"ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை, இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை! தனியார்மயமே இதன் ஆணிவேர், இதனைத் தகர்க்க நக்சல்பாரியாய் ஒன்றுசேர்! கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகக் கிளர்ந்தெழுவோம்! ஊழல் சொத்துக்களைப் பறித்தெடுத்து மக்களுக்குப் பங்கிடுவோம்!' என்ற முழக்கத்துடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ம.க.இ.க் வி.வி.மு; பு.மா.இ.மு; பு.ஜ.தொ.மு, பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள்  கடந்த ஜனவரியிலிருந்து கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகச் சூறாவளிப்பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

 

பல்லாயிரக்கணக்கில் துண்டுப் பிரசுரங்கள், 2ஜி மற்றும் எஸ்பேண்ட் அலைக்கற்றை ஊழல் கொள்ளையை விளக்கும் வெளியீடு, சுவரொட்டிகள், தட்டிகள், சுவரெழுத்துகள் ஆகியவை மட்டுமின்றி; டிராபிக் சிக்னல்கள், பேருந்துகள் இரயில்கள், கடைவீதிகள், ஆலை வாயில்கள், சந்தைகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகல்லூரிகள் மற்றும் விடுதிகளில் பிரச்சாரம்; தெருமுனைக் கூட்டங்கள், விளக்கக் கூட்டங்கள், சைக்கிள் பேரணி பிரச்சாரம், ஆட்டோ பிரச்சாரம்  என பல்வேறு வடிவங்களில் பிரச்சாரத்தை நடத்தி வந்த இவ்வமைப்புகள், கடந்த ஜனவரி இறுதியிலிருந்து தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.

 

அலைக்கற்றை ஊழல் கொள்ளையைத் தொடர்ந்து தற்போது எஸ்பாண்ட் ஊழல் கொள்ளை அம்பலமாகியுள்ளதாலும்,  இன்றைய அரசியலமைப்பு முறை இத்தகைய கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்கான கருவிதான் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தெட்டத் தெளிவாக நிரூபணமாகியுள்ளதாலும், கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான இப்பிரச்சார இயக்கம் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இலட்சக்கணக்கான மக்களிடம் இப்பிரச்சார இயக்கம் சென்றடைந்துள்ளது. கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான தமது வெறுப்பையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தும் உழைக்கும் மக்கள், இப்பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை உணர்ந்து, தாராளமாக நன்கொடை அளித்து ஊக்கப்படுத்தி ஆதரித்துள்ளனர். பு.மா.இ.மு.வின் சில கிளைகள் நடத்திய விளக்கக் கூட்டங்களில்  கலந்து கொண்ட மாணவர்களும் இளைஞர்களும் தாங்களே முன்வந்து பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டனர். இப்பிரச்சார இயக்கம் வீச்சாக நடப்பதைக் கண்டு பீதியடைந்த பார்ப்பன தினமலர் நாளேடு கடந்த 15.2.11 தேதியிட்ட கோவை பதிப்பில் "ஊழலைத் தண்டிக்க நக்சல்பாரி பாதை வேண்டும் ஆவேச துண்டுப் பிரசுரம் வினியோகம்' என்று தலைப்பிட்டு, இதை வடிவமைப்பது யார் என்றோ, தொடர்புக்கான தகவலோ ஏதும் இதில் இல்லை என்று அவதூறு செய்தி வெளியிட்டது. உடனே ம.க.இ.க. கோவை மாவட்டச் செயலர் தோழர் மணிவண்ணன் தலைமையில் தோழர்கள் தினமலர் அலுவலகம சென்று எச்சரித்ததும், 17.2.11 தேதியிட்ட தினமலரில் "தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்களுடன் வினியோகிப்படும் இப் பிரசுரம் மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக' செய்தி வெளியிட்டு மழுப்பியது.

 

கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடித்த பொதுச் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய, உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கி 30.1.2011 அன்று உசிலம்பட்டியிலும், பிப்ரவரி 5ஆம் தேதியன்று கம்பம் நகரிலும், 6ஆம் தேதி கோத்தகிரியிலும், 8ஆம் தேதி தர்மபுரியிலும், 9ஆம் தேதி ஓசூர்  ராம்நகரிலும், 11ஆம் தேதி திருமங்கலத்திலும், 13ஆம் தேதி திருப்பத்தூர் அருகே கந்திலியிலும், 14ஆம் தேதி கடலூர் கூத்தப்பாக்கத்திலும், 15ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் அரசூரிலும், 17ஆம் தேதி தஞ்சையிலும், 18ஆம் தேதி திருச்சியிலும், 19ஆம் தேதி மேட்டூரிலும், 21ஆம் தேதி காரைக்காலிலும், 23ஆம் தேதி விளாத்திகுளத்திலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. இந்த அரசியலமைப்புமுறை மக்களுக்கானதல்ல. மக்களுக்கான அரசை நிறுவுவதற்கான ஒரே வழி நக்சல்பாரி புரட்சிப் பாதைதான் என்பதை விளக்கி, இப்பொதுக்கூட்டங்கள் உழைக்கும் மக்களைப் போராட அறைகூவின. திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்புடன்  நடந்த இப்பொதுக்கூட்டங்களின் இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழு நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சியும் குறிப்பாக, "ஊழலை ஒழிக்க முடியுமா?...காளை மாட்டில் பால் கறக்க முடியுமா?' எனும் பாடலும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன.

 

கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான இப்பிரச்சார இயக்கம் உழைக்கும் மக்களின் போராட்டமாக மாறி, தனியார்மயம் தாராளமயம்  உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கத்துக்கு எதிரான எரிமலையாக சீறப் போவது நிச்சயம் என்பதை, தொடரும் இப்பிரச்சார இயக்கம் நிரூபித்து வருகிறது.

 

பு.ஜ. செய்தியாளர்கள்.