கடந்த ஜனவரியில் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஜெயக்குமார் சிங்களக் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதற்கு முன், எல்லை தாண்டி வந்த சிங்களக் கடற்படை ஜெகதாப்பட்டினம் மீனவர் வீரபாண்டியனைச் சுட்டுக் கொன்றது. சிங்களக் கடற்படையால் இதுவரை 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவற்றுக்கு முதல் தகவல் அறிக்கைகள் பதிவாகியுள்ளன. கொலை (இபிகோ 302), கொலை முயற்சி (இபிகோ 307) உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் சிங்களக் கடற்படைக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு வழக்கில்கூடத் தமிழக போலீசு இதுவரை மேல்விசாரணை நடத்தவில்லை.

 

அண்டை நாட்டுக் கடற்படைக்கு எதிரான கிரிமினல் வழக்குகள் என்ற முறையில் மத்திய அரசு இவற்றின் மீதான விசாரணை தொடர்வதை உத்திரவாதப்படுத்தியிருக்கவேண்டும். சாட்சியங்களின் அடிப்படையில், நிராயுதபாணிகளான மீனவர்களைப் படுகொலை செய்த குற்றத்துக்காக சம்பந்தப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரிகளை இந்திய அரசிடம் ஒப்படைக்குமாறு கோரியிருக்க வேண்டும்.

 

இவையனைத்தும் சட்டபூர்வமாக இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொண்டிருக்க வேண்டிய, ஆனால் மேற்கொள்ள விரும்பாத நடவடிக்கைகள். இதில் புரிந்து கொள்ளவியலாத சட்ட நுணுக்கம் ஏதும் இல்லை. ராஜீவ் கொலைக்காக பிரபாகரனை ஒப்படைக்க வேண்டும் என்று @காரிய இந்திய அரசு, 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்ட பிறகும் மவுனம் சாதிப்பதற்கு தெளிவான அரசியல் உள்நோக்கம் இருக்கத்தான் செய்கிறது.

 

"எல்லை தாண்டிய பயங்கரவாதிகள்' தொடர்பான பிரச்சினைகளில் பாகிஸ்தான் அரசை இந்திய அரசு எப்படிக் கையாள்கிறது என்பது இங்கே ஒப்பிட்டுப் பார்க்கத்தக்கது. இந்தியாவில் தாக்குதல்கள் நிகழும்போதெல்லாம், குறிப்பிட்ட சில "பயங்கரவாதிகளின் 'பெயர்களைக் "கொலைக் குற்றவாளிகள்' என்று குறிப்பிட்டு, அவர்கள் பாகிஸ்தானில்தான் இருப்பதாகவும், பாகிஸ்தான் அரசும் உளவுத்துறையும்தான் அந்தக் குற்றவாளிகளைப் பயிற்றுவிக்கின்றன, பாதுகாக்கின்றன என்றும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்திருக்கிறது இந்திய அரசு. இந்திய அரசு குறிப்பிடும் நபர்களெல்லாம் பாகிஸ்தான் அரசுடன் தொடர்பற்றவர்கள் என்றும் (ழேn-ளவயவந யஉவழசள) அவர்களுடைய நடவடிக்கைகளுக்குத் தாங்கள் பொறுப்பேற்கவியலாது என்றும் பாக். அரசு கூறிவந்திருக்கிறது.

 

பாக். அரசின்பால் இந்திய அரசின் அணுகுமுறையையும் இலங்கை அரசின்பால் இந்திய அரசின் அணு குமுறையையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நிராயுதபாணிகளான தமிழக மீனவர்களை நடுக்கடலில் வைத்துச் சுட்டுக் கொன்றவர்கள் இலங்கைக் கடற்படையினர் என்று பல வழக்குகள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் இலங்கைக் கடற்படை தொடுத்த துப்பாக்கிச் சூட்டில் தெறித்து விழுந்த இலங்கைக் கடற்படையின் துப்பாக்கித் தோட்டாக்களை சாட்சியமாகக் காட்டி, "இது இலங்கைக் கடற்படை செய்த குற்றம்தான்' என்று இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் மறுக்கமுடியாமல் நிரூபித்திருப்பதாக இந்து பத்திரிகை எழுதுகின்றது. இது சமீபத்திய எடுத்துக்காட்டு.

