகையில் அந்நிய முதலீட்டை அதிகரித்து தமிழகத்தை முன்னேற்றப் போவதாக அறிவிக்கிறார், ஜெயா. மறுபுறம், ஜெயலலிதாவின் ஊழல் கொள்ளையைப் பற்றிப் பட்டியல் போடும் தி.மு.க. கூட்டணி, தாமிர வருணி ஆற்றையே கோகோகோலாவிற்குத் தாரைவார்த்த மாபெரும் ஊழலைப் பற்றி வாயே திறப்பதில்லை.

 

எனில், தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கும் என்ன கொள்கை வேறுபாடு? பாதாள சாக்கடைக்கும் கூவம் ஆற்றுக்கும் இடையிலான வேறுபாடுதான் இவர்களுக்கிடையிலான வேறுபாடு.

 

மக்கள் வரிப்பணத்தை வாரியிறைத்து கார்ப்பரேட் முதலாளிகளின் தேவைக்காகப் போடப்படும் நால்வழி விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள் முதலான அடிக்கட்டுமானத்துறையின் வளர்ச்சியைக் காட்டி, இதையே தமது ஆட்சியின் சாதனையாக கருணாநிதியும் ஜெயலலிதாவும் பீற்றிக் கொள்கின்றனர். உலகவங்கி, உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைகளையும், அதனடிப்படையில் வகுக்கப்படும் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளையும் இவ்விரு கூட்டணிகளும் உடன்பட்டு வரவேற்கின்றன. தனியார்மய தாராளமயக் கொள்கைகள் தோல்வியடைந்து பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும், மீண்டும் அதேபாதையில் இக்கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தைத் தொழில் வளமிக்க முதன்மை மாநிலமாக்க முடியும் என்று அவை கூறுகின்றன. இத்தகைய மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஓரணியில் நிற்கும் இக்கூட்டணிக் கட்சிகள், இந்தக் கொள்கைக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாததுபோல் மக்களை ஏய்க்கின்றன. அற்பமான வேற்றுமைகளை ஊதிப் பெருக்கி, அதையே அரசியலாகக் காட்டி மக்களை மயங்க வைத்திருக்கின்றன. இந்த லாவணிக்குப் பக்கமேளம் வாசித்து, நம்பிக்கையிழந்து வெறுத்துப் போன மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையூட்டி, தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி செயற்கையாக ஒரு விறுவிறுப்பை உருவாக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கக் கிளம்பியுள்ளன முதலாளித்துவ ஊடகங்கள்.

 

வாக்குரிமையைப் புனிதமான ஜனநாயகக் கடமையாகச் சித்தரிக்கும் ஓட்டுப் பொறுக்கிகள், வாக்குரிமையைப் போலக் கருத்துரிமையையும் போராடும் உரிமையையும் அடிப்படை ஜனநாயக உரிமையாக ஏற்பதில்லை. மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளைப் போராடி வென்றெடுப்பதை ஓட்டுப்பொறுக்கிகள் எவருமே விரும்புவதில்லை. அது அவர்களது முதலுக்கே மோசமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள். மக்களுடைய போராட்டங்களை முடமாக்கவும் ஜனநாயக உணர்வுகளை மழுங்கடிக்கவும்தான் அவர்கள் முயற்சிக்கிறார்கள். வெள்ளைக்காரன் ஆட்சியைப் போல இன்றும்கூட பொதுக்கூட்டம்  பேரணி நடத்த போலீசிடம் போய் அனுமதி பெற வேண்டியிருக்கிறது. மக்கள் தண்ணீர் கேட்டுப் போராடினால், போராடும் மக்களைச் சந்திக்க அமைச்சர்களோ, எம்.எல்.ஏ.க்களோ, குடிநீர் வாரிய அதிகாரிகளோ வருவதில்லை. போலீசு வருகிறது. வாக்குரிமை என்பது மற்றெல்லா உரிமைகளையும் அடியறுக்கும் ஆயுதமாகவே மாற்றப்பட்டுவிட்டது.

 

இலவசங்களுக்கும் பணத்துக்கும் விலை போகும் அளவுக்கு, ஓட்டுக்கட்சிகள் தங்களது பிழைப்புவாதத்தை மக்களிடமும் பரப்பி அவர்களையும் சாக்கடையில் தள்ளிவருகின்றன. மறுகாலனியாக்கத்தால் சூறையாடப்படும் தங்கள் வாழ்க்கை பற்றியோ, தாங்கள் இழந்துவரும் அடிப்படை உரிமைகள் பற்றியோ எவ்வித விழிப்புணர்வும் இல்லாத மக்களுக்கு ஓட்டுக்கட்சிகள் அறிவிக்கும் இலவசங்கள் மட்டுமே புரியக்கூடியதாக இருக்கிறது. பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப் போகும் பண்ணையடிமைகளைப் போல, மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்கவைத்திருக்கிறார்கள், இந்த ஓட்டுப் பொறுக்கிகள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும் இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக் கொள்வதற்குச் சமமானது.

