06062023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் தமிழினவாதிகளின் பிழைப்புவாதமும்

தமிழ் விரோத  தமிழின விரோத பார்ப்பன  பாசிச ஜெயலலிதாவுக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் தேடித்தரும் திருப்பணியை மேற்கொண்டு, அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கக் கோரி கிளம்பியிருக்கிறார்கள், சீமான் முதலான சில ஈழ ஆதரவாளர்கள். அ.தி.மு.க.வுக்கு இளைஞர் அணி, மகளிர் அணி இருப்பதைப்போல, ஈழ ஆதரவு அணியாக சீமானின் நாம் தமிழர் இயக்கம் மாறிவிட்டது. ஓட்டுக்கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்ட இலட்சிய இயக்கங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்ளும் இத்தகையோரின் சந்தர்ப்பவாதமும் பிழைப்புவாதமும் சந்தி சிரித்து, இப்போது ஒரு பிரிவு தமிழினவாதிகளாலேயே சீமான் விமர்சிக்கப்படுகிறார்.

 

பார்ப்பன  பாசிசத்தைச் சித்தாந்தமாகக் கொண்டுள்ள அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா, தொடக்கத்திலிருந்தே ஈழ விடுதலைப் போரை எதிர்த்தும் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்கியும் வந்தவர் என்பது நாடறிந்த உண்மை. அத்தகைய பார்ப்பன  பாசிசக் கும்பலுக்கு ஆதரவு தெரிவித்து ஓட்டுப் பொறுக்கக் கிளம்பியுள்ளார், சீமான். "எங்களது நோக்கம் அடுத்து யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதல்ல் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான். காங்கிரசும், தி.மு.க.வும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் எங்கள் நிலை. ஈழத்தமிழர் விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனைத் தூக்கில் போடச் சொன்ன ஜெயலலிதாவை நான் ஆதரிக்கவில்லை. ஈழத்தில் தமிழினத்தை அழிக்கக் காரணமாக இருந்த காங்கிரசுக் கட்சிக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதே என் நிலைப்பாடு. அதற்காக நான் யாரையும் ஆதரிப்பேன்' என்கிறார், சீமான்.

 

"அ.தி.மு.க.வும் அதன் கூட்டணியும் போட்டியிடுகிற அத்தனை தொகுதிகளிலும் வெற்றிக்குப் பாடுபட்டால்தான் நாம் ஆதரிப்பதாக அர்த்தம். ஆனால் நாங்கள் அப்படிச் செய்யவில்லை. விடுதலைச் சிறுத்தைகளும் அ.தி.மு.க.வும் எதிர்த்து நின்றால், நாங்கள் விடுதலைச் சிறுத்தைகளுக்குத்தான் ஓட்டுக் கேட்போம். யாருக்குஓட்டுப்போடுங்கள் என்று குடுகுடுப்பை அடிக்க முடியாது. தனித்து நிற்பது யானைகளின் காலடியில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது. தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று சொல்வது தற்கொலைக்குச் சமமான கோழைத்தனம். கிடைக்கின்ற ஆயுதத்தைக் கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம்' என்றெல்லாம் கொள்கை விளக்கங்களை அளித்து தமிழர்களைப் புல்லரிக்க வைக்கிறார், சீமான்.

 

"இரட்டை இலைக்கு சீமான் வாக்கு கேட்கலாமா என்று கேட்பவரிடத்தில் சொல்லுங்கள்; இந்தியத் திருநாட்டின் விடுதலைக்குப் போராடிய சுபாஷ் சந்திரபோஸ் உலகக் கொடுங்கோலனாக இருந்த இட்லரிடத்தில் ராணுவ உதவி கேட்டார். போஸ், இட்லரிடத்தில் ராணுவ உதவி கேட்கலாமா என்று யாரும் கேட்கவேஇல்லை. இந்திய அமைதிப்படை தமிழர்களை வேட்டையாடியபோது, அவர்களை எதிர்கொள்ள எதிரி பிரேமதாசாவுடன் பிரபாகரன் கைகோர்க்கவில்லையா, அது போலத்தான் எங்களது அ.தி.மு.க. ஆதரவு நிலையும்' என்று தனது பச்சையான பிழைப்புவாதத்துக்குச் சித்தாந்த விளக்கமளித்துள்ளார், சீமான்.

