06102023
Last updateபு, 02 மார் 2022 7pm

கல்லுளிமங்கன்!

இந்தியத் தரகுமுதலாளி வர்க்கத்தின் பிரதிநிதியும், அமெரிக்காவின் வளர்ப்புப் பிராணியுமான திருவாளர் மன்மோகன் சிங், தான் ஒரு கைதேர்ந்த கிரிமினல் என்பதையும், கழுத்தை அறுத்தாலும் உண்மையைக் கசியவிடாத கல்லுளிமங்கன் என்பதையும் அண்மையில் தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்களுக்கு அளித்தபேட்டியின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். தனியார்மய  தாராளமயக் கொள்கையை ஆதரித்து நிற்கும் தொலைக்காட்சி சேனல்களின் ஆசிரியர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மொன்னையான கேள்விகளைக் கேட்க, "2ஜி அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தனக்கு எவ்விதத் தொடர்புமில்லை 'என்று கூசாமல் புளுகியிருக்கிறார், மன்மோகன் சிங்.

 

அலைக்கற்றை என்ற பொதுச்சொத்தை கார்ப்பரேட் முதலாளிகள் சூறையாடுவதற்குத் துணைநின்ற ஒரு நபர், அலைக்கற்றையை மட்டுமன்றி, நாட்டின் இயற்கைவளங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லாச் சொத்துக்களையும்  கார்ப்பரேட் கொள்ளையர்கள் அள்ளிச்செல்வதற்கு ஏற்ற தனியார்மயக் கொள்கைகளை வகுத்துத் தந்த ஒரு அடிக்கொள்ளி, கூட்டணி நிர்ப்பந்தம் காரணமாகத்தான் இந்த ஊழலே நடந்துவிட்டது போலச் சித்தரித்து, முன்னாள் அமைச்சர் ராசா மீதும் தி.மு.க.வின் மீதும் பழியைப் போடுகிறார். காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல் உள்ளிட்ட ஊழல்களில் காங்கிரசு கட்சி மட்டுமே நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. பிரதமரின் நேரடிப் பொறுப்பிலுள்ள விண்வெளித் துறையில் தான் எஸ்பேண்ட் ஊழல்  கொள்ளை நடந்துள்ளது. ஆனாலும், தனக்கோ பிரதமர் அலுவலகத்துக்கோ இவற்றில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பது போல நாடகமாடுகிறார், இந்த யோக்கிய சிகாமணி.

 

ஊழல்கள் விசயத்தில் மழுப்பலாகப் பேசும் மன்மோகன் சிங், கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தின் கொள்ளையடிக்கும் உரிமை தொடர்பான கேள்விகள் வரும் போது மட்டும் சீறிப்பாய்ந்து வாதாடுகிறார். அலைக்கற்றை உரிமத்தை மட்டுமே தமது மூலதனமாக வைத்திருந்த உப்புமா கம்பெனிகள், தமது பங்குகளைக் கைமாற்றி பல்லாயிரம் கோடிகளைச் சுருட்டியதில் தவறொன்றுமில்லை என்று அப்பகற்கொள்ளையை நியாயப்படுத்துகிறார். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு காங்கிரசு அரசு வழங்கியிருக்கும் 1,76,000 கோடி "மானியத்தை', விவசாயம், கல்வி, சுகாதாரம் மற்றும் ஏழைகளுக்கான உணவுப் பொருட்களுக்கு அளிக்கப்படும் மானியத்துடன் ஒப்பிட்டு, ஏழைகளுக்கு மானியம் அளிப்பதும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குப் பொதுச்சொத்தைத் தாரைவார்ப்பதும் ஒன்றுதான் என்று திமிராகக் கூறுகிறார். விலைவாசி உயர்வைத் தடுப்பது என்ற பெயரில் முதலாளிகளின் கொள்ளையையும் ஊக வணிகச் சூதாட்டத்தையும் கட்டுப்படுத்தக்கூடாது என்று அறிவிக்கிறார்.

 

உலக வங்கி அதிகாரியாக வேலை செய்த மன்மோகன் சிங் அமெரிக்காவின் செல்லப் பிராணி என்பதால், துக்ளக் சோ, சு.சாமி, பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்த்தரப்பு இந்துத்துவ பரிவாரங்கள், அவர் திறமையானவர், நேர்மையானவர் என்றும், அவர் அதிகாரமில்லாத பொம்மையாக்கப்பட்டுள்ளார், அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன என்றும் பக்கவாட்டில் நின்று சாமரம் வீசுகின்றன. தனியாரமயக் கொள்கையைப் பெற்றெடுத்த தவப்புதல்வன் என்பதால் முதலாளித்துவ ஊடகங்கள், "ஊழல் என்றால் என்ன என்றே அறியாத அவர், தன்னைச் சுற்றி இத்தனை ஊழல்களா என்ற அதிர்ச்சியில் ஊமையாகிவிட்டார்' என்றெல்லாம் இக்கல்லுளிமங்கனுக்கு ஒளிவட்டம் போடுகின்றன.

 

ஆனால், 1994இல் நாட்டுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமலேயே "காட்' ஒப்பந்தத்தில் நாட்டைச் சிக்க வைத்தவர்தான் இந்தக் கல்லுளிமங்கன். அதேபோல, 2005இல் அமெரிக்காவுக்குப் போன மன்மோகன் சிங், அமெரிக்காவுடனான இராணுவ, அணுசக்தி ஒப்பந்தங்களில் கள்ளத்தனமாகக் கையெழுத்திட்டு, இந்தியாவை அமெரிக்கப் போர்ச்சக்கரத்தில் தப்பிக்க முடியாதபடி பிணைத்துக் கட்டினார். "ஹைட் சட்டமா, கேள்விப்பட்டதே இல்லையே!' என்று நாடாளுமன்றத்தில் புளுகினார். பின்னர் உண்மை அம்பலமாகி மன்மோகன் சிங்கோட்டு சூட்டு போட்ட நாலாந்தர போர்ஜரி பேர்வழி என்பது சிரிப்பாய்ச் சிரித்தபோதும், அவர் வாய்திறக்கவில்லை.

 

தற்போதைய இந்த பேட்டியின் முடிவில், "உலக அரங்கில் இந்தியாவை ஊழல் நாடாகச் சித்தரித்துக் களங்கப்படுத்தாதீர்கள்'' என்று ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரதமர். அடுக்கடுக்கான ஊழல்களால் அம்பலப்பட்டு நாறிப்போய், ஊழலுக்குத் தன்னிலை விளக்கம் கொடுப்பதற்காகவே ஏற்பாடு செய்த பேட்டியின் முடிவில், பிரதமர் கல்லுளிமங்கன் உதிர்த்த முத்திரை வாக்கியம் இது என்பதுதான் குரூர நகைச்சுவை.