 

இத்தனைக்கும் பிறகும் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைக்காட்டி, அதிகார வர்க்கம் கடுமையாக நடந்து கொண்டால், ஓட்டுக்கட்சிகளின் அராஜகங்களையும் தேர்தல் சீரழிவுகளைத் தடுத்துவிட முடியும் என்றும், மையப் புலனாய்வுத்துறையும் நீதித் துறையும் அரசியல் தலையீடின்றிச் செயல்பட்டால் ஊழல் கொள்ளைகளைத் தடுத்துவிட முடியும் என்றும் படித்த வர்க்கத்தினர் சிலர் நம்புகின்றனர். ஆனால், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விவரங்களைக் கேட்டு ஊழலையும் கொள்ளையையும் அம்பலப்படுத்த முயற்சிப்பவர்கள் கூட அச்சுறுத்தப்படுவதும், ஏன் கொல்லப்படுவதும் நடக்கும்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் சிலர் ஊழல் பெருச்சாளிகளாக அம்பலப்பட்டுள்ளபோது, இன்றைய அரசியலமைப்பு முறையே கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கானதாக இருக்கும் போது, சாக்கடையை அகற்றாமல் கொசுக்களை ஒழித்துவிட முடியாது. இன்னும் சிலர் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று 49ஓ போடச் சொல்கின்றனர். ஓட்டுக் கட்சிகள் மீதான மக்களின் அதிருப்திக்கு இதுவொரு வடிகாலாக இருக்கிறதே தவிர, 49ஓ போடும் வாக்காளர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருந்தாலும்கூட, இது தற்போதைய தனியார்மய  தாராளமயக் கொள்ளைக்கான அரசியலமைப்பு முறையை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடல்ல.

 

இந்நிலையில், மின்னணு எந்திரத்தின் பொத்தானை அழுத்திவிட்டு மக்கள் தமது சிந்தனையையும் செயலையும் சிறைப்படுத்திக் கொண்டு இனியும் அதிகாரிகளின் ஓட்டுப் பொறுக்கிகளின் தயவிற்காகக் காத்துக் கிடக்கத்தான் வேண்டுமா? இதற்கு மாறாக, மக்களே தமது சொந்த அரசமைப்பை, ஒரு புதிய உண்மையான மக்கள் ஜனநாயக அரசமைப்பை உருவாக்கிக் கொள்ள முடியாதா? முடியும்; இது சாத்தியமானதுதான் என்பதை ஏற்கெனவே பல நாடுகளின் அனுபவங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

 

ஒவ்வொரு கிராம  வட்டார அளவிலும் மக்கள் குழுக்கள் நிறுவப்பட்டு, அக்கிராம  வட்டார நிர்வாகிகளைத் தேர்வு செய்வதும், அவர்களே நீதிநிர்வாகம், காவல் பணிகளை மேற்கொள்வதும், அதேபோல நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள்  தொழிலகங்கள் அடிப்படையில் மக்கள் மன்றங்களையும் நிர்வாக அமைப்புகளையும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமானதுதான்.

 

இவற்றைத்தான் மக்கள் சர்வாதிகார மன்றங்கள், உண்மையான ஜனநாயக அமைப்புகள் என்று கருத முடியும். இவற்றின் மூலம் உள்ளூர் அளவிலும் இவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட மாநில, மைய மன்றங்களும் நிர்வாக அமைப்புகளும் நிறுவிக் கொள்வதும் சாத்தியமானதுதான்.

 

தேர்தல்களைப் புறக்கணித்துவிட்டு வேறு என்னதான் செய்வது? ஒரு ஆட்சியும் அரசமைப்பும் இல்லாமல் நிர்வாகம் எப்படித்தான் நடக்கும் என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். வெறுமனே விரக்தியில் தேர்தலைப் புறக்கணிப்பது அல்ல் தற்போதைய ஆட்சி, அரசியலமைப்பு, நிர்வாக முறை அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிட்டுத்தான் மக்கள் சர்வாதிகார அரசமைப்புகளை நிறுவ முடியும்.

 

இது ஒரு மாபெரும் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் மூலமாகத்தான் சாத்தியமாகும். இத்தகைய மக்கள் சர்வாதிகார அரசமைப்பை நாளையே நிறுவிவிட முடியாது என்பது உண்மைதான். இருப்பினும், அதற்கான கருத்துருவாக்கம் முதற்பணி என்ற முறையில்தான் தேர்தலைப் புறக்கணிக்கும் இயக்கத்தின் ஊடாக மக்களை அணிதிரட்ட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில் தான் "போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்! புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!', "ஓட்டுப் போடாதே! புரட்சி செய்!' என்ற அறிவியல்பூர்வமான அரசியல் முழக்கமும் இயக்கமும் இன்றைய அவசியமாகியுள்ளது. கார்ப்பரேட் கொள்ளையர்களால் இழிந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டு, ஓட்டுப் பொறுக்கிகளின் இலவசத் திட்டங்களுக்குக் கையேந்தும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மக்கள், அரசியல் அறிவைப் பெறுவதற்கும், மக்கள் ஜனநாயக அரசமைப்பு முறை பற்றிய புரிதலைப் பெறுவதற்கும் புரட்சியாளர்கள் இன்னும் கடுமையாகச் செயல்பட வேண்டியிருக்கிறது.

 

பாலன்