 

சீமான் மட்டுமல்ல,  இதர  தமிழினவா திகளும் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இதே நிலைப்பாட்டைத் தான் கொண்டுள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பார்ப்பன  பாசிச ஜெயலலிதாவுடன் கூட்டணி கட்டுவதற்கான உந்து பலகையாக "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி ஏய்த்த வைகோ, நெடுமாறன், ராமதாசு, தா.பாண்டியன் வகையறாக்கள், பின்னர் தேர்தலில் கூட்டணி கட்டிக் கொண்டு ஜெயலலிதாவுக்குக் காவடி தூக்கினர். இத்தகைய ஓட்டுக்கட்சி சந்தர்ப்பவாத அரசியலுக்கு அப்பாற்பட்ட கொள்கை பூர்வ இயக்கமாகக் காட்டிக் கொள்ளும் சில தமிழினக் குழுக்களும் காங்கிரசையும் தி.மு.க. வையும் தேர்தலில் வீழ்த்துவதே முதன்மைப் பணி என்று கூறிக் கொண்டு   பிழைப்புவாதத்தில்

 

தேர்தலில் காங்கிரசை வீழ்த்த பாசிச மூழ்கி பார்ப்பன  பாசிச ஜெயலலிதாவை வெட்கமின்றி   ஆதரித்து ஓட்டுப் பொறுக்கின.

 

இருப்பினும், இந்த நிலைப்பாட்டை மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்துடன் நியாயப்படுத்தினர், மணியரசன் போன்ற சில தமிழினவாதிகள். "நாம் யாருக்கும் வாக்களிக்கச் செல்லவில்லை.  வாக்களிக்க விரும்புவோர் காங்கிரசுக்குப் போடாதீர் என்று வேண்டுகிறோம்' என்று  அதாவது, அ.தி.மு.க. கூட்டணிக்கு வா க்  க ளி யுங் கள்  என்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமேதாவித்தனமாகக் கோரினார், தமிழ்த்தேசப் பொதுவுடமைக்கட்சியின் பொதுச் செயலாளரான பெ.மணியரசன். "கருப்பனைக் கட்டிவைத்து அடித்தால்,வேலன் வேலியை முறித்துக் கொண்டு ஓடுவான்' என்ற பழமொழியைக் கூறி, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசை வீழ்த்தினால், அத்வானியும் ஜெயலலிதாவும்தமக்கும் இதுபோல் நேரிடும் என்று அஞ்சி ஈழ விடுதலையை ஆதரிப்பார்கள் என்று தனது பிழைப்புவாதத்துக்கு அப்போது விளக்கமளித்தார்.

 

ஆனால் இதே மணியரசன், இப்போது யோக்கிய சிகாமணியைப் போல சீமான் முதலான தமிழினப் பிழைப்புவாதிகளை விமர்சிக்கிறார். "காங்கிரசையும் தி.மு.க.வையும் எதிர்ப்பதற்கு செயலலிதாவுடன் குறைந்த அளவு பொதுத் திட்டம் ஒன்றை வகுத்து உடன்பாடு செய்து கொள்ள இந்த ஈழ ஆதரவுத் தோழர்களால் முடியுமா? அந்த உடன்பாட்டை ஊடகங்களில் வெளியிட முடியுமா?' என்று ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நிற்கும் சீமான் முதலான ஈழ ஆதரவாளர் களைப்பார்த்துக் கேட்கிறார்.

 

"தமிழீழ ஆதரவாளர்களை ஒடுக்குவதில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அ.தி.மு.க. ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும்?' என்று சீமானைக் கேட்கிறார் கவிஞர்  தாமரை . "அம்மையாரை  அரியணையில் அமர்த்திவிட்டு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்ப

தற்கு என்ன நிச்சயம்? தேர்தலில் நிற்க வேண்டாம், நின்றாலும் காங்கிரசு நிற்குமிடங்களில் மட்டும் போட்டியிடுங்கள், மற்ற தொகுதிகளில் 49ஓ போடுங்கள்' என்று சீமானுக்கு ஆலோசனை சொல்கிறார்.

