எவ்வாறு ஈராக்கை எண்ணெய்க்காக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமிப்பு செய்தனவோ, அதேபோன்று தனது கைப்பாவை அரசை நிறுவி எண்ணெய் வளத்தைச் சூறையாடும் நோக்கத்தோடு லிபியாவில் ஏகாதிபத்திய வல்லரசுகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. லிபியாவில் கடாஃபியின் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து போராட்டங்கள் நடந்துவரும் சூழலில், கடாபியின் இராணுவத் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பது, மனித உரிமை  ஜனநாயகத்தைக் காப்பது என்ற பெயரில் ஐ.நா.பாதுகாப்பு சபையின் அனுமதியுடன் இத்தாக்குதல்களை நடத்தி வருவதன் மூலம், ஏகாதிபத்திய வல்லரசுகள் வெளிப்படையாகப் போர்க்குற்றங்களைச் செய்து வருகின்றன. ஆக்கிரமிப்புக்குத் துணைநிற்கும் ஐ.நா. மன்றம் ஏகாதிபத்திய வல்லரசுகளின் கைப்பாவை மன்றம் என்பதும், ஜனநாயக வேடம் போட்டுத் திரியும் அமெரிக்க அதிபர் ஒபாமா, மனிதக்கறி தின்னும் மிருகம் என்பதும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

 

உலக அமைதிக்கும் ஏழை நாடுகளின் இறையாண்மைக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ள உலகப் பொது எதிரி அமெரிக்காவுக்கு எதிராகவும், லிபியா மீதான ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு எதிராகவும் உலகெங்கும் நடந்து வரும் போராட்டங்களின் ஓரங்கமாக, தமிழகமெங்கும் ம.க.இ.க் வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தாங்கள் செயல்படும் பகுதிகளில் பிரச்சாரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

 

"அமெரிக்க ஏகாதிபத்திய நாயே, லிபியாவை விட்டு வெளியேறு!' என்ற முழக்கத்துடன் திருச்சியில் 25.3.2011 அன்று காலை 11 மணியளவில் ரயில் நிலையச் சந்திப்பு அருகிலும், தஞ்சையில் 25.3.2011 அன்று மாலை 5 மணியளவில் ரயில் நிலையச் சந்திப்பு அருகிலும், ஓசூரில் 26.3.2011 அன்று மாலை ராம்நகரிலும், 28.3.2011 அன்று, பள்ளிப்பாளையத்திலும், கோவை செஞ்சிலுவைச் சங்க கட்டிடம் அருகிலும் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகத்தை மக்களிடம் திரைகிழித்துக் காட்டி, போராட அறைகூவுவதாக அமைந்தன. தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருந்த போதிலும், தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளைக் காட்டி போலீசு அனுமதிமறுத்துள்ள நிலையில், இப்புரட்சிகர அமைப்புகள்சுவரொட்டிகள் மூலம் பிரச்சாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

பு.ஜ. செய்தியாளர்கள்