 

பாகிஸ்தான் அரசுடன் தொடர்புள்ளவர்கள் என்று அறுதியிட்டு நிரூபிக்க முடியாத வழக்குகளிலும் கூட, பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாக். அரசைக் குற்றம்சாட்டும் இந்திய அரசு, சிங்களக் கடற்படையினரால் நிகழ்த்தப்பட்டுள்ள இந்தப் படுகொலைக் குற்றங்களுக்காக, குறிப்பிட்ட கடற்படை அதிகாரிகளை ஒப்படைக்க வேண்டும் என்று கோரியிருக்க வேண்டும். ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட இந்தக் கொலைகள் எதற்கும் விசாரணையே நடத்தப்படவில்லை.

 

ஆனால், ஒவ்வொரு முறை தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படும்போதும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைக் கடற்பகுதிக்குள் மீன்பிடிக்கச் செல்வதால்தான் இத்தகைய விபரீதங்கள் ஏற்படுகின்றன என்று இந்திய  இலங்கை அரசுகளும், அவற்றின் ஊதுகுழல்களான ஊடகங்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதால்தான் பிரச்சினை ஏற்படுகிறது, எல்லைதாண்டும் மீனவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார், வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா.

 

போருக்குப் பின், ஈழத்து மீனவர்கள் இப்போதுதான் மீன் பிடிக்கத் தொடங்கியுள்ளதாகவும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து டிராலிங் முறையில் மீன் பிடிப்பதால், ஈழத்துத் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் ஈழத் தமிழர்களுக்காகக் கண்ணீர் வடிக்கிறது, இந்து நாளேடு. இலங்கை மீனவர்கள் இன்னமும் கட்டுமரம் மூலம் மீன்பிடிப்பதாகவும், தமிழகத்திலிருந்து வரும் விசைப்படகுகளுடன் அவர்கள் போட்டி போடமுடியவில்லை என்றும் தமிழக மீனவர்கள் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

 

விசைப்படகுகளில் சென்று கடலில் வீசுகிற வலைகளைக் கடல் தன் நீரோட்டத்துக்கு ஏற்ப பல மைல் தூரம் இழுத்துச் சென்றுவிடுவதாகவும், இழுத்துச் செல்லப்படும் வலைகளை நீரோட்டத்தின் போக்கில் சென்றுதான் வெளியே எடுக்கமுடியும் என்றும், பருவ நிலைக்கு ஏற்ப

மாறும் இத்தகைய கடல் நீரோட்டங்கள், பாக். நீரிணையில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள பிரச்சினைதான் என்றும் கூறுகின்றனர் தமிழக மீனவர்கள். இந்தியா இலங்கைக்கு இடையிலான கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டு அவை மீனவர்களுக்குப் புரியும் விதத்தில் தெளிவுபடுத்தப்படவில்லை என்றும், எல்லையை உடனே வரையறுக்கவேண்டும் என்றும் இந்திய நீதிமன்றங்களில் மனுக்கள்தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.

 

500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு, அது குறித்த விசாரணைகூட நடக்காத நிலையில், அவ்வாறு கொல்லப்படுவதற்குக் காரணம், தமிழக மீனவர்கள் எல்லைதாண்டுவதுதான் என்றும், எனவே அதனைத் தடுப்பதன் மூலம்தான், இந்தப் படுகொலைகளைத் தடுக்கமுடியும் என்று தீர்ப்பளிப்பதும், இந்தக் கோணத்தில் விவாதத்தைக் கொண்டு செல்வதும் நயவஞ்சகமானது.

 

இந்திய, இலங்கை மீனவர்களிடையே மட்டுமல்ல, இந்தியாவைச் சேர்ந்த இரு மாநில மீனவர்

களிடையேயும், தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மாவட்ட மீனவர்களிடையேயும்கூட இத்தகைய

முரண்பாடுகள் தொடர்ந்து எழத்தான் செய்கின்றன. பன்னாட்டு நிறுவனங்களின் டிராலர்களும், பெரிய மீன்பிடி நிறுவனங்களின் நவீனப் படகுகளும் கடல்வளத்தை அள்ளிச் செல்லும்போது அதனால் ஏற்படும் முரண்பாடு சிறிய, நடுத்தர மீனவர்களிடையிலான பிரச்சினையாக உருவெடுக்கிறது.