 

"நம் ஈழ ஆதரவு நண்பர்கள் செயலலிதாவுக்குப் பின்னால் பரப்புரைப் படைவரிசையாய் போய்ச் சேர்வது பகைவர்களிடையை உள்ள முரண்பட்டைப் பயன்படுத்துவது ஆகாது. ஒரு பகையாளியிடம் சரணாகதி அடைவது ஆகும். இந்தத் தேர்தலில் காங்கிரசைத் தோற்கடித்துவிட்டால், தமிழ்நாட்டிலிருந்து காங்கிரசை ஒழித்து விட்டதாகுமா? அடுத்தடுத்தத் தேர்தல்களிலும் அக் கட்சி தோற்றுத்தான் போகுமா?''  என்று கேட்கிறார், பெ.மணியரசன் (தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2011 பிப்ரவரி 115)

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது காங்கிரசுக்கு ஓட்டுப்போடாதீர்கள் என்று உபதேசித்த பெ.மணியரசன் இப்போது சந்தர்ப்பவாதமாக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு, தாங்கள் "தேர்தலைப் புறக்கணிப்பது என்று உறுதியாக முடிவு செய்து அந்நிலையைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறோம்' என்று கூசாமல் புளுகிறார். தேர்தல் சூதாட்டத்தில் தேசிய விடுதலையைப் பணயம் வைக்காமல், தேர்தலுக்கு வெளியே நடக்க வேண்டிய போர்க்குணம்மிக்க எழுச்சிக்கு மக்களை அணியம் செய்வோம் என்று சவடால் அடிக்கிறார்.   கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது எடுத்த நிலைப்பாடும் தற்போது அவர் அறிவிக்கும் நிலைப்பாடும் ஒன்று தானா? அப்போது சந்தர்ப்பவாதமாக எடுத்த நிலைப்பாடு பற்றி மறுபரிசீலனை கூட செய்யாமல், தேர்தலுக் கொரு நிலைப்பாடு எடுப்பதுதான் த.தே.பொ.கட்சியின் கொள்கையா?

 

தமிழ்த்தேச விடுதலைக்கான திட்டத்திலிருந்து, அதை நிறைவேற்றுவதற்கான வழிமுறையாகத் தேர்தல் புறக்கணிப்பை மணியரசனின் கட்சி மேற்கொள்ளவில்லை. அப்படியொரு திட்டமே இல்லாமல், அவ்வப்போது சந்தர்ப்பவாதமாக கொள்கை முடிவுகளை அறிவிப்பதுதான் இவர்களது நடைமுறையாக உள்ளது. இதற்கு முன்பு மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரில் இயங்கியபோ து,  தேர் தலில் பங்கேற்று ஓட்டுப் பொறுக்கினர். அது எட்டாக்கனியானதும், த.தே.பொ.கட்சியாக உருமாறி, சீச்சீ.. இந்தப் பழம்புளிக்கும் என்ற நரியின் கதையாக, யாருக்கும் தகுதி இல்லை என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தாங்கள் எடுத்த சந்தர்ப்பவாத நிலைப்பாடு அம்பலப்பட்டுப் போனதாலேயே, இப்போது தேர்தல் புறக்கணிப்பு சவடால் அடித்து, தாங்கள் எப்போதுமே சரியாக இருந்தது போல காட்டிக் கொள்கின்றனரே தவிர, வாய்ப்பு கிடைத்தால் நாளை ஓட்டுப் பொறுக்கமாட்டார்கள் என்பதற்கு அவர்களிடம் எந்த அடிப்படையும் இல்லை.

 

சீமான் தனது பச்சையான சந்தர்ப்பவாதத்தைப் பகிரங்கமாக்கிவிட்டார். மணியரசன் முதலான இதர தமிழினவாதிகளோ மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதத்துடன், தமிழன் காதில் பூச் சுற்றிக் கொண்டிருக்கின்றனர. வெளிப்படையான சந்தர்ப்பவாதத்தைவிட மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம்தான் அபாயமானது என்கிறார், மார்க்சியப் பேராசான் லெனின்.

 

• இளங்கோ