 

வங்கதேசம், பர்மா, தாய்லாந்து போன்ற நாட்டு மீனவர்களிடையிலோ, அல்லது மிகவும் முக்கியமாக இந்திய  பாகிஸ்தான் மீனவர்கள் இடையிலோ ஏற்படும் இத்தைகைய முரண்பாடுகள் அல்லது எல்லைமீறல்களில் ஒரு நாட்டு இராணுவம் இன்னொரு நாட்டின் நிராயுதபாணி மீனவர்களைச் சுட்டுக் கொல்வதில்லை. அதிகபட்சம் அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பின்னர், அரசுகளிடையே அப்பிரச்சினை பேசித்தீர்க்கப்படுகிறது.

 

ஆனால், தமிழக மீனவர்கள் மட்டும்தான் இந்திய மேலாதிக்க அரசின் ஆசியுடன், சிங்கள இராணுவத்தால் தொடர்ந்து வேட்டையாடப்படுகின்றனர். இந்திய மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததனால்தான் சிங்களக் கடற்படை இந்தப்படுகொலைகளை நிகழ்த்தவில்லை. இந்தியாவின் தலையீட்டை வேண்டி விரும்பிப் பெற்றுத்தான் ஈழத்தமிழின அழிப்புப் போரை நடத்தியது, சிங்கள இனவெறி அரசு. எந்தத் தமிழின வெறுப்பு, ஈழத்தமிழருக்கு எதிரான இனப்படுகொலையை நடத்துமாறு சிங்கள இராணுவத்தை தூண்டியதோ, அதே தமிழின வெறுப்புதான் பரிதாபத்துக்குரிய தினக்கூலிகளான, தமிழக மீனவர்கள் மீதும் தோட்டாக்களாகப் பாய்ந்திருக்கிறது.

 

தமிழக மீனவர்கள் மீது இலங்கை நடத்தும் படுகொலைகளை "இந்திய வல்லரசு' கண்டுகொள்ளாமல் இருக்கக் காரணம், இலங்கையின் மீது இந்திய அரசும் ஆளும் வர்க்கங்களும் கொண்டிருக்கும் மேலாதிக்கநலன்கள். அதுமட்டுமல்ல, தமிழின வெறுப்பு என்ற விசயத்தில் சிங்கள இனவெறியர்களுக்கும் இந்திய மேலாதிக்கவாதிகளுக்கும் இடையில் நிலவும் கொள்கை ரீதியான ஒற்றுமையும் இதில் பெரும்பங்காற்றுகிறது. 1983 ஜூலைப் படுகொலை முதல் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவுத் தளமாக இருந்தவர்கள் என்ற முறையில் தமிழக மக்கள் மீது சிங்கள இனவெறியர்களுக்கு மாளாத வெறுப்பு இருக்கிறது. இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும் அந்த வெறுப்பு இருக்கிறது. இந்த வெறுப்புதான் கடந்த இருபது ஆண்டுகளாகத் தமிழக மீனவர்களைச் சிங்களக் கடற்படை வேட்டையாடுவதற்கும், இந்திய அரசு தட்டிக் கொடுத்து அதனை ஊக்குவிப்பதற்கும் காரணமாக இருந்து வருகிறது.

 

தற்போது தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், இதுநாள் வரை சுட்டுக் கொலை

செய்து கொண்டிருந்த சிங்களக் கடற்படை, இலங்கை மீனவர்களை வைத்தே தமிழக மீனவர்களைச் சுற்றிவளைத்துக் கைது செய்திருக்கிறது. இது இந்திய அரசின் ஆலோசனையாகக்கூட இருக்கலாம்.

 

ஆனால், இலங்கைக் கடல் எல்லையின் புனிதத்தைப் பாதுகாப்பதற்கு, தங்களது தாய் மண்ணை சிங்கள இனவெறிக்குக் காவு கொடுத்த ஈழத் தமிழினத்தின் மத்தியிலிருந்தே சில வீடணர்களை உருவாக்க முடிந்திருப்பது, நிச்சயமாக ராஜபக்சே அரசின் வெற்றிதான்.

 

• தனபால்